ஞானோதயம்

பழநிக்கு அருகில் நெய்க்காரப்பட்டி என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய மிராசுதார். நெய்க்காரப்பட்டி மைனர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. பெயருக்கேற்ற மாதிரி ஐந்து சவரனில் வடக்கயிறு போன்ற மைனர் செயின் அவரது பொன்னிற மேனியில் தவழ்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் நெற்றியில் மட்டும் பட்டைப்பட்டையாக விபூதி. பெரிய முருகபக்தர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “முருகா! முருகா!” என்று வாய் முனகிக்கொண்டே இருக்கும். முருகன் பெயரை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக ‘முருகன்’ என்ற பெயரில் ஒரு பையனை எடுபிடி வேலைகளுக்காக வைத்துக் கொண்டிருந்தார். கணத்துக்குக் கணம் “முருகா! அதை எடப்பா! முருகா! இதைக் கொடப்பா!” என்று அவனுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டே இருப்பதில் அவருக்குப் பேரானந்தம்.

அந்த மிராசுதாருக்கு வாழைத் தோட்டங்கள் நிரம்ப இருந்தன. அவருடைய பண்ணைக்குப் போனால் போதும். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வாழை மரங்கள் தான். வாழை இலைகள் பச்சைப் பசேலென்று ஆளுயரத்திற்கு மேல் நீண்டு அகன்று வளர்ந்திருக்கும். வாழைக் குலைகளைப் பார்த்தாலோ ஆசை ஆசையாக இருக்கும்! திரண்டு பருத்த காய்கள்! குலை ஒன்றுக்கு இருநூறு முந்நூறு கூடத் தேறும்!
அன்று தான் வாழைத்தாறுகளை இறக்கும் வேலை ஆரம்பம். நிறையப் பண்ணையாட்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மிராசுதார் வந்தார். பயபக்தியோடு கையிலே அரிவாளை எடுத்தார். “முருகா!” என்றவாறு முதல் வாழைத்தாறை மரத்திலிருந்து அறுத்து இறக்கினார்! பிறகு மடமடவென்று பண்ணையாட்கள் வாழைத்தாறு இறக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

முதலில் இறக்கிய அந்த வாழைத்தாறு மிராசுதாரின் மாளிகைக்குக் கொண்டு வரப்பட்டது. அது பழநியாண்டவனுக்குக் காணிக்கை! பழுத்த பின்பு பழநி மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானுக்கு அது அனுப்பப்பட வேண்டும்.

அது பழுத்த பின்பு, மிராசுதார் வேலைக்காரப் பையனை “முருகா!” என்று அழைத்தார். பையன் வந்து அடக்கத்தோடு நின்றான். “வாழைத்தாறை எடுத்துக் கொண்டு பழநிக்குப் போ! கோயில் அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு வர வேண்டும்!” என்று மிராசுதார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முருகன் அந்த வாழைத்தாறைத் தோளில் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்!

ஒரே மூச்சாகக் கால்நடையில் புறப்பட்டு வந்த முருகன், மலையடிவாரத்தை அடைந்ததும் பாரம் தாங்காமல் வாழைத்தாறைக் கீழே இறக்கி வைத்தான். நடந்த களைப்பு! அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது! பசி வயற்றைக் கிள்ளியது! அடடா! அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது! அதிகமாயிருந்த வேலைத் தொல்லையில் காலைச் சிற்றுண்டியை அவன் சாப்பிடவேயில்லை!

இது ஞாபகம் வந்தது தான் தாமதம், முருகனின் வயிற்றுக்குள் பசி விசுவரூபமெடுத்துக் கொண்டது! கையிலோ காசில்லை! காசில்லை என்றால் என்ன? வாழைத்தாறு தான் இருக்கிறதே! அவ்வளவு தான்! அடுத்தக் கணமே அரை டஜன் பழங்கள் முருகனின் வயிற்றுக்குள் சென்றன!

இதன் பிறகு முருகன் தெம்புடன் மலைமேல் ஏறி, வாழைத்தாறை அர்ச்சகரிடம் ஒப்படைத்தான். அதைப் பார்வையிட்ட அர்ச்சகருக்கு ஆறு பழங்கள் அகற்றப்பட்டிருப்பது முதலில் கண்ணுக்குப் பட்டது. உடனே கையகலக் காகிதத்தில் ஒரு குறிப்பு எழுதினார்.

“மாட்சிமை தங்கிய மிராசுதார் அவர்களுக்கு முருகனருள் சித்திப்பதாக! அனுப்பிய வாழைத்தாறு வந்து சேர்ந்தது! ஆனால் அதில் ஆறு பழங்கள் அகற்றப்பெற்றிருந்தன!”

இந்தக் குறிப்பை முருகனிடம் கொடுத்த அர்ச்சகர் மிராசுதாரிடம் கொண்டுப்போய்க் கொடுக்கச் சொன்னார்.

முருகனும் அதைப் பத்திரமாய் மிராசுதாரிடம் கொண்டுப் போய்ச் சேர்த்தான். அதைப் படித்ததும் மிராசுதாருக்கு உண்மை விளங்கிவிட்டது.

வந்ததே கோபம்! “முருகனுக்கு உரியதைத் திருடிச் சாப்பிட்ட இவனைக் கம்பத்திலே கட்டிக் கசையடி கொடுங்கள்!” என்று வேலைக்காரர்களிடம் சொல்லிவிட்டு, நேரே தம் ஓய்வு அறைக்குப் போய்விட்டார்.

கசையடி தாங்காத முருகன், “முருகா! முருகா!” என்று கத்திக் கொண்டிருந்தான்! உடம்புத் தோல் கொஞ்சம் கொஞ்சமாய் உரிந்துக் கொண்டிருந்தது! முருகனின் ஓலக் குரல் ஓய்வறையிலிருந்த மிராசுதாருக்குத் தேன் போல் இனித்தது! அந்த இனிமை மிராசுதாரைக் கண்ணயர வைத்தது.

என்ன ஆச்சரியம்! திடீரென்று மிராசுதாருக்கு முன்னால் கோவணாண்டியாக முருகப் பெருமான் காட்சியளித்தார்! மிராசுதார் பயபக்தியுடன் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்தார்! எழுந்தார்!

“பழத்தாறு அனுப்பினேனே, வந்து சேர்ந்ததா முருகா?” என்றார். “வந்து சேர்ந்தது அப்பனே! ஆனால் அதில் எனக்கு ஆறு பழந்தான் கிடைத்தது! மீதம் கிடைக்கவில்லை!” என்று பதில் சொன்ன முருகப்பெருமான் அடுத்த கணமே மறைந்து போனார்! மிராசுதார் கண்ட கனவும் கலைந்தது.
ஆறு பழந்தானா முருகனுக்குக் கிடைத்தது! மிராசுதாருக்கு ஒன்றும் புரியவில்லை! அப்போது வெளியில் கசையடி தாங்காமல் “முருகா! முருகா!” என்று முருகன் எழுப்பிய ஓலம் அவர் காதில் விழுந்தது! ஆஹா! மிராசுதாருக்கு ஞானோதயமாகிவிட்டது! முருகன் சாப்பிட்டது ஆறு பழந்தானே! அது தான் ஆண்டவனுக்குச் சேர்ந்திருக்கிறது!

“பசித்தவனுக்குக் கொடுப்பதே தெய்வ கைங்கரியம்” என்பதை உணர்ந்து கொண்டு வெளியில் வந்த மிராசுதார் முருகனின் கட்டை அவிழ்த்துவிடச் சொல்லி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்!

Series Navigationவெறுமன்ஓர் இறக்கை காகம்