தொடுவானம் 130. பொது மருத்துவம்

This entry is part 11 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

மருத்துவப் படிப்பு இப்போது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. வார்டில் நோயாளியைப் பார்த்து நோய் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டபின்  டாக்டர் புளிமூட் அது பற்றி விளக்கங்கள் கூறும்போது அந்த நோய் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ளலாம் . இரவில் விடுதியில் மருத்துவ நூலில் அந்த வியாதி பற்றி  முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. ஒவ்வொரு நோயிலும் இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் அவற்றை நார்மேன் நூலகத்தில் உள்ள மருத்துவச் சஞ்சிகைகைகள் படிப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதில் குறிப்பிடத்தக்கது பிரிட்டிஷ் மருத்துவச் சஞ்சிகை ( British Medical Journal ). இவ்வாறு படித்து தெரிந்துகொள்வது புதையல் தேடி புதிது புதிதாகக் கண்டுபிடிப்பது போன்றது.

அன்று மைட்ரல் வால்வ் சுருக்கம் பற்றி தெரிந்துகொண்டேன். இரவில் மருத்துவ நூலில் அதுபற்றி நிறைய விளக்கங்கள் தரப்பட்டிருந்தது. அதில் மைட்ரல் வால்வ் சுருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் தரப்பட்டிருந்தன. அவற்றை படித்து மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். நோயாளியிடம் அறிகுறிகள் பற்றி கேட்கும்போது அவராக அவற்றைச் சொல்லாவிட்டாலும் நாம் அது உள்ளதா என்று கேட்பது முக்கியமாகும்.

மைட்ரல் வால்வ் சுருக்கத்தால் இரத்தம் இருதயத்தின் இடது பக்க மேல் அறையிலிருந்து இடது பக்க கீழ் அறைக்குச் செல்வது தடை படும். இதனால் இரத்தம் தேக்கமுற்று பின்னோக்கிச் சென்று நுரையீரல்களில் நிரம்பும்.இதன் காரணமாக மூச்சுத் திணறல் உண்டாகும். இந்த செயல்பாட்டை நன்கு புரிந்துகொண்டால் அதனால் உண்டாகும் அறிகுறிகளும் விளங்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும் முக்கிய அறிகுறிகள் :

* மூச்சுத் திணறல் – இது பளுவான வேலை செய்யும்போதும் படுக்கும்போதும் அதிகரிக்கும்.

* களைப்பு – இதுவும் பளுவான வேலையின்போது உண்டாகும்.

* கால்களில் வீக்கம்.

* நெஞ்சு படபடப்பு

* தலை சுற்றுதல், மயக்கம்.

* கடுமையான இருமல் – சளியில் இரத்தம்.

* நெஞ்சு வலி

* கடும் தலைவலி

இத்தகைய அறிகுறிகளை ஒன்றுவிடாமல் மனதில் பதியவைத்து நோயாளிகள் சொல்ல மறந்துபோனாலும் நாமே அவர்களிடம் கேட்க வேண்டும். இது மாதிரி ஒவ்வொரு நோய்க்கும் அதற்கான அறிகுறிகள் உள்ளன. அவை அனைத்தையும் படித்து விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் நோயை சரியாக நிர்ணயம் செய்ய உதவுபவை.

          இப்படி மைட்ரல் வால்வ் சுருக்கம் பற்றி படிக்கும்போது அதை ஏற்படுத்திய  காரணம் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். அப்போது ரூமேட்டிக் காய்ச்சல் பற்றி வேறு பகுதியில் படித்து தெரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நோயும் இன்னொன்றின் தொடர்புடையதாக இருக்கும். ரூமேட்டிக் காய்ச்சல் தனியாகவே பெரும் பிரிவு கொண்டது. அதை மருத்துவ நூலில் புரட்டிப் பார்க்கலாம்.
          நாங்கள் பயன்படுத்திய மருத்துவ நூலின் பெயர், ” Davidson’s Principles and Practice Of Medicine ” என்பது. இதை நாங்கள் டேவிட்சன் என்றே அழைப்போம். தடிமனான இந்த நூல் 1032 பக்கங்கள் கொண்டது. இதை நெஞ்சோடு அணைத்து எடுத்துச் செல்வது தனிச் சுகமாகும்.
          இந்த டேவிட்சன் நூலில் மருத்துவத்தின் அனைத்துப் பகுதிகளும் உள்ளன. அதில் நாங்கள் இப்போது, இருதய இரத்தக்குழாய்களின் நோய்கள் ( Diseases of the Cardiovascular System ) பயில்கிறோம்.இது பெரிய பிரிவாகும். இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வார்டுகளில் பரிசோதித்துப் பழகிக்கொள்ளவேண்டும். அப்போது வார்டு மருத்துவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதயவியல்  ( Cardiology ) மருத்துவத்தில் ஒரு முக்கிய  பிரிவாகும்.
          இதுபோல் நுரையீரல் நோய்கள் ( Diseases of the Respiratory System ), வயிறு குடல் கணைய நோய்கள் ( Diseases of the Alimentary Tract and Pancreas ), கல்லீரல் பித்தப்பை நோய்கள் ( Diseases of the Liver and Biliary System ), சிறுநீரகம், பிறப்புறுப்பு – சிறுநீரகக் குழாய் நோய்கள் ( Diseases of the Kidney and Genito- Urinary System ), அகச்சுரப்பி வளர்சிதை நோய்கள் ( Endocrine and Metabolic Diseases ), இரத்த நோய்கள் ( Diseases of the Blood ), இணைப்புத் திசுக்கள் எலும்புகள், மூட்டுகள் நோய்கள் ( Diseases of Connective Tissues , Bones and Joints ), நரம்பு மண்டல நோய்கள் ( Diseases of the Nervous System ), தோல் நோய்கள் ( Diseases of the Skin ),  மனோவியல் ( Psychiatry ), புற்று நோய்கள் ( Oncology ), தொற்று நோய்கள் ( Diseases due to Infection ), நஞ்சுகள்  (Poisons ) என்னும் பல பிரிவுகள் கொண்டது பொது மருத்துவம். இவை அனைத்தும் டேவிட்சன் நூலில் அழகாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இதன் அனைத்து பக்கங்களையும் படித்தாலே போதுமானது – மருத்துவம் பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ளலாம்! இந்த நூலை நாங்கள் இரண்டு வருடங்கள் படிக்கவேண்டும்.
          நூலின் துவக்க அதிகாரங்களில்  நோயில்  மரபணுக்களின் பங்கு ( Genetic Factors in  Disease ),  நோயில் உணவின் தன்மைகள் ( Nutritional Factors in Disease ) , நோயில் சீதோஷ்ணமும் சுற்றுச்சூழலும்  ( Climatic and Environmental Factors in Disease ) என்னும் பொதுவான பகுதிகள் காணலாம். அவற்றில் மரபணுக்கள் பகுதி படித்து புரிந்துகொள்ள சிக்கலாக இருக்கும். பலமுறை படித்தால்தான் ஓரளவு புரியும். மற்ற பகுதிகள் அனைத்தும் பொது அறிவுக் கட்டுரைகளை படிப்பது போன்றிருக்கும்.
          டேவிட்சன் மருத்துவ நூலில் அனைத்துமே நீண்ட கட்டுரை வடிவில்தான் இருக்கும். ஆகவே படிக்கும்போதே நினைவில் வைத்திருக்க வேண்டியவற்றை கோடுகள் போட்டுக் கொள்வேன். அது போதாதென்று அன்றாட பாடங்களை தனி நோட்டிலும் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்வேன். அதை மருத்துவமனைக்கும் கொண்டுசெல்வேன். அவற்றைத் திரும்பத்திரும்பப்  புரட்டிப் பார்த்தால் மனதில் பதிந்துவிடும்.
          இப்படி அன்றாடம் மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்ப்பதுமாக இரவில் விடுதி அறையில் அந்த நோய் பற்றி டேவிட்சன் நூலில் படிப்பதுமாக மருத்துவப் பாடம் தொடர்ந்தது.
          டாக்டர் மில்லர் இதயவியல் குறித்த பாடங்களை வகுப்பறையில் விரிவுரைகள் மூலமாக சொல்லித்தந்தார். டாக்டர் புளிமூட் அவற்றை வார்டுகளில் செயல் முறையில் கற்றுத்தந்தார். நான் விடுதி அறையில் அவற்றை டேவிட்சன் நூலில் படித்து மனதில் பதியவைத்துக்கொண்டேன். இதுபோன்று ஒவ்வொரு நோயாக இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். இதைச் சொல்வது எளிதாக இருந்தாலும் ஒழுங்காகச் செயல்படுத்துவது சிரமமானது.  பல வேளைகளில் விடுதியியில் அன்றைய பாடங்கள் கொண்ட பகுதியைப் படிக்க முடியாமல் போகும். பின்பு படிக்கலாம் என்ற நிலையும் உண்டாகும். காலையிலிருந்து மாலை வரை மருத்துவமனையில் கழித்துவிட்டு விடுதி திருப்புவதால் களைப்பாகவும் இருக்கும். குளித்துவிட்டு நண்பர்களுடன் ஆரணி ரோட்டில் வெகுதூரம் நடந்துவிட்டு திரும்பியபின் இரவு உணவு முடித்துக்கொள்வேன். இரவு எட்டு மணிக்குமேல் நள்ளிரவு வரைதான் படிக்கும் நேரம். அந்த நேரத்தில் கொஞ்ச நேரம் சீட்டாடுவதில் கழியும். அது சிலரின் அறையில் நடக்கும். சில நேரங்களில் கேரம் விளையாடுவோம். பாடநூல்களுக்கு இடையில் நாவல்களும் படிப்பேன்.  சிறுகதையும் எழுதுவேன். எப்போதாவது கடிதங்கள் எழுதுவேன்.
           மருத்துவப் படிப்பில் வெறும் பொது மருத்துவம் மட்டும் பயில்வது போதாது. அதனுடன் சேர்ந்து அறுவைச் சிகிச்சையும் ( Surgery ) இரண்டு வருடங்கள் பயில வேண்டும்.
அறுவைச் சிகிச்சை, பொது மருத்துவத்தை விட பன்மடங்கு கடினமானது!( தொடுவானம் தொடரும் )

Series Navigationதிருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *