திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .

சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில்
ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய
சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில்.

2010 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை குமுதம் தீராநதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளின்
தொகுப்பே இந்நூல். முனைவர் சுப திண்ணப்பன், இராம. கண்ணபிரான் , இலியாஸ், சாந்து ஆகியோரின்
துணையுடன், அவர்களின் நூலின்/இணையங்களின்  துணையுடன், இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை சேகரித்ததாகக் கூறுகிறார்.

சிங்கப்பூர் என்றால் நம் மக்களுக்கு முஸ்தபா, லிட்டில் இந்தியா போன்ற இடங்கள் பரிச்சயமாகி
இருக்கும். சுற்றுலா செல்பவர்களுக்கு அங்கே இருக்கும் சந்தோசா பீச்சும், ஜூராங் பறவை சரணாலயமும்,
கோயில்களும் உணவகங்களும் ஷாப்பிங் மால்களும்தான் தெரியும். ஆனால் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள்
எந்த வருடம் வந்தார்கள், என்னென்ன காரணத்துக்காக வந்தார்கள், அதன் பயன்கள் என்ன  மற்றும்
அங்கேயே பல தலைமுறைகளாக வாழும் தமிழ்க்குடும்பங்கள் பற்றி. சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில்
ஒன்றாகத் தமிழ் இருப்பது பற்றி, பள்ளிகளில் தமிழ் முக்கியப் பாடமாக மட்டுமல்ல . அதன் வழி
முனைவர் பட்டமும் பெற இயலும் என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது.

எல்லா தமிழ் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் பற்றிய முழுமையான தொகுப்பல்ல இது என்று
கூறும் இவர் தமிழ்வேள் திரு கோ சாவின் தமிழ்பணிகள் பற்றி முழுமையாகத் தொகுத்துள்ளது
பாராட்டுக்குரியது. ஏனெனில் அந்தக் காலத்திலேயே  1929 இல் முன்னேற்றம் என்ற தமிழ் வார இதழின்
துணையாசிரியராகப் பணி புரிந்தது மட்டுமின்றி எரியாரின் தாக்கத்தால் தமிழர் சீர் திருத்தச் சங்கத்தை
உருவாக்கினார் கோசா. அந்தச் சங்கத்தின் மூலம் சீர்திருத்தம் என்ற மாத இதழும் வெளியிடப்பட்டதாம்.

பிரஜா உரிமை பெற்று ஒரு நாட்டைத் தன் நாடாகக் கருதத் தொடங்கும்போதுதான் நாம் நமக்காகவும்.
நம் மொழிக்காகவும் உரியதைச் செய்துகொள்ள முடியும் என்ற கோசாவின் கருத்தை இதில் பதிவு
செய்திருக்கிறார். தமிழ் முரசு, இளையர் முரசு மாணவர் முரசு என்று இளைய தலைமுறையையும்
தமிழில் ஈடுபடச் செய்தது. தமிழர் திருநாள் கொண்டாடியது தமிழர் பிரதிநிதுத்துவ சபை அமைக்கப்
பாடுபட்டது என கோசாவின் பணிகள் படித்துப் பிரமிப்பு வருகிறது.

இன்னும் நகரத்தார் பெருமக்கள் வந்தது, மற்றும் சீனர்கள்,  தமிழர்களிடையே காணப்படும் ஒற்றுமைகள்,
சிங்கப்பூர் தமிழ்ப் பள்ளிகள், கலைக்கூடங்கள், தமிழ்ப் படைப்புக்கள், தமிழ் அமைப்புக்கள்,
ஆன்மீக நம்பிக்கைகள், வாழ்வியல், பொருளாதாரம் எனப் பலதும் சொல்லிச் செல்லப்பட்டிருக்கிறது
மிகச் சரளமான நடையில். சிங்கப்பூரில் தமிழ்ப் பெயரில் சாலைகளும் இருக்கின்றனவாம்.

NATIONAL ARTS COUNCIL, TOAST MASTERS, NATIONAL INSTITUTE OF EDUCATION,
எனத் தமிழுக்கு விருதுகளும் வேலைகளும் வழங்கும்  அமைப்புக்கள் பற்றியும் தொகுத்துள்ளார். தமிழ் வானொலி, தமிழ்த் தொலைக்காட்சி பற்றியும் குறிப்பிடுகிறார். சிங்கப்பூரின் சௌகர்யமான வாழ்க்கை முறை. வீவகப் பேட்டை வீடுகளானாலும் மிக அழகுறக்  கட்டப்பட்டு பராமரிக்கப்படும் பாங்கு, சிங்கப்பூரின் சுத்தம், அங்கே உழைப்புக்கிடைக்கும் அங்கீகாரம், வருமானம். மக்கள் ஏன் அங்கு வாழப் பிரியப்படுகிறார்கள் என்பதெல்லாம் சொல்லிக் செல்கிறார்.

குமுதம் தீராநதியில் வந்த படைப்பென்பதால் மிக அருமையாக இருக்கிறது. ஆனால் எனக்கொரு குறை
உண்டு இதில்  கணிப் பொறியாளர்களானாலும் சரி, சாதாரண வேலைக்காக சிங்கப்பூர் சென்றவர்களானாலும் சரி,சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்ற ஒன்று இருக்கிறது.  அது மணற்கேணி என்ற இலக்கியப் போட்டி எல்லாம் நடத்தியது. அதில் முதல் பரிசு பெற்றவர் என் சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்ற
சினிமா பாடலாசிரியர் மற்றும் பொறியியல் வல்லுநர் பத்மாவதி ஆவார். சிங்கப்பூர் வலைப்பதிவர்
குழுமம் போட்டியில் வென்றமைக்காக சிங்கப்பூருக்கு ஒரு வார சுற்றுலாவாக இவரையும் இவரது
தந்தையாரையும் அழைத்துச் சிறப்பித்தார்கள். இணையத்தில் தமிழுக்காக சேவை செய்யும் சிங்கப்பூர்
தமிழர்களைப் பற்றியும் சில வார்த்தைகள் கூறி இருக்கலாம் .அல்லது புத்தகமாக வெளியிடும்போதாவது
சேர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை, சிங்கப்பூரில் நகரத்தார் ( ஆங்கிலம் ) என்னும் இரு நூல்களின்
ஆசிரியரான இவர் ஆன்லைன் வாய்ஸ் என்ற இணையத்தின் ஆசிரியர் என்பது கூடுதல் தகவல்.
இந்நூலில் தன்னுரையாக இதில் விட்டுப் போன  தகவல்களையும் தங்களுக்குத் தெரிந்த
தகவல்களையும் தெரிவித்தால் அடுத்த இணைப்பில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி இருக்கிறார். முடிந்தவரை மிகச் சிறப்பாகச் செய்ததோடு மட்டுமல்ல திருத்தங்களையும் ஏற்றுக் கொள்வேன் என இவர் மொழிந்திருப்பது ஒரு சிறப்பான எழுத்தாளர் என்பதற்குச் சான்று.

புத்தகம் :- சிங்கப்பூரில் தமிழ், தமிழர்,

ஆசிரியர் :- சௌந்தரநாயகி வைரவன்.

பதிப்பகம். :- குமுதம் பு(து)த்தகம் வெளியீடு

விலை :- 100/-

Series Navigationநம்பிக்கை ஒளி! (3)ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்