திண்ணையில் கண்ணம்மா பாட்டி

நள்ளிரவில்
நனைந்திருந்த நிலையத்தில்
நின்றது பேரூந்து

முன்னிரவின் மழை
மிச்சமிருந்தது
மசாலாப் பால் கடையின்
மக்கிப்போன கூரையில்

மஞ்சள் தூக்கலாக யிருந்த
மசாலாப் பாலில்
மடிந்த ஈசல்
பாலை
மேலும்
அசைவமாக்கியிருந்தது

எடை குறைந்த
பயணப் பொதியோடு
ஈரத்தில் நடந்து
என்
வீடிருந்த சந்தின்
முச்சந்தியை அடையவும்

காணும் தூரத்தில்
என் வீட்டுக்கு எதிர் வீட்டில்
மேடையிட்டத் திண்ணையில்
கண்ணம்மா பாட்டி
உட்கார்ந்திருந்தது

கண்ணம்மா பாட்டி
கதை சொல்லாது
காதைக் கிள்ளாது
பாதையில் செல்வோரை
வதைக்கவும் செய்யாது

சுருங்கிய தோலுக்குள்
ஒடுங்கிய உடலும்
சுருக்குப் பைக்குள்
சுண்ணாம்பும் புகையிலையும்
இடது கையில்
குச்சி யொன்றும்
எப்போதும் வைத்திருக்கும்

பல்லாங்குழியோ பரமபதமோ
பாட்டியோடு விளையாடினால்
தோற்றாலும்கூட
இழந்தை வடையோ
இஞ்சி மரபாவோ தரும்

முடிந்து வைத்த காசவிழ்த்து
முறுக்கு திண்ணச் சொல்லும்

கண்ணம்மா பாட்டி
இல்லாத திண்ணையை
நான் கண்டதே யில்லை
எனினும்
இத்தனை இரவிலுமா
இப்படித் தனித்திருக்கும்?!

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

பின் படலின் கொக்கி நீக்கி
கொல்லைப்புற வழியில்
சென்று உறங்கிப் போனேன்.

மூன்று மாதங்கள் கழித்து
வந்திருந்த என்னை
மறுநாள் காலை
எழுப்பிய உம்மா
வழக்கம்போல
இறந்து போனவர்கள்
இருந்த வீடுகளுக்கு அழைத்துப் போயிற்று

இரண்டாவது வீடாக
எதிர் வீட்டுக்குச் செல்ல
இறந்தது யாரென கேட்க
உம்மா சொன்னது
கடந்த சனி யன்று
கண்ணம்மா பாட்டி யென்று!

Series Navigationசெல்வ ( ஹானஸ்டு ) ராகவன்சுஜாதா