சந்திரலேகா அல்லது நடனம்..

தன் கோப்பையின்
தேநீரை அவள்
துளித்துளியாய்ப்
பருகிக் கொண்டிருந்தாள்.

யாருடன் அருந்துவது.,
யாருக்குப் பகிர்வது.,
யாருடையதை எடுத்துக் கொள்வது
எனத் தீர்மானித்தபடியே.

சூடாகத் தேநீரும் பாலும்
கலக்கும் போது
ஆவிகள் நடனமிடுவது
பிடிக்கும் அவளுக்கு.

இயல்பாய் இருக்கும்
அவள் நடனத்தைப் போல
மெல்ல மேலெழும்பி
மணம் பரப்புகின்றன அவை.

இனிப்புக் கட்டிகளை
விருப்பத்தின் பேரிலேயே
இணைத்துக் கொள்கிறாள்.

ஸ்பூனால் கலக்கும்போது
“யந்திர”த்தில் இருந்து எழும்
அதிர்வுகளையும் ஓசைகளையும்
ஒத்திருந்தது அது.

ஒத்திசைவுகளோடு
கலக்கப்பட்ட ஒரு தேநீரை
அவள் பருகும்போது
அது தனக்கானது மட்டுமேயென
சொட்டுச் சொட்டாய்
ருசித்து அருந்துகிறாள்.

காலிக்கோப்பையை
அவள் விட்டுச் சென்றபின்
தெரிகிறது அவள் எதையுமே
மிச்சம் வைக்கவில்லை
எறும்புகளுக்குக் கூட

அந்தக் காலிக் கோப்பையில்
”வெற்று வெளி”யாய்த்
தன் நடனத்தில்
சுழன்றபடி இருந்தாள் அவள்.

குறிப்பு:- யந்திரா.. அவரின் அதிர்வுகள் கொண்ட நாடகம்.

வெற்று வெளி – ஸ்பேஸ் என்று நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் அவரின் வீடு.

Series Navigationஉன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)