தீபாவளியும் கந்தசாமியும்

பிரியங்கா முரளி

 

என்னங்க அத்தை! பலகாரம் எல்லாம் ஆச்சா ?இல்ல இன்னைக்கும் இந்த வாலுங்க டிவி முன்னாடி தான் தவம் கிடக்குதுங்களா ?”
ஆர்ப்பாட்டமாக கேட்டபடி உள்ளே நுழைந்தான் சக்திவேல் ! திருப்பூரில் அந்த வட்டாரத்தின் கேபிள் டிவி  ஆப்பரேட்டர் ! வயது 23 , திருப்பூரில் சிறிய சாயப்பட்டறை வைத்து இருக்கும் கந்தசாமியின் மனைவி புனிதாவின் ஒன்று விட்ட அண்ணன் மகன் ! புனிதாவின் பெண்ணை அதாவது பாரதியை அவனுக்கு கொடுப்பதாக சிறு வயதிலேயே பெரியவர்களால் முடிவு செய்யபட்டிருந்தது !
“அதான் குடுத்து வெச்சு இருக்கீங்களே 150 சேனல் ! காலைல உக்கார்ந்ததுங்க இன்னும் எழுந்திருக்க மாடேங்குதுங்க சக்தி ! அது சரி …அத்தை வீட்டுக்கு வர இப்போ தான் வழி தெரிஞ்சுதா ?” என்று கேலி பேசி கொண்டே தண்ணீர் எடுக்க உள்ளே விரைந்தாள் !
கண்களை சுழற்றியபடியே பேசினான் ! +2 படிக்கும் பாரதியும் ,பத்தாவது படிக்கும் செந்திலும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக டிவி முன் ஆஜராகி இருக்க வீடு வெகு சுத்தமாக இருந்தது ! தன் அத்தையின் சுத்தத்தை மெச்சியபடியே
“ஏன் சொல்லமாட்டீங்க ? மாமா மாதிரி சாயபட்டறையா வெச்சு இருக்கேன் ? ஊர் பூராவும் அலைஞ்சு திரிஞ்சு நிம்மதியா உக்காரலாம்ன்னு வந்தா ஷெரிப் காலனில சன் டிவி தெரியலைன்னு கம்ப்ளைன்ட் ! தீபாவளிக்கு கூட வீட்ல உக்கார முடியாத நாய் பொழப்பு அத்தை ….சரி வர்றதே வரோம் நம்ம அத்தையை பாத்துரலாம்னு தான் வந்தேன் …ஆசையா வந்தா கண்டுக்காம டிவி முன்னாடி உக்கார்ந்துட்டு இருக்கா !”
சொல்லி கொண்டு வந்தவன் கடைசி வரியை மட்டும் முனகினான் !
“ஏன் …..நோகாம வேற வேலை எதுவும் பாக்காம உங்களுக்கு காசு வருதுன்னா இந்த வேலை கூட பார்க்க மாட்டீங்களா மருமகனே  ? “
என்று புனிதா மறுபடியும் வாரினாள் தன் மருமக பிள்ளையை !
“ஏன் பாக்காம மாமியாரே ! நல்லா பாக்கலாமே ….யாருக்காக பாக்குறேன் ? என் பொண்டாட்டிக்காகதானே ! ஏய் என்னடி சொல்ற ? “
என்று டிவி முன் உட்கார்ந்து இருந்த பாரதியின் இரட்டை ஜடையில் ஒன்றை இழுத்து வம்புகட்டினான் சக்திவேல் !அவளை வம்பிழுப்பது என்றால் மிகவும் பிடிக்கும் ஏனென்றால் முறைத்து கொண்டே இருக்கும் முறை பெண்ணாயிற்றே ! பொறுப்பான பெண் ,செந்திலுக்கு அன்பான அக்கா !
“வேணாம் மாமா !அக்கா ரொம்ப கோவமா உக்கார்ந்துட்டு இருக்கா ! இப்போ வம்பிழுக்காதீங்க !” என்று டிப்ஸ் வாரி வழங்கினான் செந்தில் !
“ஏன்டா ? என்ன கோபம் என் செல்ல பொண்டாட்டிக்கு ?” என்று மறுபடியும் வம்பு கட்ட
அது வரையில் அவனை திரும்பியும் பார்க்காமல் உட்கார்ந்து கொண்டிருந்த பாரதி
“ம்மாஆஆஆ ….இங்க பாருங்க மாமாவ ! என்கிட்டே வம்பிழுத்துட்டே இருக்காங்க ! இப்படி கூப்டாதீங்கன்னு எத்தனை முறை மாமா சொல்றது ? ஒழுங்கா அங்கிட்டு போங்க மாமா !”
என்று உச்சஸ்தாயில் கத்தினாள் !
“ஏய் பாரதி ! ஏண்டி இப்படி கத்துற ? ஏன் சக்தி உன்கிட்ட வம்பு பேச கூடாதா ? அவன் பேசாம யாரடி பேசுவா ?”
என்று புனிதா மருமகனுக்கு பரிந்து கொண்டு வரவே
“எனக்கு யார் கூடவும் பேசவும் வேணாம் …ஒரு மண்ணும் வேணாம் ..!!” என்று மறுபடியும் கத்திவிட்டு அவளது ரூம் உள்ளே சென்று அடைந்து கொண்டாள் !
இந்த அளவு பாரதி கத்தி பார்த்திராத சக்திவேலுவுக்கு சட்டென்று முகம் சுருங்கியது ! அதை பார்த்த புனிதா
“இல்ல தம்பி …அவ ஏதோ நினைப்புல பேசிட்டா …..மனசுல எதையும் வச்சுக்காத சக்தி !”
தனது மருமகனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார் புனிதா !
“விடுங்க அத்தை! பரவால்ல ….சரி அவ வந்தா இத குடுத்துடுங்க ! அவளுக்கு பிடிக்குமேன்னு பனாரஸ் அல்வா வாங்கிட்டு வந்தேன் ! சரி ….வரேன்த்தை !”
முகம் சிறியதாகி செல்லும் மருமகனை பார்க்க புனிதவுக்கு சங்கடமாக இருந்தது !
“எதுவுமே குடிக்காம போறியே சக்தி …தீவாளி அதுவுமா ….?”
“பரவால்லஅத்த ,இருக்கட்டும் ! இன்னொரு நாள் வரேன் !” என்று கிளம்பினான் சக்திவேல் !
அவனுக்கு தெரியுமா ? தீபாவளிக்கு புது துணி இல்லாவிட்டாலும் பரவாயில்லை ! கஞ்சி வைக்க கூட வழியில்லாமல் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நினைத்து தான் கோபமாக இருக்கிறாள் என்று ! அரசாங்கம் சாயப்பட்டறைகளை மூட சொல்லி உத்தரவு இட்டபிறகு கொஞ்ச நாள் நிலைமையை சமாளித்த கந்தசாமிக்கு அதற்கு பின் சமாளிக்க முடியாமல் போனது! கடனுக்கு சரக்கு தந்திருந்தவர்கள் அவரை நெருக்க ஒவ்வொரு நகையாக வைத்து ,பின் விற்று அவர்களது கடன்களை அடைத்தார் ! பின்னர் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரம் ஒவ்வொன்றாக அடகு கடையில் படிக்க சென்றது ! அவரது தந்தை வாங்கி வைத்து இருந்த இரும்பு பீரோ ஒருவாரத்துக்கு சாப்பாடு போட்டது ! இப்போது வீடே சுத்தமாக இருந்தது ! பழைய தட்டு முட்டு சாமான் எல்லாம் கழிந்தாயிற்றே !
பாரதி பொறுப்பான பெண் என்றாலும், பசியை எப்படி தான் பொறுத்து கொள்வது ? அதுவும் ஆதியில் இருந்து வறுமையில் உழன்றதில்லையே ! நன்றாக வாழ்ந்தவர்கள் தானே ! நேற்றாவது கஞ்சி வைக்க அரிசி ஒரு பிடி இருந்தது இன்று அது கூட இல்லை ! சக்தி மாமா  பனாரஸ் அல்வா வாங்கி வந்ததற்கு பதில் இரண்டு இட்லி வாங்கி வந்திருக்க கூடாதா ? பாவம் செந்தில் ! பசி தாங்கமாட்டாதவன் இன்று அதை காட்டி கொள்ளாமல் உட்கார்ந்து இருக்கிறானே ! சமையலறைக்கு சென்று ஒரு சொம்பு நீரை ஒரே மூச்சாக குடித்து முடித்தாள் ! வயிறு நிறைந்த உணர்வு ! வெளியே வெடி சத்தம் காதை பிளந்தது !
இப்படி இருக்கும் போது எதையும் காட்டி கொள்ளாமல் டிவி முன் தன் தம்பியுடன் ஐக்கியமாகி இருந்தவளுக்கு சக்திவேல் பேசியது எரிச்சலூட்டியது !
“கையிலே காசிருந்தால்தான் காதலும் இனிக்குமடா சர்வேசா !”
சக்திவேல் கிளம்பியவுடன் பக்கத்து வீட்டு தேவி தீபாவளி பலகாரம் கொண்டு வந்தாள் ! அவளது கணவன் பஸ் நிலையத்துக்கு முன் சிறு மருந்தகம் வைத்து இருப்பவன் !
“அண்ணி ! என்ன பலகாரம் ஆச்சா ? டேய் செந்திலு ! ஏன்டா மூஞ்ச தூக்கி வச்சுட்டு உக்கார்ந்து இருக்க !…..பாரதி …..பாரதி …..பாரதி எங்கண்ணி ?”
“ரெண்டுத்துக்கும் காலைல இருந்து ஒரே சண்டை தேவி ! சக்தி வந்தப்போ அவன் கிட்டயும் சண்டை போட்டுட்டு குளிக்க கூட மாட்டேன்னு ரூம்ல அடைஞ்சு கிடக்கா ! தீபாவளி அதுவுமா !இவனுக்கும் அதே அடம் ….என்ன பிள்ளைங்களோ ! ஊரெல்லாம் தீவாளி இதுங்களுக்கு இன்னிக்கு கூட டிவிக்கு சண்டை தேவி !”
அம்மா பேசுவதை கேட்டவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை !
“சரி பிடிங்கண்ணி முறுக்கு ! அண்ணன் எங்க ?”
“அப்பாயி கூப்டுச்சாம் ! போய் இருக்காப்ல ! இப்போ வந்துருவாங்க தேவி !”
“சரிங்க அண்ணி ….நான் போயிட்டு வரேன் …தீவாளி அன்னைக்குமா வீட்ல கொள்ளை வேலை இருக்கு !
தன் தந்தை போய் இருப்பது பெரியப்பா வீட்டிற்கு ! இவ்வளவு நாள் யாரிடமும் கையேந்த கூடாது என்று கொள்கையோடு இருந்தவர் இன்று தீபாவளிக்காவது பிள்ளைகள் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என்று தான் பணம் கேட்க போனார் ! நேற்று கேட்டதற்கு இன்று வர சொன்னதாக கேள்வி ! தான் நன்றாக சம்பாரித்த காலத்தில் அண்ணனுக்கு நிறைய கடன் இருந்தது ! கடன்காரர் தொல்லை தாங்க முடியாமல் விஷ பாட்டிலை கையில் எடுத்தவருக்கு ஆறுதல் கூறி அந்த கடனை எல்லாம் அடைத்து அவருக்கு உதவியது கண்டிப்பாக அண்ணன் மனதில் இருக்கும் ! அந்த தெம்பில் தான் போனார் !
மாலை வரை இப்படியே பொழுதை கழித்தவர்களுக்கு இன்னமும் கந்தசாமி வராததால் அனல் மேல் அமர்ந்து இருந்த உணர்வு !வெளியில் வெடி சத்தமும் குழந்தைகளின் ஆரவாரமும் காதை கிழித்தன !ஒன்றும் பேசாமல் ஓவர் டாங்க் மேல் ஏறி அமர்ந்து கொண்டு வாணவேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் பாரதி ! பசி இப்போது அடங்கி வயிறு சமநிலையில் இருந்தது ! இரண்டு சொம்பு தண்ணீருக்கு நன்றி ! ஆறாவது படிக்கும் தீக்ஷிதா மாடிக்கு அவளை தேடி வந்தாள் !
“அக்கா ….வெடி வைக்க வாக்கா …எங்கெல்லாம் உன்னை தேடுறது ? இங்கயா உக்கார்ந்து இருக்க ?” என்று கேட்டு கொண்டே வந்தவள் அவளது பழைய துணியை பார்த்தவள் ,
“அக்கா என்னக்கா …புது துணி போடலியா ? “ என்று கேட்க
“ஏய் தீக்ஷி ,நான் தான் புது துணி போட மாட்டேன்னு போன வருஷமே சொன்னேன்ல …!”
அந்த சிறுமிக்கு ஒன்றும் புரியாமல் “எப்பக்கா சொன்ன ?” என்ற கேள்விக்கு
“ஏன் தீக்ஷி …எத்தன பேர் தீபாவளிக்கு புது துணி போடாம கஷ்டபடுறாங்க …சாப்பாட்டுக்கு கூட இல்லாம பட்டினியா இருக்காங்க ! நாம காச கரியாக்கிட்டு வெடி வைக்கிறோம் ! இந்த காச வீணாக்காம அவங்களுக்கு குடுத்தா எத்தன நாள் அவங்க சாப்பிடலாம் தெரியுமா ? அதான் நான் முடிவு பண்ணிடேன் …இனிமே நான் தீவாளி கொண்டாட மாட்டேன் ! “ என்று நீளமாக தன் சிற்றுரையை முடிக்க
“என்னக்கா …நீ சொல்றது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ,….நான் போய் மத்தாப்பு கொளுத்தணும் ….!”
என்று சொல்லி விட்டு பறந்தாள் அந்த சிறுமி ! கசப்பாக புன்னகைத்து கொண்டாள் பாரதி!
ஒரு வழியாக பத்து மணிக்கு வந்தார் கந்தசாமி ! வரும் போதே பரோட்டா வாசம் பிள்ளைகளுக்கு அடக்கி வைத்த பசியை எல்லாம் தட்டி எழுப்பி தாண்டவம் ஆட வைத்தது ! ஆளுக்கு ஒவ்வொரு பொட்டலத்தை குடுத்தவர் தன் மனைவிடமும் குடுத்து சாப்பிட சொன்னார் !
“வாங்க மாமா நீங்களும் …ஒண்ணா சாப்பிடலாம் ..” என்று புனிதா வாஞ்சையாக அழைத்தாள் !
“இரு அம்மணி …கை கால கழுவிட்டு வரேன் ….கசகசன்னு இருக்கு !”
“பரவால்ல …பெரிய மாமாக்கு இந்த அளவாவது மனப்பாங்கு இருக்கே !அதுவரைக்கும் சந்தோசம் !…ஏனுங்க மாமா இவ்ளோ லேட் ? பிள்ளைங்க தான் ரொம்ப வாடிருச்சுங்க !”
“இல்ல அம்மணி ….அண்ணன் பட்டாசு கடை போட்டு இருக்காங்க இல்ல ….கடைல ஆள் பத்தலம்மா ! தீவாளி கூட்டம் வேற நெம்பி எடுத்துருச்சு ! பாவம் அண்ணன் முழி பிதிங்கிட்டாங்க ! அதான் கொஞ்சம் உதவியா இருந்துட்டு வரேன் !”
என்று சொல்லவும் சரேலன நிமிர்ந்து பார்த்தாள் புனிதா ! அந்த கண்களில் வலி மிகுந்து இருந்தது ! சட்டென தலையை திருப்பி தன் கண்களின் கண்ணீரை மறைத்து கொண்டாள்! அவரிடம் திரும்பாமல்
“பாரதி ,செந்திலு ….சீக்கிரம் சாப்டுட்டு படுங்க கண்ணா ! நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் !”
தன் மனைவி கண்ணீரை மறைத்து கொண்டு பேசுவது புரிந்தது ! காலையில் பணத்துக்காக அண்ணனிடம் சென்ற போது அண்ணன் பேசியது நிழலாடியது !
“டேய் தம்பி ! தாயும் பிள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேறடா !இந்த மாதிரி காசு பணம்ன்னு கேட்டுட்டு வந்து இங்க நிற்காத ! உன் அண்ணி என் மென்னிய திருவிடுவா ! பட்டாசு கடைல இன்னிக்கு உக்காரு ,கணக்க பாரு !ஒரு நாள் காசு தாரேன் ! ஆஆங் ….ஒன்ன சொல்ல விட்டுட்டேன் …..வீட்டுக்கு அது வேணும் இது வேணும்ன்னு பட்டாசுல கை வெச்சுராத …மரியாதை இல்லை சொல்லிட்டேன் !”
இரவு வரை அங்கேயே வேலை பார்த்தவர் யாரோ தன்னை மாமாவென அழைக்கவும் திடுக்கிட்டார் ! நிமிர்ந்து பார்த்தவர் எதிரில் நின்றது சக்திவேல் !
