சங்க இலக்கியங்களில் அலர்

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

மனிதன் ஒருவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் பண்பினன். அவ்வாறு வாழ்கின்றபோது ஒருவருடைய செயல்பாடுகளைக் குறித்து மற்றவர்கள் குறையோ நிறையோ கூறுவது வழக்கம். ஒருவர் நல்லனவற்றைச் செய்கின்றபோது பாராட்டும், மற்றவருக்கு ஒவ்வாதனவற்றையோ அல்லது ஏற்றுக் கொள்ள இயலாதனவற்றையோ செய்கின்றபோது தூற்றுவர். இதனை விமர்சனம் என்று கூறலாம். இவ்வாறு பிறரால் கூறப்படும் விமர்சனத்தை சங்கச் சான்றோர் அலர் என்று குறிப்பிட்டனர். அலர் என்ற சொல் சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம் வரையிலும், சுட்டப்படுகின்றது.

அலர் – விளக்கம்

அலர், அம்பல், கவ்வை ஆகியவை ஒத்த பொருளைத் தரும் சொற்களாகும். இலக்கியத்தில், கற்புக் காலத்தில் தலைவன் தலைவியை நெடுநாள் பிரிந்தால் ஊரார் கூறும் சொல் ‘‘பழிச்சொல்” என்று குறிக்கப்படுகின்றது. மன்னன் தவறு செய்தால் அவனைத் திருத்துவதற்காகக் கூறும் சொற்கள் ‘‘செவியறிவுறூஉ” என்று சுட்டப்படுகின்றது. ஆனால் களவுக் காலத்தில் தலைவன் களவொழுக்கத்தை நீட்டிக்கையில் ஊர்ப்பெண்கள் கூறும் சொற்களே அம்பல், அலர், கவ்வை என்று சுட்டப்படுகின்றது.

அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல் என்றும் அலர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். இறையனார் களவியலுரையாசிரியர், ‘‘அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று, இன்னிதின் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது இன்னானோடு, இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம்” என்று விளங்குவர்.

கௌவை என்பதற்குக் ”கலக்கம், துன்பம், பழிச்சொல்” எனறு தமிழ்ப்பேரகராதி பெருள் கூறும். ஆகவே இளம் பெண்ணின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் என்றும் குறிக்கப்படும் எனலாம்.

அலருக்கான காரணம்

வரைவு (திருமணம்) கடாஅதலின் (வலியுறுத்தல்) பொருட்டே அலர் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் களவு மணம் தவறாகக் கொள்ளப்படவில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்ற தலைவனைத் தாமாகவே தேடிக் கொள்வதும், களவு மணம் புரிவதும், உடன்போக்கில் ஈடுபடுவதும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஆயினும் தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தினை அறிந்த ஊர்ப் பெண்டிர் அவர்கள் உறவைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்ளும் நிலையும் இருந்துள்ளது. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அது தலைவன், தலைவி, களவு வாழ்வு கற்பு வாழ்வாக மலரவே துணையாக இருந்துள்ளது என்பது விளங்கும்.

ஆணின் மனம் என்றும் களவு வாழ்வினையே நீட்டிக்க விரும்பும். ஏனெனில் களவு காலத்தில் எந்தவித சுமையும் இன்றித் தலைவியுடன் கூடியிருக்கும் இன்பத்தையே தலைவனின் மனம் பெரிதாக எண்ணும். ஆனால் தலைவி மனமோ தனக்குச் சமுதாயத்தில் மனைவி என்னும் தகுதி கிடைப்பதனையே பெரியதாக எண்ணும். நேரடியாகத் தலைவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கூறுவது அவன் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைச் சுட்டுவதாக அமையும். ஆனால் தலைவியைப் பற்றிப் பிறர் தவறாகக் கூறினால் அதனைத் தலைவனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே ‘‘அலர்” தோன்றியதாகக் கூறி மிகுதியும் அக இலக்கியத்தில் வரைவு கடாஅதல் நிகழ்கின்றது. வரைவுகடா அதலின் பொருட்டே அலரும் விரித்துரைக்கப்படுகிறது.

அலர் தூற்றுவோர்

சங்க இலக்கியங்களில் அலர் தூற்றுபவர் பெண்களாகவே சுட்டப்படுகின்றனர். இதனை,

வெவ்வாய்ப் பெண்டிர் (குறுந். 373, அகம். 50)

அலர் வாய்ப் பெண்டிர் (நற். 36)

அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற். 143)

அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் (அகம். 203)

என்று எட்டுத்தொகை நூல்கள் சுட்டுகின்றன.

அக இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர் கூற்றிற்கு உரியவர்களாகக் கூறும்போது தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, விறலி, பரத்தை என்று பெரும்பாலும் பெண்களையே சுட்டுகிறார். அறத்தோடு நிற்றலை விளக்கும் போதும் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் வீட்டில் இருப்பவர்களுக்கும் அறத்தோடு நிற்பர் என்று கூறுகிறார். இங்கு எந்த ஓர் இடத்திலும் தலைவன், பாங்கன், பாணன் இவர்களைத் தவிர வேறு ஓர் ஆண் இடம் பெறவில்லை. ஒரு பெண்ணின் களவொழுக்கம் குறித்து, வேறு ஆண் மகன் வெளிப்படையாகப் பேசுவது நாகரிகம் அன்று என்ற தமிழரின் பண்பாட்டின் வெளிப்பாடே இஃது எனலாம்.

அலர் தூற்றும் இயல்பு

பெண்கள் அலர் தூற்றும் இயல்பினை ,

‘‘சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுபோல் வலந்தனள்….’’ (நற். 149)

என்ற நற்றிணைப் பாடல் ஒன்று  காட்சிப்படுத்துகின்றது.

இங்கு அம்பல் என்பது தமக்குள் கரவாகப் பேசியதைக் குறிக்கும். தலைவி உயர்ந்த குடியில் பிறந்தவள். ஆகையால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அயல் பெண்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும் தமக்குள் மறைவாகப் பேசியபடி அலர் உரைத்தனர் எனலாம். தாயும் தன் மகள் மீது ஐயம் கொண்டு அவளை அடித்தாள் என்பதை விட, பிறர் சுட்டிக்கூறும் அளவிற்கு நடந்து, பிறந்த குடிக்கு இழிவைத் தந்துவிட்டாளே என்ற எண்ணத்திலேயே தலைவியை அடித்தாள் எனலாம்.

அலர் அச்சமும் தலைவியின் மனமும்

ஊரில் அலர் பரவிய நிலையில் தலைவிக்குத் துன்பம் ஒருபுறம் தோன்றும் எனினும் மறுபுறம் அலரின் விளைவால் தலைவன் விரைந்து திருமணம் செய்து கொள்வான் என்ற எண்ணம் அவளுக்கு இன்பத்தையே தோற்றுவிக்கும். ஆயினும், அலரினைத் தாய் அறிந்தால் நேரிடும் விளைவை எண்ணி அஞ்சுகிறாள். அன்னை கோபம் கொண்டு தண்டிப்பாளே என்ற எண்ணத்தை விடவும் இற்செறித்துவிட்டால் தலைவனைச் சந்திக்க இயலாது போய்விடுமே என்ற எண்ணமே அங்கு மேலோங்கி இருப்பதை அறிய முடிகின்றது. தலைவியானவள்,

‘‘அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை

அரியவாகும் நமக்கு (நற்.4)

என்று கூறுகின்றாள். இதில் தலைவியின் ஏக்கக் குரலையே நாம் கேட்க முடிகிறது. அலருக்காக தலைவி ஒருபுறம் வருந்தினாலும் மற்றொரு புறம் மகிழவே செய்வாள். தடைபோட, தடைபோட காதலில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இப்பாடலின்  கருத்தினை,

‘‘ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும் இந்நோய்.’’ (குறள் 1147)

என்ற வள்ளுவர்  தெளிவுற விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது..

அலர் என்பது தலைவன், தலைவியின் களவொழுக்கத்திற்குத் தடையாக இருப்பது என்று சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஆயினும் அலரே களவு வாழ்வு கற்பாக மாறுவதற்கு வழி வகுக்கின்றது. தமிழரின் பண்பாடடின் வெளிப்பாடாக அமைந்த அலர் பின்னாளில் இலக்கியச் சுவைக்காகவும், நாடகத் தன்மைக்காகவும் பயன்படுத்தப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

Series Navigationஅக்னிப்பிரவேசம்-16கவிதைகள்