சூறாவளி ( தொடர்ச்சி )

This entry is part 7 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

மூலம்     : கலீல் ஜிப்ரான்

தமிழாக்கம் : புதுவை ஞானம்

பின்னர் செல்மா தனது தலையை உயர்த்தி சுன்னின் மலைமுகடு வானத்தை வருடும் தொடு வானை நோக்கிச் சொன்னாள் ,” நேற்று நீங்கள் எனக்கு ஒரு சகோதரனைப் போல இருந்தீர்கள் யாருடன் நான் வளர்ந்தேனோ, யாருடன் நான் வாழ்ந்தேனோ , யார் அருகில் அமைதியாக எனது தந்தையாரின் பராமரிப்பில் இருந்தேனோ அந்த சகோதரனைப்போல் இருந்தீர்கள் . இப்போது விசித்திரமானதும் சகோதர பாசத்தைவிட இனிமையானதுமான ஒன்றினை உணருகிறேன். ஒரு பரிச்சயமற்ற அன்பும் பயமும் எனது இதயத்தை துயராலும் மகிழ்வாலும் நிரப்புகின்றன.”
” நம்மைப் பயமுறுத்தும், நமது இதயத்தை ஊடுறுவும்போது நெஞ்சைக்குலுக்கும் உணர்வானது நிலவினை பூமியைச் சுற்றிவரச் செய்வதும் சூரியனைக் கடவுளைச் சுற்றி வரச்செய்வதுமான இயற்கையின் விதியாகும்.” என்று நான் பதிலுரைத்தேன் .
அவள் தனது கரங்களை என் தலை மீது வைத்து முடியைக் கோதினாள். அவளது வதனம் பிரகாசித்தது அல்லி மலரின் இதழ்களின் மீது பனித்துளிகள் வீழ்வது போல் அவள் விழிகளில் கண்ணீர் கசிந்தது. “ நமது கதையை யார் நம்புவார்கள் _ இந்த நேரத்தில் சந்தேகங்களின் தடையை நாம் கடந்தோம் என்பதை ? நிசான் மாதம் தான் நம்மை ஒன்றினைத்தது முதன்முறையாக என்பதை . நம் வாழ்வின் புனிதங்களில் புனிதமான மாதம் இது என்பதனை ? “
அவள் என்னிடம் பேசியபோது அவளது கரங்கள் இன்னமும் என் முடியைக் கோதிக்கொண்டிருதன . அந்த அழகிய மெல்லிய கரங்கள் என் சிரசின் மீது இருப்பதை ஒரு அரச கிரீடம் அல்லது மலர்க்கிரீடம் என் தலையில் சூட்டப்பட்டிருப்பதைவிட பெருமையாக நான் கருதினேன் .
பிறகு நான் பதில் அளித்தேன்,” மக்கள் நமது கதையை நம்ப மாட்டார்கள் ஏன் எனில் பருவகாலங்களின் துணையில்லாது வளர்ந்து மலரும் ஒரேயொரு மலர் காதல்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது . ஆனால் நிசான் மாதம்தான் முதன் முறையாக நம்மை ஒன்றிணைத்தது . நம் வாழ்வின் புனிதங்களிலேயே புனிதமான நேரம் இது என்பது அவர்களுக்குத் தெரியாது . பிறப்பதற்கு முன்பே நமது ஆன்மாக்களை இணைத்து இரவும் பகலுமாய் ஒருவரையொருவர் சிறைப்பிடிக்க வைத்தது இறைவனின் கரங்கள் அல்லவா ? மனிதனின் வாழ்வு கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிவது அல்ல . இந்த இரவில் காதலிக்கும் ஆன்மாக்களாலும் யூகித்துணரும் ஆவிகளாலும் கைவிடப்பட்டது அல்ல இந்த உறுதிப்பாடு .”
அவள் தனது கரங்களை எனது தலையிலிருந்து அகற்றிய போது இரவின் சில்லிடும் காற்றோடு மயிர்க்கால்களை ஊடுறுவும் ஒரு மின்சார தாக்குதலின் அதிர்வலையை உணர்ந்தேன் .தெய்வீக சன்னதியின் பீடத்தில் தலைவைத்து முத்தமிட்டு இறைவனின் அருளை எதிர் நோக்கும் பக்தனைப்போல் நான் அவளது கையில் ஆழ்ந்து நீண்ட முத்தமிட்டேன் .அந்த முத்தத்தின் நினைவு என் இதயத்தில் எழும்போதெல்லாம் எனது ஆன்மாவில் இனிமையை உருக வைக்கும் விதத்தில் அமைந்தது அது,
ஒரு மணி நேரம் கடந்தது , அதன் ஒவ்வொரு நிமிடமும் காதலின் ஒரு ஆண்டு போல் நீடித்தது . அந்த இரவின் மவுனமும் நிலவொளியும் மலர்களும் காதலைத்தவிர அனைத்தையும் மறக்கச் செய்தன. திடீரென குதிரைகளின் குளம்பொலியும் வண்டிச் சக்கரங்களின் தடதடப்பும் எங்களை அதிரவைத்தது . எங்களது இனிமையான கனவுலக மயக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட நாங்கள் குழப்பமும் துன்பமும் நிறைந்த நனவுலகத்தில் திணிக்கப்பட்டோம், முதியவர் தனது பயணத்தில் இருந்து திரும்பியிருந்தார் . நாங்கள் எழுந்து பழச்சோலையைக் கடந்து அவரை வரவேற்க விரைந்தோம் .
வண்டி தோட்டத்தின் நுழைவாயிலை அடைந்தபோது , ஃபாரி ஸ் எஃபெண்டி மெதுவாக இறங்கி எங்களை நோக்கி ஏதோ பெரும் சுமையை சுமப்பதுபோல் முன் பக்கம் குனிந்து வந்தார் . அவர் செல்மாவை நெருங்கி தனது இரு கரங்களையும் அவளது தோள்மீது வைத்து அவளை வெறித்து நோக்கினார். அவரது சுருக்கம் விழுந்த கன்னங்களில் கண்ணீர் வழிந்தது, ஒரு துயரமான சிரிப்புடன் உதடுகள் நடுங்கின . நெஞ்சடைக்கும் குரலில் அவர் சொன்னார் ,” செல்மா என் செல்லமே வெகு சீக்கிரம் உனது தந்தையின் கரங்களில் இருந்து பிரிக்கப்பட்டு இன்னொரு மனிதனின் கரங்களைச் சென்றடைவாய் . விரைவில் இந்த தனிமையான வீட்டைவிட்டு உலகத்தின் வெகு விசாலமான மாளிகையை அடைவாய் , இந்தத் தோட்டம் உனது காலடியோசையைக் கேட்காது ,உனது தந்தை உனக்கு அன்னியம் ஆகிவிடுவார், எல்லாமும் ஏற்பாடாகிவிட்டது கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாரக ! “ என்றார் .
இந்த வார்த்தைகளைக் கேட்ட செல்மாவின் முகம் இருண்டது சாவுச்செய்தி கேட்டது போன்று முகம் உறைந்து போனது . அம்பு பட்ட பறவையைப்போல் கிறீச்சிட்டாள் . துயரத்தில் நடுங்கியவாறு அவள் கேட்டாள்,” என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ? இதற்கு என்ன அர்த்தம் ? என்னை எங்கே அனுப்பப் போகிறீர்கள் ?”
பின்னர் அவரை நோக்கினாள்.அவரது இரகசியத்தை கண்டு பிடிக்க முயற்சிப்பவள் போல் . அடுத்த கணத்தில் அவள் சொன்னாள்,” எனக்குப் புரிகிறது எல்லாமும் புரிகிறது . மடத்தலைவர் என்னை உங்களிடமிருந்து கேட்டிருக்கிறார் . சிறகு முறிந்த இந்தப் பறவைக்காக ஒரு கூண்டு தயாரித்து இருக்கிறார் . இதுதான் உங்கள் விருப்பமா அப்பா ?”
அவரது விடை ஒரு பெரு மூச்சாக வெளிப்பட்டது . மெதுவாக அவர் செல்மாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்லும்போது நான் தோட்டத்தில் நின்றிருந்தேன். ஒரு சூறாவளி இலையுதிர் காலத்தில் மரத்தை சுழற்றி அடிப்பதைப்போல் குழப்பம் என்னைச் சுழற்றி அடித்தது . அவர்களை நான் பின் தொடர்ந்து வசிப்பறைக்கு சென்றேன் . குழப்பத்தையும் சங்கடத்தையும் தவிர்க்கும் நோக்கில் நான் முதியவரின் கைகளைப்பற்றிக் குலுக்கினேன் . எனது அழகிய தாரகையான செல்மாவை நோக்கினேன் பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன் .
தோட்டத்தின் முனையை நான் அடைந்தபோது முதியவர் என்னை அழைப்பதைக்கேட்டுத் திரும்பி வந்தேன் . மன்னிப்பு கோருவதைபோல்
“என்னை மன்னித்து விடுங்கள் மகனே , நான் உங்களது மாலை நேரத்தைக் கண்ணீர் சிந்தும்படி ஆக்கிவிட்டேன் .ஆனாலும் நான் சோர்வாகத் தனியே தவிக்கும்போது வந்து போய்க்கொண்டு இருங்கள். அருமை மகனே காலை நேரம் இரவுடன் கலக்காது என்பது போல இளமை முதுமையுடன் கலக்காது . ஆனால் நீங்கள் அவ்வப்போது வந்து உங்கள் தந்தையாருடன் நான் கழித்த இளமைக்காலத்தை நினைவு படுத்துங்கள். வாழ்வின் செய்திகளை எனக்கு சொல்லுங்கள் .எனக்கு அவை திரும்பவும் நிகழப்போவதில்லை. செல்மா என்னை விட்டு சென்ற பின் என்னைக் காண வருவீர்களா அல்லது தனிமையில் விட்டு விடுவீர்களா?”
இந்த சோகமான வார்த்தைகளை அவர் சொல்லும் போது நான் அமைதியாக அவரது கைகளைக் குலுக்கினேன் , எனது கைகளின் மீது வெதுவெதுப்பான கண்ணீர்த்துளிகள் விழுவதை உணர்ந்தேன் . துயரத்தோடும் பாசத்தோடும் நடுங்கிய என் இதயம் சோகத்தினால் அடைபட்டது . நான் என் தலையை உயர்த்திய போது அவர் என் கண்களில் கண்ணீரைக் கண்டார் . என் முன் குனிந்து நெற்றியை முத்தமிட்டார் .” சென்று வா மகனே கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாரக!” என்றார்.
ஒரு முதியவரின் கண்ணீர் இளைஞனின் கண்ணீரைவிட வலுவானது ஏனெனில் முதியவரின் தளர்ந்த உடலில் எஞ்சியிருக்கும் வாழ்வின் வீரியம் அது . இளைஞனின் கண்ணீர் ரோஜா இதழ்களின் மேல் விழும் பனித்துளி போன்றது . முதியவரின் கண்ணீரோ குளிர் காலத்தின் வருகையில் பழுத்த மஞ்சள் இலைமீது விழுந்து அதனை உதிர வைப்பது போன்றது.
நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறியபோது ஃபாரிஸ் எஃப்ஃஃபெண்டி கிராமியின் குரலும் செல்மாவின் குரலும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருந்தன . அவளது அழகு ஒரு மலர் வளையம் போல் என்னைத் தொடர்ந்தது . அவளது தந்தையின் கண்ணீர் மெல்ல என் கரங்களில் உலர்ந்தது ,
எனது புறப்பாடு ஆதாம் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது போலிருந்தது . ஆனால் மொத்த உலகினையும் ஈடன் தோட்டமாக்க எனது ஏவாள் என்னுடன் இல்லை . அன்று இரவு நான் மீண்டும் பிறந்த போது முதன் முதலாக சாவை நேருக்கு நேர் முகம் கொடுத்தது போலிருந்தது .
இவ்வாறக சூரியன் தனது வெப்பத்தினால் வயல்களை ஆக்கவும் அழிக்கவும் செய்கிறான் .
24 .07 .3013 சூறாவளி இரண்டாம் பாகம் முடிவுற்றது .

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் – 13மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்
author

புதுவை ஞானம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *