வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை

This entry is part 14 of 18 in the series 11 ஜூலை 2021

 

ருத்ரா இ பரமசிவன்

பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.
தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.
அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
“தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்”
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் “பகன்றனை”வாராது மறைந்து.
ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

======================================================
(இது நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை)

பொழிப்புரை
=======================================

பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.

பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரைக் காட்சி இது.புள்ளிகள் படர்ந்த பாறைகள் தோறும் மோதி மோதி இனிமையாய் தண்ணீர் பாயும்.அந்த துள்ளல் நிறைந்த நீரில் தலைவி கால் நனைத்து மகிழ்கிறாள்.அந்த நுண்ணிய பொழுதுகளின் இடைவெளிக்குள்ளும் அவனைப்பற்றிய கனவே அவளுக்கு.அவன் வரும் வழி தன் மனக்கண்ணில் ஆறுபோல் பெருக அதன் ஓங்கிய அலைகள் ஒளிசிந்தும் பால் நிலவை எதிரொளி செய்கின்றன.(ஓங்கு திரை வாங்கும்).அந்த நிலவை கடல் கண்டு பொங்கி எழுவதைப் போல் ஆர்ப்பரிக்கும் தலைவனின் குதிரைத் தலையில் சூடிய அலரிப்பூ (வேழப்பூ எனும் ஒரு வித பேய்க்கரும்புப் பூ)ஆடி அசைவது (தலைவியை நோக்கி) ஒரு ஒலியை ஏற்படுத்தும்.


தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.


அங்கு உலவும் வண்டு தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அங்கு உலவும் வண்டு ஒன்றை அவள் காண்கிறாள். தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அந்த வண்டு உறிஞ்சிய தேனில் அமிழ்ந்ததால் சிறைப்பட்டு போனதால் தான் அஞ்சிறைத்தும்பியாய் ஆனாயோ ஓ வண்டே என்கிறாள் தலைவி.சிறகை அது குறித்த போதும் தான் ஒரு சிறைப்பட்ட நிலையில் இருந்ததால் அப்படி அழைக்கிறாள்.அதன் உள்ளிருந்து தலைவனின் குரல் கேட்கிறது.உண்மையில் அவன் தான் சிறைப்பட்டிருக்கிறான் போலும்.அவன் குரல் அவளுக்கு களிப்பின் கடல் நிறைந்து வழிந்தாற்போல் இருக்கிறது.அவன் சொன்னதும் கேட்டது.அவன் சொல்லாததும் அவளுக்கு கேட்டது.அது அவள் உள்ளத்தில் துன்பம் ஏற்படுத்தி அவளை பறித்துக்கொண்டது.மீண்டும் அவன் குரல் பகன்றது அவளுக்கு “பகன்றை” மலர் போல் மெல்லிய உணர்வுகளை எழுப்புகிறது.இருப்பினும் அத்தகைய மலர் போல் அல்லாமலும் துன்பம் செய்கிறது.துன்பம் தரும் குரல் என்னவாக இருக்கும்? “நான் இப்போது உடனே வருவதற்கில்லை” என்ற இன்னொரு குரலும் தலைவனிடமிருந்து அவள் கேட்டாள் போலிருக்கிறது. அந்த ஆற்றங்கரையின் குருகுகள் மிக்க உணர்ச்சிமிக்க ஒலிளை எழுப்பும்.அதைப்போல மெலிதாய் முறுக்கேறிய பூவின் மொட்டு  இதழ்கள் திறக்கும். அதைப்போன்றே நலிவுற்ற என் கண்கள்  பெருக்கும் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் இறங்கி சூடு ஏறி என்னுயிரையே உலுக்கிவிடும்.


அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
“தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்”
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் “பகன்றனை”வாராது மறைந்து.

அவன் எந்தக்குரலும் எங்கிருந்தும் எழுப்பவில்லை.இருப்பினும் அந்த வேழப்பூக்கள் அவளுக்கு ஒலியை கதிர்ப்பது போல் உணர்கிறாள்.அந்த மெய் விதிர்ப்பில் ஒருபக்கம் அவன் குரல் இனிக்கிறது.இன்னொரு பக்கம் தீய செய்தியை தாங்கி வருகிறது.படுக்கையில் தூக்கம் வரவில்லை.அடர்ந்த முள் காட்டில் கிடந்தவளாய் துன்புறுகிறாள்.இரவே நெருப்பு பற்றிக்கொண்டாற்போல் துடிக்கிறாள்.இப்போதும் தலைவனின் அந்த ஆற்றங்கரை தான் நினைவுக்கு வருகிறது.அவன் காதல் இனிதாய் பிறக்கும்.ஆனால் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் தன்மையும் அதற்கு இருக்கிறது போலும்.அவன் இருக்கும் அந்த துறையில் புள்ளிகள் நிறைந்த ஒருவகை நண்டு உள்ளது.அது ஈனும் குஞ்சுகள் அதனையே கொன்று தான் பிறக்கும்.(“தாய்சா(க)ப்பிறக்கும் புள்ளிக்கள்வன்)அவன் காதலும் அப்படியே தான்.அது பிறக்கும் நானே கொல்லப்படும் விந்தை வேதனை அல்லவா?அந்த வேழப்பூந் தட்டைகள் மண்டிய அந்த சேற்று நிலமும் நீரும் நிறைந்த கரையிலிருந்து அவன் குரல் கேட்கிறது.”நீ என்ன சொல்கிறாய்? எதையோ சொல்லிவிட்டு வாராது மறைந்து கொண்டாயே!”என்று தலைவி புலம்புகிறாள்.


ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.


அடுத்ததாய் முதலை ஒன்றின் உருவம் அவளுக்கு தோன்றுகிறது.அதுவும் அந்த ஆற்றில் தான் இருக்கிறது.அதற்கு இரண்டு விழிப்படலங்கள் உண்டு.நீலிக்கண்ணீருக்கு ஒன்று.சாதாரணமாய் இன்னொன்று.அகன்ற கண்களில் தோன்றும்.(ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு…) பெரிய பற்களையுடைய முதலையோ தான் முட்டையிட்டு ஈன்ற குஞ்சுகளையே தின்னும். முதலைகள் பாய்ந்து வரும் ஆறும் அவன் ஊரில் தான் இருக்கிறது. நண்டு முதலை ஆகிய இரு விலங்குகளைப்போன்று அல்லவா அவன் இக்கொடிய‌ காதல் நோய் மூலம் என் உயிர் தின்னுகின்றான். குளிர்ச்சி பொருந்திய கனவு மிதக்கும் என் மையுண்ட கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.அதோ அந்த கரையில் ஆடும் அந்த சிறிய வெண்பூக்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன? குழைவோடு வெண்சாமரம் போல் வீசுகின்ற அந்த மலர்க்குஞ்சங்கள் என் துன்பத்தை தான் குழைய குழைய சொல்லிக் கொண்டிருக்கின்றன.

=====================================================================

Series Navigationமூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்தழுவுதல்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *