துணை

This entry is part 4 of 18 in the series 11 ஜூலை 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

(1975, ஆகஸ்ட் மாத “ரஞ்சனி” இல் வந்தது. “தொடுவானம்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் தொகுப்பில் உள்ள சிறுகதை.)

      சோமையாவுக்குத் திடீரென்று திருமணத்தில் நாட்டம் விழுந்து விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னந்தனியாக அவர் வாழ்ந்து வருகிற வாழ்க்கை அவருக்குச் சலிப்பையும் யாருடைய கூட்டுறவையேனும் நாடுகின்ற ஏக்கத்தையும் அளித்துவிட்டது என்பது ஒருகால் அந்த நாட்டத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். வயசு ஏற ஏற, இறுதி நாள்களில் தமக்கு ஒரு வாய் வெந்நீர் வைத்துக் கொடுக்கக் கூட ஆள் இல்லை என்கிற அநாதை உணர்வு அவரை வெகுவாக அச்சுறுத்தலாயிற்று. ‘ஒரு நோய் நொடிப்பு என்று வந்தால், கஞ்சி வைத்துக் கொடுப்பதற்குக் கூட எனக்கு யாரும் இல்லையே? இந்த வயதில் நான் திருமணம் செய்வதைக் கண்டு ஊரார் கேலி செய்யக் கூடும்தான். ஆனால், எத்தனை நாளுக்குக் கேலி செய்யப் போகிறார்கள்? சில நாள்களில் தாமே சலித்துப் போய் விட்டுவிடுவார்கள். எல்லாம் பழங்கதையாகிப் போகும். ஊரார் கேலிக்கெல்லாம் அஞ்சிச் செத்தால் நாம் வேலை ஒழுங்காக நடக்குமா? என் சொந்த விஷயங்களில் ஊராருக்கு என்ன ஜோலி?  நாளைக்கு எனக்கு அவர்களா கஞ்சியோ வெந்நீரோ வைத்துக் கொடுப்பார்கள்?…’ என்றெல்லாம் தம் அறையில் உட்கார்ந்தவாறு வாய்க்குள் முனகிக்கொண்டார்.

      அவரது பார்வை சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தம் மகனின் புகைப்படத்தின் மீது பதிந்தது. அவர் நாற்காலியை விட்டு எழுந்து சென்று அதற்குப் பக்கத்தில் நின்று, அன்றுதான் அதை முதன்முதலாய்ப் பார்ப்பவர் போல் உற்றுப் பார்த்தார். அவர் மகன் தான் எவ்வளவு அழகாக இருந்தான்! மருமகள் மட்டும் என்னவாம்? அவளும்தான் கொள்ளை அழகு. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அழகில் ஒருவரை ஒருவர் மிஞ்சப் பார்த்தார்கள். கண் பட்டாற்போல் மகன் மயூரநாதன் திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கொடிய நோய் ஒன்றுக்கு இரையாகிப் போனான். அதன் பிறகு மருமகள் தன் பிறந்த வீட்டுக்குப் போனாள் …

      சோமையாவின் கண்கள் சட்டென்று நிறைந்து மங்கின. திடீரென்று ஒரு தள்ளாமை அவரைப் பற்றிக்கொண்டது. அவர் மெல்ல நடந்து, நாற்காலியின் முதுகில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்துகொண்டு ஒரு சின்னப் பிள்ளை மாதிரி பொங்கிப் பொங்கி அழுதார். ‘நீ இன்று உயிருடன் இருந்தால் இந்தப் பிரச்னை எனக்கு வந்திருக்குமாடா?’ என்று அவர் வாய்விட்டுப் புலம்பிக்கொண்டார்.

      இப்படிப் புலம்பி முடித்த சூட்டோடு, தாம் திருமணம் செய்துகொள்ள நினைப்பது தமக்குச் சமைத்துப் போட ஒரு பெண் வேண்டும் என்பதால் மட்டும்தானா என்று அவர் தம்மையும் அறியாமல் வினாவெழுப்பிக் கொண்டார். ‘இல்லை’ என்கிற பதில் காதுகளில் இரைந்து ஒலித்ததும் அவர் முகம் சிவந்து விட்டது. அவர் தமக்கு ஏற்பட்ட வெட்கத்தை உதறிவிட்டு, முகத்தை மேல்துண்டால் அழுத்தித் துடைத்துக்கொண்டார். ‘என்னை  விடவும் கிழடுதட்டிப் போனவர்கள் எல்லாரும் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். அப்படி இருக்கும் போது நான் செய்து கொள்ளுவதற்கு ஏன் வெட்கப்படவேண்டும்?’ என்று தம்மைத் தாமே கேட்டுக்கொண்ட அவர் மறுபடியும் எழுந்து கண்ணாடியின் முன் சென்று நின்றார்.

      தலை நரைத்திருந்ததே ஒழிய, அடர்த்தி குன்றவில்லை. முகத்தில் அவ்வளவாகச் சுருக்கங்கள் விழுந்திருக்கவில்லை. கண்களுக்குக் கீழே இந்தக் காலத்து ‘முப்பதுகளுக்கு’ விழுந்திருக்கும் பள்ளங்கள் கூட அவரிடம் காணப்படவில்லை. மனைவியை இழந்ததன் பின்னர் அவர் வாழ்ந்து வந்திருக்கும் கட்டுப்பாடான வாழ்க்கைக்குச் சான்று கூறும் வகையில் அவர் கண்களில் பளபளப்புத் தெறித்தது. மனைவியை உள்ளன்போடு நேசிப்பதில் அவர் எந்தக் கணவனுக்கும் சளைத்தவராக இல்லை. நியாயமாக ஒரு மனிதன் தன் மனைவிக்குக் காட்ட வேண்டிய அன்பை அவர் அவள் மேல் காட்டியவர்தான். ஆனால் அந்த அன்பின் ஆழத்தை மீறிக்கொண்டு ஒரு பெண்ணின் உறவு அவருக்கு இப்போது தேவைப்பட்டது.  ‘இன்னொருத்தியைக் கட்டிக்கொண்டால் மனைவியை நேசிக்காதவன் என்று ஆகிவிடுமா என்ன’? என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக்கொண்டு மனசுக்குள் சிரித்துக்கொண்டார். தம் மனைவி தமது செயலை அங்கீகரிப்பாளா என்கிற கேள்வி அவர் மனத்தில் கிளம்பிய போது என்றோ இறந்து தன்னினைவுகள் அற்றுப் போய்விட்ட ஒரு பெண்ணுக்குத் தம் செயலை ஏற்பதோ ஏற்காதிருப்பதோ எவ்வாறு இயலும் என்றெண்ணியவராக, அவர், ‘அப்படியே என் செயலை அரூபமாக இருந்து நீ பார்த்துக் கொண்டிருந்தாலும், அது உனக்குப் பிடிக்காவிடினும் கூட என்னை மன்னித்துவிடு’ என்று மனத்துள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவும் தவறவில்லை.

      அடுத்து அவரது பார்வை தம் தோள்களின் மீது விழுந்தது. ‘எவ்வளவு எடுப்பான தோள்கள்! முப்பது முடியுமுன்னமேயே இந்தக் காலத்துப் பயல்களுக்குத் தோள்கள் டொக்கு விழுந்து போகின்றன. நான் அப்படியா இருக்கிறேன்? திருமணம் செய்துகொள்ளுவதற்கு உடம்பு எந்த அளவுக்கு நோய் நொடிப்பு இல்லாமல் இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, வயசு ஒரு கணக்கா!…’ என்று அவர் முனகினார்.

      அவரது பரந்த மார்பும், முண்டாக்கள் திமிறும் கைகளும் அவரது முடிவை வலுவடையச் செய்தன. தமது இளமை மிகுந்த தோற்றம் கொடுத்த தன்னம்பிக்கையில் அவர் சட்டென்று ஒரு வெள்ளைத் தாளையும் பேனாவையும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டு எழுதலானார் – ‘மணமகள் தேவை’ விளம்பரம்.

       ‘ஐம்பது வயசு நடந்து கொண்டிருக்கும் – சுமாரான அந்தஸ்துள்ள ஓர் ஓட்டல் முதலாளிக்கு முப்பதுக்கு மேற்பட்ட – ஆனால் முப்பத்தாறுக்கு மேற்படாத – ஒரு மணமகள் தேவை. விளம்பரம் செய்பவர் மனைவியை இழந்தவர். ஆனால், பிள்ளை-குட்டி இல்லாதவர். ஒரே மகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான். மணமகள் திருமணமாகாதவளாக இருக்க வேண்டும் என்கிற கடாயமில்லை. கைம்பெண்னாகவும் இருக்கலாம்.  ஆனால், குழந்தை-குட்டி இல்லாதவளாக இருத்தல் வேண்டும். குடும்பப் பாங்கும் அடக்கமும் நிறைந்த பெண்ணாக இருப்பது நலம். ஏழைக் குடும்பமாயினும் தேவலை…’ – இவ்வாறு ஒரு நீண்ட விளம்பரத்தை எழுதி அவர் அதைப் பல தடவைகள் படித்துப் படித்துப் பார்த்தார். பிறகு அதை எடுத்துக்கொண்டு நாளேடு ஒன்றின் அலுவலகத்துக்கு நேரில் சென்றார். 

      999 எனும் பெட்டி இலக்கம் அவரது விளம்பரத்துக்கு நாளேட்டு அலுவலகத்தினரால் அளிக்கப்பட்டது. அந்தப் பெட்டியின் இலக்கமிட்டு வரும் பதில்களைப் பதிவுத் தபாலில் அவருக்கு அனுப்பிவைப்பதாக அவர்கள் சொன்னார்கள். அவர் ஏதோ ஒரு பெரிய தேர்வுக்குத் தயாராகும் மாணவனுக்குரிய பரபரப்புடன்  வீட்டுக்குத் திரும்பிவந்தார்.

      சுமார் இரண்டு வாரங்கள் கழிந்ததன்  பிறகு அவர் பெயருக்கு அந்த நாளேட்டிலிருந்து ஒரு பதிவுத்தபால் வந்தது. அவர் பரபரப்புடனும் ஆவலுடனும், அந்தத் தபாலைப் பிரிப்பதற்கு முன்னால், தமது பூசையறைக்குப் போய் முருகனின் படத்துக்கு முன்பு  அதை அப்படியே வைத்துவிட்டு, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். சில கணங்கள் வரை எழாமல அவர்  அவர் அப்படியே கிடந்தார்.

       ‘கடவுளே! இந்த எனது முடிவு எனக்கு நன்மை பயக்க அருள் செய். எஞ்சி நிற்கும் எனது வாணாளை நிம்மதியாய்க் கழிப்பதற்கு ஒத்த மனைவியை எனக்குக் கொடு’ என்று அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். பிறகு அந்தக் கடிதக் கற்றைகள் அடங்கிய உறையைப் பிரித்துவிட்டுச் சாமி படத்தின் முன்னிலையிலேயே அவர் ஆவலாய்ப் படபடத்த இதயத்துடன் உட்கார்ந்தார்.

       முதல் கடிதம் மூணற்றிலிருந்து வந்திருந்தது. அதை மணமாகாத ஒரு பெண் எழுதியிருந்தாள். தன் வயசு பதினேழு என்று அவள் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததுமே கடிதத்தின் எஞ்சிய பகுதியைப் படிக்காமல் அவர் அதை அப்பால் நகர்த்திவைத்தார். ‘பதினேழு-பதினெட்டு வயசுப் பெண் மகள் மாதிரியல்லவா தெரிவாள்? அதைப் பக்கத்தில் நடத்தி வெளியே கூட்டிச் செல்ல முடியுமா என்ன! ‘என்ன, சார்? உங்க மகளா?’ என்று கேட்கிறவர்களுக்குத்தான் பதில் சொல்லி மாளுமா?’

      அடுத்த கடிதம் ஒரு கைம்பெண்ணிடமிருந்து வந்திருந்தது. ஆனால் அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. இரண்டும் பெண்கள். அவள் தன் வயசை முப்பத்து மூன்று என்று தெரிவித்திருந்தாள். குழந்தைகள் உள்ள கைம்பெண்கள் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்கிற நிலையில் அவர் அதையும் அப்பால் தள்ளிவைத்தார். அடுத்த ஏழு கடிதங்களும் கூடக் குழந்தைகள் உள்ள கைம்பெண்களிடமிருந்துதான் வந்திருந்தன. ‘குழந்தை-குட்டிகள் இல்லாதவளாக இருக்க வேண்டும்’ என்று விளம்பரத்தில் அவ்வளவு தெளிவாகத் தாம் குறிப்பிட்டிருந்தும், பெரும்பாலான மனுக்கள் அப்படிப்பட்டவர்களிடமிருந்தே வந்திருந்தது கண்டு அவர் எரிச்சலடைந்தார்.

      அடுத்து அவர் எடுத்த கடிதங்கள் சில மணமாகாத பெண்களிடமிருந்து வந்திருந்தன. ஆனால் எல்லாருமே கிட்டத்தட்டப் பதினேழிலிருந்து இருபத்தைந்துக்கு உட்பட்ட வயதினர்களாகவே இருந்தார்கள் என்கிற நிலையில் அவர் அவற்றையும் ஒதுக்கி வைத்தார். கடைசியில் அவர் எண்னங்களுக்கு ஏற்ப இரண்டே இரண்டு மனுக்கள்தான் எஞ்சின. ஒன்று, வாடிப்பட்டியிலிருந்து வந்திருந்தது. அதை எழுதிய மாலதி என்பவள் தான் குழந்தை-குட்டி இல்லாத விதவை என்று சொல்லியிருந்தாள். ஆனால் அவளுக்கு நாற்பது வயதாம். அவள் தன் வயசைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் படித்ததும் அவருக்குச் சிரிப்பு வந்தது. பெண்கள் உண்மையான வயசைச் சொல்ல மாட்டார்கள் என்பார்களே! இவள் சொல்லிக் கொள்ளுகிற வயசே நாற்பது என்றால் இவளது மெய்யான வயசு நாற்பத்தைந்தாகிலும் இருக்குமே!’ – அவர் ஏமாற்றத்துடன் அதையும் தள்ளினார்.

      முடிவில் ஒரே ஒரு கடிதம்தான் அவருடைய நிபந்தனைகளுக்கு ஒத்ததாக இருந்தது. அந்தக் கடிதம் வசந்தி என்கிற பெண்ணிடமிருந்து வந்திருந்தது. மதுரையிலிருந்து அதை அவள் எழுதியிருந்தாள். அவளுக்கு இருபத்தொன்பது வயசு ஆகிறதாம். அவள் மிக நீண்ட கடிதம் எழுதியிருந்தாள். அதன் சில பகுதிகளை அவர் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார்.

      …. ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் என் கணவர் இறந்துவிட்டார். அதிலிருந்து நான் என் தகப்பனாருடன் வசித்து வரலானேன். ஆனால், என் தகப்பனார் கடந்த ஆண்டு இறைவன் திருவடி சேர்ந்தார். நான் அதிகம் படித்தவள் அல்லேன். எட்டாம் வகுப்பு வரையில்தான் படித்துள்ளேன். எனக்கென்று சொத்து எதுவும் இல்லை. என் தகப்பனாரும் மிகவும் ஏழை என்பதால், அவர் இறந்ததன் பிறகு நான் – சுருக்கமாக ஒரே சொல்லில் கூற வேண்டுமானால் – அநாதையானேன். எனக்கென்று இந்த உலகத்தில் யாருமே இல்லை. நான்கு வீடுகளில் பத்துப் பாத்திரங்கள் கழுவும் வேலையை அன்றிலிருந்து செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறிய வீட்டில் – என் தகப்பனார் வாழ்ந்து வந்த வீடுதான் அது – குறைந்த வாடகையில் வசித்து வருகிறேன். நான் அழகானவள். இளமை நிறைந்தவள். தனியாக வசிப்பவள். இதனால் நான் பல தொல்லைகளுக்கு ஆளாகிறேன். சுற்றிலும் உள்ள பொறுப்பற்ற காளைகள் அடிக்கடி எனக்குக் கடிதங்கள் எழுதித் தொந்தரவு கொடுக்கிறார்கள்.

      தெருவில் நடந்து செல்லுகையில் கண்டபடி பேசி என்னை வம்புக்கு இழுக்கிறார்கள். காலிகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் நான் என் மிக நல்ல எசமானி ஒருத்தியிடம் என் தொல்லைகளைப் பற்றி கூறி அவள் வீட்டிலேயே இரவு நேரத்தைக் கழிக்க அனுமதி பெற்றேன். ஆனால் அவள் கணவர் என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்று தெய்வாதீனமாகத் தப்பினேன். அதற்குப் பிறகு, கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, என் வீட்டிலேயே வசித்து வருகிறேன். எந்த நேரத்தில் என் கற்புக்கு என்ன விதமான தீங்கு நேரும் என்று சொல்ல முடியாது. எதுவும் நேரலாம். அப்படி ஏதாவது நேர்ந்தால் என்னால் தாங்க முடியாது. அதை நினைத்துவிட்டாலே எனக்குக் குடலைக் குமட்டிக்கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் விதவைகளுக்குப் பாதுகாப்பு இருந்தது. பெண்கள் வெளியே வராமல் இருந்தார்கள். அவர்களது கற்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளும் குறைவாகவே இருந்தன.  அவர்களுக்குச் சோறு போட்டுப் பராமரிக்கும் கடமையை மனிதர்கள் மகிழ்ச்சியோடு செய்தார்கள். அதனால், மறுமணம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும் தேவை அவ்வளவாக அவர்களுக்கு இல்லாதிருந்தது.

