திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )

This entry is part 15 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 

இரண்டு வருடங்கள், அஞ்ஞாத வாசம் புரிந்தாலும், தனது இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை, வைகைப்புயல் வடிவேலு அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’

எல்லா வயதினரும் வடிவேலு ரசிகர்கள் தான் என்பதைக், குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அரங்கில் எழுப்பிய சிரிப்பொலி சுட்டிக் காட்டுகிறது. வடிவேலு தன் பிராண்ட் காமெடியை மாற்றாமல், அப்படியே வைத்திருப்பது ஆறுதலான விசயம். அவரது உடல் மொழியும், அங்க சேஷ்டைகளும் அக்மார்க் ரகம். சபாஷ்!

எங்கிருந்தய்யா பிடித்திருக்கிறார் அந்த கதை நாயகியை.. உச்ச நட்சத்திரங்களும், உலா வரும் நாயகிகளும் பொறாமைப்படும் அளவிற்கு, தந்தத்தில் கடைந்த சிற்பமாக களி நடனம் புரிகிறார் மீனாட்சி தீட்சித். பகுத்  அச்சா லடுக்கி! காம ரசத்தில் தோய்த்தெடுத்த மாங்கனி போல, அவர் காட்டும் உணர்ச்சி பாவங்கள், மைய சூட்டைக் கிளப்புகின்றன. வயசாளிகளை சிட்டுக்குருவி லேகியம் தேடி ஓட வைக்கின்றன. சூப்பர்!

கொஞ்சம்  சமகால அரசியல் நிலைப்பாடோடு கதை பண்ணியிருக்கும் இயக்குனர் யுவராஜ் தயாளன், அதை எங்கேயும் ஓவர் டோஸ் ஆக்காமல், நடுநிலையாக சித்தரித்திருப்பது, அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. சார்பு அரசியலில் பங்கெடுத்து, வடிவேலு பட்ட காயத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை போலிருக்கிறது.

கதையில் கொஞ்சம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ வாடை அடிப்பது, அப்பட்டமாகாத் தெரிகிறது. ஆனாலும் வைகைப்புயலின் வித்தியாச  நடிப்பு, அதை மறக்கடிக்க செய்கிறது.

விகடன் நகரத்தின் மாமன்னர் ( வடிவேலு ), எண்ணற்ற மனைவிகளுடனும், ஐம்பத்தி இரண்டு பிள்ளைகளுடனும், போக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாட்டின் வர்த்தகத்தை அயல்நாடான சினாவுக்கு விற்க முற்படும் குறுநில மன்னன் ( ராதாரவி ), அதற்குத் துணையாக, மாமன்னரின் மந்திரிகள் ஒன்பது பேரை துணைக்கழைத்துக் கொண்டு சீனதேசம் போகிறான். ஊழலில் ஊறிப்போன எட்டு மந்திரிகள் அதற்கு ஒப்புக் கொள்ள, விகடன் தேசத்தை அன்னியருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் நேர்மையான மந்திரி ஒருவர், அங்கேயே சீன வியாபாரியால் கொல்லப்படுகிறார்.

நவரத்திரனங்கள் என மாமன்னரால் பட்டம் சூட்டப்பட்ட மந்திரிகள், எட்டு பேராக திரும்பி வர, ஒன்பதாவது மந்திரியை தேர்ந்தெடுக்கும் தேர்வில், உள்ளே வருகிறான் தெனாலிராமன் (வடிவேலு ). அவன் உண்மையிலேயே, மன்னராட்சியில் மலிந்து போன வறுமையையும் ஊழலையும் கண்டு வெகுண்டெழுந்த கிளர்ச்சிக்காரர்களின் தலைவன். அரண்மனைக்குள் நுழையும் அவனது நோக்கமே சமயம் பார்த்து மாமன்னரை கொல்லுவதுதான். ஆனால் மன்னரோடு பழகியபின், அவரது குழந்தை உள்ளத்தையும்ம், மந்திரிகளின் வஞ்சக எண்ணத்தையும், தெனாலிராமன் உணர்ந்து கொள்கிறான். மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, மன்னரைக் காப்பாற்றும் திட்டத்துடன் அவன் முன்னேற, குட்டு வெளிப்பட்டு போன மந்திரிகள், மன்னரை சீனர்களின் உதவியோடு கடத்தி விடுகிறார்கள். மன்னர் காப்பாற்றப்பட்டாரா? தெனாலிராமன் கதி என்ன? என்பதை அம்புலிமாமா பாணியில் அசத்தலாக சொல்லியிருக்கிறது இந்த வண்ணச் சித்திரம்.

கலை இயக்குனர் பிரபாகருக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். அரசன் அரண்மணை, காட்டுவாசிகளின் கோயில், அங்கே துடைப்பக்குச்சிகளால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பிடாரி அம்மன் சிலை, தெனாலிராமன் படுக்கையறையில் மயிலிறகுகள் இரைந்து கிடக்கும் படுக்கை என அசத்தியிருக்கிறார். வெல்டன்!

பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் வசன்ங்களில் தமிழ் கரைபுரண்டு ஓடுகிறது. வடிவேலுவுக்குத்தான் கொஞ்சம் ‘ழ’ வரவில்லை என்பதுதான் ஒரே குறை. லேசாக பொடி வைத்த வசன்ங்கள் பல இடங்களில் சபாஷ் பெறுகின்றன.

“ மந்திரி என்றாலே இருப்பவனை விரட்டுவது தானே வேலை “ ஒரு சாம்பிள்.

ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு, பிரபாகரின் உழைப்பை வீணடிக்காமல் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. பலே! இமான் இசையில் பாகவர் காலத்து மெட்டுகள். விவேகாவின் வரிகளில் இலக்கிய நயம் துள்ளியோடுகிறது.

‘ இதயம் பறவையாகும்போது இமயம் காலின் கீழே “ என்கிற தன்னம்பிக்கை வரிகள் கவிஞரின் பெயரைச் சொல்கின்றன.

தெனாலிராமன் என்று தலைப்பு வைத்திருந்தாலும், கதை என்னமோ கேளிக்கைப் பிரியரான மன்னரின் கதைதான். அதில் வித்தியாச மீசையும், வெள்ளந்தி முகமாக வித்தியாசம் காட்டியிருக்கிறார் வடிவேலு. இளவரசி மாதுளையாக வரும் மீனாட்சி தீட்சித், ஒயின் கிளாஸ் உடம்பால் கிக் ஏற்றுகிறார். சிந்தாமணி என்று பெயரிடப்பட்டு தெனாலிராமனுடன் வலம் வரும் அவனது குதிரை, செய்யும் காமெடி சேட்டைகள் சிரிப்பொலி சேனல்.

வடிவேலு வலுவாக மீண்டும் கால் பதித்திருக்கிறார். வெல்கம் பேக்!

0

திரை ஓசை : செம ஜாலி

 

ரசிகன் குமுறல் : டக்கர் பொண்ணு மீனாட்சியை வச்சிக்கிட்டு, தாமரைக் குளத்திலே தழுவுற சீனை சேர்க்காம வுட்டாங்களே தலைவா!!

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *