“தையல்” இயந்திரம்

This entry is part 11 of 17 in the series 7 நவம்பர் 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

(1998 லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலரில் வந்தது.  கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் “நேர்முகம்” எனும் தொகுதியில் உள்ளது.)

      ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதற்கேற்ப, அமிர்தாவின் திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்துவிட்டது. அம்மாவுடன் இருபத்து மூன்று ஆண்டு வாழ்க்கையையும், தங்கை தம்பிகளுடன் முறையே இருபத்தொன்று, பதினாறு ஆண்டு வாழ்க்கையையும் துறந்து, முன்பின் பழக்கமில்லாத ஒருவனோடு அவள் புறப்பட்டுவிட்டாள். நினைக்க, நினைக்க அவளுக்கு வியப்பாக இருந்தது. திருமணத்தின் இன்றியமையாமையை நன்குணர்ந்து அதில் ஆர்வமும் கொண்டிருந்தாலும், அம்மாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுப் பிரிவது கடினமாகத்தான் இருந்தது. அவளுடைய அம்மா உடைந்து அழுத நேரத்தில் அவளையும் அழுகை தொற்றிக்கொண்டது. அவள் தங்கை தேவியும் சேர்ந்துகொள்ள, சில விநாடிகள் கழித்துத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு அழுகையை நிறுத்தியவள் அவள் அம்மாதான்.

       “சந்தோசப்பட வேண்டிய நேரத்துல, அழுறது தப்புடி, அமிர்தா! கண்ணைத் தொடச்சிக்க. மாப்பிள்ளை காத்துக்கிட்டிருக்காரு, பாரு ….”

       அமிர்தா புடைவைத் தலைப்பால் கண்களையும் கன்னங்களையும் துடைத்துக்கொண்டு எல்லாரையும் பார்த்து இறுதியாக ஒரு முறை தலையசைத்து விடை பெற்றாள். கூடத்து நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த அவள் கணவன் செல்லதுரையின் பார்வை சுவரோரத்தில் பாதி தைக்கப்பட்ட துணி அதன் விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் தென்பட்ட தையல் இயந்திரத்தின் மீது பதிந்து பதிந்து மீண்டுகொண்டிருந்தது.                   

மருமகப்பிள்ளையின் பார்வை தையல் இந்திரத்தின் மீது பதிந்து பதிந்து மீண்டதைக் கவனித்து மனத்தில் வாங்கிக்கொண்டவள் அவள் அம்மா பாஞ்சாலிதான்.

       அவனும் ஒரு தையற்காரன் என்கிற முறையில் மட்டும் ஆர்வங்காட்டி அந்த இயந்திரத்தை அவன் பார்க்கவில்லை என்பது அனுபவத்தின்  வாயிலாக அவளுக்குப் புரிந்து போயிற்று. அடிவயிற்றில் அவளுக்குச் சொடேர் என்று ஓர் உணர்ச்சியும் உண்டாயிற்று.

       திரும்பத் திரும்ப, “போயிட்டு வர்றேன், போயிட்டு வர்றேன், வரட்டுமாம்மா?” என்று வாய் அலுக்காது சொல்லிவிட்டு அமிர்தா புறப்பட்டாள். கூடத்தை விட்டுக் கடைசியாகக் கிளம்புவதற்கு முன்னாலும், மருமகப்பிள்ளையின் பொருள் பொதிந்த பார்வை தையல் இயந்திரத்தின் மீது பதிந்து நகர்ந்ததைப் பாஞ்சாலி கவனிக்கத் தவறவில்லை.

       அவளை வழியனுப்ப மூவரும் வாசலுக்கு வந்து நின்றார்கள். தெரு முக்குத் திரும்புகிற வரையில் திரும்பித் திரும்பிப் பார்த்த படியே நடந்த அமிர்தா இறுதியாக ஒரு முறை நின்று கையசைத்து விடை பெற்றாள். திருமணம் கழிந்த பிறகு ஏற்கெனவே மாமியார் வீட்டில் ஒரு நாள் இருந்து விட்டு அவள் தன் கணவனுடன் அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களுடைய சம்பிரதாயம் அது. கணவனுடன் வந்து விட்டு, அவனால் பின்னர் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்கிற சம்பிரதாயப்படிதான் அவன் வந்து செல்லுகிறான்.

       அவள் தம்பிக்குக் காய்ச்சல். இல்லாவிட்டால் பேருந்து நிறுத்தத்துக்கு அவன் அம்மா அவனை உடனனுப்பி வைத்திருப்பாள். தங்கை வயதுப் பெண், தனியாகத் திரும்பி வர வேண்டும். அம்மாவோ காலில் கொப்புளம் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருப்பவள். எனவேதான் யாரும் அவளை வழியனுப்ப உடன் செல்ல இயலாது போயிற்று.

       … பேருந்தில் கூட்டமே இல்லை. சன்னலோரத்தில் அவளை உட்காரப்பணித்துவிட்டு, செல்லதுரை புது மாப்பிள்ளைக்குரிய அதீத நெருக்கத்துடன் இடித்துக்கொண்டு உட்கார்ந்தான். அமிர்தாவுக்குக் கூச்சமாக இருந்தது. ஏற்கெனவே அவ்வளவு ‘ஈஷி’க்கொண்டு உட்கார வேண்டாம் என்று அவள் அவனுக்குச் சொல்லியிருந்தாள். ஆனால் அவன் கேட்பதில்லை. எனவே அவள் முகத்துச் சிவப்புடன் சுற்றிலும் விழிகளைச் சுழற்றினாள். யாரும் அவர்களைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. அன்று எதனாலோ பேருந்தில் கூட்டம் இல்லாதிருந்ததைச் செல்லதுரை பயன்படுத்திக்கொள்ள முனைந்து தொண்டையைச் செருமினான்.

       “அமுதா!”

       “என்னங்க?”

       அவர்களது இருக்கைக்கு முன்னாலும் பின்னாலும் இருந்த இரண்டு இருக்கைகளும் காலியாக இருந்தன. எனினும், அவன் குரலைச் சன்னமாக்கிக்கொண்டு,  “உன்னோட தையல் மிஷினை அடுத்த வாட்டி வர்றப்ப எடுத்துக்கிட்டு வந்துடு. என்ன?” என்றான்.

       அமிர்தா மிரண்ட விழிகளால் அவனை ஏறிட்டாள்: “எதுக்குங்க?”

       “எதுக்கா! நல்ல கேள்வி கேக்குறே, போ. நம்ம ஊருக்கு எடுத்துட்டுப் போயி உபயோகப்படுத்திக்கிறதுக்குத்தான். எங்கிட்ட ஒரு மிஷின்தானே இருக்கு? நான் தைக்காம இருக்குற நேரத்துல மட்டுந்தானே உன்னால தைக்க முடியும்? ஒண்ணுக்கு ரெண்டா இருந்திச்சுன்னா ரெண்டு பேருமே ஒரே நேரத்துல தைக்கலாமில்ல? நிறைய வருமானம் வருமே! சின்னதா ஒரு குச்சு வீடாச்சும் கட்டணும்னுட்டு ரொம்ப நாளா

ஆசை! நமக்குன்னு ஒரு எலிவளையாச்சும் தனிவளையா வேணுமில்ல?”

       அமிர்தாவுக்குள் ஒரு படபடப்பு விளைந்தது: “அதை எந்தங்கச்சி இப்ப உபயோகப்படுத்திக்கிட்டு இருக்குங்க. அந்த சம்பாத்தியத்துலதான் அவங்க இப்ப குடும்பத்தை நடத்தியாகணும். முன்ன நானும் சேர்ந்து தைச்சு சம்பாரிச்சுக்கிட்டு இருந்தப்பவே, இழுத்துக்க பறிச்சுக்கன்னு ஏதோ ஓடிட்டிருந்திச்சு …”

       அவன் சிரித்தான்: “நானென்ன உன் தங்கச்சியைத் தைக்க வேணாம்னா சொல்றேன்? அப்படிச் சொல்றதுக்கு எனக்கென்ன பயித்தியமா? அது வேற மிஷின் வாங்கிக்கிடட்டுமே! அந்த மிஷின் உன்னோடதுதானே?”

       “அது என்னோடதுன்னெல்லாம் சொல்ல முடியாதுங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு எங்கம்மா என்னய டென்த் வரைக்கும் படிக்க வெச்சாங்க. கை நிறையச் சம்பாரிப்பேன்னு கனவு கண்டாங்க. நானுந்தான். ஆனா வேலை கிடைக்கல்லே. அதனால நான் தையல் கத்துக்கிட்டேன். எங்கம்மா நாலு பாப்பார வீடுங்கள்ள பத்துப் பாத்திரம் வெளக்கிச் சம்பாரிச்சுக்கிட்டிருந்தவங்க. அப்படி ஒரு வறுமையிலேயும் என்னயப் படிக்க வைக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டாங்கங்கறது எனக்குத்தாங்க தெரியும்.”

       “அதெல்லாந்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கியே? இப்ப என்ன புதுசா? அதையெல்லாம் யாரு இல்லேன்னாங்க? அந்தத் தையல் மிஷின் நீ உபயோகப்படுத்திக்கிட்டிருந்ததுதானே? உனக்காகத்தானே அதை உங்கம்மா வாங்கினாங்க? அது உன்னயச் சேர்ந்ததுதானே?”

        “நான் சம்பாரிச்ச பணத்துல தனியாச் சேமிச்சு வெச்சு வாங்கியிருந்தா அது என்னுது! அப்படி இல்லைங்களே! அதை வாங்கினது எங்கம்மாதானே? குடும்பத்துக்குன்னுதான் வாங்கினாங்க. அம்புட்டுத்தான்! எனக்குன்னு சொல்லி வாங்கித்தரல்லையே?”

        அவனது பார்வை பக்கவாட்டில் அவள் மீது படர்ந்திருந்தது. விழிகளில் சின்னதாய் ஒரு சினம் குடிகொண்டிருந்தது.

        “அதை வெச்சு சம்பாரிச்சது நீதானே? நீதானே தையல் கத்துக்கிட்டே?”

         “நான் மட்டுமில்லீங்க! பத்தாவது வரையில படிச்சும் பெரயோசனமில்லேன்னு தெரிஞ்சு போயிட்டதால எங்கம்மா எந்தங்கச்சியைப் படிக்க வைக்கல்லே. அதனால அதுக்கும் தையல் சொல்லிக் குடுத்தாங்க. அதுவும்தான் ஒம்பதாம் வகுப்போட நிப்பாட்டிக்கிட்டு எனக்கு ஒத்தாசையாத் தையல் வேலை செஞ்சிச்சு. அதனால அந்த மிஷின் குடும்பச் சொத்துதானே ஒழிய, எனக்குன்னு மட்டும் வாங்கினதுன்னு சொல்ல முடியாதுங்க.” – உள்ளுக்குள் பொங்கிக்கொண்டிருந்த சினம் தன் சொற்களைத் தடிக்கச் செய்து கொண்டிருந்தது அவளுக்கே புரிய, சட்டென்று ஓர் அச்சம் அவளுள் கிளர்ந்துகொண்டது.

       “நீ ரொம்பவும் வாதாடுறே, அமுதா! பொம்பளைங்களுக்கு அது நல்ல கொணமில்லே!”

        ‘பொஞ்சாதியோட ஏழைத் தாய்க்குச் சோறு போட்டுக்கிட்டு இருக்குற ஒரு தையல் மிஷினைப் பறிக்கப் பாக்குறது மட்டும் மீசை வெச்ச ஆம்பிளைங்களுக்கு அழகாக்கும்!’ என்கிற சொறகள் அவள் வாய்க்குள் குதித்தன. ஆனால் எதிர்த்துப் பேச அச்சமாக இருந்தது.

       “என்ன, கம்னு ஆயிட்டே?”

       “நியாயத்தைச் சொன்னா வாதாட்றதாக் குத்தம் சொல்ற உங்களோட நான் என்னத்தைப் பேசுறதாம்?”

       “அப்படின்னா, நீ நியாயமாப் பேசறே. ஆனா நான் அநியாயக்காரன்றியா?” – அவன் குரலும் ஓங்கி ஒலித்தது.

       “பின்ன என்னங்க? அவங்க மூணு பேரும் சோறு திங்கணும் எந்தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகணும். எந்தம்பி படிச்சு முடிக்கணும். இதுக்கெல்லாம் ஆதாரமா இருக்கிற ஒரு சாதனத்தைக் கொண்டுவந்துடுன்னு கூசாம சொல்றீங்களே! அது நியாயமா?”

       அவளுள் கிளர்ந்த அச்சம் வினாடிக்கு வினாடி தீவிரமடைந்து கொண்டிருந்தாலும், துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவள் அவன் மீது பதிந்த தன் விழிகளை நகர்த்திக் கொள்ளாதிருந்தாள். அவளைப் பார்த்தபடி இருந்த அவன் விழிகள் சட்டென்று அகலம் கொண்டன. அவற்றிலிருந்து சிந்திய பார்வையில் ஒரு கொடூரம் தெற்றெனத் தெரிந்தது.

