சுவீகாரம்

இரட்டைப்புள்ளிக்
கோலங்களாய் ஆரம்பிக்கிறது.,
ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை.

குழந்தைப் புள்ளிகளைப்
பெருக்கிக் கொண்டே
போகிறார்கள் ஊரளவு.

பேரக்குழந்தைகளும்
கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய்
புள்ளிகள் விரிகின்றன.

எள்ளுப் பேரன்களின்
வீரியக் குறைச்சலால்.,
எள் தெளித்தபடி வர..

சோற்றைத் தேடும்
காக்கைகளாகின்றனர்
முன்னோர்கள்.

அள்ளிச்சிதறிய பருக்கைகளாய்
புள்ளிகள் குறைந்து வர
காயதுவங்குகிறது தரை.

குழந்தைப் புள்ளிகள் குறுகி
குழந்தைகளற்ற இரட்டைப்புள்ளிகளாய்
முடிகிறது கடைசி அப்பா அம்மாவின் வாழ்க்கை.

வெறுமையுடன் தொடர்பற்று
இருக்கும் அவர்கள்
நெளிக்கோலங்களாய் சுற்றத்
தொடங்குகிறார்கள் உறவுப்புள்ளிகளை.

ஒரு குடும்பமரம்., கோலமாய்ச்
சுருட்டி வைக்கப்படுகிறது
ஒவ்வொரு வாசலிலும்.
நாகங்கள்,ம் தேர்கள்.,
நட்சத்திரங்கள்., விளக்குகள் என..

கோலமற்ற வாசல்கள்
ஏதோ ஒரு ஸ்டிக்கர் கோலத்துக்காய்
ஏங்கியபடி காத்திருக்கின்றன.

Series Navigationவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருதுகூறியிருக்கவில்லை