துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்

 

1.

நானொரு கப்பற்படை மாலுமி

எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள்

பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன

எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன்

என்னை நீங்கள் நம்பாவிடில்

எனது ஆடைகளைப் பாருங்கள்

 

உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும்

எந்த வித்தியாசமுமில்லையென்பதால்

நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர்.

முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம்

தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து

கதவுகளுக்கு வெளியே உள்ளோம்

 

அத்தோடு இன்னுமொருவர் கூறினார்

அவர்களை நம்பாதீர்

அவர்கள் பொய்யர்கள்

நாம் உயிர் வாழவில்லை

 

2.

எனதறைக்குள் எளிதாக நுழைவதற்காக

அவர்கள் இறந்த உறவுகளின் வடிவத்தில் வருகிறார்கள்

அவர் ஒரு தடவை கதைக்கையில்

அவர் மாமா ஒருவரா அல்லது சகோதரனொருவனா என நான் பார்க்கிறேன்

அவரொரு காவற்துறை அதிகாரியென நான் காண்கிறேன்

 

ஐந்து வயதேயானவோர் மகள் இருந்தாள் எனக்கு.

இறந்து விட்ட அவளும் நானும் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம்

வார்சா நகரின் பின்னால் தனது

கரங்களை விட்டு வந்திருக்கும் அவளால்

அசைய இயலாதாகையால் வெறுப்படைந்திருக்கிறாள்

 

ஒரு குரல் சொல்கிறது

மண்ணைக் கிளறியெடுக்க எந்த உருளைக் கிழங்குகளும் இல்லை

உடைப்பதற்கு எந்தக் கற்களும் இல்லை

சந்தைக்குக் கொண்டு செல்ல எந்தச் சுமையும் இல்லை

நானிங்கு அமைதியாக உள்ளேன்

 

ஒருவன் தனது மனைவி குறித்து கவலையுற்றிருக்கிறான்

வீட்டின் தகவல்களை அவன் என்னிடம் கேட்கிறான்

 

நான் மரணித்தபோது

அவர்கள் எனது மிகச் சிறந்த மேலங்கியைக் கைப்பற்றிக் கொண்டனர்

எனக்குக் குளிராக இருக்கிறது

குளிர்காலம் முன்னால் வருகிறது

 

பின்னர் அவர்கள் ஒன்றாகக் கதைத்தனர்

 

3.

“நாம் ஒரு குவளையிலிருந்து நீரருந்துகிறோம்

மாலைவேளைகளில் ஒன்றாக உணவு உண்கிறோம்

எமது அன்பிற்குரியவர் மீது யாருடைய நேசமோ இருக்கிறது

யாருக்கோ எமது தாய்மாரினால் சீராட்டி வளர்க்கப்படத் தேவையாக இருக்கிறது”

 

எமது படகுத் துறைகளுக்கு அவர்கள் கண்டபடி வந்து செல்கின்றனர்

ட்ராம் வண்டிகளில் எமக்கிடையே அவர்கள் நுழைகின்றனர்

அவர்கள் நம்மை விட்டு ஒருபோதும் செல்வதில்லையெனத் தெரிகிறது

மீண்டுமொரு நீண்ட காலம் வாழும் தேவை அவர்களுக்கிருக்கிறது

 

– ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை)

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

Series Navigationவேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)ஈழத்து மறைந்த அறிஞர்களைப்பற்றிய கட்டுரைகளின்தொகுப்பு