      ஆனால், இந்த நாளில் பெற்ற தாய், தகப்பனுக்குக்கூடப் பிள்ளைகள் சோறு போடுவதில்லை. அவர்களைச் சுமையாகக் கருதுகிறார்கள். இந்த நிலையில், ஆதரவற்றுப் போன கைம்பெண்களை வைத்து எந்த உறவினன் காப்பாற்றுவான்?  இதனால் பலதரப்பட்ட ஆண்களின் கண்களுக்கு அவள் நிரந்தரமான இரையாகிப்போகும் துர்ப்பாக்கியத்துக்கு ஆளாகிறாள். அவள் கைம்பெண் என்பது தெரிந்துவிட்டாலோ, தீர்ந்தது. நல்லவர்கள் கூட அவளிடம் வாலாட்டிப் பார்க்க முற்படுகிறார்கள். அவளது மன வலிமையைச் சோதிக்கும் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவளது வலிமை, கட்டுப்பாடு இவற்றை யெல்லாம் மீறி அவளை வலுக்கட்டாயக் கற்பழிப்புக்கு ஆட்படுத்தும் அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகளையும் அவள் அடிக்கடி காண்கிறாள். இதனால், தாலி கட்டித் தன்னோடு வாழ்ந்த கணவனுக்குத் துரோகம் செய்யும் நினைப்பு அவளிடம் ஏற்படாவிடினும் கூட, காலிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளுவதற்காகவேனும் ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு அவள் துரத்தப்படுகிறாள். இதனால், என்னைப் போன்ற அநாதைக் கைம்பெண்கள் மறுபடியும் மணந்துகொள்ளுவது தவறு என்று எனக்குத் தோன்றவே இல்லை. ஒரு காலத்தில் அது மாபெரும் தவறு – பாவம் – என்றெல்லாம் கூட நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால், தன்னந்தனியாக வாழத் தொடங்கிய பிறகு – வேறு காரணங்கள் இருப்பினும் இல்லாவிடினும் – தன் பாதுகாப்பைக் கருதியாவது அவள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் இந்த மனுவை இப்போது அனுப்புவதற்கு இதுதான் காரணம்.

      காரணம் எதுவானாலும், நான் ஓர் உண்மை மனைவியாக இருப்பேன்….’

      கடிதத்தில் இழையோடிய வெள்ளைத்தனம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கைம்பெண்களின் மறுமணத்தைப் பற்றி அவரை வெகுவாகச் சிந்திக்கவும் வைத்தது அந்தக் கடிதம். அவர் தமக்குள் பெருமூச்சு விட்டபடி கடிதத்தை மடித்துப் பத்திரமாகத் தம் கோட்டுப் பையினுள் வைத்துக்கொண்டு தூங்கப் போனார்.

      மறு நாள் காலை எழுந்ததும், முதல் வேலையாக மறு நாள் புறப்பட்டுச் சனியன்று மதுரைக்கு வருவதாக அவர் தம் முகவரியுடன் அந்தப் பெண்ணுக்குப் பதில் போட்டார். நேரில் ஒருவரையொருவர் பார்த்துவிடுவது நல்லதென்றும் அதற்காகவே தாம் வருவதாகவும் குறிப்பிட்டார்.

      … மதுரைக்கு வந்து சேர்ந்ததும், அவர் ஓர் ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டு, குளித்துச் சாப்பிட்டு, உடுத்துக்கொண்டு வசந்தி என்கிற அந்தப் பெண்ணின் முகவரியைத் தேடிக்கொண்டு போனார். ஆனால், அந்தச் சிறிய வீடு அவர் அங்கே சென்ற போது பூட்டிக்கிடந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தார். வலப்பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி ஒருத்தி அவள் வேலைக்குப் புறப்பட்டுப் போயிருப்பதாகவும், மாலை ஏழரை மணிக்குத்தான் திரும்பிவருவாள் என்றும் தகவல் தெரிவித்தாள். ஒருகால் தம் கடிதம் அவள் கைக்குச் சேர்ந்திருக்காதோ என்று அவர் ஐயமுற்றார். என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு அவர் சில கணங்கள் நின்றார். அப்போது எதிர் வீட்டிலிருந்து ஓடிவந்து அவருக்கு எதிரில் நின்ற ஒரு சிறுமி,  “நீங்கள்தானே சோமையா என்பவர்?” என்ற கேட்டாள். அவர் ஆவலும் பரபரப்பும் போட்டியிடும் உள்ளத்துடன் தலையசைத்து ஆமோதித்தார்.

       “வசந்தி அக்கா உங்களிடம் இந்தக் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னது,” என்ற அந்தச் சிறுமி ஓர் உறையை அவர் கையில் கொடுத்துவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள். கடிதத்தைத் தெருவில் நின்றபடி பிரித்துப் படிக்க மனமில்லாமல் அவர் தம் ஓட்டல் அறைக்குத் திரும்பினார்.

      வரும் வழியெல்லாம் அவர் அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருப்பாள் அந்தப் பெண் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். கடிதத்தில் என்னென்ன விஷயங்கள் அடங்கியிருக்கும் என்பதை முழுக்க முழுக்க அவரால் ஊகிக்க முடியாவிட்டாலும் கூட, அவருக்கு ஒன்று மட்டும் தெளிவாக உள்ளுணர்வாய்ப் பட்டுவிட்டது. அது, வசந்தி தன் மனத்தை மாற்றிக்கொண்டு மறுதலித்து எழுதியிருப்பாள் என்பதுதான். கடிதத்தைப் பிரித்துப் படிப்பதற்கு முன்பே அவருக்குச் சப்பென்றாகி விட்டது. மனம் சோர்வுற்றது.

       ‘சே. இந்தப் பெண்களே இப்படித்தான். கோழைகள்!…’ என்று அவர் அலுப்புடனும் சொல்ல முடியாத ஏமாற்றத்துடனும் முணுமுணுத்துக் கொண்டார். அறைக்கு வந்து சேர்ந்ததும், தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தார். குடிநீர் பருகிவிட்டு நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்த பின்னர் அவர் மெதுவாக அவ்வுறையைப் பிரித்தார்.

       ‘அன்புள்ள மாமா அவர்களுக்கு’ என்று கடிதம் தொடங்கப் பட்டிருந்ததைக் கண்டதும், அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். தம் மருமகளின் பெயரும் வசந்திதான் என்பது அப்போதுதான் ஞானோதயம் போல் அவர் ஞாபகத்துக்கு வந்தது. ‘எத்தனையோ வசந்திகள் இருக்கும் நிலையில், தம் மருமகளின் கையெழுத்தைப் பார்த்தறியாத அவர் – அவள் தன் தகப்பனாருடன்  திண்டுக்கல்லில்தான் வாழ்ந்து வந்தாள் என்பது வரையில் அறிந்திருந்த அவர் – அதை எழுதியவள் தம் மருமகளா யிருப்பாளோ என்று நினைத்துப் பாராததில் வியப்பதற்கு ஒன்றுமில்லைதான். கடிதத்தைப் பற்றி இருந்த அவர் விரல்கள் சற்று ஆடின. அவர் சமாளித்துக்கொண்டு கடிதத்தைப் படிக்கலானார்.                                                                                     ‘உங்களை நேரில் சந்திக்கும் துணிவு இல்லாமல் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விளம்பரம் செய்தவர் நீங்கள் என்பது முதலில் எனக்கு எப்படித் தெரியும்? அல்லது பதில் எழுதிய பெண் மருமகள் வசந்தியாகத்தான் இருக்கும் என்பதுதான் உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒருகால் நான் திண்டுக்கல் விலாசம் எழுதியிருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள். அப்பாவும் நானும் இங்கே வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அப்பா இறந்து போனதைப் பற்றியும், மற்றவற்றைப் பற்றியும் எனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன். … மாமா! உங்கள் மகனுக்குத் துரோகம் நினைத்த இந்தப் பாவியை மன்னித்துவிடுங்கள். … உங்கள் முகத்தில் விழிக்க எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து போய்விடுங்கள்….’

      கொஞ்ச நேரம் வரையில் அவருக்கு ஒன்றும்  ஓடவில்லை. பின்னர் அவர் ஒரு முடிவுடன் எழுந்தார்.

          இருபத்தொன்பது வயதான குழந்தையற்ற – ஓர் அழகான கைம்பெண்ணை மணக்க, முப்பதுக்கு மேல் நாற்பதுக்குட்பட்ட, மனைவியை இழந்தவரோ அல்லது மணமாகாதவரோ தேவை’ எனும் விளம்பரத்தை நாளேடுகளில் கொடுக்கும் முடிவுடன்தான்.

…….

Series Navigationபிழிவுநடந்தாய் வாழி, காவேரி – 3
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *