தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு

This entry is part 7 of 41 in the series 8 ஏப்ரல் 2012


தமிழ் பழமையான, எளிதான, இனிமையான மொழி என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழில் மற்ற இந்திய  மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உள்ள சொற்களை ஒலி அடிப்படையில் எழுதவோ (transliteration) பேசவோ இயலாது. தமிழ் பத்திரிக்கைகளிலு்ம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மற்ற மொழிப்பெயர்கள் தவறாக அச்சிடவும் பேசவும் படுகின்றன. .  2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே தமிழ் தேங்கிவிட்டது என்று நான் எண்ணுகிறேன். தமிழ்க்காவலர்கள் என்மீது பாயும் முன் என்னைப் பற்றிய சிறு குறிப்பு :

என் தாய் மொழி தெலுங்கு.  நான் கற்றது தமிழில். கந்நடம், மலயாளம், ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம் என்ற மொழிகளையும்  ஓரளவு அறிவேன். திராவிட மொழிகளின் ஒப்பிலக்ககணத்தைப் படித்துள்ளேன்.

(கந்நடம் என்று ஏன் எழுதினேனென்றால் மற்ற மொழிகளில் ‘றன்னகரம்’ இல்லை).

1 மற்ற மொழிகளைவிட தமிழில் மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. எல்லா இந்திய மொழிகளிலும் க, ச,ட,த ப என்னும் எழுத்துக்களுக்கு நான்கு ஒலி/வரிவடிவங்கள் உள்ளன. ஆங்கிலத்திலும் இவ்வாறே. தமிழில் இல்லை. தெலுங்கில் ‘ச’ விற்கு ஆறு வரி/ஒலி வடிவங்கள் உள்ளன.

ஆனால் தமிழில் ஒரே வரிவடிவம் உள்ள க,ச, த, ட, ப என்னும் எழுத்துக்கள் இடத்திற்குத் தக்கவாறு இரண்டு அல்லது மூன்று விதமாக ஒலிக்கின்றன. எடுத்துக்காட்டாகக்  கதவு, பக்கம், மகன், தங்கம் என்ற சொற்களில் ‘க’ ka, kha ,ga என்று ஒலிக்கின்றன. மகன் என்னும் சொல்லில் ‘க’,  ga விற்கும் ha விற்கும் இடைப்பட்டு ஒலிக்கிறது. எந்த இலக்கண நூலில் இதைக் காணலாம்? ஆதலால் தமிழர்கள் வேற்று மொழிச் சொற்களைத் படித் தவறாக ஒலிக்கின்றனர்.

2 ‘ச’ வல்லினமா?  தொல்காப்பியம் பிறப்பியல் 8 ல் “சகர ஞகாரம் இடைநா அண்ணம்” என்று உள்ளது. ’ச’ என்ற எழுத்தை cha என்று வல்லொலியாக ஒலிக்கவேண்டும்.  இது palatal . இவ்வாறு ஒலித்தால் இது வல்லினம். ஆனால் தற்காலத்தே Sa என்று  தான் எல்லோருமே ஒலிக்கின்றனர் . Sa என்னும் ஒலி இடை நா அண்ணத்தைத தொடும்போது பிறப்பதில்லையே. திறந்த வாயோடு ஒலிக்கப் படுகிறது. எந்த இலக்கண நூலிலாவது இதைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதா? ‘ச’ வை ‘ஸ’ என்று ஒலிக்கக்கூடாதெனில் இந்த குறள் இவ்வாறு தான் ஒலிக்கும்!!!!!

cholluga cholliR payanuLa chollaRka

cholliR payanilAAch chol.

இது தமிழ் போலவே ஒலிக்கவில்லையே!!!

இதைத்தவிர ஸம்ஸ்க்ருதத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் Sa விற்கு (श, ष, स).  என்னும் மூன்று ஒலி/வரிவடிவங்கள் உள்ளன. தமிழில் இல்லை.

3 தமிழ் சொற்கள் அமைப்பில் உள்ள பல கட்டுப்பாடுகள் பிற மொழிகளில் இல்லை. ஆதலால் மற்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலலும் உள்ள பல சொல்லமைப்புகள் தமிழில் இல்லை.

3.1  மொழி முதல் எழுத்துக்கள்.

தமிழில் மெய்கள் மொழிமுதலில் வாரா. மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் (மூன்று தென் இந்திய மொழிகள் உட்பட) இவை வரும். ஆங்கிலத்திலும் இவ்வாறே.  ஸம்ஸ்க்ருதத்தில் ஐந்து மெய்யெழுத்துக்கள் கூட ஒன்று சேர்ந்து வரும் சொல் ஒன்று உள்ளது.  . தமிழர்கள் மற்ற மொழிகளைச் சரியாக ஒலிக்க இயலாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

3.2  12 உயிர், க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ என்னும் உயிர்மெய்கள் மட்டுமே மொழி முதலில் வரும். மற்ற இந்திய மொழிகளில் ட, ர, ல, ஷ,ஸ,ஹ, என்னும் உயிர் மெய்கள் கூட மொழி முதலில் வரும். ஆங்கிலத்திலும் அவ்வாறே.

தொல்காப்பியம் மொழிமரபு பாடல் 29 ன் படி ‘ச’ ‘சை’ ‘சௌ’ மொழிக்கு முதலில் வாரா. மற்ற இந்திய மொழிகளில் இவை வரும். பேச்சு வழக்கிலுள்ள ‘ச’ ‘சை’ ‘சௌ’ வில் தொடங்கும் சொற்கள் எல்லாம் வடமொழிச் சொற்களா? ‘ச’ தமிழ் எழுத்து தானா?

4 மொழி இறுதி எழுத்துக்கள்

4.1 ‘எ’ கரம் ஒழிந்த 11 உயிர்கள் மொழி இறுதியில் வரும். தெலுங்கில் ‘எ’ மொழி இறுதியில் வரும்.

4.2 தமிழில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், ழ், ள் என்னனும்  மெய்யெழுத்துக்கள் மொழி இறுதியில் வரும். மற்ற மொழிகளில் இவை தவிர  க், ச், ட், த், ப், வ், ஷ், ஸ், என்பன மொழி இறுதியில் வரும்.

5 மொழி இடையில் எழுத்துக்கள் அமையும் முறை

5.1 தமிழில் க் ச் த், ப் என்னும் மெய்களை அடுத்து அவற்றின் உயிர்மெய்களே வரும். மற்ற மொழிகளில் இந்த தடை இல்லை. (எ.கா) ஸம்ஸ்க்ருதத்தில்  சக்ரம்,வாச்யம், நேத்ரம், ப்ரதிம  இருபத்தாறே எழுத்துக்கள் உள்ள ஆங்கிலத்திலும் இவ்வொலிகள் உண்டு.

 

5.2       ‘ர்’  ஐ அடுத்து அதன் உயிர் மெய்கள் வாரா. மற்ற மொழிகளில் இவை வரும். (எ.டு)  தெலுங்கில் ‘கர்ர’.

5.3     தனிக்குறிலை அடுத்து ‘ர்’ வராது. மற்ற மொழிகளில் வரும். (எ.டு) கர்மம்.

 

மற்ற இந்திய மொழிகளின் வரிவடிவங்களும்,ஒலிவடிவங்களும் ஸம்ஸ்கிருதத்தின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. மூன்று திராவிட மொழிகள் தவிர மற்ற வடஇந்திய மொழிகளில் ‘எ’ ‘ஒ’ என்னும் குற்றெழுத்துக்களும் அவற்றைச் சார்ந்த உயிர்மெய்களும் இல்லை. ஸம்ஸ்க்ருதம் வடநாட்டில் நாகரியிலும் தமிழ்நாட்டில் பல்லவ/தமிழ் க்3ரந்தத்திலும் எழுதப்பட்டுவந்தது. தமிழ் க்3ரந்தம் வட்டெழுத்தாகவும் மலயாள எழுத்தாகவும் உருமாறியது்.

தற்கால விஞ்ஞான வளர்ச்சியால் நாள்தோறும் புதுச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ் தவிர மற்ற எல்லா மொழிகளிலும் இவற்றை எழுத முடியும். இது வருந்தத்தக்கது.

 

கோவிந்தஸ்வாமி

Series Navigationதங்கம்கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
author

கோவிந்தஸ்வாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *