சாத்துக்குடிப் பழம்

Spread the love

“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!”

“கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா பக்கத்திலையே வச்சிருக்காரே!”

“பக்கத்திலே இல்லாமே தூரத்திலே வச்சிருந்தா மட்டும் நமக்குக் கிடைச்சிடுமா என்ன? ஐயாவாப் பார்த்துக் கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?”

மேற்கண்ட கசமுசாப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது கணீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது.

“என்ன? என்ன பேச்சு?”

“ஒண்ணுமில்லேய்யா! பசிக்கிற மாதிரி இருந்தது!” கசமுசாக்காரர்களில் ஒருவர் தைரியமாகவே சொல்லிவிட்டார்.

“பழக் கூடை பக்கத்திலே இருந்தா ஏன் பசிக்காது! பசியாம் பசி.. வெங்காயம்! புறப்படுறப்பத்தானே பிரியாணி சாப்பிட்டது! அதுக்குள்ளே பசியிh? பசிக்கிறதிருக்கட்டும். இப்பப் பழம் சாப்பிட்டா உடம்புக்கு என்ன ஆகிறது! மழைக் காலத்திலே சளி பிடிச்சிக்காது! வாயை மூடிட்டு சும்மா வரணும்! எல்லாம் ஈரோடு போய்ப் பார்த்துக்கலாம்!”

அதிகாரக் குரல் கசமுசாக்காரர்களை “கப்சிப்” என்று அடக்கிவிட்டது.

அதிகாரக் குரலுக்குரியவர் பெரியார் ஈ.வெ.ரா. கசமுசாகாரர்கள் அவருடன் பயணம் செய்த இரண்டு கழகச் செயல் வீரர்கள்.

தமிழகத்தின் சழுதாயக் கழனியில் பகுத்தறிவு என்னும் நாற்று நட்டு, அது நன்கு செழித்து வளரக் காரணமானவர் பெரியார். அநாவசியச் செலவென்றால் அவருக்கு அறவே பிடிக்காது. சிக்கனம் அவர் உடன் பிறப்பு. பெரிய காலரும் பெரிய கைப் பட்டியும் வைத்த நான்கு சட்டைகள் தைக்கக்கூடிய துணியில், அதையே சின்னக் காலரும் சின்னக் கைப்பட்டியும் வைத்துத் தைத்தால் ஐந்து சட்டை தைக்கலாமே என்று எண்ணக்கூடியவர். அன்பளிப்பாக ஒரு ரூபாய் கிடைத்தாலும் சரி.. வாய் நிறைய ‘நன்றி’ என்று மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார். அவரிடமிருந்து ஒரு காசு பெயர்வதும் இமயமலை பெயர்வதும் ஒன்றுதான்.

பகுத்தறிவுப் பிரச்சாரம் பரபரப்பாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. பெரியார் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஈரோடு வழியாகச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நேரம். இரண்டு கழகச் செயல் வீரர்கள் அவருடன் துணையாக வந்து கொண்டிருந்தார்கள்.

கோயம்பத்தூரிலிருந்து தனி வண்டியில் புறப்படும் போது கழகத் தோழர்கள் சென்னை போகிறவரை எல்லாருக்கும் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் நான்கு டஜன் சாத்துக்குடிப் பழங்களை ஒரு கூடையில் போட்டுப் பெரியாரிடம் கொடுத்திருந்தார்கள். அதில் ஏதாவது பழம் கிடைத்தால் பரவாயில்லையே என்றுதான் அவருடன் பயணம் செய்த கழகச் செயல்வீரர்கள் ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டு வந்தார்கள். ஆனால், பெரியாரவர்கள் அசைந்து கொடுத்த பாடில்லை.

ஈரோட்டுக்கு வந்தபோது பேருந்து நிலையத்திற்கருகில் வண்டியை நிறுத்தச் சொன்னார் பெரியார். “சரி.. இப்போது பழம் கிடைக்கப் போகிறது. ஆளுக்கு இரண்டு மூன்றாவது கொடுப்பார்!” என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள் கழகச் செயல் வீரர்கள்.

ஆனால், பெரியார் அவர்கள் பையிலிருந்து நாலணாவை (25 காசுகள்) எடுத்துக் கொடுத்தார்.

“ஆளுக்கு ஒரு டீ சாப்பிடுங்க! டிரைவர்.. நீயுங்கூடத்தான்! மூணு டீக்கு மூணு அணாப் போக, சொச்சம் ஒரணாவைத் திரும்பக் கொண்டு வரணும்!”

பெரியார் அவர்கள் போட்ட உத்தரவு செயல் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாவம்.. அவர்கள் என்ன எதிர்த்தா பேச முடியும்? ஏமாற்றத்தோடு டிரைவரையும் அழைத்துக் கொண்டு டீக்கடைக்குப் போனார்கள்.

அப்போது, “சாத்துக்குடிப் பழேம்.. சாத்துக்குடிப் பழேம்..” என்று இனிமையாக ராகம் விட்டுக் கூவிக் கொண்டு, அழகாக அடுக்கப்பட்ட சாத்துக்குடிப் பழங்களுடன் கூடிய அகன்ற கூடையைத் தலையில் சுமந்து வந்த பழக்காரன், “ஐயாவுக்கு சாத்துக்குடி வேணுங்களா?” என்று பெரியாரிடத்தில் பிரியமாகக் கேட்டான்.

“டஜன் என்ன விலை?” என்றார் பெரியார்.

“ஒண்ணரை ரூபாய்!” என்றான் பழக்காரன்.

“நாலணா குறைத்து ஒண்ணே கால் ரூபாய்க்குத் தர முடியுமா?” பேரம் பேசினார் பெரியார்.

“மற்றவர்களானால் டஜன் ரெண்டு ரூபா தான். ஐயாவானதாலே வாங்கின விலையான ஒண்ணரை ரூபாய்க்குத் தர்றேன்” என்றான் பழக்காரன்.

“ஒண்ணே காலுக்கு மேல் வேண்டாம்” என்றார் பெரியார்.

“டஜன் ஒண்ணே காலுக்குக் கிடைச்சா நானே வாங்கிக்குவேன்” என்று பழக்காரன் ஒரு போடு போட்டான்.

“அப்படியா?” என்ற பெரியார் பக்கத்திலிருந்ம பழக்கூடையை எடுத்துப் பழக்காரனிடம் கொடுத்தார்.

“இதோ பார்.. இதிலே நாலு டஜன் பழம் இருக்கு.. ஒண்ணேகால் ரூபாய்க்குக் கணக்குப் போட்டு, நாலு டஜனுக்கு அஞ்சி ரூபா எடு..” என்று ஒரு பெரும்போடு போட்டார் பெரியார்.

அசந்து போன பழக்காரன் பெரியார் அவர்கள் மேல் பிரியமுள்ளவனாகையால், கையில் பணமில்லாவிட்டாலும் இங்குமங்கும் ஓடி ஐந்து ரூபாயைச் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

டீ சாப்பிட்டு விட்டுத் திரும்பிய செயல் வீரர்கள் இதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். பெரியார் மறக்காமல் மூன்று டீக்கு மூன்றணா போக மீதம் ஓரணாவைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

இதன் பிறகு செயல் வீரர்கள் சென்னை போய்ச் சேரும் வரைக்கும் பச்சைத் தண்ணீருக்குக் கூட வாய் திறந்து பேசவில்லை!

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி -16திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்