தினம் என் பயணங்கள் – 5

சக பதிவரும், என்னை பதிவுலகத்திற்கு கொண்டு வந்தவருமான தமிழ்த்தொட்டில் தமிழ்ராஜா அவர்கள் இயக்கிய குறும் படமான “ரணகளம்” பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு 24.02.2013 தினத்தந்தி செய்தித் தாளின் இலவச இணைப்பான குடும்ப மலரில் வெளியாகி யிருந்ததைப் படிக்க நேர்ந்தது.  இப்படி ஆரம்பித்து ரணகளம் குறும்படம் பற்றிப் பதிவைப் போடுவது என்று தான் எண்ணியிருந்தேன்.

என்னுடைய செயல் அதை வேறு விதமாக திசை திருப்பி விட்டது. நிவாஸ்குமார் அவர்கள் பேஸ்புக்கில் வெளி யிட்டிருந்த நிலையைப் படித்து விட்டு 24.02.2013 அன்று முதல் பேப்பர் என் கையில் தான் தவழ வேண்டும். அதை படித்துவிட்டு நான்தான் வாழ்த்துக்களோடு பதிவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். என் தம்பி மதன் பிரசாத்திற்கு வேறு போன் செய்து சொன்னேன்.

 

24.02.2013 அன்று நான் செய்தி அனுப்பியவர்களும் தினத்தந்தி செய்தித் தாள் வாங்கியிருக்க நான் அதை வாங்காததும், வாங்க வேண்டும் என்ற நினைவே என்னில் இல்லாததும் தான் என் துரதிர்ஷ்டம்.

 

தேர்வு நேரத்தில் காப்பி அடித்து எழுதியவன் தேர்ச்சி பெற்றிருக்க, காண்பித்தவன் தோல்வி அடைந்த உணர்வு தான் அன்று எனக்குத் தோன்றியது.

 

சற்று காலம் கடந்து ஒவ்வொரு கடையாக செய்தித்தாளிற்காக போக எங்கும் இல்லை என்பதே பதிலாக கிடைத்தது. பிறகு என் சிநேகிதியும் ஊர்ப்புற நூலகருமான சுகாசினியின் தயவில் இன்றாவது பதிவிடுகிறேனே என்று மகிழ்ந்து கொள்கிறேன்.

 

விவேக் படத்தில் வருகிற டேக் டைவர்ஷன் நகைச்சுவைக் காட்சி போல் தான் அன்று எனக்கும் நடந்தது. 24.02.2013 முதல்வர் [ஜெயலலிதா] அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எங்கும் கட்சியின் சின்னக் கொடியும், பேனர்களும் பாடல்களுமாக செங்கம் நகர் விழாக் கோலம் தரித்திருந்தது.

 

சுற்றிய களைப்பில் ஒரு டீ அருந்த கடைக்குச் சென்றால் டீக்கடை இருந்த இடத்தில் மேடையில் பாட்டுக் கச்சேரி. டீ கடைக்காரரின் அன்றைய வருமானத்திற்கு பட்டை நாமம் தான்.

 

அன்று நான் சலிப்போடும் களைப்போடும் தான் வீடு திரும்ப வேண்டிய தாயிற்று. சரி விடயத்திற்கு வந்துவிடுகிறேன்.

 

கிராமங்களில் கில்லி, பாண்டி, கபடி, தாயம், பல்லாங்குழி. ஆடுபுலி அஞ்சாங்கல் என சில விளையாட்டுகள் பொழுது போக்கிற்காக விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு என்பது கூட பரிச்சயமான விளையாட்டு தான். குடும்ப மலரின் அட்டைப் படத்தில் போர்க்காய் விளையாட்டு என்பதைப் பார்த்த வுடன் போர்க்காயா…? அப்படி ஒரு விளையாட்டா..? என்ற கேள்வி யோடு படிக்கும் ஆவலை தூண்டியது. படிக்காதவர்களுக்காக அக்கட்டுரை அப்படியே… இங்கு பதிவிடுகிறேன்.

 

வீர விளையாட்டை மேம்படுத்தும் குறும்படம்


கிராமங்களில் விளையாடி மகிழும் அத்தனை விளையாட்டுகளுமே உயிர்ப்புடன் கூடியவை. பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் உயிரைத் துச்சமாக மதித்து விளையாடும் ஜல்லிக்கட்டு தொடங்கி ஒவ்வொரு விளையாட்டுமே ஈர்ப்பும் துடிப்புமானவை.

 

தஞ்சை மாவட்டத்துக்கே உரிய விளையாட்டு என்ற இடத்தில் இப்போதும் விசேட நாட்களில் இடம் பெறும்  விளையாட்டு போர்க்காய். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை தஞ்சை மாவட்டத்தில் பரவலாக விளையாடப் பட்டு வந்த இந்த விளையாட்டை தற்போது அங்குள்ள சில கிராமங்களில் மட்டுமே காண முடிகிறது. கடந்த பொங்கல் தினத்தில் கூட பட்டுக் கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் விளையாடி மகிழ்ந்திருக் கிறார்கள்.

 

இந்த போர்க்காய் பின்னணியில் “ரணகளம்” என்ற குறும்படம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியிருப்பவர்கள் நிவாஸ்குமார், ரவீந்தர் சந்திரசேகர் என்ற இரு நண்பர்கள். 18 நிமிடப் படமான இதை தமிழ்ராஜா இயக்கி இருக்கிறார்.

 

அதென்ன போர்க்காய்…? கேள்வி எழும். அதையே படத்தின் இயக்குனர் தமிழ்ராஜாவிடம் கேட்டோம்.


தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காய் தான் இங்கே போர்க்காய் என்ற பெயரில் விளையாட்டு களத்தில் உலா வருகிறது.

 

தேங்காய் தான் போர்க்காயா…? அதெப்படி…?

 

இந்த போர்க்காய்க்கே உரிய தென்னை மரங்களை தனியாக வளர்க்கிறார்கள். ஒரு மரம் வருடத்தில் தருவது மிகக் குறைந்த காய்களைத்தான். கன்றுப் பருவத்தில் இருந்தே இந்த மரத்துக்கு தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். அதுவாக தண்ணீரை தேவைக்கு எடுத்துக்கொண்டு இயற்கையை எதிர்த்து போராடி வளர்வதால் இதன் காய்கள் நல்ல திக்கு ஓட்டுடன் காணப்படுகின்றன. பார்வைக்கு கல்லின் கடுமையுடன் காணப்படும் இந்த தேங்காயை அத்தனை சீக்கிரம் உடைக்க முடியாது. அதனால் இந்த போர்க்காயை போராட்ட களத்தில் இறக்கி விடுகிறார்கள்.

 

இந்த விளையாட்டைப் பற்றி விவரமாக சொல்லுங்கள்…

 

ஒரே நேரத்தில் இரண்டு பேர் இந்த போர்க்காய் விளையாட்டை விளையாட முடியும். போட்டியாளர்கள் இருவரும் தேங்காயை கையில் வைத்துக் கொண்டு ஒரு காயை மற்ற காயுடன் மோத விடுவார்கள். அப்போது கைகளின் பலப் பிரயோகத்தில் தேங்காயுடன் தேங்காய் கடும் வேகத்தில் மோதிக் கொள்ளும். இரண்டு தேங்காயுமே சிறப்பு கவனத்தில் உருவாக்கப்பட்ட காய் என்பதால், போட்டி அத்தனை சீக்கிரத்தில் முடிந்து விடாது. தேங்காய் களில் இருந்து கல்லோடு கல் மோதினாற்போல சத்தம் வந்து கொண்டே இருக்கும். இந்த விளையாட்டில் வெற்றி பெறுகிறவர் மிகப்பெரிய கௌரவத்தை சம்பாதிக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேராவுரணியில் இப்போட்டிகள் இப்போதும் பண்டிகை நாட்களில் நடந்து வருகின்றன. சில ஊர்களில் தேங்காயை உருட்டி ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றார்கள்.

 

இந்த விளையாட்டுப் போட்டியில் விளையாடுபவர்கள் இருவருமே நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒருவரின் வேகத்துக்கு அடுத்தவர் தேங்காயை மோத விடுவதில் சற்று குறைந்த பலப் பிரயோகத்தை உபயோகிக்க நேர்ந்தாலும் அப்போதே  தோல்வி முகம் தெரிந்துவிடும்.

 

குறைந்த காய்களே உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போர்க்காய் என வழங்கப்படும் தேங்காயின் விலையும் அதிகம் இருக்குமே?

 

விலை அதிகம் என்பது கூட பிரச்சனை இல்லை. பல சமயங்களில் எங்கு தேடியும் தேங்காய் கிடைக்காது. அந்த அளவுக்குப் போட்டிக்கென குறைந்த அளவே தயாராவதால் இது கிடைப்பது தான் அபூர்வம். இதை சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. அதற்கு இது பயன்படாது.

 

விளையாடும் போது யாருக்காவது காயம் ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா?

 

தேங்காய் கையில் இருந்தாலும் கிட்டத்தட்ட மோதல் தானே பிரதானம். அதனால் போட்டியின்  உச்சக் கட்டத்தில் பல நேரங்களில் இருவரின் கையில் இருந்தும் இரத்தம் வெளிப்படவே செய்யும்.  வீர விளையாட்டு என்பது தெரிந்தே விளையாடப்படுவதால், காயம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாடு முட்டி சாய்த்து விட்டதே என்று ஜல்லிக்கட்டு போட்டியில் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? அதை யெல்லாம் தாண்டி வெற்றி மட்டுமே பேசப்படுகிறது.

 

ஆனாலும் இந்த போர்க்காய் விளையாட்டு மூலம் இரு கிராமங்க ளிடையே நிகழும் சமூக பிரச்சனையையும், தலைமுறை   தலைமுறையாக நீடித்து வரும் மக்களின் அடிமைத்தனத்தையும் ஒருவன் எப்படி களைந்தெடுக்கிறான். என்பதையே “ரணகளம்” என்ற பெயரில் குறும் படமாக்கி இருக்கிறோம்.

 

இதற்கான பட பிடிப்பை  எங்கே நடத்தினீர்கள்?

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இதற்கான படப்பிடிப்பை நடத்தினோம். இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மாதிரியான கதை என்று சொன்னதும் புரிந்து கொண்டு ஒத்துழைத் தார்கள்.  அவர்களில் பலரும் நடிக்கவும் செய்தார்கள். கேமரா பார்த்து யாரும் பயப்படாமல் எல்லாருமே பிறவி நடிகர்கள் போல நடித்தார்கள்.

 

குறும்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதையின் நாயகனுமான நிவாஸ்குமார் கூறும் போது…

 

நமது கிராமங்களில் உள்ள விளையாட்டு ஒவ்வொன்றுமே ஆரோக்கிய பின்னணியில் உருவாக்கப்பட்டவை. இந்த போர்க்காய் விளையாட்டில் கூட பலப்பரீட்சை மூலதனமாக இருந்தாலும், நல்லதொரு ஆரோக்கியப் பின்னணி இருக்கிறது. இந்த விளையாட்டுக்குத் தயாராகி வருகிறவர்கள் உடம்பை அதற்கென்று கச்சிதமாக வைத்திருக்க வேண்டும். அதனால் இயல்பாகவே உடம்பு ஆரோக்கியமும் திடகாத்திரமும் ஆகிவிடும்.   வித்தியாசமான முறையில் ஒரு குறும்படம் தயாரிக்கும் நோக்கத்தில் இருந்த போது இந்த போர்க்காய் பின்னணிக் கதையை விக்னேஷ் என்ற நண்பர் சொன்னார். நடிப்பு எனது லட்சியம் என்பதால் எனக்கு இந்த குறும்பட விடயத்தில் “நளனும் நந்தினியும்“ படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பெரிய அளவில் உதவினார். இதைத் திரையிடு வதிலும் அவர் உதவி கணிசமாக இருந்ததை மறக்க முடியாது.

 

இந்த படத்தைப் பாரத இயக்குனர் மீரா கதிரவன், இது ஒரு புதுக்களம். விளையாட்டில் கூட மனித நேயம் காணமுடியும் என்பதற்கு உதாரணம். அதோடு நல்லதொரு திரைப்படம் பார்த்த திருப்தியும் இருக்கிறது, என்று பாராட்டியது இந்த துறையில் எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி யிருக்கிறது. தொடர்ந்து கிராம விளையாட்டுக்கள் மீதும் எங்கள் பார்வை இருக்கிறது. உற்சாகமாகவே சொல்லி முடிக்கிறார் நிவாஸ்குமார். பிரபல கல்லூரி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர், எம்.டெக் முடித்தவர். கலையின் பார்வையில் சமத்துவ சிந்தனை என்பது இவரின் தாரக மந்திரம்.

 

(நன்றி தினத்தந்தி)
மீண்டும் வருவேன்.

 

[தொடரும்]

Series Navigation