       “இத பாரு! இந்த மாதிரி எதிர்த்து வாயாட்றதெல்லாம் எனக்குச் சுத்தமாப் பிடிக்காது! தெரிஞ்சிச்சா? இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே தையல் மிஷினை நீ எடுத்தாறே! இல்லாட்டி நடக்குறதே வேற! ஆமா!”

       அவள் தனது ஆத்திரத்தை மட்டுப்படுத்திக்கொண்டு வாதாடுவது என்னும் முடிவுக்கு வந்தாள்: “நானும் உங்களோட தைச்சு சம்பாரிக்கணும். அதானே? அதை நிச்சயமா செய்துடலாம். ஆனா ஒண்ணு.”

       “சொல்லு.” – அவள் இறங்கி வருவதாக எண்ணிய அவனது குரல் சற்றே தணிந்திருந்தது.

       “நீங்க எனக்குன்னு ஒரு மிஷின் வாங்கிக் குடுத்துடுங்க! அதுல, நான் தூங்குற நேரம், வீட்டுவேலை செய்யிற நேரம் போக மீதி நேரம் முச்சூடும் தைச்சு சம்பாரிக்கிறேன். … என்ன சொல்றீங்க?” – குரலில் கிண்டல் தொனிக்காதிருக்குமாறு கவனமாக இருந்தாள். ஒரு வேண்டலும் கூட இருக்குமாறு பார்த்துக்கொண்டாள்.

       “கிண்டலாடி பண்றே? எங்கிட்ட அம்புட்டுக் காசு இருந்தா நான் ஏண்டி அதைக் கொண்டுட்டு வான்னு சொல்லப்போறேன்?” – முதன்முதலாக அவன்  “டி” போட்டுப் பேசியதைக் கவனித்து மனத்துள் ரோசப்பட்டாள்.

       இருந்தாலும், “கிண்டல் பண்ணல்லீங்க. மெய்யாலுமேதான் சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க!” என்றாள், சன்னமாக.

       “பேசுறதையும் பேசிட்டு ‘தப்பா எடுத்துக்காதீங்க’ன்னா சொல்றே?”

       பற்களைக் கடித்துக்கொண்டு அவன் பேசிய தினுசில் அவனது தாங்க முடியாத கோபத்தைப் புரிந்துகொண்ட அமிர்தா மவுனமானாள்.

       … வீட்டுக்குள் நுழைததும், “இன்னும் ஒரு வாரத்துல மிஷின் வந்தாகணும். தெரிஞ்சிச்சா?” என்றான் செல்லதுரை, அவளை உறுத்துப் பார்த்து. அவள் பதில் சொல்லவில்லை.

       மறு நாள், ”ஊருக்குக் கெளம்பறேங்க,” என்று அவள் சொன்ன போது, அவன் முகம் மலர்ந்து சிரித்தான்.

       “சரி. கை மிஷினா யிருக்குறதால, நீயே தூக்கிட்டு வந்துடலாம். இங்க வந்ததுக்கு அப்பால டேபிள்ல வச்சுப் பொருத்தலாம்.”

       அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை. …

       மறு நாள் தனியாக வந்து நின்ற மகளைப் பார்த்துப் பாஞ்சாலி கலவரத்துடன் புருவம் உயர்த்தினாள். அவள் பார்வை அவளையும் அறியாது அந்தத் தையல் இயந்திரத்தின் பக்கம் சென்று மகள் மீது திரும்பியது.

        “என்ன, அமுதா! நீ மட்டும் தனியா வந்திருக்கே?”

        “ஆமாம்மா. இனிமே நான் பழையபடி இங்கதான் இருக்கப் போறேன். தேவிக்குக் கல்யாணம் பண்ணணுமில்ல? தம்பியும் படிப்பை முடிக்கணும். … ஆனா ஒண்ணு, அம்மா. தேவியை ஒரு தையல்காரனுக்குக் கல்யாணம் கட்டிக் குடுத்துடாதே. அப்புறம், அவன் மிஷினை எடுத்தான்னு ஒத்தைக்கால்ல நிப்பான். அப்பால, உனக்கும் எனக்கும் சோத்துக்குக் கஷ்டமாயிடும்!” என்ற அமிர்தா இரைந்து சிரித்தாள்.                                                                         …….

…….

       

     

Series Navigationதிருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *