கேள்வியின் கேள்வி

Spread the love

எதுவும் தொலைந்திருக்கவில்லை.
எனது நாட்கள்
பத்திரமாகவே இருக்கின்றன.

காலை மாலை இரவு எனச்
சூ¡¢யன் சொல்லி வைத்தபடி
நகரும் நேரங்களில்
எனக்குக் கெட்டுப்போனது
எதுவுமில்லை என்றாலும்
செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும்
சாயமிழந்த வார்தைகளில்
என்னதான் தேடிக்கொண்டிருப்பது?

ஆனால்
கணேசனுக்கு வந்தது போலக்
கண்ணுக்குள் இருள் சேர்த்துத்
தேடிய கலர்க்கனவுகள் கிடைக்கவில்லை.
செய்தியோ உணர்வோ ஒன்றை
ஜாலமாய் ஒளித்து வைத்து
தேடிகொள் என்று சொல்லும்
கவிதையும் கிடைக்கவில்லை.

எண்ணங்கள் அற்றுப்போய்
நெற்றியில் சுடர்தாங்கி
பேருண்மை தேடலாம் என்றிருந்தால்
புற்றிலிருந்து புறப்பட்ட
அரவங்களாய் நெளிகின்றன
ஞாபகங்கள்.
கோயில் குளம்
ஞானிகள் ஆஸ்ரமம் என
எங்கும் மனம் தா¢க்காது
தேடலைத் தேடித்தேடி
என் இருப்பு தேய்ந்துகொண்டிருக்கிறது.

தேடலின் சுமையை
யார்மீதோ ஏற்றிவிடலாம்
எனத் தவித்த போது
எதைத் தொலைத்துத் தேடுகிறாய்
என்றது கேள்வி.

எதைத் தேடித் தொலைத்தாய்
என்றது கேள்வியின் கேள்வி!
__ரமணி

Series Navigationதேனீச்சையின் தவாபுபேச மறந்த சில குறிப்புகள்