குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்

அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது.

குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லை. இதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை. 10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும்.

ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காமல் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து விட்டார். அல்லது பெற்றோர்கள் செய்கிறார்கள். வாழ்க்கையில் ஊழல் இருக்கிறது. அதைப்பற்றிப் பள்ளிக்குழந்தைகள் பெரியவர்களானதும் தெரிந்து கொள்வார்கள். டொனேசன் கொடுத்துத்தான் உன்னைப்பள்ளியில் சேர்த்தேன் என்று ஏன் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும் ? குழந்தையா அதைச்செய்யச் சொன்னது? உங்கள் தவறுகளால் ஊழல் பெருகி தாங்கமுடியாமல் போனால், அதை எதிர்த்து நீங்கள்தானே போராடவேண்டும் ?

பெரியவர்களும் இளைஞர்களும் கலந்துகொள்ள வேண்டிய அரசியல் சமூகப் போராட்டங்களில் குழந்தைகளைச் சேர்ப்பது அவர்களைப் பிற்காலத்தில் ஒருமுகப்பார்வை கொண்டவர்களாக ஆக்கவும் தேர்ந்து சிந்தித்துத் தாமாகவே ஒரு நல்ல முடிவெடுக்கும் திறனாளிகளாக உருவாவதை ஆக்காமல் தடுக்கவும் ஏதுவாகும். நம் நாடு ஒரு தீவிர சிந்தனையாளர்களைக் கொண்ட நாடாக மாறும். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களுக்குத் தேவையென்றுதானே மதங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலே மதத்தைப்பற்றிய ஞானத்தைத் திணித்துப் தம்மதமே உயர்ந்தது பிற மதங்கள் வெறுக்கப் படவேண்டும் என்று மதக் கலவரங்களை உருவாக்கி வெற்றி பெற்று வருகின்றன..

மதவுலகத்தில் நடப்பது போல பிறவிடங்களிலும் நடந்து உலகச் சமுதாயமும் நம்மிந்தியச் சமுதாயமும் பாழாய்ப் போகுமென்று தெரிந்தும் தெரிந்தும் அன்னா ஹஜாரே மாதிரி ஆட்கள் இப்படிக் குழந்தைகளை தம் போராட்டத்தில் கலந்துகொள்ள வைக்கலாமா ?

இன்னும் சொன்னப்போனால், இது குழந்தைகளைக் கெடுத்தல் (Child abuse) என்ற குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டு இப்போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்.

Series Navigationஇவரைத் தெரிந்து கொள்ளுங்கள்திருத்தகம்