தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..

This entry is part 7 of 16 in the series 24 ஏப்ரல் 2016
 Raffles Statue
ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வேனேயொழிய எந்தக் கடையிலும் நுழைந்ததில்லை.

இப்போது லதா என்னை அங்கு ஓர் உயர்தர உணவகத்திற்கு இட்டுச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் ஜில்லென்றிருந்தது .வருங்கால டாக்டர் என்பதால் என் மதிப்பும் அவள் பார்வையில் கூடியதோ!

உண்மையான காதலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் என்ன வேலை? அவளைப் பொருத்தவரை காதல் உண்மையானதுதான். அவளுக்கு இது முதல் காதல். நான் இல்லாதபோது இங்கு வேறு யாரையும் காதலித்திருக்க மாட்டாள். களங்கமில்லாத அவள் முகமே அதைக் காட்டியது. அனால் இப்போது என்னுடையதை உண்மைக் காதல் என்று சொல்ல முடியுமா? எனக்கும் அது முதல் காதல்தான். அனால் தமிழகம் சென்றபின்பு தாம்பரத்தில் வெரோனிக்காவையும், கிராமத்தில் கோகிலத்தையும் அல்லவா காதலித்துள்ளேன்?

சீருடை அணிந்த பணியாளன் எங்கள் இருக்கை முன் வந்து பணிவுடன் நின்றான். கேக்கும் தேநீரும் கொண்டுவரச் சொன்னாள். அவற்றைக் கொண்டுவர பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. மூன்று வருடங்களில் சிங்கப்பூரின் வாழ்க்கைத்  தரம் உயர்ந்துள்ளது தெரிந்தது.

தேநீர் பருகியபடியே பேசிக்கொண்டிருந்தோம்.

” இங்கே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். நம்மை இங்கு யாரும் பார்க்கமாட்டார்கள். குளிர் வசதியும் உள்ளது. ” அங்கே  வந்ததற்கான காரணத்தைக் கூறுவது போன்றிருந்தது.

” ஆமாம். வெளியில் வீதியில் நின்று பேசுவதும் ஆபத்தானதுதான். யாரவது தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால் அப்பாவிடம் பற்றவைத்து விடுவார்கள். அது இப்போது தேவையில்லாதது.” ”

” உங்கள் அப்பாவை நினைத்தால் எனக்கு இன்னும் பயமாக உள்ளது. என்னால்தானே உங்களை கட்டாயமாக நாடு கடத்தி படிக்க வைக்கிறார். இப்போது நாம் மீண்டும் சந்திப்பது தெரிந்தால் அவ்வளவுதான்! ” அப்போது நாங்கள் பட்ட பாடுகளை அவள் இன்னும் மறக்கவில்லைத்தான். அப்பாவிடம் நான் நான்கு வருடங்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமா? எல்லாமே இவளுக்குத்தானே! இப்போது மீண்டும் அவருக்கு மனதில் சந்தேகம் எழாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். லதா கெட்டிக்காரிதான். முன்னெச்சரிக்கையுடன்தான் அவளும் முதல் நாளே செயல்படத் தொடங்கிவிட்டாள். நான் ஒரு மாத விடுப்பில்தான் வந்துள்ளேன். எதாவது அசம்பாவிதம் நடந்தால் படிப்பு கெடும். இருக்கும் நாட்களை மிகவும் எச்சரிக்கையுடன்தான் கழிக்கவேண்டும். இதை அவளும் புரிந்திருப்பது நல்லது.

என் கையைப் பற்றியவளாய், ” அப்போ? எப்படி இருக்கிறீர்கள்? ” ஆவலுடன் நலம் விசாரித்தாள்.

” நீ எப்படி இருக்கே? ” பதிலுக்கு நான் கேட்டேன்.

” என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு? ”

” பூரிப்பாய் இருப்பதுபோல் தெரியுது.”

” அப்படியா இருக்கேன்? உங்களைப் பார்த்ததால் அப்படி ஆகிவிட்டேனோ? ” சிரித்தபடி கேட்டாள்.

” அது சரி நான் எப்படி இருக்கேன்? ” பதிலுக்கு நானும் கேட்டேன்.

” உங்களுக்கு என்ன? மருத்துவ மாணவர். இன்னும் மூன்று ஆண்டுகளில் எம்.பி.பி. எஸ். பட்டதாரி. பின் டாக்டர்! உண்மையில் எனக்கு பெருமையாக உள்ளது! நீங்கள் மட்டும் இங்கேயே இருந்திருந்தால் நிச்சயம் மருத்துவம்தான் படித்துக்கொண்டிருப்பீர்கள். ” அவள் உணர்வுபூர்வமாகத்தான் கூறினாள்.

          ” ஆமாம். அப்படி மருத்துவம் கிடைக்காவிட்டால் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் ஆசிரியராக உயர்ந்திருப்பேன். ” நான் அப்போதே அங்கு மொழி பெயர்ப்பாளராக பணியில் இருந்தேன்.
          ” நல்ல வாய்ப்பை உங்கள் அப்பாவால் நழுவவிட்டு விட்டீர்கள். என்னையும் இங்கே தவிக்கவிட்டு போய்விட்டீர்கள். போன நீங்கள் கடிதமாவது ஒழுங்காக எழுதுகிறீரா என்றால் அதுவும் இல்லை. “
          ” மருத்துவப் படிப்பு அப்படி. இரண்டாம் மூன்றாம் ஆண்டுகள்தான் மிகச்  சிரமமான ஆண்டுகள். அதனால்தான் அடிக்கடி கடிதம்கூட எழுத முடியவில்லை. ” இது சுத்தப் பொய்தான். ஆனால் வேறு என்னதான் சொல்வது?
          ” இதை நான் நம்பலாமா? உண்மையில் நம்புவதாக இல்லைதான். என்ன செய்வது? நம்பித்தானே ஆகவேண்டியுள்ளது? ஒருவேளை  அங்கு வேறு ஏதும் புதிய தொடர்பு உண்டாகியிருக்குமோ என்றுகூட நான் நினைப்பதுண்டு. பின் நானாகவே அப்படியெல்லாம் இருக்காது என்று சமாதானம் சொல்லிக்கொள்வேன். ”  அவள் சொன்னது கேட்டு மனதில் குற்ற உணர்வு உண்டாயிற்று. அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
          ” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்தியதால் உடனுக்குடன் கடிதம் போட முடியவில்லை. ஆமாம். எனக்குதான் படிப்பு. உனக்கு என்ன ஆனது? “
         ” உங்களுக்கு படிப்பு. எனக்கு வேலை. தபால் நிலையம் செல்ல நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான். வேறு எந்த காரணமும் இல்லை. நான் இங்கு வேறு யாரையும் காதலிக்கவில்லை. இது உண்மை. “
          நான் பதில் கூறவில்லை.
          ” சரி. இனிமேலாவது மீண்டும் ஒழுங்காக கடிதம் எழுதுவோம்.என்ன? ” என்று கேட்டவாறு என்னை நோக்கினாள்.
          ” ஆமாம். எப்படியாவது மாதம் ஒரு கடிதமாவது எழுதுவோம். “
          ” உண்மையாகவா? சரி இனிமேல் அப்படியே செய்வோம். “

” வீட்டில் அனைவரும் சுகமா? நான் அவளிடம் கேட்டேன்.

” அனைவரும் நலம். என் அக்காளுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கலாம். பேச்சுவார்த்தை நடக்கிறது. ”

” நல்ல செய்திதானே? ” நான் அவளைப் பார்த்துக்  கேட்டேன்.

” நல்ல செய்திதான். அனால் …? ”

” என்ன ஆனால்/”

” அடுத்தது என் திருமணம் பற்றிப் பேசமாட்டார்களா? அப்போ நான் என்ன சொல்வது ? ”

” என்ன சொல்வாய்? ”

” இப்போ வேண்டாம் என்பேன். ”

” காரணம் கேட்டால்? ”

” சொல்லமாட்டேன். ”

” இது நடக்கிற காரியமா? ”

” ஏன் நடக்காது? ”

” நான் படித்து முடித்து வர இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகலாம். அதுவரை அவர்கள் நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பர்களா? ”

” ஏன் இருக்கக்கூடாது? இது என்னுடைய வாழ்க்கை அல்லவா? இதை என் இஷ்டப்படிதான் இருக்க நான் விரும்புவேன். நீங்கள் படிக்கச் சென்றபோது என்ன சொன்னேனோ அதில் நான் இன்னும் உறுதியோடுதான் உள்ளேன்.. ” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் ‘

இது கேட்டு நான் ஒரு கணம் நிலை தடுமாறிவிட்டேன்!

உங்களுக்காக எத்தனை வருடமானாலும் நான் காத்திருப்பேன் என்று அப்போது அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் அதில் உறுதியாகத்தான் உள்ளாள். நான்தான் உறுதியாக இல்லாமல் போய்விட்டேன். இதற்கு சந்தர்ப்பச் சூழ்நிலை என்பதா? கோகிலம் இறந்துவிட்டாள். பாவம் அவள்! அனால் வெரோனிக்கா இன்னும் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள்! இங்கே இவள் இப்படிக் கூறுகிறாள்!

” என்ன திடீர் யோசனை? ” கையைக் கிள்ளினாள்.

” ஒன்றும் இல்லை. இன்னும் நான்கு வருடங்கள். அது எப்படியெல்லாம் செல்லுமோ என்று யோசித்தேன். வேறு ஒன்றுமில்லை…. சரி .. நாம் மீண்டும் எப்போது எங்கே சந்திப்பது? ”

” வீட்டுக்கு வரலையா ?”

” நிச்சயம் வருவேன். கொஞ்ச நாளாகட்டும். ”

” நான் சொல்லி வைக்கிறேன்.  நாம் சந்திக்கப்போவது யாருக்கும் தெரியாமல் இருக்கணும். அது எப்படி என்று யோசிப்போம்.”

” உன்னை எப்படி தொடர்பு கொள்வது? ”

அவள் பணி புரியும் அலுவலகத்தின் தொலைபேசி எண்களைத் தந்தாள்.

இருவரும் ஒன்றாக பேருந்து ஏறினோம்.

நண்பர்கள் ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர்ச் செல்வம் ஆகியோரையும் கண்டு மகிழ்ந்தேன். நான் மருத்துவம் படிப்பது அவர்களுக்கெல்லாம் பூரிப்பைத் தந்தது.

ஜெயப்பிரகாசம் டெலிகாம் சிங்கப்பூரில் வேலை செய்தான். கோவிந்தசாமி உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தபின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தான். பன்னீர்ச் செல்வம் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணி புரிந்தான்.

         பெரும்பாலும் மாலையில் அவர்கள் வீடு திரும்பியபின் பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையின் பின்புறம் உள்ள பந்து விளையாட்டுத் திடலில் சந்திப்போம். அங்கு தமிழ் இளைஞர்கள் சீருடை அணிந்து காற்பந்து விளையாடுவார்கள். நாங்கள் புல் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். நான்கு வருடங்களுக்குப் பின் சந்தித்தாலும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் பழையபடிதான் பேசிக்கொண்டிருந்தோம்.அவர்களைச் சந்திப்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அவர் அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. முன்பெல்லாம் அவர்களுடன் பேசுவதை அவர் விரும்பமாட்டார்.அவர்கள் என்னுடைய படிப்பைக் கேடுப்பதாகச் சொல்வார்.
          நாங்கள் பெரும்பாலும் கடந்தகாலத்தில் நடந்த சுவையான சம்பவனகளை நினைவு கூர்ந்து மகிழ்வோம். எதிர்காலம் பற்றியும் பேசுவோம். ஜெயப்பிரகாசம் சொந்தமாக தொழில் செய்யப்போவதாகக் கூறுவான். அதற்கு அவனிடன் அப்போது பணம் இல்லை.என்ன தொழில் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. கோவிந்தசாமி ஒரு எழுத்தாளனாகப் போவதாகக் கூறுவான். அவன் என்னைப் பார்த்துதான் தமிழ் முரசில் கதைகள் எழுதத் துவங்கினான். அவன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தான். அவன் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளதால் அது அவனுக்கு உதவும். பன்னீர்ச் செல்வமும் எழுத்தாளனாகப் போவதாகக் கூறினாலும் அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதணும் என்ற ஆசையாம். எங்களின் கனவுகள் நினைவாக வேண்டுமெனில் கொண்ட கொள்கையில் மாறாமல் நாங்கள் அதற்காக உழைக்கவேண்டும் என்றும் முடிவு செய்தோம்.( இது எவ்வாறு நிறைவேறியது என்பதை நேரம் வரும்போது நான் விவரிப்பேன்.)
          இருட்டிய பிறகு நாங்கள் ஓடியன் ஸ்குயரில் உள்ள சீன உணவகத்தில் டைகர் பீர் பருகியபடி சீன மீ உட்கொள்வோம். ஆனால் கோவிந்தசாமி இந்த இரண்டையும் தொடமாட்டான். அவன் பக்கத்துக்கு இந்திய இஸ்லாமிய  உணவகத்தில் பரோட்டாவும் காப்பியும் வரவழைத்து உட்கொள்வான். பால்ய நண்பர்களுடன் நாட்கள் இனிதே நகர்ந்தன.
( தொடுவானம் தொடரும் )
Series Navigationதெறிராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *