தொடுவானம் 172. புது இல்லம்

கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கேயே எனக்கு ஓர் இருக்கையும் மேசையும்  தரப்பட்டது. இனிமேல் அங்கு அமர்ந்துதான் நான் கண் சிகிச்சை செய்வேன். வேலை நேரம் காலை ஒன்பது முதல் மலை ஐந்து வரை.மதியம் ஒரு மணி நேரம் உணவு அருந்த வெளியில் சென்று வரலாம்.

நான் முதல் நாளே நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். அனைத்துமே கண் தொடர்புடைய நோய்கள்தான். கூடுமானவரை நானே சமாளித்தேன். தெரியாதவற்றை அருகில் இருந்த மருத்துவர்களிடம் கேட்டுத்  தெரிந்துகொண்டேன். அவர்களில் யாரும் கண் மருத்துவ பட்டதாரிகள் இல்லை. அவர்கள் மூவரும் என்னைப்போன்று எம்.பி.பி,எஸ். மருத்துவர்கள்தான். ஆனால் இங்கேயே பயிற்சி பெற்று சில காலமாக பணிபுரிபவர்கள்.

இவர்கள் முக்கியமாக கண்ணில் புரை சிகிச்சை செய்கிறார்கள். இது வயதானவர்களுக்கு உண்டாகி பார்வையை இழக்கச் செய்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. இவை அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.  இவர்களை படுக்கையில் ஐந்து நாட்கள் வைத்திருப்பார்கள். அப்போது இலவசமாக சிகிச்சையும் உணவும் வழங்கப்படுகிறது. இதனால் உண்டாகும் அனைத்து செலவுகளையும் ஜெர்மனியில் உள்ள கிறிஸ்டோஃ பல் பிளைண்டன் மிஷன் என்னும் தொண்டு நிறுவனம் வழங்குகிறது.வருடத்தில் நான்கு முறை இந்த நிதி வந்து சேரும். அந்த ஜெர்மன் நாட்டு தொண்டு
நிறுவனம் மொத்தமாக பணம் அனுப்பிவிடும்.அப்படி வரும் பணம் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இங்கு வந்து சேருகிறது. இங்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சையின் பட்டியல் புகைப்படங்களுடன் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

          புரை என்பது கண்ணுக்குள் உள்ள இயற்கையான கண்ணாடி வயதுகாரணமாக முற்றி அதனுள் ஒளி புகமுடியாமல் போவது. அதனால் காணும் காட்சிகள் விழித்திரையில் விழுவதில்லை.  இதனால் கண் பார்வையைஇழந்துபோகின்றனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் அந்த கண்ணாடியை அப்புறப்படுத்தவேண்டும். அதற்கு மாறாக செயற்கை மூக்குக் கண்ணாடி வழங்குகிறோம். இதை இலவசமாகச் செய்து ஏழை எளியோருக்கு பார்வை வழங்கவே ஜெர்மன் நாட்டவரிடம் நன்கொடை வாங்கி அதை இங்கு அனுப்பி வைக்கிறது கிறிஸ்டோ ஃபல் பிளைண்டன் மிஷன். இதுபோன்று இந்தியாவிலுள்ள பல மிஷன் மருத்துவமனைகளுக்கு நிதி அனுப்புகிறது. வேறு பல வளரும் நாடுகளுக்கும் இந்த சமுதாயத் சேவை நடைபெறுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இலவச கண் மருத்துவச் சேவை வயதானவர்களுக்குத்தான். மற்றவர்களுக்கும், கண்ணில் வேறு கோளாறுகள் உள்ளவர்களுக்கும் சிகிச்சைக்கு பணம் வசூலிக்கப்படும். அவர்களில் பெரும்பாலோர் சாதாரண கண்வலி, கண்ணில் குளுக்கோமா , கண்ணில் புண், கண்ணில் காயம், பார்வைக் குறைவு போன்றோர்கள் இருப்பார்கள். இவர்களில் பார்வை குறைவானவர்களை சோதித்துப் பார்த்துவிட்டு அவர்களுக்குத்  தேவையான மூக்குக்  கண்ணாடிகள் வழங்குவோம். அதில் வரும் வருமானம் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பார்வை குறைவு பட்டோருக்கும், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் விழித்திரைகள் பரிசோதிக்கப்படும். இவர்களுக்கு கண்ணில் மருந்து ஊற்றி அரை மணி நேரம் அமரச் சொல்வோம்.பின்பு விழித்திரை பார்க்கும் ஆஃப்தேல்மோஸ்கோப்  என்னும் கருவி மூலமாக கண்ணுக்குள் உள்ள விழித்திரையைப் பார்ப்போம். அங்கே சில மாற்றங்கள் இருப்பின் அதற்கேற்ப மருந்துகள் தந்து சிகிச்சை செய்வோம்.இந்தப் பரிசோதனை பொது மருத்துவத்தில் மிகவும் முக்கியமானது.ஆதலால் இங்கிருக்கும்போதே இதை நிறைய செய்து பழகிக்கொள்ளலாம்.பின்னாளில் அது பயன்படும். அதுபோன்றே பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதித்து கண்ணாடி வழங்கும் முறையும் இங்கு கற்றுக்கொள்ளலாம். அதோடு புரை அகற்றும் அறுவை சிகிச்சையையும் இங்கு கற்றுக்கொள்ளலாம்.இங்கேயே பயிற்சி பெற்றவர்கள்தான் இவற்றையெல்லாம் செய்துவருகின்றனர். அவர்கள் போன்று நானும் அதில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.இவை அனைத்துக்கும் டாக்டர் பிச்சை ராபர்ட்டின் உதவி தேவை. அவர்தான் தலைமை மருத்துவர்.

