தேனம்மை லட்சுமணன் கவிதைகள்

இடறல்:-
***********************

ஹாய் செல்லம்
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.

யாரும் படித்திருக்கக்
கூடாதென எண்ணும்போது
அப்ப உனக்குப்
பிடித்திருக்கிறதா
என்ற கேள்வி
கத்தி முனையாய்
இடறிக் கொண்டே.

 

சகிப்பு:-
*************

கர்ண குண்டலங்களைப் போல
கனமாக இருந்தாலும்
கழட்டி வைத்துவிட
முடிவதில்லை அவைகளை.

அறுத்தெறிந்தாளாம்
மறத்தமிழச்சி
பால்குடித்தவன்
வீரனில்லை என்பதால்.

வீரன் கை வைத்தாலும்
வெட்டி எறிய முடிவதில்லை
மார்பகங்களையும் கைகளையும்
நாய்கள் தின்னும் பிணமானதால்.

கசியும் வியர்வையூடான
களைப்பான பயணத்திலும்
எதிர்கொள்ள நேர்கிறது
கச்சை கொத்தும் கண்களை.

எதிர்பார்ப்புகளோடு
கொத்தும் கண்கள் சில
பயணிப்பவருடையதாகவோ
பழகிய சிநேகிதனுடையாகதாவோ

பார்க்காதது போல கடந்து
செல்வது தவிர வேறேதும்
எதிர்ப்புக்காட்ட முடிவதில்லை
பொய்மைச் சகிப்பால்..

Series Navigationநிலாச் சிரிப்புகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி