சௌந்தர்யப்பகை

Spread the love

குத்தீட்டி கண்களில்
சுமந்தலைந்து நாகம்
யார் விழியில்
விஷம் பாய்ச்சலாமென.

தன்னினத்தில் ஒன்றுடன்
பார்க்கக்கூடப் பிடிக்காமல்
முன்ஜென்மப் பகையாகிறது
சம்பந்தமற்ற சச்சரவுகளில்..

லாவா உக்கிரத்துடன்
வார்த்தைக் கண்ணிகளை
அங்கங்கே புதைத்து
மாட்டும் கால்களுக்காக காத்து

பயணப்பாதைகள் பழக்கமற்று
தாறுமாறாய்த் துள்ளியோடும்
குறுமுயல்கள் கால் சிக்கி
வெடித்து தெறித்துச் சிதற

புதருக்குள் பதுங்கிக்கிடந்த
அரவம் மின்னும்விழிகளோடு
மெல்லெழும்பி ருசிக்கிறது
எதிரியின் நிணநீர்க்குருதியை..

வாயோரம் வழியும்
வெண் சிகப்பணுக்கள்
வீழ்ந்ததின் வேதனையையை
இரும்புச் சுவையாய்க் கிளர்த்த

சரசரவென பொந்துக்குள்
ஒன்றுமறியாத பாவனையில்
அகமகிழ்ந்து திரும்புகிறது
சௌந்தர்யப் பகை வழிய..

Series Navigationமௌனம்குடிமகன்