ப.மதியழகன் க‌விதைக‌ள்

ஜகத்மித்யை

பருவத்தில்
பாட்டு கேட்பது
தனிமையில் சிரிப்பது
கண்ணாடி பார்ப்பது
சகஜம் தான்
மிலேச்ச நாட்டில்
மொழி தெரியாமல்
சுற்றுபவனைப் போல
முகத்தை வைத்துக்
கொண்டிருந்தால்,
கண்டுபிடிப்பது கஷ்டமல்ல
காதல் தான்
காதலின் சின்னமே
கல்லறை தான்
கேள்விப்பட்டதில்லையா
காதலில் விழுவது
தெய்வத்தைத் தொழுவது
எல்லாம் ஒன்று தான்
ஓர்மை இல்லாவிடில்
சமூகக் கழுகுக்கு
இரையாவாய்
விடாயை விட்டுத் தொலை
உலகை சாளரத்தின் வழியே
பார்க்காமல்
முச்சந்தியில் நின்று பார்
சிவசங்கரன் சொல்லிச் சென்றது
சிற்றறிவுக்கு சிறிது எட்டும்.

அம்பலம்

வாழ்க்கையில் பாதி
தூக்கத்தில் கழிந்தது
கணினி யுகத்தில்
கவிதையெல்லாம்
வெற்றுக் காகிதங்கள்
விதை இறந்தால் தானே
முளைவிட முடியும்
கற்பனையில் குடித்தனம்
நடத்துகிற
எத்தனையோ கவிஞர்களை
எனக்குத் தெரியும்
கடற்கரையில் அலையுடன்
விளையாடுவது
அலுப்பைத் தருமா
என்றாலும் எழுதுகிறார்கள்
பிரசுரிப்பதை பற்றிய
கவலையின்றி
எதை எதையோ விற்று
புஸ்தகம் போட்டேன்
ஒரு பிரதி கூட விற்காமல்
எடைக்குத்தான் போட்டேன்
என்றாலும் வார்த்தைகள்
அருவி போல் கொட்டும்
அதில் நனைந்து தான்
பித்தம் தெளிய வேண்டியிருக்கிறது
குடிசைக்குள் குடித்தனம் நடத்த தெரிந்தவள்
சாப்பிடும் போது மட்டும்
சண்டை போட மாட்டாள்.

தபசு

என்ன மாதிரியான
உலகம் இது
பாமர ஜனங்கள்
இலவசத்துக்கு ஏமாறுகிறார்கள்
விவசாயிகள் கடன் தொல்லையால்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
திருமணத்திற்கு முன்னமே
சாந்தி கழிந்து விடுகிறார்கள்
கொலை செய்து விட்டு
அமைதியாக படுத்துறங்குகிறார்கள்
பிழைப்பது எப்படியென்று
தெரியாமல்
நாய் படாதபாடு படுகிறார்கள்
அடுத்தவனை காயப்படுத்துவதில்
சுகம் காண்கிறார்கள்
பாரதி சொன்ன
புதுமைப் பெண்ணுக்கு
வேறு அர்த்தம்
கற்பி்க்கிறார்கள்
நம்பியவனை நடுத்தெருவுக்கு
கொண்டு வந்துவிட்டு
குற்ற்வுணர்ச்சி இல்லாமல்
நடமாடுகிறார்கள்
எதிர்த்துப் பேசினால்
பைத்தியம் என்று
பட்டம் கட்டுகிறார்கள்
எவருக்கான உலகமிது
என்று புரியாமலேயே
வாழ்ந்து மடிகிறார்கள்
அப்பாவிகள்.

காலம் காலமாக

கண்ணில் நீர்
கோர்த்தது
பசியைத் தாங்குவது
எங்களுக்கு புதிதல்ல
ஆனால் குழந்தை
பாலுக்காக அழுகிறது
யாரிடம் கையேந்துவது
எல்லாரிடமும்
வாங்கியாகிவிட்டது
கண்கள் எரிந்தன
இரண்டு நாளாய்
தூக்கமில்லை
கவிஞர்கள் வாழ்க்கையை
கதை கதையாய் எழுதலாம்
தேடி வந்து பார்ப்பவனிடம்
கையேந்த முடியாது
புத்தகம் போட்டவனிடம்
ராயல்டி கேட்டால்
இது வேறயா என்பான்
ஏதாவது கல்யாண பத்திரிகை
வராதா
குடும்பத்தோடு செல்ல
வடிவேலன் ஆண்டிப் பண்டாரம்
எங்களைவிட
அவன் நிலைமை மோசம்
படைப்புகள் ஜீவித்திருக்க
கவிஞன் மட்டும் சாவதேன்.

mathi2134@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 482012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் செவ்வாய்க் கோள் தளவூர்தி