செல்லாயியின் அரசாங்க ஆணை

பிறந்ததிலிருந்தும்

பிறந்தகம் துறந்த பின்னாலும்

செல்லாயியின் பொழுதுகள்

எப்போதும் ஆடுகளோடுதான்.

கோடையும் மழையும்

ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும்

பருவத்தின் பின்சுழற்சியில்

கருகிப்போயிருக்கும்

மரங்களின் இலைகள்

ஆடுகளுக்கெனத் தழைக்க,

” கொஞ்சம் பொறுங்கடா

சிவராத்திரி வரைக்கும் ”

எனப் பனிபோகவே

அன்று விரதமிருப்பாள்.

எதிர் வீட்டுத் தோட்டத்தில்

புகுந்து விட்ட

வெள்ளையோ கருப்போ

கால்கள் ஒடிந்தால்

செல்லாயியின் வசவுத்தமிழில்

விஷம் கலந்திருக்கும்.

மோட்டார்ச் சக்கரங்களிலும்

வியாதி வெக்கையிலும்

சிலதை இழந்திருந்தாலும்

ஆடுகளை ஒருபோதும்

விற்றதில்லை செல்லாயி

என்றாலும்,

இப்போதெல்லாம்

ஊரில் திருட்டு

அதிகமாய்ப் போனதையும்

குடிகாரக் கணவனுக்குக்

காசு சிறுத்துப் போனதையும் சொல்லி,

” உங்கள நீங்கதான்

பாத்துக்கோணும் ”

எனப் பின்னால்

ஊர்வலம் வரும் ஆடுகளுக்கு

முக்காடிட்ட தலையின் மேல்

கூடை கிரீடம் வைத்துக்கொண்டு

அரசாங்கம் போல

அறிவுரை சொல்கிறாள் செல்லாயி.

— ரமணி

Series Navigationமாதா+ பிதா +குரு < கொலைவெறி“வரும்….ஆனா வராது…”