“இதென்ன மாமா ? எதுக்கு இங்க இந்த வேலை பார்த்துட்டு இருக்கீங்க ? “ என்று கோபமாக கேட்கவும் அவரால் பதில் கூற முடியவில்லை !
“சரி நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் ….கிளம்புங்க …!”
“இல்லப்பா ….செஞ்ச வேலைக்கு பணத்த வாங்கிட்டு வரேன் ! “ என்று ஹீனமாக கூற
“மாமா …….வேணாம் மாமா அந்த காசு ! நீங்க நூறு பேர வாழ வெச்சுருக்கீங்க ! இன்னொருத்தர் கிட்ட நீங்க கையேந்த கூடாது ! வாங்க என் கூட “
என்று கூறி கையோடு அழைத்து வந்தவன் ,
“மாமா சாப்டீங்களா ? “
கந்தசாமி ஒன்றும் பேசாமல் இருக்க
“பசங்களாவது சாப்டாங்களா ?”
அதற்கும் கந்தசாமி ஒன்றும் பேசாமல் இருந்தார் !
“ஏன் மாமா என்னையெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா ? இல்ல மருமகன் கிட்ட எப்பிடி சொல்றதுன்னு இருந்துட்டீங்களா ? பேசுங்க மாமா !”
என்று மாற்றி மாற்றி கேட்கவும் முகத்தில் அறைந்து கொண்டு கதற ஆரம்பித்தார் கந்தசாமி !
“இதே கையால இவனுக்கு சாப்பாடு போட்ருக்கேன் மாப்பிளை ! வாழ வழியில்லாம சாக போனவன தடுத்து அவன் கடனையெல்லாம் தீர்த்துருக்கேன் ! இன்னைக்கு தீபாவளி அதுவுமா என் பிள்ளைங்க ஒரு முழம் புது துணி போட வழி இல்லாம கிடக்குதுங்க ! என்னால தாங்க முடிலப்பா ! வாழ்ந்த போதெல்லாம் வந்தவங்களுக்கு எல்லாம் ஆக்கி போடுவா எங்க வீட்டம்மணி ! இன்னைக்கு என் தங்கங்க பட்டினி கிடக்குதுங்களே மாப்ள ! எங்க போய் நான் இந்த கொடுமைய சொல்லிட்டு அழ ? இதுக்கு தானா என் பிள்ளைங்கள சீராட்டி பாராட்டி வளர்த்தேன் ! பெரியவ காலேஜ் சேரனும் கல்யாணம் முடிக்கணும் …என்ன பண்ணுவேன்னு தெரியலையே சக்தி ! “
தனது உள்ள குமுறல்களை எல்லாம் தன் மருமகனிடம் கொட்டியவர் சிறிது நேரத்திற்கு பிறகே ஆசுவாசமானார் !
பார்க்கும் போதே சக்திக்கு கண்கள் கலங்கியது ! எப்படி இருந்த மனிதர் !பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கியவன் தனது மாமாவிடம் குடுத்து குடிக்க கூறியவன் ,அருகே உள்ள உணவு விடுதிக்கு சென்று பரோட்டா பார்சல் கட்டி கொண்டு வந்தான் !
“மாமா ! பிடிங்க ….நான் இருக்கேன்றத மறக்காதீங்க ! சின்ன வயசுல இருந்து என் மாமான்னா எனக்கு எப்பவும் அன்னாந்து பாக்கற உசரத்துல தான் இருக்கணும் ….நான் பார்த்துக்கறேன் மாமா ! இதே பாரதிய கட்டுனதுக்கு அப்புறம் இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா நான் பார்த்துட்டு சும்மா இருந்துடுவேனா ? என்னை ஒதுக்கி வைக்காதீங்க ! நாளைக்கு வீட்டுக்கு வரேன் …வந்து பேசிக்கலாம் என்ன பண்ணலாம்னு ….இப்போ நிம்மதியா போய் சாப்டுட்டு தூங்குங்க மாமா ! “
சக்தியை பற்றி நினைத்து கொண்டிருந்த கந்தசாமி கண்களில் இப்போது கண்ணீர் திரள தன் மனைவிக்கு தெரியாமல் பின்னால் திரும்பி துண்டில் துடைத்தார் ! கண்களில் ஒரு ஒளி தெரிந்தது !

Series Navigation“ பி சி று…”புதுமனை