சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை

This entry is part 27 of 31 in the series 13 அக்டோபர் 2013

எழிலன் , கோவை

 

சுப்பு ரத்தினமாகப்     பிறந்து பின்  பாரதியால் கண்டெடுக்கப்பட்டு  பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக விடுதலையை அடி நாதமாகக் கொண்ட பல பாடல்களை எழுதியுள்ளார். எவ்வாறு பாரதியின் கவிதைகளில் தேச விடுதலை மையமாக இருந்ததோ அவ்வாறு பாவேந்தரின் கவிதைகளில் தமிழும் பகுத்தறிவும் மையமாக இருந்தன.

அவ்வாறு எழுந்த ஒரு குறுங்க்காவியமே சஞ்சீவி பார்வத்ததின் சாரல் என்பது ஆகும். இந்தியத் திருநாட்டின் பெரும் இதிகாசங்களில்  ஒன்றான இராமகாதையில் வரும் அனுமன் மருத்துவ மலையைப் பெயர்த்து வந்து இராம இலக்குவகர்களை எழுப்பிய காட்சியை எள்ளி நகையாடுவதாக இப்பாடல் இயற்றப் பட்டுள்ளது. இது பல அடிகளைக் கொண்ட பஃறொடை வெண்பாவில் இயற்றப்பட்டுள்ளது.

முள்ளை முள்ளால் எடுப்பது போல், சஞ்சீவி பர்வதத்தின் மூலிகையின் உதவியால் அவர்கள் பகுத்தவறிவைப் பெறுவதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளத்து.

சுருக்கமாகப் பார்த்தால் குப்பனும் வஞ்சியும் மலைக்கு மேல் சென்று அங்குள்ள இரு மூலிகைகளைப்  பறித்து வருகின்றார்கள். அவற்றின் ஒரு மூலிகையின் மூலம்  பல நாட்டு மக்களின் கருத்துக்களை அறிகிறார்கள். நம் நாட்டின் அவல நிலையையும் அறிந்து வருந்துகிறார்கள். அதன் பின் ஒரு பாகவதனின்     இராமாயணப் பிரசங்கத்த்தில் அனுமன் வானலவு வளர்ந்து அவர்கள் இருக்கும் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து இராம இலக்குவகர்களை உயிர்ப்பித்த நிகழ்சியைக் கேட்கின்றனர். அப்போது குப்பன் அக்கதை உண்மை  என்று எண்ணி மனம் தளர்கின்றான். பின் வஞ்சி இக்கதை எவ்வாறு பகுத்தறிவிற்கு ஒவ்வாததாக உள்ளது என்பதை விளக்கி குப்பனின் மனதைத் தெளிவடையச் செய்கிறாள். இதுவே இக்காவியத்தின் சுருக்கமான கதைக்களம்.

இக்காவியத்தில்  இயற்கை வருணனை மிகவும் அளவில் குறைவாகவே உள்ளது என்றாலும், பொருளில் நிறைவாக இருப்பதைக் காணலாம். இப்பாடலின் துவக்கத்தில் பாவேந்தர் சஞ்சீவி பார்வத்ததின் சாரலின் அழகை வர்ணிக்கின்றார். இவ்வடிகளே பாடலின் முடிவிலும் அமைந்த்திருப்பது இப்பாடலின் சிறப்பம்சம் ஆகும்.

இக்காவியம் இவ்வாறு துவங்குகிறது.

 

“குயில்கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த

மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் ஊடையநற்

காற்று குளிர்ந்தடிக்கும் கண்ணாடிப் போன்றநீர்

ஊற்றுக்கள் உண்டாம் கனிமரங்கள் மிக்கவுண்டாம்”

 

நினைப்பதற்கே இனிமையான ஒரு காட்சியை நம் கண் முன்னே நிறுத்துகிறார் பாவேந்தர். இக்காட்சி நடைபெறும் இடம் ஒரு மலைச்சாரல் என்பது அவ்விடத்திற்கு மேலும் எழில் சேர்ப்பதாகவுள்ளது. அவ்விடத்தில் பலதரப்பட்ட பறவை இனங்கள் இருப்பதாகக் காட்டுகிறார். அவ்விடம் மலைப்பாங்கான குறிஞ்சி நிலமானதால் அங்கு எப்போதும் நாற்காற்று வீசுவதாகவும் மேலும் அக்காற்று வாசம் உடையதாகவும் பாடுகின்றார். காற்றில் பூக்களின் வாசமும், மலையில் உள்ள மூலிகைகளின் மணமும் கலந்து உள்ளதால் அது வாசம் மிகுந்த நாற்காற்றாக ஆகிறது. குறிஞ்சி நிலத்தில் உள்ள சுனைகளை கண்ணாடிப் போன்ற நீர் ஊற்று என்று குறிக்கிறார்.

பாடலில் மேலும்

 

“பூக்கள் மணங்கமழும் பூக்கள்தோறும் சென்றுதேன்

ஈக்கள் இருந்தபடி இன்னிசைப் பாடிக்களிக்கும்.

வெட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு

காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு”

என்று வர்ணணை தொடர்கிறது. முன்னமே பார்த்தபடி பலத்தரப் பட்ட பூக்களின் நறுமணம் எங்கும் வீசுகிறது. அப்பூக்களில் தேனீக்கள் அமர்ந்து ரீங்க்காரிமிட்டபடி இருக்கின்றன. வேடுவப் பெண்களும் ஆண் மறவர்களும் விளையாடிக் கொண்டும் காதல் புரிந்து கொண்டும் இருக்கின்றனர்.

 

இக்காட்சியைப் பார்க்கும் போது திருமாலையில் தொண்டரடிப் பொடியாழ்வார் “அண்டர் கோண் அமரும் திருவரங்கச் சோலை”யை பற்றி பாடிய திருமாலையில் பாடிய

 

“வண்டிண முரலும் சோலை

    மயிலிணம் ஆடும் சோலை

கொண்டல்மீ தணவும் சோலை

    குயிலினம் கூவும் சோலை”

 

என்ற பாசுரம் நினைவுக்கு வருகின்றது.

மேலும் சஞ்சீவி மலை மிகவும்  சிறு குன்றாகவே இக்காவியத்தில் காட்டப்படுகின்றது. குப்பன் வஞ்சியைத் தூக்கிக்  கொண்டு மலையில் நான்கு மணிக்கு ஏறத்துவங்கியவன் சூரியன் மறையும் போது இறங்கி விடுகிறான்.

 

மாலைப் பாதை கல்லால் அமைந்துள்ளது என்பதை

“கல்லில் நடந்தால் உன் கால்கடுக்கும்”

என்று குப்பன் வஞ்சியிடம் சொல்வதன் மூலம் அறியலாம். அக்குன்றில் பல விலங்குகள் இருப்பதையும் குப்பன்

“பாழ்விலங்கால் அந்தோ படுமோசம் நேரும்”

என்பதன் மூலம் அறிகிறோம். அம்மலைப் பாதையில் ஆங்காங்கே மரங்கள் இருப்பதையும் அவர்கள்

“………… அங்கோர் மரத்து நிழலிலே

சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்”

என்ற அடிகளால் பாவேந்தர் காட்டுகிறார்.

பாடலை முடிக்கும் போது மாலைக்காட்சியின் வருணனையை மெலிதாகத் தொடுகிறார் பாவேந்தர். குப்பன் வஞ்சியிடம்

“பாரடி மெற்றிசையில் சூரியன் மறைக்கின்றான்

சார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி

மாலைப்  பொழுதும் வடிவழகு காட்டுதுபார்

சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார்”

 

என்று கூறி அவளைக் காதலுக்கு அழைக்கிறான். அதற்கு உடன்படும் வஞ்சி மீண்டும் காவியத்தின்  துவக்கத்தில் வரும் வருணனையைக் கூறி இறுதியில்

 

“அன்பு நிறைந்து அழகிருக்கும் நாயகரே

இன்பமும் நாமும் இனி”

 

என முடிப்பதாக பாவேந்தர் பாடலை நிறைவு செய்கிறார். இதன்மூலம் எங்கு அன்பு நிறைந்து இருக்கிறதோ அங்கு அழகிருக்கும், அங்குதான் இன்பமும் நிறைந்து இருக்கும் என்று பறைசாற்றி உண்மையான அழகு அன்பே என பாடலை நிறைவு செய்கிறார்.

Series Navigationகாலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
author

எழிலன் , கோவை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *