சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரி

This entry is part 4 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் ஒல்லியாக குச்சிபோல் இருந்தது ஆச்சர்யம். யானைக் கை அம்மாள் கொஞ்சம் தாட்டியானவள். முதல் மாடியில் குடியிருந்த அவர்கள் குடும்பம் எதற்கும் அதிகமாக இறங்கி வராது. சாயங்கால வேளைகளில் வீணை கற்றுக்கொள்ள பெண்டுகள் அங்கு குழுமும். வீணை சப்தம் மெலிதாகக் கேட்கும். கடைக்குப் போவதற்கும் வேறு எதற்காக இருந்தாலும் அந்த இரண்டு பெண் பிள்ளைகள் தான் இறங்கி ஓடும். அந்த வீட்டில் ஆம்பிளை வாசனை அடித்ததே இல்லை. அம்மாளின் புருசன் யார் என்று யாருக்கும் தெரியாது. தேடிவரும் சொந்தங்களும் மிக சொற்பம். அதிலும் ஆண்கள் மிக மிகக் குறைவு.
இரு பெண்பிள்ளைகள் என்று சொன்னேனல்லவா! அதில் மூத்தவள் பத்மா என்கிற பத்மப்ரியா. ஒடிசலாக ஆறடிக்கு கொஞ்சம் குறையாக இருப்பாள். யார் வீட்டில் எந்தப் பரணையில் எதை எடுக்க வேண்டுமென்றாலும் அவளைத்தான் கூப்பிடுவார்கள். ஏணியில்லாமல் எடுக்கக் கூடியவள் அவள் ஒருவள்தான். ஒனக்கு மாப்பிளை கெடைக்கறது கஷ்டம்டி. இந்தூர் மாப்பிள்ளையெல்லாம் அஞ்சரை அடிதான். அயல்நாட்டு மாப்பிள்ளைதான் ஒன் ஒசரத்துக்கு தோது. என்று அவளைக் கோட்டா பண்ணுவார்கள் அடுத்த போர்ஷன் மாமிகள்.
மாட்டுக்கறி துண்றவன். அவன் நெம்பலை யார் தாங்கறது. நமக்கு உள்ளூர் அரையடி ஸ்கேலே போதும். அளவோட வாழலாம் என்று மனசுக்குள் நினைத்துக் கொள்வாள் பத்மா. சுடிதார், மேக்ஸி எல்லாம் வராத காலம் அது. திருமணம் வரையிலும் பாவாடை தாவணிதான். அதுவும் கீழ் நடுத்தர வர்க்கத்துக்கு இரண்டொன்று தான் இருக்கும் உடைகள். இரு பெண்கள் இருக்கும் வீடுகளில் மாற்றிக் கொள்ள கொஞ்சம் கூடுதல் சாய்ஸ் கிடைக்கலாம்.
பத்மா கொஞ்சம் கலை ரசனை மிக்கவள். இருக்கும் உடைகளில் கிடைக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு நேர்த்தியாக உடை அணிவது ஒரு கலை. அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து விட்டால், புதுப் பரிமாணங்களில் தோற்றம் மாறும் என்பது அவள் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று.
மஞ்சள் கலர் பாவாடையும், கையில் பச்சை நூலால் எம்ப்ராய்டரி செய்த வெளிர் மஞ்சள் ஜாக்கெட்டும், சிகப்புத் தாவணியும் அவள் வாரத்தில் மூன்று நாட்கள் அணிய வேண்டிய கட்டாயம். மீதி நாட்களில் பச்சைப் பாவாடையும் வெள்ளை தாவணியும். ஆனாலும் அவளது நிறத்திற்கு மஞ்சளும் சிகப்பும்தான் எடுப்பாக இருக்கும். அதிலும் தாவணியை முன்பக்கம் இழுத்து இடுப்போடு சொருகியிருப்பாள். பின்பக்கம் இடுப்பில் மையப் பிரதேசத்தில் தொடங்கி V வடிவில் சிகப்பு தாவணியின் ஒரு முனை இறங்கியிருக்கும். அதுவும் புட்டத்தின் பாதிப் பகுதியோடு நின்று விடும். அழகிப் போட்டிகளில் இடது காலை வலது பக்கமும், வலது காலை இடது பக்கமும் மாற்றி மாற்றி நடப்பார்களே அதுபோல் நடப்பாள் அவள். தொலைக்காட்சியோ வேறு சினிமாக்களோ கற்று தராத சூழலில் அவளுக்கு அது இயல்பாக வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இப்படியான பூனை நடையின் காரணமாக அவளது பின்பகுதி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைந்து ஆடும். அதன் ஆட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல் சிகப்பு தாவணியின் வீ விரிந்தாடும்.
வீணை _ யானை அம்மாளின் குடும்ப நிதி நிலைமை அப்படியொன்றும் ஓஹோ ரகம் இல்லை. மாதக் கடைசியில் கடன் கேட்கும் நிலைதான். ஆனாலும் எந்தக் கடன்காரனும் அவள் வீட்டு முன் வந்து நின்றதில்லை. ஒரு முறை சீட்டு போட்டு வட்டிக்கு விடும் சாரதாதான் சத்தம் போட்டாள். அதற்கப்புறம் அவளிடம் சீட்டும் போடுவதில்லை, கடனும் வாங்குவதில்லை என்றாகிப் போனது. அன்று பத்மா எடுத்த முடிவே அதற்குக் காரணம். இனி பெண்களிடம் கடன் வாங்குவதில்லை என்ற முடிவே அது.
மாதக் கடைசியில் பத்மா மளிகைக் கடையில் பொருள் வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. காலை டிபனுக்கு பாம்பே ரவையும், மதிய உணவுக்கு அரிசியும், கூடவே கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய் என்று ஒரு லிஸ்ட் தயாராகும். கையிருப்போ அரை ரூபாய் என்ற அளவில் இருக்கும்.
