துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்

This entry is part 31 of 33 in the series 19 மே 2013

 

* திண்ணையில் பல ஆண்டுகள்  தொடராக வந்த நாவல்

—————————————-

 கமலும், இரா முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபித்திருக்கிறார்கள்.கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா.மு எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்த முறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன் வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் ( 1889 – 1939 ) 50க்கும்மேற்பட்ட  பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார்.ஆனால் அவை பெருங்கதையாடலை தகர்க்கும் சிறுகதையாடல்களாக புது வடிவம் காட்டி அமைந்திருக்கின்றன.

வாழ்க்கையைச் சுழிப்பிற்குள்ளாக்குகிற அம்சங்களாய் உடல் சார்ந்த காமப்பசியும் அதில் மெருகேறிய சிருங்கார வாழ்வும், வயிற்றுப்பசியின் மேலீட்டலிலான விதவிதமான சமையல் குறிப்புகளும் சாதாரண வாழ்க்கையில் மேலிடுகிற விசயங்களை  தொட்டுக்காட்டுகின்றன.ஒவ்வொருவரின் மனசும்  வகை வகையாய்  குறக்களி காட்டுகிறது

” ஸ்வாமி ஷமிக்கணும்.ஒரு பிடி அன்னம். அது இல்லையா. பிட்டு, இட்டலி, உப்பிட்டு விடிகாலையில்  உண்டாக்கிய ஏதாவது இருந்தாலும் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.வெட்கத்தை விட்டு யாசிக்கிறேன். உங்க்கிட்டையும் அண்ணாகிட்டையும் கேட்க எதுக்கு வெடக்ப்படணும்.தயவு செய்ய்யுங்கோ. கூட மாட இங்கே பணி எடுக்கிறேன்.  பசி தாளலே. போஜனம் மாத்திரம் போதும்”   என்ற குரலை எங்கும் காணமுடிகிறது.,    ” ஸ்த்ரி சக்வாசமே இல்லாத பூமி ஏதாவது இருந்தால் முதல் காரியமாக அங்கே ஜாகை மாற்றிக் கொள். முடியாத பட்சத்தில் காலாகாலத்தில் உன் மனசுக்குப் பிடித்த கன்யகை யாரையாவது கல்யாணம் பண்ணி உடம்பில் உயிர் இருக்கிற காலம் வரை அவளுக்கு விசுவாசமாக இருந்து உய்யும் வழியை மேற்கொள்வது உசிதம் “  இப்படி அரற்ற வைக்கிறது. இப்படியும்  ” இப்படி மனுஷத்துவம் கிஞ்சித்தும் இல்லாமல் நான் போன மாயம் என்ன என்று அதிர்ந்து போய் எல்லாத்திலிருந்தும் விலகி நின்று நான் பார்க்கிறேன்”

இப்படி  துவைத, அத்வைதப்பார்வைகள்.

50க்கும்  மேற்பட்டப்பாத்திரங்க்ளை மையம் தவிர்த்தவர்களாக காட்டும் செயலும், மாந்திரீக யதார்த அம்சங்களும் இதை பின்நவீனத்துவம்சங்களைக் கொண்டதாக்குகிறது. ஆனால் மகாலிங்கய்யன் என்கிறவன் ஏதோ ஒருவகையில் எழுத்தாளன் என்பதால் விஸ்வரூபித்து  முன் நிற்கிறான்.   கருப்புப் பட்டணம் பொடிக்கடையில் உத்யோக  நேரம் போக தங்க சாலை பள்ளிக்கூட தமிழ் வித்வானும்  இளம் பிராய சினேகிதனுமான செங்கல்வராய முதலியோடு நூறு இருநூறு வருஷம் முற்பட்ட தமிழ் கிரந்தங்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை பரிசோதனை செய்து அவற்றைப் புஸ்தகமாக்க அச்சு யந்திரத்தில் ஏற்றுகிற காரியத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தவன்.   திருக்கழுக்குன்றத்தில் ஒரு பெண்ணின் மீது மையலுற்று அவள் சாவு அவனை சிறைகு அனுப்பி பாண்டிச்சேரிக்கு துரத்தி கப்பல ஏற வைத்து கரும்பு தேசத்தில் ஹெட்மஸ்தூராக வேலை பார்க்க வைக்கிறது.  லண்டன் வழியாக ஊர் வந்து சேர ஆசைப்படுபவன் அங்கேயும் பழிகாரணமாக சிறைக்குப் போகிறான். சென்னை திரும்ம்பி வந்து தன் மூலத்தை தேடி அலைகிற  போது அவனுக்கும் 70 ஆகி விடுகிறது.

 

 ஆண்பெண் கலவி அம்சம் குறித்து வழமையான விசயங்களில் சிந்திப்பவரல்ல இரா.மு. முன் காலத்திய நடைமுறை அம்சங்களை கைக்கொள்ளாமல் இயல்பான விசயமாகச் சித்தரிப்பவர்.  பிறருக்கு அது பிறழ்வாகக் கூடப் படலாம். ஆனால் அந்தப் பிறழ்வை சரியாகச் சித்தரிப்பதில் அக்கறை கொண்டிருப்பவர். அந்த அக்கறைதான் இந்த நாவலில் பிறழ்வுகள் பக்கம் எதேச்சையாய் நிற்கிற  மனிதர்களின் புலம்பலை சரியாகச் சொல்லியிருக்கிறது.சமையல் சார்ந்த விபரமான குறிப்புகள் விரவிக்கிடக்கின்றன. மையல் சார்ந்த சுவாரஸ்யமான வர்ணனைகளுக்கும் பஞ்சமேயில்லை.

ஆறு விரல்கள்காரனான வேத பாடசாலை உபாத்தியாயன் வேதய்யனுக்கு அவனின் ஆறு விரல் உறுத்தலாகவே அமைந்து விடுகிறது.  மகாலிங்கய்யனுக்கு  ஆறாவது விரல் படைப்பாகிறது. பொடிக்கடை வேலை செய்கிறவனாக இருந்தாலும் செங்கல்வராய முதலியோடு   கூட சேர்ந்து புத்தகப்பதிப்பில் ஈடுபடுகிறவன். பாட்டு எழுதும்போது சுக்கிலம் வெளிப்பட்டு அவனை கனவு பங்காருவிடமும், தெலுங்கு தாசி இடமும் துரத்தி இன்பம் கொள்ள வைக்கிறது.வரத ராஜிலு ரெட்டி,  சாமி பெயரிலும் பின்னர் வெவ்வேறு ஊர்களில் நடமாட  வேண்டியிருக்கிறது.அனேகம் பேருக்கு கடிதங்கள் வாழ்க்கை முழுவது எழுதிக் கொண்டிருப்பவன், மனைவிக்கு, பெற்றோர்க்கு, மகனுக்கு, கவர்னர் சமூகத்திற்கு என்று. “ ஸ்திரி சம்போகத்திலும் ஜெயிலிலும் பிச்சை எடுப்பதிலும் தெய்வம் தொடங்கி நான் தெண்டனிட  வேண்டிய, பிரியம் காட்ட விதிக்கப்பட்ட, இக்கிணியூண்டாவது எனக்கு வேண்டப்பட்டவர்களாக நான் நினைக்கிற மனுஷ்ர்கள் வரை அனேகம் பேருக்குக் கடுதாசி எழுதியும் ஒரு ஜிவீய காலம் முழுசையும் போக்கினவன் “  சிறைக்குப் போய் விட்டு வந்து ஊருக்குப் போகப் பிடிக்காமல் பாண்டிச்சேரி வழியாக கப்பலேறி கரும்பு தேசத்தில் ஹெட்மஸ்தூர் வேலை பார்த்து அதிகாரம் பண்ணி, களவாணியாகி  யுத்தத்தில் மாட்டி சென்னை போக கப்பல ஏறி லண்டன் வந்து கரை சேருகிறவன்.

விஸ்வரூபமாய் தென்படும்  இன்னொரு கதாபாத்திரம் தெரிசா.பிராமணப் பெண்ணாய் பிறந்து வளர்ந்தவள் கிறிஸ்துவ  தேவ ஊழியத்திற்காக லண்டன் போகிறவள் பிராமன் ரோமன் க்த்தோலிக்க ஸ்திரி பிறகு புராட்டஸ்டேண்டுக்கு மாறியவள். மதறாஸ் சர்வகலா சாலையில் இங்கிலீஸ்காரன் பீட்டரைச் சந்தித்து கணவனாக்கிக் கொண்டு அவன்  பிரஞ்ச்  தேச யுத்தத்திற்கு போய் விட்டு வர, அவளின் வேலைக்காரப் பெண்ணின் கணவனால் கொல்லப்படுகிறவன்.வேதய்யன் ஆறு விரல்காரன் என்றால் திருட்டிலும் கொலையிலும் ஈடுபடும் ஜேம்ஸ் ஒற்றைக்கையன்.

 

பிராமணர்களைப் பற்றிய சித்தரிப்பில் தேர்ந்த நுணுக்கம் தென்படுகிறது.வேதம் கற்பிப்பவன் என்றாலும் பூணூல் போடாமல் இருக்கிறான் வேதய்யன்.” வேதத்தில் ஏறிய பிராமணனுக்கு என்னத்துக்குங்காணும் நூலும் மற்றதும்”

மலையாளிகளின் பார்வையில் தமிழர்கள் பற்றிய கிண்டல்கள் விரவிக் கிடக்கிறது.பாண்டி பாண்டி என்று கூவுகிறது.பாண்டித்தமிழ் புரியாத  பாஷை என்றாகிறது.காலம் பற்றிய நுணுக்கமான குறிப்புகள் அங்கங்கே விரவிக்கிடக்கிறது.காலம் முன்னும் பின்னுமாக நகர்ந்து  பல கண்ணிகளை ரகசியக்குறிப்புகளுடன் வெளியிடுகிறது.

குழந்தையில்லாத பலதம்பதிகள் நாவலில் காணப்படுகிறார்கள் மகாலிங்கய்யன், நடேசன், தெரசா என்று… காலம் நாற்பதிற்கும் முற்பட்ட்து என்பதால் கற்பனைத்தே தீர வேண்டிய காலம் என்பதை இந்நாவலில் சிரமப்பட்டு  கொண்டு வந்திருப்பதற்கு பாராட்ட வேண்டும்.நாவலின் காலம் பற்றிய குறிப்புகள் நுணுக்கமாக பல இடங்களில் விரவிக்கிடக்கின்றன.

 

மனசு எப்படி எல்லாமோ குறக்களி காட்டி மாந்திரிக யதார்த்த்தோடு விளையாடி ஊடும் பாவுமாய் இந்நாவலில் அமைந்திருப்பது முக்கிய அம்சமாகிறது.. வடிவ நேர்த்திக்காக கையாளப்படும் அம்சங்கள் விதவிதமாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கடிதங்கள்,  பத்திரிக்கையாளர்களின் குறிப்புகள்( ஸ்காட்லாண்ட் பாலம் அமைப்புப் பணியில் இளவரசன் எட்வர்ட் பயணமும் அதை பத்த்ரிக்கை செதுக்கும் முறைகளும்) இன்னும் சுவாரஸ்படுத்துகின்றன. பழகியவர்களும் செத்துப்போனவர்களும் திடுமென வந்து விளையாட்டு காட்டுகிறார்கள். ஆவிகளோடு பலர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். லண்டனில் ஆவிகள் உலாவும் இடத்திற்கும் சுற்றுலா  போகிறார்கள். இது மாயா தத்துவத்திற்கும் கடைசியில் காசிக்கும் எல்லோரையும் தள்ளிக்கொண்டு போகிறது.மகாலிங்கய்யனை கடிதங்களில்  புலம்ப வைக்கிறது.” மாந்திரீக யதார்த்தவாதத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ, மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்றே போதும் “ என்கிறது நாவலின் பின் அட்டைக்குறிப்பு.

மகாலிங்கய்யன் தறி கெட்டு ஓடுவதில் மதராஸ் பட்டணம், புத்ச்சேரி, கரும்புப்பிரதேசம், லண்டன், கேரளா என்று திரிகிறதற்காக வலிந்து அலைக்கழிக்கப்படுவதாகவே தோன்ற வைத்து விடுகிறது. பாலியலும் உறவுகளிலும் ஓரினப்புணர்வு முதல், சேர்ந்து வாழும் நபர்கள் வரை வகைவகையாய் காட்டப்படிருக்கிறது

 

    கேரள பிராமணியமும், கிறிஸ்துவமும் ஒன்றாக ஊடாடி நாவல் முழுக்க அலைகிறது.  அது சார்ந்த  மொழியும் கலாச்சார அம்சங்களும் கொண்டு நிறுவப்பட்டிருக்கிறது. அதற்காய் உபயோகப்படுத்தப்படும் மொழியில் கலப்படம் சுலபமாக உலாவி வாசிக்கும்தமிழ் உணர்வாளர்களை சங்கடப்படுத்துடுகிறது. நவீன மொழிப் பயன்பாட்டில் கலப்படம் உச்சதிற்குப் போய் விடுகிறது.

இதில் தென்படும் பெண் படிமங்கள் உண்மையானதாகவும்   கனவாகவும் இருக்கிறது.  இந்திய சமூகத்தின்  அந்த காலமதிப்பீடுகளை பிரதிபலிக்கக் கூடியவை என்றாலும் அய்ம்பது ஆண்டுகள் கழித்து இன்னும் அதே போல்  நிலைத்து விட்டதையும்  காணலாம். அவர்கள் என்றைக்குமான சமூக இருப்பை கண்டடைய இந்நாவலின் மூலமும் வகை செய்வதை இரா.மு. இந்நாவலில் நிறுவியிருக்கிறார். குறிப்பிடத்தக்கதான் இரா.மு.னின் முந்திய நாவல்கள் மூன்று விரல், அரசூர் வம்சம்  போன்று வெகு கவனத்தில் கொள்ளும்படியானது இந்த நாவல் ..குடும்ப அமைப்பில் இருந்து துண்டாடப்பட்ட மனிதர்களின் தனிமை உலகங்களை விசுவரூபித்துக்காட்டுகிறது.

   ஒரு பக்கத்திற்கு ரு1.50 எனக்கணக்கிட்டு வெளிவரும் தமிழ் நவீன இலக்கிய நூல்கள் வாசகர்களிடமிருந்து  விலை காரணமாக வாங்க இயலாமல் அந்நியமாகி நிறுத்தும் சூழலில் 800 பக்க நாவலை மலிவாக 400 ரூபாய்க்கு கிழக்குப் பதிப்பகம்    ( அதிலும் 10-20% கழிவு வாங்கி விட வாய்ப்பு உள்ளது ) வெளியிட்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.


சுப்ரபாரதிமணியன்  , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602   *9486101003

09486101003 /

Series Navigationமுற்பகல் செய்யின்…….என்னால் எழுத முடியவில்லை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *