சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘

கவியோவியத்தமிழன், பல வருடங்களாக, சிற்றிதழ் உலகில் அறியப்பட்டவர். அவ்வப் போது, தன் இலக்கிய தாகத்தின் வெளிப்பாடாக, சில இதழ்களை ஆரம்பிப்பார். அவர் ஆரம்பிக்கும் இதழ்கள் எல்லாமே, அதிர்வு தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் அவர் அப்படி ஆரம்பித்து, நின்று போன இதழ் தான் ‘ மலம் ‘ அழகான கையெழுத்து கொண்ட நவீன ஓவியர் அவர். எல்லா ஓவியர்களுக்கும் அழகான கையெழுத்து இருப்பதில்லை. ஓவியர் ஆதிமுலத்தின் கையெழுத்து அப்படியானது. ஆனால் கவி, தன் வார்த்தைகளை, ஒரு ஓவியம் போலவே எழுதுவார். அவர் கையெழுத்திலும், அவரது ஓவியங்கள் நிரம்பியும் வந்த மலம் சிக்கல் ஏற்பட்டு நின்று போனது. அதன் நீட்சியாக பொட்டல் காட்டில், மலம் கழிக்க, ஒதுங்க இடம் கிடைக்காத, ஒருவனின் அவஸ்தையை அவர் கதையாக எழுதினார். அதோடு அதன் தாக்கம் முடிந்து விட்டது.
‘ குறி ‘ ( இந்தப் பெயரும் ஒரு தாக்கம் தான் ) இதழில் இணைந்து, சில இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவரது இதழ் ஆரம்பிக்கும் அரிப்பு, அவரைச் சொரிந்து கொண்டே இருந்திருக்க வேண்டும். சமீப காலத்தில் ‘ முள் ‘ என்றொரு இதழை ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பெயர் கொஞ்சம் பரவாயில்லை. நம் கையில் கிடைத்தது 5வது இதழ். முதல் இதழ், குமுதம் இதழின் பாதி அளவில், கையெழுத்தி லேயே வந்ததாக ஞாபகம். தலைப்பின் கீழே ‘பாதைகளைக் கவனிக்க’ என்று போட்டிருப்பது நல்ல உத்தி. முதல் முள் குத்தியவுடனேயே, நிதானம் வந்து விட்டால், வாழ்வுப்பயணம் சுகம் தான். அட்டை புகைப்படம் பெரியதொரு கண். முள்ளை கவனிக்க கண் வேண்டாமோ?
யவனிகா சிரிராமின் கவிதை வரியை முகப்பில் அச்சிட்டு வந்திருக்கிறது இதழ். ஆனால் உள்ளே இருக்கும் வரிகளில் ஒரே பெசிமிசம் தான். எழுதுதல் என்பது இளம்பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ந்து வருவது என்கிறார். இன்னும் கொஞ்சம் கீழே, தொழிற்சாலைகளில் உறுப்பிழக்கும் ஆபத்து என்கிறார். எழுதுதல் என்பது முரண்.
ஓவியனை ஆசிரியராகக் கொண்டு வரும் இதழ் ஒரே ஓவியத்துடன் வருவது, ஒரு வேளை திகட்டிவிடுமோ அல்லது அலுத்து விடுமோ என்கிற சாக்கிரதை காரணமாக இருக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளையில் புகைப்படங்களாக ரொப்பியிருக்கிறது அலுப்பாகத்தான் இருக்கிறது.
கொஞ்சம் வெளியீடு செய்திகள், ஆசிரியரின் கவிதைகள், இலக்குமிகுமாரன் ஞான திரவியம், பாரதிவாசன், அ. வெண்ணிலா, பச்சியப்பன் என கவிதைகளால் நிரம்பி இருக்கிறது இதழ். ஒரு கதை கூட இல்லை. அடுத்த இதழ் 32 பக்கமாம்.. கதைகள் உண்டாம். காத்திருப்போம்.
தொடர்பு முகவரி: கவியோவியத்தமிழன், முள் இதழ், அய்யலூர் _ 624801.
செல்: 8056640485.
0

Series Navigationகுசினிக்குள் ஒரு கூக்குரல்லிங்குசாமியின் ‘ வேட்டை ‘