திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்

This entry is part 2 of 21 in the series 21 அக்டோபர் 2012

    கடந்த ஆண்டுகளில்  வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி  வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான். அவன் போகுமிடங்களுக்கு கூட்டிச் செல்கிறாள்.  நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் தருகிறது. அப்பா என்ற நிலையில் அவளை நன்கு கவனித்துக் கொள்கிறான். விளையாட்டும், பொழுது போக்குமாய் கழிகிறது. ஜானியின் பெண் சிநேகிதிகளும், அவர்களுடனான விளையாட்டும் தொடர்கிறது. அவையெல்லாம் மகளின் பார்வையிலிருந்து தப்புவதும் இல்லை. திரைப்படவிழாக்கள், கைரேகை, கால்ரேகை பதிப்பு நிகழ்ச்சி நடிகைகளுடானான ஸ்டில் எடுக்கும் நிகழ்வுகள், பெரும் தயாரிப்பாளர்களைச் சந்திப்பது என்று பொழுதைக் கழிக்கிறாள். மகள் இல்லாத தனிமையைச் சட்டென உணர்ந்தும் பார்க்கிறான். அவனை உலுக்கி விடுகிறது. சொகுசோ, பணமோ ஆடம்பரமோ குறைவில்லாத நிலையில் மனைவியில்லாத தனிமை அவனை உறுத்தவே செய்கிறது. மகளை விடுமுறையைவிட்டு பிரிகிறபோது அந்த உறுத்தல் அவனை அழுகைக்குள்ளாக்குகிறது. இறுதிக் காட்சியில் விலை உயர்ந்த காரில் சென்று கொண்டிருப்பவன் காரை நிறுத்திவிட்டு நடந்து போகத் துவங்குகிறான். கதாநாயகனின் பெண்களுடனான  நெருக்கமான காட்சிகளும், விடுதி அறையின் கட்டில் கம்பிகளில் பெண்களின் நிர்வாண நடனமும். லாஸ் ஏஞ்சல் முதல் இத்தாலி வரையிலான கதாநாயகனின் பயணங்களும் சுவாரஸ்யமானவை.

தன்னை நடிகன் என்று கண்டுகொள்வதால் ஏற்படும் வெறுப்பை இப்படத்தின் பல காட்சிகளில் காண முடியும் . பணம், புகழ் , வெற்றி என்று மிதப்பவன் அவன். பெராரி கார் மிக வேகமாக செல்வதில் பெயர் பெற்றது.அதில் ஏறி பிற  கார்களை விரட்டுவதில் அவனுக்கிருக்கிற பிரியம் அலாதியானதுதான். மதுவும் தேடிவரும் பெண்களும் அவனை எப்போதும் மிதக்கச் செய்து கொண்டே இருக்கிறார்கள். பிரிந்து போய் விடுகிற மனைவி. திடீரென்று ஒருநாள் தன்னிடம் வந்து சேர்கிற மகள். மகள் தன்னுடன் இருக்கிறபோதே அவன் தன்னை தந்தை என்று அடையாளம் கண்டு கொள்கிறான். அவளுக்கு நீச்சல்  பயிற்சி, பாலே நடனப்பயிற்சி , ஓவியக் கண்காட்சிகள், விருந்துகள் என்று அவளைத் திருப்திபடுத்துகிறான். மகளும், பிரிந்து விட்ட மனைவியும் இல்லாதபோது தன்னை அந்நியனாகவே இனம் கண்டு கொள்கிறான். வேகத்திற்குப் பெயர்  பெற்ற பெராரி காரை பாலைவனத்து சாலையின் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு எவ்வித இலக்குமின்றி நடக்கிறபோது அவன் ஒரு சாதாரண மனிதனாக இனம் கண்டுகொள்கிறான்.

 

    இதன் இயக்குனர் ஷோபியா கப்போலாவின் முந்தின படமும் தி லாஸ்ட் டிரான்ஸ்லேசன் குறிப்பிடத்தக்கது. சம்வேர் படத்திற்கு ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அமெரிக்க பெண் இயக்குனர் என்ற அளவில் பெருமை பெற்றவர். வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்தப்பட பரிசு பெற்றதன் மூலமும் சர்ச்சைக்குள்ளான்வரானார். வெனிஸ் திரைப்படவிழா தேர்வுக்குழு தலைவர் நெருக்கமானவர் என்பதால் சர்ச்சை பரிசு குறித்து எழுந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சம்வேர் பட இயக்கத்தில் ஈடுபட்டவர், மாடலில் உட்பட பல தொழில்களில் இருந்தவர் என்ற வகையில் அவர் மீதான் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. ‘காட்பாதர்’ போன்ற படங்களை இயக்கிய கொப்பலாவின் மகள் இந்த ஷோபியா.

 

        ஆறு ஆஸ்கார் அகாதெமி  விருதைப்பெற்ற அமெரிக்கப் படமான ‘பிரிசியஸ்’  சபையரின் நாவலை மையமாகக் கொண்டத் திரைப்படம். அதிக எடை கொண்ட பதினாரு வயதுப் பெண் பள்ளியிலிருந்து இரண்டாவது முறை கர்ப்பமடைந்த காரணம் காட்டி வெளியேற்றப்படுகிறாள். பள்ளியில் சக வயதினர் நிகழ்த்தும் வசை சொற்பிரயோகங்களும் அவளை பள்ளியிலிருந்து துரத்துகிறது. அவளின் முதல் கர்ப்பத்தைப் போலவே இரண்டாம் கர்ப்பத்திற்கும் காரணம் அவளின் தந்தைதான். வேலையில்லாத அம்மாவும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்துபவள்.வீட்டை விட்டு வெளியே துரத்துவதில் கண்ணாக இருப்பவள். மாற்றுப்பள்ளியொன்றில் சேர்கிறாள். அங்குள்ள ஆசிரியரும், தாதிப் பெண் ஒருத்தியும் அவளுக்கு ஆறுதலாக இருக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியேறுபவளுக்கு கிறிஸ்துவ தேவாலயத்தின் குழுப்பாட்டும் இசையும் ஆறுதலாக இருக்கிறது.

 

    அம்மா அவளை சமூக நல அலுவலகத்தில் சந்திக்கிறபோது அவள் அப்பா எயிட்ஸால் செத்துவிட்டதாகத் தகவல் சொல்கிறாள். மகளும் தன் குழந்தையின் எயிட்ஸ் பாதிப்பைச் சொல்கிறாள். அவள் பற்றிய விபரக் கோப்பொன்றை அலுவலகத்திலிருந்து திருடி, நெருக்கமான இருபெண்களிடம் காட்டுகிறாள். அவர்கள் தரும் ஆறுதல் அவள் வாழ்க்கையை நடத்த ஏதுவாகிறது. கறுப்பினப் பெண் ஒருத்தியின் சொல்லவியலாத கொடுமைகள் அடங்கிய வாழ்க்கையை இதன் இயக்குனர் லீ டேனியல் இப்படத்தில் வைத்திருக்கிறார். நாவலின் மையத்தை சரியாக வெளிக் கொணர்ந்த்தன் மூலம் கறுப்பின சமூகம் பற்றின பார்வை சரியாக் முன் வைக்கப்பட்டிருக்கிறது இதில். 35 லட்சம் மில்லியன் டாலர் சம்பளம் பெறும் ஒரு ஹாலிவுட் நடிகையின் வாழ்க்கை ஒரு புறம். இன்னொருபுறம் அதே அமெரிக்க சமூகத்தில் வாழும் ஒரு கறுப்பினப் பெண் தன்னை சாதாரணமானவளாகக் காட்டிக் கொள்ளவே துயரங்களை மறைத்து நடிக்கும் நடிகையாக வேண்டியிருக்கிறது.

            இந்திய வம்சவளி இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் ‘ஏர் பைண்டர்’  தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றியைத் தழுவியது. டாய்ஸ் ஸ்டோரி படத்தின் மூன்றாம் பாகமும் இவ்வாணடு பெரும் வெற்றி பெற்று அனிமேசன் படங்களுக்கான வெற்றியைச் செய்தியாய் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் படங்களும், ‘ தி கராத்தே கிட்’ மறு உருவாக்கமும் உயர்ந்த தேர்ந்த தொழில்நுட்ப படங்களின் (ஸ்கை லைன்) தோல்வியைத் தாண்டி குழந்தைகளை மையமாக்க் கொண்டவற்றின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்சப்ஷன் போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தந்திருக்கிறது. சிஜஏ பிரதிநிதிகளை கதாநாயகர்களாக்க் கொண்டு ரஷ்யா, வியட்நாம், க்யூபா, போன்ற நாடுகளில் சாகசச் செயல்கள் செய்ய தேவையில்லாது போய்விட்டது. உலகின் கடைசி ராட்சத மிருகங்கள் போன்றவற்றைக் காட்டி மிரட்டிவிட்டு ஹாலிவுட் அலுத்துப் போயிருக்கிறது. இனி ஜீலியன் அசாஞ்ச்சின் விக்கிலீக்ஸ் வெளித்தள்ளியிருக்கும் தகவல்கள் கதைச்சுரங்கமாகும் அவர்களுக்கு.

——————————————————————————————————————————————

Series Navigationதப்பிப்புநினைவுகளின் சுவட்டில் (102)
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *