தேவலரி பூவாச காலம்

This entry is part 20 of 33 in the series 19 மே 2013

அந்த பாட்டுச் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது மார்கழிப் பனியைப் போல சுகமாக மனசென்னும் காதுக்குள்.

”கிய்யா கிய்யாடா!

ஒரு குருவி கொண்டாடா.

என்ன குருவிடா?

அது மஞ்ச குருவிடா!

அது எப்படி கத்துமுடா?

கீக்கா, கீக்கா, கீக்கா…”

என்றோ _

அப்படியும் இல்லன்னா அந்தக் குருவிப் பாட்டுக்கு பதிலா

”என்ன அழகு இந்தப் பூ?

கண்ணைக் கவருது வண்ணப்பூ!

சின்னச் சின்ன ரோஜாப் பூவே நீ

அக்கா பூ நான் தொடுவேன் வாடாதே.

வெள்ளை வெள்ளை மல்லிகைப் பூவே

பிள்ளைப்பூ நான்

தொட்டால் நீ சிணுங்காதே… ”

என்ற ’பூ’ பாட்டையோ

”எங்கள் ஊரும் நல்ல ஊர்,

ஏரிக் குளங்கள் உள்ள ஊர்.

பள்ளிக்கூடம் உள்ள ஊர்,

பயன் செய் தொழில்கள் நடக்கும் ஊர்.

மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊர்,

தங்கம் போல் நெல் விளையும் ஊர்.

தருமங்கள் நாளும் வளரும் ஊர்…”

என்ற ’ஊரை’ப் பத்திய பாட்டையோ

கும்மாளமா பாடிக்கிட்டு இருப்போம் நாங்க. அப்போவெல்லாம் காத்து கொஞ்சம் வேகமா வீசரப்போ அந்த தேவலரிப்பூ மரம் அசஞ்சி அசஞ்சி குலுங்கும். அப்போ மெதுவா அந்த மரத்தோட எலைங்களும் பூக்களும் ஒரசி சலசல சலசலன்னு சத்தத்த உண்டாக்கும். அந்த ஓசை எனக்கு என்ன யாரோ தொட்டிலிலப் போட்டு தூரியாட்டிப் பாட்டுப் பாடுறமாதிரி இருக்கும். அந்த பூமரத்துல இருந்து எலைங்க விழுந்தா அந்த எலைங்களுல ஒண்ண எடுத்து சுருட்டி பீப்பி சத்தம் வர்ருமானு ஊதிப் பாப்போம். தென்னை ஓலையயோ பனை ஓலையையோ சுருட்டி பீப்பி செஞ்சி ஊதுனா பீ பீனு சத்தம் வரும். ஆனா, இந்த தேவலரி மரத்தோட எலைய சுருட்டி ஊதுனா? இஞ்சி இடுப்பழகிப் பாட்டுல ஜானகியம்மா சொல்லர மாதிரி பீ பீனு சத்தம் வர்ரதுக்கு பதிலா வெறும் காத்துதாங்க வரும். எலைக்கி பதிலா அந்த மரத்து பூ விழுந்தா? ஐய்யோ!அந்த பூ வாசன இருக்கே அந்த வாசனைக்கு சமமா எந்த வாசனைய சொல்ல! அத்தரு, ஜவ்வாது, பன்னீருனு சொல்லக்கூடிய நறுமணப் பூச்சுகளும் சார்லி, யாட்லி, ராயல்மிராஜ், ஜோவன்மஸ்க், திரிரோசஸ், ஜாஸ்மின், ஒன்மேன் ஷோ னு வெளிநாட்டுல இருந்து நம்ம ஊருஃல இருக்கிற அங்காடிக் கடைங்கள்ள வாங்கி விக்கிறாங்களே நாசியத் தொளைக்கிற விதவித மான சென்ட் புட்டிங்க, அந்தசென்ட் வகையறாக்கள் எல்லாம் கூட எங்க ஸ்கூலுல இருக்கிற அந்த தேவலரிப் பூவோட வாசத்துக்கு கால் தூசு பெறாதுங்க!

அந்த தேவலரிப் பூவோட வாசனையை வேறு ஏதாச்சும் ஒரு பூவோட வாசனைக்கு ஒப்பிட்டு பாக்கமுடியுமானு இப்போ நானும் கெடைக்கக் கூடிய விதவிதமான வாசனை பூக்களை எல்லாம் தேடி மோந்து மோந்து பாக்கிறேன். ஒரு பூவுல கூட அந்த தேவலரிப் பூவோட வாசன தந்த அந்த சுகந்த மண அனுபவம்ன்இதோ இந்த நிமிஷ நேரம் வரைக்கும் எனக்குக் கெடைக்கவே இல்லைங்க. இது அந்த தேவலரி மரத்து மேல சத்தியமுங்க. அந்த வாசன பூவ எடுத்து நேரு மாமா சட்டைல ஒரு ரோஜாப் பூவ வச்சிக்கிற மாதிரி வச்சிக்கிற தும், பூவோட ஒரு இதழ மெதுவா பிச்சி எடுத்து வாயில போட்டு மென்னு பாக்கிறதும், அந்த இதழ வாயில வச்சி சத்தம் வர்றாப்புல ஊதிப் பாக்கிறதும், பூவோட அடிக் காம்ப கிள்ளி தேனு வருமானு உறியறதும் – இதெல்லாம் என்னோட மனசுக்குள்ள அந்த பூவப் பத்திய அழிக்கவே முடியாத ஞாபகச் சின்னமா இல்ல இருந்துக்கிட்டு இருக்கு?!

”சின்னப் பூ நான் அல்லவோ?

தேவனே நான் சொல்லவோ?

என்னை உன் பாதத்திலே

ஏற்றுக் கொண்டால் என்னவோ?”னு

எல்லாம் எத்தன எத்தன பாட்டுக்கள நாங்க தோப்புக் குயில் குஞ்சுங்கமாதிரி இல்ல பாடிக்கிட்டு திரிஞ்சோம் அந்த வயசுல. அத்தன பாட்டையும் சொல்லிக் குடுத்தவங்க?

அவங்கதான் எங்க ஒண்ணாங்கிளாசு டீச்சருங்க. இந்த தேவலரிப் பூமரம் மாதிரித்தாங்க டீச்சரும் எனக்கு. தப்பு தப்பு எங்களுக்கு. அதுவும் அப்படி ஒண்ணாங்கிலாசு புள்ளைங்களாகிய நாங்க அந்த தேவலரி மரத்துக்கு கீழ பறப்பி வச்சி இருக்கிற மணலுல ஒக்காந்துட்டு பாட்டு பாடறதும், இல்லன்னா எங்க டீச்சரு சொல்லிய கதைங்கள்ள ஒண்ண துடுக்குத்தனமான ஒரு பைய்யன் தன்னோட கொரல மாத்தி டீச்சரு மாதிரியே

”அந்த காலத்துல ஒரு வெள்ளக்கார தொர இருந்தாராம். அந்த தொர ஒத்தைக்கி ஒரு நாய வளத்தாராம். தெனமும் நாயோட கழுத்துல ஒரு டிஃபன் பாக்ஸை மாட்டி கரிக்குத் தேவையான காசையும் போட்டுவிட்டு கரி வாங்க கசாப்புக்கு அனுப்புவாராம். நாயும் நெதமும் ஒழுங்கா போயி கரிய வாங்கி வருமாம். அப்புறம் ஒரு நாளு அந்த கசாப்புக் கிட்டத்துல நெறைய வேல வெட்டி எதுவும் இல்லாத சோம்பேறிக் கழுதை ஆளுங்க உங்கள மாதிரி ஒரு மரத்தடில ஒக்காந்துக்கிட்டு கத கேக்க ஆரம்பிச்சாங்களாம். ஒரு வெத்து வேட்டு சாமியாரு அவங்களுக்கு கதச் சொல்லிட்டு இருந்தாராம். கரி வாங்கப் போன தொரையோட புத்திசாலி நாயும் கரியை வாங்க மறந்து கதயக் கேக்க ஒக்காந்துக்கிச்சாம். நாய்க்கு என்ன ஆச்சோ? ஏதாச்சோ? னு பதறிக்கிட்டு கசாப்புக்கு வந்து பாத்த தொர அங்க நடந்த வெவகாரத்தப் பாத்துப்புட்டு “கத கேட்ட நாய செருப்பால அடி” னு சொல்லிப்புட்டு நாய்க்கு ரெண்டு செருப்பால போட்டாராம். டே பசங்களா நீங்களும் கத கேட்டிங்க! அந்த நாய் கதிதாண்டா உங்களுக்கும்”

னு சொல்லிக்காட்டி, டீச்சருமாதிரியே கீச்சுக் கொரலுல சிரிக்க, நாங்க எல்லாம் ”நெசமாவே வசந்தமல்லிகா டீச்சர்தாண்டோய்!”னுசொல்லி சிரிக்கிறதும் சே! சே!இப்போ நெனச்சா நாம மீண்டும் அந்த தேவலரி மரத்துக்கு கீழயே இருந்து பிள்ளை பூவா மாறிப் படிக்கமாட்டோமா?”னு ஏங்கித் தவிக்கிது மனப்புழு.

அப்படி அந்த மாதிரியான அனுபவத்தப் பத்தி பேசறதுங்கிறது சந்தோஷமெல்லாம் வத்திப்போன மன கெணத்துல கோடை காலத்துல ஜில்லுன்னு ஒரு பத மழ பேஞ்ச மாதிரி இல்ல இருக்கு?

அப்படி இருந்தப்போ ஒரு நாள் பசங்கள்ள ஒருத்தந் சொல்லுவான், “மழ வர்ற மாதிரி இருக்குடா” மழ வரவே வராது. ஆனா நாசித் துளை வழியே நொழைஞ்சி மூளையைக் கிறங்கச்செய்யும் மல்லிப் பூ வாசனையும், ”சருக் சருக் சருக்” என்ற செறுப்புச் சத்தமும் ஜல்ஜல் ஜல்லென்ற சலங்கையின் நாதமும், ”கிலிங் கிலிங் கிலிங்” என்ற கண்ணாடி வளையல்கள் குலுங்கும் ஓசையும் ஒரு தேர்ந்த சங்கீத வித்துவான் மோகனராக ஆலாபனையை ஜலதரங்கத்தில் வாசித்ததைப் போன்ற பரவச அனுபவமும் செந்தேனாய் நிறையும் செவிகளுக்குள். அந்த அனுபவத்தைத் தரும் பெருமைக்கு உரியவங்க யாரு தெரியுமா? அவங்கதான் எங்க மனசுக்குள்ள எப்பவும் இப்பவும் பரவசம் தரும் வசந்த கால தேவதைனு சொல்லலாமா?அறிவு அன்ணமூட்டிய அம்மானு சொல்லலாமா? எங்க மழலை மொழி மாறா பருவத்துல எங்கள தன் வசமாக்க எங்களோட கூடியும் ஆடியும் பாடியும் கும்மாளமிட்ட தோழினு சொல்லலாமா?விரல் பிடிச்சி அகரம் கத்துக் குடுத்து தான் ஏறாத சிகரத்துல எங்கள ஏத்திநாங்க ஒய்யாரமா நிக்கிறப்போ அதக் கண்டு களித்த கடவுள்னு சொல்லலாமா? எப்படி எப்படி சொல்லிப் பாத்தாலும் அந்த அன்பு தெய்வத்தோட அருமையச் சொல்ல என்னோட தாய்மொழி அறிவு எனக்கு போதலையே! ஆட்டோகிராஃப் படத்துல பரத்வாஜ் பாடுற மாதிரி எனக்கும்கூட தேவலரிப் பூமர வாசமும், அந்த மரத்தோட குளிர்ச்சியான நெழலும், அந்த மரத்து நெழல் தந்த சொகமும், அந்த மரத்துக்குக் கீழ இருந்து எங்களுக்கு முதல் வகுப்பெடுத்த வசந்த மல்லிகா டீச்சரும் என்னோட நெனப்புக்கு அத்தன நெருக்கங்க.

டீச்சரப்பத்தி சொல்லனும்னா ஒற்றை நாடி சரீரம். நடுத்தட்டு மக்களோட மனசைப் போல எங்க டீச்சரோட உடல்வாகு. அவங்க பாக்குறதுக்கு ரொம்ப குட்டையாவும் இருக்கமாட்டாங்க. நெட்டையாவும் இருக்கமாட்டாங்க. கருப்பாவோ செவப்பாவோ இல்லாம மாநிறமாத்தான் இருப்பாங்க. தலமுடிகூட நீளம் அடர்த்தினெல்லாம் கெடையாது. ஆட்டுக்குட்டிங்க எல தழைய திங்கிறமாதிரி டீச்சரோட வாயி ஓயாம எப்பவும் வெத்தலையப் போட்டு மென்னுக்கிட்டே இருக்கும். அதனால அவங்க பற்கள்ள காவிக் கறை படிஞ்சி இருக்கும். வசந்த மல்லிகா டீச்சரு வர்றதுக்கு அடையாளமா அவங்க வாயிலிருந்து வீசும் வெத்தல வாசம் அவங்களோட வருகையை எங்களுக்கு முன்னறிவிப்பு செய்யும். அதுல எங்களுக்கு துளியளவும் சந்தேகம் இராது. டீச்சரோட பேச்சிலே ஒளிவுமறைவு இல்லாத மனசில் இருப்பதைக் காட்டும் பளிங்குத்தன்மை வெளிப்படையாவே தெரியும். கொரலிலோ குழல் கொழைவும் நெளிவும் கூடி இருக்கும்.ஒரு பாட்டோட ராகபாவம் போல சந்தோஷமோ சங்கடமோ கோபமோ குறும்போ இத்தியாதி இத்தியாதி எந்த மனோபாவமானாலும் அத்தனை அனுபவ வெளிப்பாட்டையும் எங்களுக்கு டீச்சரோட நாடக நளின சொல்லே காட்டிக்குடுத்திடும்!

ஸ்கூலும் ஹாஸ்ட்டலுமா சேர்ந்திருக்கும் அந்த நிறுவனத்துல பெத்தவங்க என்ன ஒப்படச்சப்போ எனக்கு வயசு அஞ்சோ ஆறோ இருக்குமுங்க. எங்க ஹாஸ்ட்டல்லுல எனக்கு எங்க அண்ணாமாருங்களும் அக்காமாருங்களும் வச்ச பேரு ’அஞ்சுமணி சங்கு’ங்க. அது இடுகுறி பேரு இல்லைங்க. காரியமா வச்ச காரணப் பேருதாங்க. அப்போவெல்லாம் அம்மாவும் அப்பாவும் மட்டுந்தானே ஸ்கூலுக்கு போகும் முன்னால என்னோட ஒலகம். அந்த ஒலகத்த அத்தன சீக்கிரமா யாரால தூக்கி எறியமுடியும்?அதனால ஹாஸ்ட்டலுல இருக்குறப்போ எனக்கு காத்தால முழிப்பு வந்த ஒடனே “ஊம் ஊம்”னு தேம்பித் தேம்பி அழுதுக் கிட்டே ”அம்மா அப்பா”னு அழுவேனாம். அப்போவெல்லாம் ”நானுதாம்பா உங்க அம்மா. நானு இருக்கப்போ நீ எதுக்கு அழுவனும்? உனக்குமட்டும் இல்லடா கண்ணே – இந்த ஹாஸ்ட்டலுல இருக்கிற அத்தனைப் பேருக்கும் நாந்தானடா அம்மா” னு டீச்சரு சொல்லுவாங்களாம்.

