ஜுமானா ஜுனைட் கவிதைகள்

1.காலம் ஒரு கணந்தான்…!       

 
மெழுகுவர்த்தியாய்
உருகி
வெளிச்சங்கொடு…
“சோனாமாரி”யிலும்
அணையாதே!
 
மேக கணங்களாய்
உழை…
மழைத்துளிகளாக
சேவை செய்…
 
பூமியைப்போல
பொறுத்திடு…
அகழ்வாரை
அன்போடு நோக்கு…
 
மின்னலிடம்
வெளிச்சங் கேள்…
இடியைத் தாங்கும்
இதயம் பெறு…
காற்றிலே
கீதம் அமை…
கைப்பிடிக்குள்
உலகம் எடு…
 
கால வெள்ளத்தோடு
கல்லாக உருளாதே,
பாறையாய் நில்லு.,
சந்தோஷச் சிறகில்
பறவையாய்ப் பற…
 
பனித்துளியாய் வாழ
இலையிடம்
இடங்கேள்…
சூரியன் சுட்டாலும்
அழியாமல் வாழ்…
 
தேனீயாய் சுற்று…
எறும்பாய் உழை…
தென்றலாய் வீசு…
மழையாய்ப் பொழி…!
 
 
 

 

2.இவை- 
 

                         
 
காலத்தால் மாறாத
பக்கங்கள்…
ஆனால் வேதமல்ல…
 
இதயவுச்சி
கொண்டெழுதிய
அச்சரங்கள்…
 
அகாலமாய்
மரணமடையும்
மௌனங்கள்…
 
உயிர்த் திட்டுக்களில்
திடீரென வெடித்த
அசரீரிகள்…
 
வானத்து நிர்வாணங்களை
மூடி மூடி வைத்த மேகங்கள்
கலைந்த போது ஏற்பட்ட
கார்ப்பெயல்கள்…
 
பனித்துளிகளை
கௌவிக் கொண்டோடிய
சூர்யோதயங்களின்
புன்முறுவல்கள்…
 
நறுமண புஷ்பங்களை
காயப்படுத்தாமல்
மிதமாய் வீசிய
இளந்தென்றல்கள்…        
 
 
 

ஜுமானா ஜுனைட், இலங்கை.
Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)சலனக் குறிப்புகள்