அன்று மாலை ஐந்து மணிக்கு வேலை முடிந்தது. ஓட்டுநர் ஆல்பர்ட் என்னைத் தேடி வந்தார். எனக்கு தங்கும் வீடு தந்துள்ளதாகவும் அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவருடன் நான் அறைக்குச் சென்று சாமங்களை எடுத்துக்கொண்டோம். அவற்றை ஊர்தியில் ஏற்றினோம்.

நாங்கள் போத்தனூர் செல்வதாகக் கூறினார்.

” போத்தனூர் என்பது எங்கே உள்ளது? ” நான் அவரிடம் கேட்டேன்.

” இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரம். அது ஒரு சின்ன டவுன். ” இது அவரின் பதில்.

” எதற்கு அவ்வளவு தூரத்தில்  நான் தங்கவேண்டும்? நான் அங்கிருந்து எப்படி வேலைக்கு ஒன்பது மணிக்கு வருவது? சிரமமாக இருக்காதா? ” இது என்னுடைய கேள்வி.

” அங்கிருந்து டவுன் பஸ் உள்ளது. அரை மணி நேரத்தில் வந்துவிடலாம். ”

” அங்கே மருத்துவமனைக்குச்  சொந்தமான வீடுகள் உள்ளனவா?

” அங்கெ ஒரு பெரிய மருத்துவமனையே உள்ளது. அனால் அது இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. அங்குதான் சில மருத்துவமனை ஊழியர்கள் குடியிருக்கிறார்கள்.. அங்கேதான் உங்களுக்கும் வீடு தரப்பட்டு உள்ளது. காலையிலேயே நீங்கள் புறப்பட்டுவிட்டால் கோயம்புத்தூரில் பசியாறிவிடலாம். மதிய உணவையும் அங்கேயே சாப்பிட்டுக்கொள்ளலாம். இரவுக்கு போத்தனூரில் உள்ள கடைகளில் சாப்பிடலாம். ”

” அங்கெ கடைத்தெருவுகள் உள்ளதா?”

” பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்தான் உள்ளது. கடைத்தெருவுகள் அங்கே உள்ளன. ”

” தங்கும் இடம் எப்படி? ”

” நீங்கள் வந்து பாருங்கள். உங்களுக்கு நிச்சயமாக பிடித்துவிடும். அவவ்ளவு அழகான கட்டிடங்கள். சுற்றிலும் மரம்,செடி கொடிகள். ஒரு பூங்காவனம்போல் காட்சி தரும். ”

அது கேட்டு என்னுடைய ஆவல் அதிகமானது.

கோயம்புத்தூர் நகர வீதிகளைத் தாண்டி, கிராமப்புற சாலையில் ஊர்தி சென்றது. பசுமையான கிராமங்களைக் கடந்து சென்றோம். மாலைத் தென்றல் குளுகுளுவென்று வீசியது. அந்தப் பிரயாணம் மிகவும் ரம்மியமாக மாறியது! கோயம்புத்தூரில் இயற்கையிலேயே  அதிகம் வெப்பம் இல்லாமல் இருந்தது. வேலூர் போன்று அதிகமான வெப்பம் இங்கே இல்லை. மேற்கு தொடர் மலைகள் சமீபத்தில் இருந்ததால் கேரளா போன்று குளுமையும் இருந்தது.

ஒரு பெரிய வளாகத்தினுள் ஊர்தி நுழைந்தது. ” போத்தனூர் கண் மருத்துவமனை ” என்ற பெயர்ப் பலகை நுழை வாயிலில் காணப்பட்ட்து.

சதுர வடிவில் வார்டுகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. ஊழியர்களுக்கான குடியிருப்புகள் சில காணப்பட்டன. அவற்றில் ஓரிரு வீடுகளில் சிலர் குடியிருப்பது தெரிந்தது.அனால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அந்த வளாகம் வெறிச்சோடி கிடந்தது.

நான் தங்கும் இல்லம் வார்டின் மூலையில் இருந்தது. பெரிய கூடமும், சமையல், குளியல் அறைகளும் இருந்தன. அப் பகுதியில் வேறு யாரும் குடியிருக்கவில்லை. அந்த அமைதியான சூழல் எனக்குப் பிடித்திருந்தது. படிக்கவும் எழுதவும் மிகவும் ஏற்ற இடம்.

சாமான்களை கூடத்தில் வைத்தபின்பு ஆல்பர்ட் கோயம்பத்தூர் திரும்ப தயார் ஆனார்.

” ஆல்பர்ட். இவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடங்கள் இப்படி வீணாகக் கிடக்கிறதே. இதன் காரணம் என்ன? ” அவரிடம் கேட்டேன்.

” எப்போதாவது இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினால் இங்கே நோயாளிகளைச்  சேர்ப்பார்கள். அப்போது டாக்டர்களும் மற்றவர்களும் இங்கு வருவார்கள். தனியாக இங்கே ஒரு கண் மருத்துவமனை ஆரம்பிக்க உள்ளார்கள். என்ன காரணமோ தெரியலை. அது தாமதமாகிறது.” அவர் விளக்கம் தந்தார்.

நான் அந்த ஊர்தியிலேயே ஏறிக்கொண்டு அவரை ஓர்  உணவகம் கொண்டு விடச் சொன்னேன். அது அருகில்தான் இருந்தது. அங்கு மாலை சிற்றுண்டி உண்டோம்.

இனி இங்கே வரலாம். காலை உணவையும் இரவு உணவையும் இங்கேயே உண்ணலாம். ஆல்பர்ட் விடை பெற்றார். நான் என்னுடைய புது இல்லம் திரும்பினேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்கவிதைகள்