தொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்

Spread the love

திராவிட நாடு வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கைக்கு சட்ட திருத்தம் மூலம் பண்டிதர் ஜவகர்லால் நேரு தடை போட்டார். திராவிட இயக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். காங்கிரசார் கொண்டாடியதோடு கேலியும் பேசினர். திராவிட நாடா அது எங்கே உள்ளது என்று கேட்டனர். அது வெறும் மாயை என்றனர்.எங்குமே இல்லாமல்தான் பாகிஸ்தான் என்ற நாடு என்பது மதத்தின் அடிப்படையில் தோன்றியதை அவர்கள் அறியவில்லை.
திராவிடர் இனம் பற்றி இந்திய மக்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். திராவிடர் இனமும் நாகரிகமும் 5000 ஆண்டுகள் பழமை மிக்கது என்பதால் சரித்திரம் தெரியாதவர்களுக்கு அதை அறிந்துகொள்ள முடியாதுதான். பாட நூல்களில் திராவிடர் நாகரிகம் குறித்து எழுதப்படவில்லை.
மொழியியல், அறிவியல், அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியும்கூட அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இந்திய மக்களுக்கு இல்லை. எதற்கு இந்திய மக்கள்? திராவிடர் இனத்தவரே தங்களை திராவிட இனத்தவர் என்று ஒப்புக்கொள்ளவில்லையே? தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தாங்கள் அனைவரும் திராவிட இனத்தவர் என்பதை ஏற்க மறுத்தனர்.
இவர்கள் அனைவரும் ஓர் உண்மையை மறந்துபோயினர். இந்திய மக்கள் அனைவருமே திராவிடர் என்ற சொல்லுக்கு தங்களையும் அறியாமல் மரியாதை செலுத்துவதை அவர்கள் இன்றுவரை அறியாமல் இருப்பது கேலிக் கூத்தாகும்! அதற்கு நாம் வங்காளத்துக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு நன்றி சொல்லவேண்டும்.
சுதந்திர இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் தாகூர். திராவிடர் இனம், திராவிட நாடு பற்றி அவர் அறிந்திருந்தார். தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கும் திராவிடம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதனால்தான் அவர் அவர் எழுதிய இந்திய தேசிய கீதத்தில் மற்ற மாநிலங்களின் பெயர்களைச் சேர்த்தபோது இந்த நான்கையும் சேர்த்து “திராவிட ” என்று எழுதினார்.
” பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா திராவிட …” என்று அவர் தேசிய கீதம் எழுதியபோதே இந்தியாவின் தென் பகுதியை திராவிடர் நாடு என்றே கூறிவிட்டார். தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தும்போது இந்திய மக்கள் அனைவருமே திராவிடத்தையும் அங்கீகரித்தே அதற்கு மரியாதை செலுத்துகின்றனர் என்பதை இதுவரை யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள்!
திராவிட நாடு இல்லை என்பதற்காக இனிமேல் திராவிட என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வேறொரு புதிய தேசிய கீதமா எழுதுவார்கள்? ஆதலால் திராவிட நாடு என்பது இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருவதை யாராலும் மறுக்க இயலாது.
பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கத்தினரும் திராவிடர் என்ற என்ற பெயரில் முதன்முதலாக ஒரு இயக்கம் தோற்றுவித்தபோது ஒரு பெரும் தவற்றைச் செய்துவிட்டனர். அதை சுயமரியாதை இயக்கம் என்றும் பகுத்தறிவு பாசறை என்றபோதும் அதை தமிழகத்தில் மட்டுமே பறைசாற்றியது பெரிய குறையாகும். அது போன்ற கருத்துள்ள மற்ற திராவிட மாநிலங்களிலும் அதை ஆர்வமுடன் ஏற்கும் படித்த தலைவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் அங்கேயும் திராவிடக் கொள்கைகளைப் பரப்பியிருக்க வேண்டும். அங்குமட்டும் மக்கள் சுயமரியாதையுடன்தான் வாழ்ந்தனரா. அங்கெல்லாம் மூடப் பழக்க வழக்கங்கள் இல்லையா? அங்கேயும் பகுத்தறிவுச் சிந்தனை தேவையில்லையா? அப்போதெல்லாம் கேரளாவை ஆட்சி செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். நாத்திகக் கொள்கையுடைய பெரியாரும் அண்ணாவும் நம்பூதிரிபாட் போன்ற கேரளாவின் முதல்வரைச் சந்தித்து திராவிட நாடு பற்றியாவது கூறியிருக்கலாம். எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்களில் திராவிடக் கொள்கைகளைப் பரப்பியவர்கள் அதே பாணியில் ஆந்திராவில் என்.டி. ஆரையும் பயன்படுத்தியிருக்கலாம். அவருக்கும் அரசியலில் குதிக்கும் ஆர்வம் இருந்துள்ளது. தனியாகவே ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்து ஆந்திர முதல்வர் ஆனவர் என்.டி. ஆர். அப்படிச் செய்திருந்தால் திராவிடர் இயக்கம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வேரூன்றி மாபெரும் தென்னிந்திய இயக்கமாக உருவெடுத்திருக்கும்.
அப்படி திராவிட இயக்கம் வளர்ந்திருந்தால், அன்று அண்ணா பாராளுமன்றத்தில் தனி திராவிட நாடு கோரிக்கை வைத்தபோது ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக ஆதரவு தந்து குரல் கொடுத்திருப்பார்கள். திராவிட நாடு கோரிக்கைக்கும் வலுவான ஆதரவு கிடைத்திருக்கும். தடைக் சட்டம் கொண்டுவருவதற்குப் பதிலாக நேருவும் யோசித்திருப்பார். தெற்கு மாநிலங்கள் அனைத்தையும் இழ்ந்து போவதா என்றும் தடுமாறியிருப்பார். வேறு வழியின்றி ஒரு வேளை பரிசீலனையாவது செய்திருப்பார். தனித்து தமிழகம் மட்டுமே குரல் கொடுத்தால் எளிதில் சட்டத்தின் மூலம் தடை போட முடிந்தது.
செல்வராஜ் ஆசிரியர் மாலையில் என்னைப் பார்க்க வருவது எனக்கு ஒருவகையில் பயனுள்ளதாகவே அமைந்தது. அவர் தினசரி தமிழ்ப் பத்திரிகைகள் படிப்பவர். அதனால் தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை நன்கு அறிந்தவர்.
அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் உண்டாகும் மாற்றங்களை நாங்கள் ஒவ்வொன்றாக அலசி ஆராய்வோம். தமிழக மக்களிடையே இனப்பற்றையும் மொழிப்பற்றையும், அரசியல் விழிப்புணர்வையும் திராவிட இயக்க ஆட்சியின்போது அண்ணாவால் உருவாக்க முடிந்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் அரசு அலுவலங்களில் சாமிப் படங்களை அகற்றும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அலுவலகங்களில் பூஜை செய்வது தடை செய்யப்பட்டது. கோப்புகள் தேங்கி நிற்காமல் துரிதமாக நகர அதிகாரிகளின்மீது கண்காணிப்பு அதிகமானது. அதன்மூலம் அரசு இயந்திரம் சிறப்புடன் செயல்படலாயிற்று.
தமிழக மக்களின் ஒற்றுமையைக் குலைத்தது சாதி வேற்றுமை. சாதிகள் இல்லை என்பது பகுத்தறிவுப் போதனை. தந்தை பெரியார் மேடைகள்தோறும் சாதிகளை ஒழிக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். சாதியை உருவாகியவன் ஆரியன் என்று அவர் அவர்களின் வேதங்களின் மூலமே ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார். பெரியாரின் துணிவான பிரச்சாரத்தால் தமிழகத்தில் சாதிகள் பற்றிய விழிப்புணர்வு உண்டாயிற்று.
சாதியை விரட்டியடிக்க இதுவே ஏற்ற தருணம். பகுத்தறிவு சிந்தை படைத்தவர்கள் இப்போது தமிழகத்தை ஆள்கின்றனர். ஆதலால் சட்டங்கள் மூலமாகவும், அறிவுப்பூர்வமான விளக்கங்கள் மூலமாகவும் சாதியை அடியோடு போக்க இதுவே நல்ல நேரமாகவும் அமைந்தது.
சாதியை ஒழித்து அனைவருமே சமம் என்று கூறும் வகையில் அண்ணா இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் . அது சுயமரியாதைத் திருமணம். இதில் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை. இத்தகைய திருமணங்கள் நடைபெற சமய சடங்குகளும், புரோகிதர்களும், பிராமணர்களும் தேவை இல்லை.சமுதாயத் தலைவர்களின் சொற்பொழிவுகளும் மணமக்களுக்கு அறிவுரைகளும் சொல்லி பொது மேடையில் திருமணங்கள் நடைபெறலாயின.இது மாபெரும் சமுதாய புரட்சியாகும். இதன் மூலம் பல கலப்பு திருமணங்கள் நடந்தன.காதல் திருமணங்களுக்கும் ஆதரவு பெருகியது. சீர்திருத்தத் திருமணங்கள் சாதி ஒழிப்பில் முதல் படியாக மாறியது.
சுயமரியாதைத் திருமணங்களால் இன்னொரு நன்மையையும் உண்டானது. வரதட்சணைக்கு எதிராக குரல் தந்தவர் பெரியார். சுயமரியாதைத் திருமணங்களில் வரதட்சணைக்கு இடம் இல்லாமல் போனது. காதல் கலப்பு திருமணங்களிலும் அவ்வாறே வரதட்சணை கிடையாது. சமுதாயத்தில் புரையோடிய ஒரு கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சீர்திருத்தத் திருமணங்கள் உதவின.
அண்ணாவின் தலைமையின்கீழ் தமிழகம் தமிழ் மாநிலமாக மாறியது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தமிழுக்கு சிறப்பு உண்டாயிற்று.
சில நாட்களில் செல்வராஜ் என்னுடனே விடுதி உணவகத்தில் இரவு உணவு உண்டு திரும்புவார், அவர் வேட்டியும் முழுக்கை சட்டையும் அணிந்து ஒரு அரசியல்வாதிபோல் காட்சி தருவார். அவருடன் நான் அரசியல் பேசுவதாக விடுதி மாணவர்கள் நினைப்பதுண்டு. அதனால் என்னை அவர்கள் டி.எம்,.கே. என்றே அழைப்பதுண்டு!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்