அப்போ எங்க வசந்தா டீச்சருக்கு கல்யாணமெல்லாம் நடந்துச்சோ இல்லையோ அதப்பத்தி எல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. ஆனா “பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டுப் பாடுகிறேன் தாயாகவில்லையம்மா” னு பாடும் தேன் குரல் பாடகி சுசிலா அம்மாவோட பாட்டு எங்க டீச்சருக்கு ரொம்பவுமே பொருத்தமா இருந்துச்சினு சொல்லலாமுங்க. நாங்க அழுதாக்க ஆறுதல்படுத்த மிட்டாய், கேக்கு,முருக்கு, சீடைனு விதவிதமா தின்பண்டங்களத் தந்து சமாதானப்படுத்தினதும், காரு, பஸ்ஸு, கப்பல்ல்,வீடுனு விளையாட்டுச் சாமான்கள குடுத்து கூட இருந்து விளையாடினதும், அதிகமா அடம் புடிச்சா ஒரு பேனாவ எடுத்து “உம் சொல்லு. நாம இப்போவே உங்கூட்டுக்கு லெட்டர் எழுதலாம். அம்மாவோ அப்பாவோ உன்ன வீட்டுக்கு கூட்டிப் போக வரச் சொல்றேன். நீ அழாம புத்திசாலியா இருக்கணும் சரியா? னு கேப்பாங்க. “சரிங்க டீச்சர்.” னு சொன்னாத்தான் விடுவாங்க. இப்படி அத்தனை கொழந்தைங்களையும் வித்தியாசமே இல்லாம நேசிப்பாங்க.

ஒரு நாளு ராமுனு கூட படிச்ச பைய்யன் என்னோட காத கடிச்சிப்புட்டான். அப்போ டீச்சருக்கிட்ட நானு போய் அழுதுக்கிட்டு நின்னேன். ஒடனே டீச்சரு ராமுவக் கூப்பிட்டு ”அவனோட காத நீ ஏன்டா கடிச்ச? அவனே புதுப் பைய்யன். பயந்த சுபாவம் உள்ள்ளவனா வேற இருக்கான்.” னு சொல்லி அவனோட முது குல தன்னோட கைய்ய திருப்பி வச்சிக்கிட்டு எனக்கு கேக்குறாப்புல ரெண்டு அடி குடுத்தாங்க. அடிய வாங்குன அவனும் சிரிக்கிறான். அவன டீச்சரு நல்லா அடிச்சிட்டாங்களேனு நெனச்சி நானும் காது வலியக்கூட மறந்து சிரிக்கிறேன். அப்பறம் டீச்சர் அவனையும் என்னையும் கூப்பிட்டு “நானு உங்க கிட்ட ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு யாரு சரியா பதில் சொல்லறீங்களோ அவங்களுக்கு ஒரு பரிசு தருவேன்” னு சொல்லி, “புள்ளைங்களே, உங்களுக்கு மூள எங்கடா இருக்கு? சொல்லுங்க பாக்கலாம்” னு கேக்க, ராமு “மூக்குல டீச்சர்” னு சொல்ல, “ஓ! ஓ! அப்படியா? சரி சரி. நீ சொல்லுடா புதுப்பைய்யா” னு கேக்க, “தல மண் டைலிங்க டீச்சர்.” னு நானு சொல்ல, அதுக்கும் டீச்சருக்கு சிரிப்புதான். “ஆமாடா அவனோட மூளதான் மூக்கு வழியா வெல்லப் பாகாட்டமா ஊத்துது. அட மடப் பயலே கைக் குட்டைய வச்சித் தொடைடா ராமு” னு சொல்லிட்டு ”அவனுக்கு மூக்குல மூள இருக்கிறதாலத்தான் உன்னோட காத நாயாட்டம் கடிச்சான். உன்ன மாதிரி மண்டைல மூள இருந்தா இப்படி உன் காத கடிக்கமாட்டான்.” னு சொல்லி ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சி சாக்லேட் தந்து அனுப்புனாங்க.

நாலாங்கிலாசு படிச்சப்போ அவங்கதான் தமிழும் வரலாறும் நடத்தினாங்க. ஒரு நாளு ’பக்த கபீரை’ப் பத்தி நடத்திட்டு டீச்சர் கேள்வி கேட்டப்போ ஏதோ ஞாபகத்துல இருந்ததால பக்கத்துல இருந்த பைய்யன் சொன்ன தப்பான பதிலையே நானும் சொல்ல “அவன் எடுத்த அந்த வாந்தியையே நீயும் நக்குறை யாடா மடப் பயலே” னு சொல்லி முட்டிப் போட வச்சதும், அவங்க குடுத்த டிக்டேஷனுல பத்துக்கு எட்டு மார்க் வாங்குனதும், எருதுனு எழுதறதுக்கு பதிலா எதுருனும் குதிரைனு எழுதறதுக்கு பதிலா குருதைனும் எழுதி டீச்சருக்கிட்ட புளியம் மெலாருல வாங்கின ரண்டு அடியும்கூட வலிக்கு பதிலா ருசியாத் தானுங்க இருக்குது இப்போ.

5-6-7 ஆம் க்லாஸ் படிச்சப்போ டீச்சருதாங்க எங்களுக்கு சைன்ஸ் க்லாஸ் எடுத்தாங்க. பியூரெட், பிப்பெட் முதலான உபகரணங்களப்பத்தி நடத்தினப்போ “டேய் புள்ளைங்களா யாராவது பிப்பட்டுக்கு பதிலா நிப்பட்டுனோ பியூரட்டுக்கு பதிலா ஒப்பட்டுனோ எழுதித் தொலச்சிப்புடாதிங்கடா. என் மானம் அப்பறம் கப்பலுல ஏரி கடலுல குதிச்சிப்புடும் சொல்லிப்புட்டேன்.” னு சொல்லி சிரிச்சதும், தண்ணில ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இருக்கும் முறைய சொல்லி அத பிரிக்கிற மொறைய சொல்லும்போது “ஆய்வுக் குடுவைய தொட்டுப் பாக்கிறேன் பேர்வழினு வேறு எந்தக் குடுவையயாவது சம்மந்தா சம்மந்தம் இல்லாம தொட்டுப்புடா திங்கடா பசங்களா. நான் சொல்லற மாதிரி மட்டும் சோதன பண்ணுங்கடா. நீங்களே வெவ்வேற சோதனையைய எல்லாம் செஞ்சிப்புடாதிங்க. பாத்து பத்திரமா பதிவிசா இருந்துக்கோங்கடா. பஞ்சய்யும் நெருப்பையும் பக்கத்திலேயே வச்சிட்டு இருக்குறது ஆபத்துதான். பத்திக்காம பாத்துக்கோங்க” னு சொல்லி கெக்கேக் கேனு கோழி கூவறமாதிரி டீச்சர் சிரிக்க, பெரிய வயசு உள்ள அக்காமாரும் அண்ணாமாரும் டீச்சருக்கு ஜால்ரா போடற மாதிரி வெடிச் சிரிப்பு சிரிக்குறாங்க. அப்போ எனக்கா எதுக்குதான் காரணமில்லாம இப்படி சிரிக்குறாங்களோனு எரிச்சல் வருது. “டே சின்னப்பைய்யா, உனக்கு எதாச்சும் புரியுதா இல்லையா?”னு கேட்டு என் காத நிமிட்டி காளர இழுத்து டீச்சர் குறும்பு செய்ய, அதுக்கு ஒரு அக்கா ”டீச்சர் அவனுக்கெல்லாம் வயசு பத்தாதுங்க டீச்சர். ஆனா இந்தப் பைய்யன் இவ்வளவு மோசமா இருக்க்க்கூடாது டீச்சர்”னு சொல்ல, “எனக்கே வெக்கமா இருக்கு டீச்சர். இவன் ஒரு நாளு எங்கிட்ட வந்து எக்கா எக்கா வயசுக்கு வரதுனா என்னாக்கா? சொல்லாட்டி உன்ன உடமாட்டேங்கா” னு கேக்கறான் டீச்சர்.” னு சொல்ல, “அதப்பத்தி எல்லாம் உனக்கு இப்போ எதுக்குடா குட்டிப் பைய்யா? நீ நல்லப் பைய்யனா இருக்கிற. ஒழுங்காவும் படிக்கிற. அதெல்லாம் காலாகாலத்துல தானே ஒனக்கு தெரியுண்டா. இப்பத்திக்கி படிக்கிறதமட்டும் பாரு”னு சொல்லிப்புட்டு “அடி பொண்ணுங்களா, நானு சொல்லறதெல்லாம் உங்களுக்கும்தாண்டி. அவன கேலிப் பண்ணறதுல உனக்க்கு என்னாடி அத்தன கொண்டாட்டம்? னு கேக்க, க்லாஸுல மீண்டும் வெடிச் சிரிப்புச் சத்தம் ரூமையே அதிரச் செஞ்சது.

நம்ம டீச்சர் மேரிக் கியூரியப் பத்தியோ,ஜகதீஷ் சந்திரபோஸைப் பத்தியோ, பெஞ்சமீன் ஃபிரேங்கலீனைப் பத்தியோ, சி.வி.ராமனைப் பத்தியோ சொல்லிக் குடுக்கிறப்போ அந்த அறிவியல் மேதைகளாவே மாறி ஒரு ஓரங்க நாடகத்தையே நடத்திக் காட்டுவாங்க. வெறும் பாடத்த மட்டும் சொல்லாம அந்த அறிவியல் மேதைங்களோட வாழ்க்கைல இருந்து நமக்கு நடைமுறை சாத்திய பாடம் என்னங்கிறதையும் சொல்லிக் குடுப்பாங்க.

டீச்சரோடபாட வகுப்புக்கு எங்களுல ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். வேண்டிய வங்களுக்கு டீச்சரோட க்லாஸ்ல வேண்டியது கெடைக்கும். ரொம்ப போரடிச்சா வந்த அந்த கால புதுப் படங்களா இருந்த அலைகள் ஓய்வதில்லை, கன்னிப் பரு வத்திலே, பதினாறு வயதினிலே, முந்தானைமுடிச்சி இப்படிப்பட்ட படங்களோட கதைய நாம தேட்டருக்கே போய் படம் பாக்குரமாதிரி வெளக்கமா சொல்லுவாங்க. படத்தப்ப் பத்திமட்டும் சொல்லாம அந்த பட கதையால அவங்க தெரிஞ்சிக்கிட்ட நீதினு நெனச்சதையும் சொல்லுவாங்க. பொழுது போகலநா எங்களுக்கு பைபிளி லிருந்து கோலியாத்த தாவீது ஜெய்ச்ச கதையோ, சாலமன் திறமையா நீதி செஞ்ச கதையோ, அந்த ராஜாவுக்கு ஞானம் கெடச்சதப் பத்திய கதையோ,ஏசுநாதரோட வாழ்க்கைக் கதையயோ சொல்லுவாங்க.

படிக்கிற புள்ளைங்களுக்கு மத்த சாருங்க, டீச்சருங்க, ஹெச்செம் னு யாராச்சும் எதாச்சும் அநீதி செஞ்சா தட்டிக் கேக்கும் நீதிதேவதையா ,இல்ல இல்ல! துர்க்கை யாவே மாறிப் போராடுவாங்க.

எனக்கு காலேஜுல வேல கெடச்சப்போ அவங்களும் காலேஜுக்கு கரஸ் க்லாஸுக்கு வந்திருந்தாங்க. அவங்க என்னோடக்லாஸுக்கே பாடம் படிக்க வருவாங்கனு எனக்குத் தெரியாதுங்க. நானும் வவழக்கமா நடத்துறாப்புல பாடங்களை எல்லாம் நடத்திக்கிட்டு இருந்தேங்க. க்லாஸ் முடியறவரைக்கும் பொறுமையா இருந்து என் பாடத்தப் பத்தி குறிப்பும் எடுத்துக்கிட்டு இருந்தி ருக்காங்க டீச்சரு. அப்பறம் க்லாஸு முடியறப்போ “தன்னோட படிக்க வந்த வேற ஒரு டீச்சருக்கிட்ட என்னக் காட்டி அட பலரும் இருக்குற எடம்னு கூட நெனைக் காம தாயாட்டம் என்ன தன் மார்போட சேத்து அணச்சிக்கிட்டு “ இவன் என்னோட புள்ளைம்மா. இவனோட வயசு என்னோட சர்வீசு. தெறமையான புள்ள. ஒழுங்கா படிச்ச பைய்யன். முன்னுக்கு வந்ததுல ஆச்சரியப்படறதுக்கு ஒன்ணு மில்ல. என் நெஞ்சுல பால வாத்துட்டான். குருவ மிஞ்சின சீடனா ஆயிட்டாங் கமா” னு சொல்லி என் முதுகுல தட்டிக் குடுத்தப்போ “அப்படி எல்லாம் நீங்க சொல்லாதிங்க டீச்சர். நீங்க எனக்கு சொல்லிக் குடுக்கலனா நானு இண் ணைக்கி இந்த எடத்துல நிக்கமுடியாதுங்க டீச்சர். நானு எண்ணைக்குமே உங்க புள்ளதாங்க டீச்சர். உங்கள என்னால நிச்சயம் மிஞ்சமுடியாதுங்க டீச்சர் எல்லாம் உங்களோட ஆசிர்வாதமுங்க டீச்சர்”னு சொல்லி கண் கலங்க, அவங்க பாதத்துல நெடுஞ்சான்கிடையா விழுந்து வணங்கினேன்.

எனக்கு கல்யாணம் நடந்தப்ப்போ டீச்சரும் அவங்க சாரும் தம்பதி சமையதரா வந்து எங்கள வாழ்த்தினதுமட்டும் இல்லாம என் மனைவிக்கிட்ட டீச்சரு சொன் னது இதுதாங்:. “எம்மா என் புள்ள இருக்குறானே, அவன் ஒரு அப்பாவிப் பைய்யன். ஒலகம் தெரியாதவன். சொல்லப்போனா ஒரு புத்தகப் புழுதான்மா. அதனால நீதான் உன்னையும் கவனிச்சிக்கிட்டு இவனையும் பத்திரமா பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்புமா. உன்னோட குடும்பத்துக்கு நீதாம்மா கண்ணா இருக்கணும்.” னு சொன்னப்போதான் டீச்சரு எந்த அளவு தெளிவா என்னப்பத்தி கவனிச்சி இருந்திருக்காங்கனு எனக்கே தெரிஞ்சது.

அட கால தேவா! கருணை இல்லையா உனக்கு? டீச்சரோட கணவரான பரவசம் சாரும் எங்களுக்கு சொல்லித்தந்த வாத்தியாருதான். அவரப் பத்தி எழுதவும் என் கைவசம் கதை உண்டுங்க. ஆனா? எங்க சாரு டீச்சர விட்டு பிரிஞ்சிட்டாருங்கிற அந்த செய்தி காத்த விட்டுக் கரையும் முன்னேவா இப்படி?

0

Series Navigationவிளையாட்டு வாத்தியார் -2சுவீகாரம்
author

குழல்வேந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *