குளம் பற்றிய குறிப்புகள்

Spread the love

(1)

ஒரு

மீன்

செத்து மிதக்கும்.

 

குளத்தின்

தண்ணீரில்

குளம் விடும் கண்ணீர்

தெரியவில்லை.

 

(2)

ஒன்றும்

குறைந்து போவதில்லை.

 

படிகள்

இறங்கிச் செல்லும்

குளத்திற்கு உதவ.

 

(3)

குளத்தில் போட்ட

கல்.

 

பாவம்;

நீந்தியிருந்தால்

மீனாகியிருக்கலாம்.

 

(4)

 

நீர் நிறைந்து

தெளியும்

குளம்

கண்ணாடியா?

 

சூரியனை

எறிந்து பார்

தெரியும்.

 

(5)

ஊர்க் குளம்

காணோம்.

 

அடுக்கு மாடி

வீடுகள்

குடித்திருக்கும்.

 

(6)

நிலா இல்லாத

நிசியில்

 

நீர்

ஒளிந்திருக்கும்

குளத்தில்.

 

(7)

காதலில் மூழ்கி

குளத்திற்கு

என்ன வெம்மையோ?

 

மிதக்கும்

தாமரை இலைகள்

தழுவி

மேல் வேர்க்கும்.

(8)

மழையில்

நனையும் போது

 

மீன்கள்

குளத்தில்

நனைவதில்லை.

 

(9)

மனத்தின் பக்கத்தில்

இருப்பது போல்

குளத்தின் பக்கத்தில்

இருக்கும் மரத்திடம்

குளம் கேட்கும்.

 

மனமென்றால்

என்ன?

 

 

Series Navigationஜென்இருபது ரூபாய்