குறுங்கவிதைகள்

பேருந்தின் இரைச்சல் ஓசையில்

பேச்சு வராத தமையனைப் பற்றி

ஓயாமல் பேசிக்கொண்டு

வந்தாள் ஒருத்தி.

எனக்கென்னவோ அவளே

அவனுக்கும் சேர்த்து

பேசிக்கொண்டிருப்பது போல்

இருந்தது.

0

ஒன்றே போல்தான்

உன் குழந்தை

கைகளின் ஸ்பரிசமும்.

O

கண்கள் சொருகும்

அதிகாலைப் பொழுதில்

உதட்டுச் சாயத்தை

ஒத்தி ஒத்தி எடுத்து

உதடுகளால்

சப்பிக் கொண்டிருந்த

ஒருத்தியைக் காண

ஒரு மாதிரி

சந்தோசமாய்தான்

இருந்தது.

O

பின்னிருக்கையில் அமர்ந்தபடி

பயணம் போக நேர்ந்த

வண்டியோட்டியின் ஆச்சர்யம்

வழியெங்கும் காணும்

இத்தனையும்

இத்தனை நாளாய்

இங்கேதான்

இருந்ததா?

O

ஒன்று போலே இருந்த

எட்டாவது முகத்தை

பார்த்தேன் இன்றைக்கு.

O

Series Navigationநானும் அசோகமித்திரனும்ஜென் ஒரு புரிதல் – பகுதி 19