துருக்கி பயணம்-4

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-29

நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த இரண்டு நாட்களும் உன்னதமானவை. ஒவ்வொரு தருணமும் பல்வேறு காட்சிகளை ஓயாமல் அடுகடுக்காய் அறிமுகப்படுத்திற்று எனலாம். இவற்றை ஏற்கனவே இன்னொரு நாட்டில் வேறொரு பிரதேசத்தில் கண்டிருக்கிறேனென ஒப்புமைபடுத்தவியலாத காட்சிகள். கப்படோஸ் பிரதேசத்திலிருந்த மூன்று நாட்களும் உக்ருப் (Ugrup) என்ற நகருக்கருகே தங்கினோம்.

காலையில் எங்களுடன் நட்பு பாராட்டிய டாக்டர் தம்பதியருள் பெண்மணிக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவ குடும்பமென்றதால்,  அதனை எதிர்கொள்ளும் மனத் திட்பம் அவர்களிடமிருந்தது. அதாவது மனத் திட்பம் மட்டுமே இருந்தது. அதன் விளைவாக அன்றைய பொழுதைப் பெண்மணி ஓட்டல் அறையிலேயே கழிக்கவேண்டியிருந்தது. முதல் நாள் பேருந்தில் வரும்போது, எங்கள் வழிகாட்டி பலூனில் பறக்க விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளாலாமென தெரிவித்திருந்தார். அதற்கான கட்டணம் தனி. நபரொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு 250 யூரோவென்றார்கள். என் மனைவிக்கு விருப்பமில்லாததால் தவிர்க்கவேண்டியிருந்தது. அதுவும் தவிர முதல் நாள் பலூனில் பறப்பதைப்பற்றி எங்கள் வழிகாட்டி கூறும்போது வானிலை வேறு மோசமாக இருந்தது. எங்கள் குழுவிலிருந்த 30பேரில் பறப்பதற்கு பதிவு செய்துகொண்டதென்னவோ ஒரேயொரு ஜோடிதான். காலையில் பேருந்தில் புறப்படுவதற்கு முன்பாக அவர்கள் பலூனில் பறப்பதென்று ஏற்பாடு. பலூனில் பறப்பதென்று முடிவெடுத்த ஜோடியில் பெண்மணியைப் பார்த்துப் பயந்தது நிஜம். எனக்காக அல்ல. அவரது கனவருக்காக. கணவரை பலூனிலிருந்து தள்ளிவிடுவதற்காகவே பதிவு செய்திருப்பாரோ என்பதைப்போல பெண்மணியின் தோற்றம். பேருந்தில் ஏறியபோது அந்தஜோடி பேருந்தில் ஏறுகிறதா என்று பார்த்துக்கொண்டேன். .

கப்படோஸ் ஓர் அதிசயப்பிரதேசம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு: எரிமலை வெடிப்பு, உறைநிலைக்கு கீழான வெப்பம், குளிர்காலங்களில் கடுமையான பனிப்பொழிவு, ஹோவென்று சுற்றி சுழன்று அடிக்கும் (‘தெர்விஷ்?) காற்று ஆகிய நான்கும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஓர் விநோதமான இயற்கை காட்சியை செதுக்கியுள்ளன. விநோதமான சிற்பங்கள். தாதாயிஸமும், மீயெதார்த்தமும் அன்றே ஒத்திகைக்குப் பழகிக்கொண்டதுபோல. முகமற்ற விண்ணுலக மாந்தர்கள் பூமியில் கால பதித்ததும் சிலையாகக் கடவது என சாபமிட்டதுபோல அடுக்கடுக்காக நிற்கிறார்கள். அதுமாத்திரமல்ல வேறொரு அதிசயமும் உண்டு பிரதேசமெங்கும் மலையைக் குடைந்தும், பூமியின் கீழும் இன்றைக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஓட்டல்கள், ரெஸ்ட்டாரெண்டுகள். கேளிக்கை விடுதிகள்,குடியிருப்புகள் இருக்கின்றன. கப்படோஸ் வரலாற்றில் ஆசிய ஐரோப்பிய பெரு நாகரீகங்கள் தங்கள் தடங்களைப் பதித்துள்ளன. எல்லா மனிதர்களும் வந்துபோயிருக்கிறார்கள்.

துறவிகள் பள்ளதாக்கு- Monks’ Valley: ஆறாம் நூற்றாண்டில் முதன்முதலாக கிறித்துவர்கள் கப்படோஸில் மலைகளைக் குடைந்தும் பூமிக்கும் கீழும் வாழ்ந்த இடம். அப்படி வாழ்வது அவர்களுக்கு இயற்கையிடமிருந்துமட்டுமல்ல பிற மதத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவியிருக்கிறது.  மூன்றாவதாக நாங்கள் சென்று பார்த்தது முஸ்தாபாபாசா (Mustapapasa) என்ற சற்றே பெரிய கிராமம் அல்லது மிகச்சிறியதொரு நகரம். 1923 வரை கிரேக்கர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சினோசா எனும் சிறு நகரம் இங்கும் பண்டைய கிரேக்கவீடுகளுக்கிடையில் நடந்து சென்றோம்.

மாலை ஆறுமணிக்கு ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம். இன்றிரவு ‘செமா’ என அழைக்கப்படும் The whirling Dervish நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துக்கொண்டு பேருந்துக்குள் தயாராக இருக்கவேண்டுமெனச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய கட்டுரையில் இச்சுழல் நடனத்தின் நதிமூலத்தை தெரிவித்திருந்தேன்.

மெவ்லானா செலாலெதின் (1207-1273) கற்பனையில் உதித்த இச்சடங்கில் துருக்கியரின் மரபு, நம்பிக்கை, வரலாறு, பண்பாடு என நான்கும் கலந்திருக்கின்றன. இச்’செமா'(Sema) ஏழு பகுதிகள் கொண்ட ஒருவகையான மறைஞானப் பயணம். நவீன விஞ்ஞானம் தெரிவித்ததைத்தான் அன்றே மெவ்லான ‘செமா’ மூலமாக மெய்பித்திருக்கிறார். அதாவது உலகத்தின் இருப்பு தன்னைத்தானே சுற்றும் இயல்புசார்ந்தது. இப்படி சுற்றாத பொருளோ அல்லது உயிரியோ உலகில் எதுவுமில்லை. அது கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்கிறது. எலெக்ட்ரான் புரோட்டானும் அணுக்களில் ஆரம்பித்து கிரகங்கள் வரை இந்த அற்புத நிகழ்வை நடத்துகின்றன. இதில் நாமும் ஓர் அங்கம். மனித உடலில் இரத்த சுழற்சியும் பிறவும் இதற்கு சாட்சி. மண்ணிற் தோன்றி மண்ணில் மறையும் மனிதன் பிறப்பு இறப்புங்கூட இதனையே தெரிவில்லிறது. ‘செமா’ ஊடாக மனிதன் தனது தன்முனைப்பை துண்டித்துக்கொண்டு அன்பூடாக சத்தியத்தை எட்டுகிறான். தெர்விஷ் கலைஞர்கள் அணியும் தலைப்பாகை அல்லது தொப்பி கல்லறையின் குறியீடு, அவர்களுடைய வெள்ளை அங்கி சவத்தை மூட உதவும் துணியின்குறியீடு சுற்றுகிறபோது இடது கை பூமிக்கும் வலதுகை வானத்தை நோக்கியும் விரிகிறது. இறைவன் அருளைவேண்டி இதயத்தை சுற்றிவருவது செமா என்கிறார்கள். மொத்தம் 7 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். முதலில் முகம்மது நபியின் பெருமையைச்சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்கள், அடுத்து தோலிசைக்கருவிகொண்டு சத்தமெழுப்புகிறார்கள், பிறகு வயலின் போன்றவாத்திய இசைக்கருவி தொடருகிறது. உயியின் முதல் மூச்சை அது வழங்குகிறதாம். நான்கவதாக டெர்விஷ்கள் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்கிறார்கள். பிறகு ஒரு வட்டமாக நடக்கத் தொடங்குகின்றனர். ஐந்தவதாக சுற்றத் தொடங்குகிறார்கள். இறுதியில் எட்டும் உச்சநிலையை பௌத்தம் நிர்வானா என்பதைப்போல, தெரிஷ்கள் ·பெனபில்லா (Fenafillah) என்கிறார்கள் அதாவது முழுமையான சரணாகதி.   எங்கள் ஓட்டலிருந்து வெகு அண்மையில் ஒரு நிலவறை மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, மேடை நடுவிலிருக்க பார்வையாளர்கள் சுற்றி உட்காரவைக்கப்பட்டிருந்தோம். அவர்கள் சுற்றுகிறபோது பல நேரங்களில் சுற்றுவது அவர்களா நாமா என்ற கேள்வியை தவிர்க்க முடிவதில்லை.

(தொடரும்)

Series Navigationகேரளாவின் வன்முறை அரசியல்அத்திப்பழம்