தகுதியுள்ளது..

எங்கோ ஒரு சிறுமி
மறைமுக பாலியல்
துன்பியலில் பயந்து
நடுங்கிக் கிடக்கிறாள்.

நெடுஞ்சாலை ஓர
குத்துப் புதருக்குள்
காதலனை சந்திக்க
சென்றவளின் பிணம்.

மிதவாதியா அல்லவா
பிரிக்கத் தெரியாமல்
சூலுற்றவளுக்கு
சிறையில் பிரசவம்.

காதுகள் மடக்கியும்
கண்மூடி மூக்கைப் பிடித்தும்
கலங்கும் நெஞ்சடக்கியும்
முன்னேறுகிறீர்கள்..

உங்கள் பயணம்
உங்களுக்கு..
உங்கள் சிகரம்
உங்களுக்கு.

எதையும் யாரையும்
கண்டிக்கவோ
கண்டனம் செய்யவோ
துணிவதில்லை நீங்கள்.

உங்கள் குழந்தைகளை
அணைத்தபடி மேலேறுகிறீர்கள்.
பத்திரமாய் சேர்ந்தது
குறித்து மகிழ்கிறீர்கள்.

தகுதியுள்ளது
தப்பிப் பிழைக்கும்
தேற்றிக் கொள்கிறீர்கள்
தேற்ற முடிந்த அளவு.

ஏறி வந்த திசையின்
எதிர்த்திசை நோக்கியபடி..
இன்னும் ஏறவேண்டிய
சிகரங்களைப் பார்க்கிறீர்கள்..

தன்னலவாதி அல்ல
தன்னம்பிக்கைவாதி
ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள்
உளுத்த ஊன்றுகோல்களைத் தட்டியபடி.

Series Navigationகாக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்ஓய்வும் பயணமும்.