தங்கப்பா: தனிமைப்பயணி

 

 

 

 

 

பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மறுநாள் விடிந்தபின்பும் உறங்கிக்கொண்டிருந்தோம். என் கைபேசிக்கு வந்த அழைப்புமணிச்சத்தம் கேட்டுத்தான் இருவரும் விழித்தோம். கைபேசியின் திரையில் செங்கதிரின் பெயரைப் பார்த்ததுமே மனம் துணுக்குற்றது. சற்றே பதற்றத்தோடு “வணக்கம் தம்பி” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே செங்கதிர் “அப்பா போயிட்டார் அண்ணா” என்றான்.

நான் நிலைகுலைந்து சுவர்மூலையை வெறித்தபடி அமர்ந்துவிட்டதைப் பார்த்த பாரதிமணி “என்ன செய்தி? யார் பேசியது?” என்று கேட்டார். “தங்கப்பா காலமாயிட்டார் சார்” என்றேன். அவரும் துயரத்தில் ”அடடா, பெரிய கவிஞர் அல்லவா?” என்றார். நான் பொறுமையாக “மற்றவங்களுக்குத்தான் சார் அவர் கவிஞர். எனக்கு அதைவிட மேலான ஒரு மனிதாபிமானி. என்னைச் செதுக்கியவர்” என்றபடி பெருமூச்சுவிட்டேன்.

தங்கப்பாவை 1975 ஆம் ஆண்டு முதல் நான் அறிவேன். தாகூர் கலைக்கல்லூரியில் நான் இணைந்தபோது எங்களுக்கு அவர் தமிழாசிரியர். பாடங்களைக் கடந்து பல நூல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திப் படிக்கத் தூண்டியவர். எங்கள் நகரைச் சுற்றியுள்ள ஏரிகள், கோட்டைகள், அணைக்கட்டுகள், பழைய நினைவுச்சின்னங்கள் என பல இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அவருடைய உரையாடல்கள் ஒருவகையில் எனக்கு பண்பாட்டுக்கல்வியாகவும் வாழ்க்கைக்கல்வியாகவும் அமைந்தது. என்னைப் பண்படுத்தி ஆற்றுப்படுத்திய ஆசான் அவர்.

எனக்குள் இருந்த கவிதையார்வத்தைப் புரிந்துகொண்டு என்னை எழுதத் தூண்டியவர் தங்கப்பா.  நான் எழுதிக் காட்டிய நூற்றுக்கணக்கான கவிதைகளை பொறுமையாகப் படித்து திருத்தம் சொல்லி ஊக்கமூட்டியவர். மரபுப்பாடல்களில் அமையவேண்டிய சந்தநயத்தின் முக்கியத்துவம் பற்றி மீண்டும்மீண்டும் வலியுறுத்தி, அதில் நான் தேர்ச்சியடையவும் செய்தவர். கதைகளை நீண்ட காவியவடிவில் நான் எழுதிக் காட்டிய படைப்புகள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டின. மரபுப்பாடல்களை கைவிட்டு நவீன கவிதை முயற்சிகளில் நான் இறங்கியதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஆனாலும் ஒருபோதும் என் மனம் துவளும்படி ஒரு சொல்லும் சொன்னதில்லை. அவற்றையும் அன்புடன் பெற்று வாசிக்கவே செய்தார். என் படைப்பு முயற்சிகள் உரைநடையாகவும் பிற்காலத்தில் விரிவடைந்ததையொட்டி அவர் மகிழ்ச்சியடையவே செய்தார்.

அவர் தலைமையில்தான் எனக்கும் அமுதாவுக்கும் 1984 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. என் திருமணத்தின் வழியாக எங்கள் குடும்பத்துக்கும் அவர் நெருங்கிய நண்பரானார். என்னுடைய இரு தம்பிகளுக்கும் என் மனைவியின் இரு தம்பிகளுக்கும் அவரே தலைமை வகித்து திருமணங்களை நடத்திவைத்தார்.

மிகவும் குறைவான பக்கங்களில் வெளியான அவருடைய ’இயற்கை விருந்து’ என்னும் தலைப்பிலான கவிதைத்தொகுதியை விரும்பிப் படித்த இளமைநாட்களை இன்று அசைபோடும்போது மனம் நெகிழ்ச்சியடைகிறது. அத்தொகுதியைத் தொடர்ந்து அவர் ஏராளமாக எழுதிக்கொண்டே இருந்தார். எப்போதும் அவர் முன்னால் செய்வதற்கு வேலைகள் குவிந்தபடி இருந்தன. அவர் பாடல்களில் மிகவும் இயல்பாக கூடிவரும் சந்தநயமும் புதுப்புது சொல்லிணைவுகளும் படித்துப்படித்து மகிழத்தக்கவை. சங்கப்பாடல்களின் சாயலில் மிகவும் செறிவாக எழுதப்பட்ட தொடக்க காலப் பாடல்கள் தமிழுக்குக் கிட்டிய சொத்து என்றே சொல்லவேண்டும். தமிழினி பதிப்பகத்தாரால் அவருடைய பாடல்கள் அனைத்தும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

தொடக்க காலத்திலிருந்தே அவர் படைப்பு முயற்சிக்கு இணையாக மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளும் கவிதைகளும் எப்போதும் அவர் மேசையில் குவிந்திருக்கும். ஆங்கிலத்தில் நல்ல வாசிப்பு ஆர்வம் மிகுந்தவர். ஆங்கிலத்தில் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. உரைநடையில் GRAPES OF WRATH நாவலை விரும்பிப் படித்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சந்திக்கச் செல்லும் என்னைப் போன்ற இளைஞர்களை இந்நூல்களைப் படிக்கும்படி சொல்வார். இயற்கையின் மீதும் மனிதர்கள் மீதும் ஈடுபாடு கொள்ள இப்படைப்புகளின் கருக்கள் தூண்டுகோலாக இருக்கும் என்று அவர் சொன்ன சொற்கள் என் மனத்தில் இன்னும் எதிரொலித்தபடி உள்ளன. நானே அறியாமல் அவர் என்னை சிறுகச்சிறுக செதுக்கிக்கொண்டே இருந்தார் என்பதை இப்போது யோசிக்கும்போது தோன்றுகிறது.

அவருக்கு தனித்தமிழில் ஈடுபாடு உண்டு. தனித்தமிழில் எழுதும் மற்றவர்கள் படைப்புகளைப் படித்துமுடித்த கையோடு தங்கப்பாவின் படைப்பைப் படிக்கும்போது அவருடைய படைப்பாளுமை எவ்வளவு வலிமையானது என்பதை உணரமுடியும். தனித்தமிழ்ச்சொற்களைக் கடந்த மொழியாளுமையும் கவித்துவம் பொருந்திய சொற்களும் அவரிடம் இயல்பாகவே வெளிப்பட்டன. அதனாலேயே மற்றவர்கள் தொடமுடியாத உச்சங்களை அவரால் எளிதாகத் தொடமுடிந்தது.

சங்கப்பாடல்களை அவர் தொடக்கத்திலிருந்தே ஒன்றிரண்டென ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தார். அவை முறையாகத் தொகுக்கப்பட்டு LOVE STANDS ALONE என்னும் பெயரில் வெளிவந்தன. பிறகு முத்தொள்ளாயிரம் பாடல்களை  RED LILLIES AND FFRIGHTENED BIRDS என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். தமிழிலக்கியப் பரப்பில் அங்கங்கே காணப்படும் சில கதைகளை THE PRINCE WHO  BECAME A MONK என்னும் பெயரில் மொழிபெயர்த்துத் தொகுத்தளித்துள்ளார். இப்படைப்புகள் நூல்வடிவம் பெறுவதில் நண்பர் ஆ.இரா.வெங்கடாசலபதி முன்னெடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவையன்றி இருநூறுக்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை தங்கப்பா இயற்றியுள்ளார். அவை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்துள்ளன. ’சோளக்கொல்லை பொம்மை’ அவருடைய புகழ்பெற்ற சிறுவர் பாடல் தொகுதி. இவ்விரண்டு முயற்சிகளையும் பாராட்டி தில்லி சாகித்ய அகாதெமி அவருக்கு விருதளித்தது. தமிழிலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவர் பல கட்டுரைகளை அவ்வப்போது தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவை அனைத்தும் கண்டிப்பாக ஒரு தொகுதி அளவுக்குச் சேரும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக புதுச்சேரியைச் சேர்ந்த திருமுருகன் என்னும் தமிழிலக்கண அறிஞர் மறைந்துபோனார். அதுவரை அவர் நடத்திவந்த ‘தெளிதமிழ்’ என்னும் இதழ் தங்கப்பாவின் பொறுப்புக்கு வந்து சேர்ந்தது. அன்றுமுதல் இதழுக்கு ஆசிரியரவுரையில் தொடங்கி சின்னச்சின்ன கட்டுரைகள் வரை அவரே எழுதும்படி நேர்ந்தது. அந்த ஓயாத பிடுங்கல் மிக்க அவ்வேலை அவருடைய எழுத்து முயற்சியைப் பாதித்தது

கடந்த ஆண்டு அவரைச் சந்தித்தபோதே அவருடைய உடல்நிலை சரியில்லை. மிகவும் மெலிந்திருந்தார். அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ளும்படியும் எழுத்து முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வரும்படியும் ஆலோசனை சொன்னேன். ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக புன்னகைத்தாரே தவிர, அச்சொற்கள் அவர் மனத்தை அடையவே இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

கடந்த பிப்ரவரி அன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். இதய சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அதிக நேரம் பேசும் நிலையில் இல்லை. ஏப்ரல் மாதத்தில் சந்தித்தபோது அரைமணி நேரத்துக்கும் மேல் உரையாடினோம். திடீரென நவீன கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலைப்பற்றி ஒரு சில கேள்விகளை அவர் கேட்டார். நான் நினைவிலிருந்தே சில கவிதைகளைச் சொல்லி அவற்றை அனுபவமாக மாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிச் சொன்னேன். அவர் புன்னகைத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் கவிஞர் மீனாட்சி எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருந்தார். அவை PEBBLES என்னும் தலைப்பில்  தொகுப்பாக வெளிவந்திருந்தது.  எனக்கு ஒரு பிரதியை அளித்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தங்கப்பாவின் படைப்புகளை முன்வைத்து 17.05.2018 அன்று ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த அழைப்பிதழ் கிடைத்ததுமே அவரை அழைத்து சில நிமிடங்கள் பேசினேன். அவரால் தொடர்ந்து உரையாட முடியவில்லை. மூச்சுத் திணறலாக இருப்பதாகச் சொன்னார். பாதியிலேயே அந்த உரையாடலை முடித்துக்கொண்டேன்.

இரண்டுமூன்று வார இடைவெளிக்குள்ளேயே இப்படி ஒரு செய்தி வந்து சேரும் என நான் நினைக்கவில்லை. துயரத்தில் மனம் கனத்து நின்றுவிட்டேன். என்ன என்ன என்று கேட்ட பெரியவர் பாரதிமணியிடம் முழுச்செய்தியையும் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு அவரும் வருத்தம் கொண்டார். இன்று என் உடல்நிலை இருக்கும் சூழலில், திகைத்தும் குழம்பியும் திரும்பத்திரும்ப பழைய நினைவுகளை அசைபோட்டும் தவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கல்லூரிக்காலத்தில் மாணவர்களை அழைத்துக்கொண்டு அவர் மேற்கொள்ளும் மிதிவண்டிப்பயணங்கள் மிகவும் பிரபலமானவை.  மிதிவண்டிப்பயணத்தில் எனக்கு ஆழ்ந்த விருப்பம் உருவாக அவரே மூலகாரணம். புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருக்கனூர், வீடூர், சாத்தனூர், செஞ்சி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களுக்கு எங்களை அவரே முதன்முறையாக அழைத்துச் சென்றார். எங்கள் கல்லூரிச்சாலை மிகப்பெரியதொரு மேடு. ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்ந்துகொண்டே செல்லும் அந்த மேடு. லாஸ்பேட்டை சாலையிலிருந்து பிரிந்ததுமே அந்த மேட்டில் ஏறவேண்டும். பலரும் மிதிவண்டியிலிருந்து இறங்கி பேசிக்கொண்டே நடந்துவரும் சூழலில் தங்கப்பா தான் ஓர் ஆசிரியர் என்பதையும் மறந்துவிட்டு உல்லாசமாக அழுத்தம் கொடுத்து மிதிவண்டியை மிதித்தபடிச் செல்வார். என்னைப்போன்ற  மாணவர்கள் பின்னாலேயே ஓட்டிக்கொண்டு செல்வோம். வாழ்க்கையை இனிமையால் நிறைத்த காலம் அது.

எப்போதும் சில மாணவர்களோ, சில பெரியவர்களோ சூழ ஒரு கூட்டமாகவே இருப்பவர் தங்கப்பா. இன்று மரணத்தின் திசையில் தனிமையில் சென்றுவிட்டார்.

உங்கள் பாதம் பணிந்து நான் செலுத்தும் அஞ்சலிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். போய் வாருங்கள், ஐயா.

Series Navigationபாவண்ணனைப் பாராட்டுவோம்