லேசாக பவுடர் பூசிக் கொள்வாள் பத்மா. சிறிய ஓலைப் பர்சில் எட்டணா நாணயத்தை போட்டுக் கொள்வாள். அதுவும் முழு நாணயமாக இருக்காது. பத்து பைசா, அஞ்சு பைசா என்று ஏகத்துக்கு கனக்கும். ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு, ஓலைப் பர்ஸை ஜாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு கிளம்புவாள். அவளது குறி இன்று தெரு முனை நாட்டார் கடை.
நாட்டார் கடையில் ஏகத்துக்கு கூட்டம் இருக்கும். பத்மா பொறுமையாக காத்திருப்பாள். கடன் சொல்பவர்களையெல்லாம் கடிந்து கொண்டே சாமான் கட்டிக்கொண்டிருப்பார் நாட்டார். எல்லாம் பத்து பைசா நாலணா வியாபாரம். அதிலேயே கடையோடு சேர்ந்த வீட்டைக் கட்டியிருந்தார் நாட்டார். கூட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டு இவள் பக்கம் திரும்பும்போது பத்மா ஏதோ யோசித்தவளாய் படியிறங்க முற்படுவாள். ஓரக்கண் நாட்டாரை நோட்டம் விடும். தொங்கிக் கொண்டிருக்கும் தராசு மறைவில் லேசாக கை மாராப்பை விலக்கிக் கொள்ளும். நாட்டார் கண்கள் விரியும். வாய் அவசரம் காட்டும்.
“ தே நில்லு .. வந்திட்டு எங்கிட்டு எதுவும் வாங்காம போற .. வேணுங்கறத வாங்கிட்டு போ . அதுக்குத்தானே தொறந்துக்கிட்டு ஒக்காந்துருக்கம் கடைய “ மேல் துண்டால் கடைவாய் எச்சிலை துடைத்த படியே அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் நாட்டார்.
“ பரவால்ல நாட்டார். நாலஞ்சு ஐட்டம் வாங்கணும். பணம் இருக்குதான்னு தெரியல “ என்றபடியே ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பர்ஸை எடுப்பாள் பத்மா. இன்னும் கொஞ்சம் தாவணி விலகும்.
“ கடன் சொன்னா கொறைஞ்சி போயிடுவியளாக்கும். இல்ல கடன் கொடுத்தாத்தேன் என் சொத்து பத்தெல்லாம் கரைஞ்சி போயிடுமாக்கும், வேணுங்கறத வாங்கிட்டு போ அம்மணி “ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக கெஞ்சுவார் நாட்டார்.
நாட்டாருக்கு நாஸ்தா வரும் ஒயர் கூடை கொள்ளாமல் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவாள் பத்மா. அவளது ஓலை பர்ஸில் அரை ரூபாய் அப்படியே இருக்கும்.
பத்மா எந்நேரமும் எதையாவது படித்துக் கொண்டிருப்பாள். ஆண்களைப் பற்றிய அவளது உளவியல் ரீதியான அறிவிற்கு அவளே பல புத்தகங்கள் போடலாம். பள்ளி இறுதி வகுப்போடே தன் கல்விப் பயணத்தை நிறுத்தி விட்டவள் அவள். ஆனாலும் அவளது அறிவுத் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒருநாள் வெள்ளை சராய் சட்டை அணிந்து கொண்டு அவள் வெளியே போகும்போதுதான் எல்லோர்க்கும் தெரிந்தது அவள் கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கியவள் என்று. அதற்கப்புறம் அவளை நெருங்கலாம் என்ற நப்பாசை கொண்ட ஆண்கள் கூட கொஞ்சம் விலகியே இருக்க ஆரம்பித்தார்கள்.
திருமண வயதைத் தாண்டி பல ஆண்டுகள் கழித்து ஆறடி உயர மிலிட்டரிக்காரன் ஒருவனோடு அவளுக்கு திருமணம் ஆயிற்று. ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து வட இந்தியாவெல்லாம் சுற்றி விட்டு அவள் அம்மா வீட்டிற்கு வந்த போது கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள்.
ஒண்டுக் குடித்தன பொம்பளைகள் கேட்டார்கள்: “என்னடி பத்மா ஏதாவது விசேசமா?”
பதமா சொன்னாள்: “ஒண்ணென்ன நூறு இருக்கு நான் தங்கியிருந்த இடத்துல.. என் நெலத்துல தான் இன்னும் வேரு ஊனல..”
“தப்பா நெனச்சுக்காதடி கொஞ்சம் பூசினாப்பல இருக்கயே அதான் ..”
“அதுக்கென்ன கொறச்சல்.. வெண்ணையும் ரொட்டியும் தெனக்கிம் உள்ளார போனா பூசாத என்னா செய்யும்? நெருப்பு பட்டாத்தேனே உருகும்? “
அவள் தலை மறைந்தவுடன் ஆண்கள் போட்ட குழுத் தீர்மானம் இப்படிச் சொன்னது: சின்ன வயசுல எத்தினி பேரு திடத்தைக் கரைச்சிருப்பா.. அதான் ஆண்டவன் அவ வயத்துல தங்க விடாம கரைச்சிருக்கிறான்.

0

Series Navigationதிருக்குறளில் இல்லறம்டிசைன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *