தொடுவானம் 177. தோழியான காதலி.

This entry is part 3 of 16 in the series 9 ஜூலை 2017

 

          அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன் நான் கல்லூரி சென்றபின் அங்கு உண்டான அனுபவங்களும் முக்கிய காரணம் எனலாம். ஒரு பெண்ணை மறக்க வைக்க இன்னொரு பெண்ணால் முடியும் என்பது என்னைப் பொறுத்தவரையில் உண்மை. அதனால்தான் அவள் அப்படி சொன்னது கேட்டு நான் அவள் மீது கோபமா வெறுப்போ கொள்ளவில்லை. இப்போது அவள் வேறொருவனின் மனைவியாகிவிட்டாள்.  என் முதல் காதலி என்றாலும் என்னுடைய முன்னாள் காதலி ஆகிவிட்டாள்.
          அவளும் எனக்காக காத்திருக்காமல், என்னிடம் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டது பற்றி கவலை கொண்டதாகத் தெரியவில்லை.தயங்கியபடி சொன்னாளேதவிர கவலையோடு சொல்லவில்லை. சர்வசாதாரணமாக அதை சொல்லிவிட்டாள். என்னுடைய மனைநிலைதான் அவளுக்கும் என்று எண்ணுகிறேன். நான் நீண்ட நாட்களாக கடிதம் எழுதவில்லை என்பதால் என் மீது அவளுக்கும் நம்பிக்கை இல்லாமல் போயிருக்கலாம். நான் கல்லூரியில் வேறு பெண்ணை விரும்பியிருக்கலாம் என்று அவள் எண்ணியிருக்கலாம். ஆகவே ஒரே மனநிலையில்தான் அன்று சந்தித்திருக்கிறோம்.
          ” மருத்துவப் படிப்பு முடிந்துவிட்டதா? ” அவள் ஆர்வமுடன் கேட்டாள்.
          “: ஆம் . இப்போது நான் கோயம்புத்தூரில் டாக்டராக பணிபுரிகிறேன். “
          ” உங்களை டாக்டராகப் பார்க்கவேண்டும் என்று எவ்வளவு ஆர்வமுடன் இருந்தேன்! பார்க்கும்போது நான் உங்களுக்குச் சொந்தமாக இல்லையே! உங்களை இப்படி இழந்துவிட்டேனே! ” சோகத்துடன் கூறினாள்.
          ” ஏன் இப்படி செய்தாய்? ” அவளைக் கேட்டேன்.
          ” நான் ஒன்றும் செய்யவில்லை. எனக்கும் உங்களுக்கும் ஒரே வயது. நீங்கள் ஆண். இன்னும் காத்திருக்கலாம். ஆனால் நான் பெண். என் திருமணம் தாமதமானால் என் தங்கைகளின் திருமணம் தடைபடும். அதனால் பெற்றோர் வற்புறுத்தல் . நீங்களும் என்னைத்  தொடர்புகொள்ளவில்லை. ” அவள் சமாதானம் சொன்னாள்.
          ” நான் எப்படி தொடர்பு கொள்வது? நீங்கள்தான் ஹெண்டர்சன் மலையை விட்டு வேறு இடம் சென்றுவிடடீர்களே? எனக்கு உன் புது முகவரி எப்படி தெரியும்.? நீதானே உன் புது முகவரி தந்திருக்கவேண்டும்? “
          ” அப்போதுதான் எனக்கு திருமணம் ஏற்பாடாகியது. அதை எப்படி உங்களிடம் சொல்வது  என்ற தயக்கம். நீங்கள் இன்னும் படித்துக்கொண்டிருந்தீர்கள். இத்தகைய நிலையில் எனக்கு திருமணம்  நடந்துவிட்டது. நான் என்ன செய்வது? நம் காதல் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை எனக்கு உள்ளது. உங்களுடைய ஏமாற்றம்  எனக்குத்  தெரியுது. ஆனால் இதற்கு நாம் இருவருமே காரணம்தான். நான் மட்டுமல்ல. ” அவள் சோகத்துடன்தான் கூறினாள்.
          நான் கொஞ்ச நேரம் மெளனம்  சாதித்தேன்.
          அவள் என்னுடைய கரத்தைப் பற்றி, ” என்ன யோசனை? என் மீது கோபமா? நான் ஏமாற்றிவிட்டேன் என்று எண்ணுகிறீரா? ” அவள் கண் கலங்கினாள்.
          ” அப்படி இல்லை. இது முழுக்க முழுக்க சந்தர்ப்பச் சூழ்நிலை. தொலைதூர பிரிவு நம்மை இப்படி பிரித்துவிட்டது.  நீ எனக்காக காத்திருந்தாலும் என்னுடைய அப்பா நிச்சயம் நம்முடைய திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார். ” நான் உண்மையைக் கூறினேன்.
          ” அமாம். எனக்கும் அந்த பயம் இருந்தது. அவர் இங்கே இருந்தபோது நமக்கு எவ்வளவு தடைகள் போட்டார் என்பதை நான் நினைப்பதுண்டு. அவரை நினைத்தால் எனக்கும் நாம்  ஒன்றுசேர்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போனது. அதற்காக நான் உங்களை மறந்துவிடவில்லை. ஒரு வேளை சேர்வோம் என்றுதான் நம்பினேன். அனால் நீங்களும் ஆர்வம் காட்டவில்லை. நானும் அதை எண்ணி கடிதம் போடாமல் இருந்துவிட்டேன். நான் மீண்டும் சொல்கிறேன். தவறு நம் இருவர் மேலும்தான் உள்ளது. நான் உங்களை மட்டும் குறை சொல்லவில்லை. நானும் ஒரு வகையில் உறுதியாக இல்லை. ” அவள் மேலும் உண்மையான நிலையை விளக்கினாள்.
          அவள் பாவம். அவளின் நிலைமை எனக்கு நன்கு தெரிந்தது. பெற்றோரையும் தங்கைகளையும் இன்னும் எத்தனை காலத்திற்கு காக்கவைக்க முடியும். அவளும் எதையும் மறைக்காமல் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையை என்னிடம் கூறுகிறாள். நான் இன்னும் அவளை துன்புறுத்த விரும்பவில்லை.
          சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் நாங்கள். பால்ய வயது பழக்கம் காதலாக மாறியது. அப்பாவுக்கு அது தெரிந்ததும் ஆவேசமாகத் தடுத்தார். என்னை கடுமையாக அடித்தார். அதைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டே ஓடினேன். பின்பு போலீஸ் பாதுகாப்புடன்தான் உயர்நிலைப்பள்ளியின் இறுதியாண்டை முடித்தேன். உடன்  சிங்கப்பூர் ” ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ் ” பத்திரிகையில் மொழி பெயர்ப்பாளர் வேலை கிடைத்தது. ஆனால் அதையும் அவர் தடை செய்தார். நான் சிங்கப்பூரிலேயே தொடர்ந்து படிக்க  விரும்பினேன். ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தி மருத்துவம் பயிலவேண்டும் என்று தமிழகத்துக்கு அனுப்பிவைத்தார். நாங்கள் அதனால் பிரிந்தோம். காத்திருக்கலாம் என்றுதான் சபதம் கொண்டோம். ஆனால் அது நிறைவேறாமலே போனது. இப்போது அவள் வேறொருவனுக்கு சொந்தமாகிவிட்டாள். இது எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் மறக்க இயலாத சோகமே. இருவருக்கும் இதுவே முதல் காதல். முதல் காதலை எளிதில் மறக்க முடியாது என்பார்கள். அது எதுவரை உண்மை என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
          நேரம் ஆகிக்கொண்டிருந்தது. அவள் வீடு செல்லவேண்டும். இனி அவளைப்  பற்றி அறிந்துகொள்ள முற்பட்டேன்.
          ” ஆமாம். அவரை எப்படி உனக்குப் பழக்கம்? ” கவலையோடு கேட்டேன்.
          ” கொஞ்ச நாள்தான் பழக்கம். நேராக வீடு வந்து பெண் கேட்டார்கள்.”
          ” காதலித்தீர்களா? “
          ” இல்லை. கொஞ்ச நாள்தான் பேசிக்கொண்டோம். “
          ” என்ன வேலை?’
          ” இராணுவத்தில் உள்ளார் . “அது கேட்டு எனக்கு ஒருவித அச்சம் உண்டானது. நாங்கள் இப்படி சந்திப்பது தெரிந்தால் என்னாவது?
          நான் உடன் ஏதும் சொல்லவில்லை.
          ” என்ன மீண்டும் மெளனம் ? இராணுவம் என்றதும் பயமா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் நல்லவர். சாதுதான். “
          ” இப்போ எங்கே இருக்கிறீர்கள்? “
          ” காமன்வெல்த் ட்ரைவில்தான். வீட்டுக்கு வருகிறீரா? அவரை அறிமுகம் செய்கிறேன். “
           ” இல்லை. இப்போது வேண்டாம். பின்பு பாப்போம். “
          ” உங்கள் திருமணம் பற்றி அப்பா ஒண்ணும் சொல்லலையா? “
          ” பெண் பார்க்கதான் இங்கே அனுப்பியுள்ளார். “
          ” பெண் பார்க்கவா? யாரை? “
          ” உன்னை அல்ல. வேறு பெண்ணை . “
          ” வேறு பெண்ணா? அது யார்? “
          ” லாபீசில் என்னுடைய அக்காள் மகள் .”
          ” பெண் எப்படி? . சிக்கிரம் அவளையே மணந்துகொள்ளுங்கள்.
          ” சின்ன பெண்..”
          ” என்ன படித்திருக்கிறாள்? “
          ” எஸ்.பி. எம். “
          ” உங்களுக்கு பிடித்துள்ளதா? “
          ” நீதான் எனக்கு இல்லை என்று ஆகிவிட்டதே? “
          ” ஏன் அதையே சொல்கிறீர்கள்? அதுதான் முடிந்துவிட்டதே. இனி அதைப் பற்றி பேசி என்ன பயன்? ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். அந்த பெண்ணை உங்களுக்குத் பிடிக்குதா? “
          ” ஆமாம். “
         ” அப்போ இன்னும் தாமதம் ஏன். சீக்கிரம் அவளையே மணந்து கொள்ளுங்கள். திருமணத்துக்குப் பிறகு இருவரும் வீட்டுக்கு வாருங்கள். நாம் நால்வரும் நல்ல குடும்ப நண்பர்களாக இருப்போம். “
          மனைவியாக இருக்க வேண்டியவள் இப்போது நல்ல தோழியாக இருக்கலாம் என்கிறாள்! நல்ல விநோதம்தான். நானும்  சரி என்றேன்.
          லதா இப்போது என் வாழ்விலிருந்து வெளியேறிவிட்டாள். அவளே என்னை லாபீஸ் பெண்ணை மணந்துகொள்ளச் சொல்கிறாள். மணந்துகொண்டபின்பு குடும்ப நண்பர்களாக இருக்கலாம் என்கிறாள். மணமானாலும் நாங்கள் இருவரும் நல்ல நட்புடன் பழகலாம் என்பது அவளுடைய எதிர்பார்ப்பு.  என்னுடைய முன்னாள் காதலி இப்போது எனக்குத்  தோழியாகிவிட்டாள்!
          இனி நான் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. அப்பா சொற்படி கேட்டு லாபீஸ் பெண்ணையே மணந்துகொள்ளவேண்டியதுதான். நான் சரி என்று சொல்லிவிட்டால் அப்பா மகிழ்வார்.
          ” அப்புறம்? நேரம் ஆகிறது. நாம் செல்வோமா? நாம் ஒரே பஸ்சில்  செல்லலாம். ”  என் சிந்தனையைக் கலைத்தாள் லதா.
          ” சரி. பிறகு பார்ப்போம். ” நான் எழுந்தேன்.
          பேருந்தில் அருகருகே அமர்ந்துதான் பிரயாணம் செய்தோம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20ஒரு சொட்டுக் கண்ணீர்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *