தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை

This entry is part 13 of 19 in the series 31 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

202. மருத்துவமனையில் முதல் பிரச்னை

முழு மூச்சுடன் வேலையில் கவனம் செலுத்தினேன். பகலில் வார்டுகளிலும் வெளிநோயாளிப் பகுதியிலும் நோயாளிகளிடம் கழித்தேன். மாலையில் சில நாட்களில் தாதியர் பயிற்சிப் பள்ளியில் மாணவிகளுக்கு மருத்துவ வகுப்பு நடத்தினேன்.அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் எடுத்தாலும் தமிழிலும் விளக்கம் அளித்து எளிமைப் படுத்தினேன். மருத்துவ நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துச் செல்வேன்.கரும்பலகையில் படங்கள் வரைந்து விளக்குவேன். மொத்தம் நாற்பது மாணவிகள் இருந்தனர். என்னுடைய வகுப்பில் அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பயின்றனர். அவர்களை வார்டுகளில் பார்க்கும்போது நோயாளிகளை வைத்து வகுப்பில் சொன்னதை மேலும் விளக்குவேன். ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலையும் அந்த வகுப்புகளின்மூலம் நான் வளர்த்துக்கொண்டேன்.
சில நாட்களில் விழியிழந்தோர் பள்ளியில் உள்ள பியூலா இல்லம் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பேன். அங்கு கண் தெரியாத குழநதைகள் என்னுடைய குரலை அடையாளம் கண்டுகொண்டு , ” டாக்டர்…. டாக்டர் .. ” என்று அழைத்தவண்ணம் என் கால்களைப் பிடித்துக்கொள்வதை நான் இன்றுகூட உணர முடிகிறது! அவர்களுக்குத் தேவையான மருந்துகள் தந்துவிட்டு எதிரே உள்ள இன்னொரு கட்டிடத்தில் உள்ள கூடத்தில் அமர்ந்து விழியிழந்த பெரிய பிள்ளைகளையும் பெரியவர்களையும் பரிசோதனை செய்து மருந்துகள் தருவேன். உண்மையில் அதுவே மனிதாபிமான மருத்துவச் சேவை என்பதை நான் அப்போது மனப்பூர்வமாக உணர்ந்தேன்! என்னை மருத்துவச் சேவைக்கு அழைப்பு விடுத்துள்ள ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்!
காலப்போக்கில் இன்னும் ஏராளமானவர்களின் நட்பும் உதவியும் என்னைத் தேடி வந்தன. அவர்களில் ஒருவர் தேவஇரக்கம். அவர் அலுவலகத்தில் பணி புரிந்தார். மிகவும் சாதுவான குணம் கொண்டவர். பால்ராஜ்தான் அவரை அறிமுகம் செய்துவைத்தார். பால்ராஜ் கிறிஸ்டோபர் என்னைத் தேடி இல்லம் வரும்போது தேவஇரக்கமும் வரலானார். அந்த நெருங்கிய நட்பு வட்டம் எங்கள் நால்வருடன் வளரலாயிற்று.
டாக்டர் செல்லையாவும் செல்லப்பாவும் தொடர்ந்து டென்னிஸ் விளையாட மாலையில் ஆறுமுகம் சீதையம்மாள் கலைக் கல்லூரியின் அருகில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்தனர். அங்கு திரு. நாகராஜனும், திரு. தங்கவேலுவும் அவர்களுடன் விளையாடுவார்கள். அவர்கள் வள்ளல் ஆறுமுகம் அவர்களின் புதல்வர்கள் என்பதால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான் அதுபோல் அவர்களுடன் டென்னிஸ் விளையாடமுடியும்.
நான் குடியிருந்த வீட்டின் வலது பக்கத்தில்தான் மனமகிழ் மன்றத்தின் டென்னிஸ் மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது. அது மண் மைதானம்தான். செப்பனிட்டால் நானும் ராமசாமியும் அங்கு டென்னிஸ் ஆடலாம். அதை விக்லீஸிடம் சொன்னேன். அவருக்கு டென்னிஸ் ஆடுவதில் விருப்பம் இருந்தது. நாங்கள் ஒன்று சேர்ந்து அதை செப்பனிட்டோம். மருத்துவமனை தோட்டக்கார்கள் சிலரை அதற்கு பயன்படுத்தினோம். முன்பே அதற்கு பயன்படுத்தும் வலை இருந்தது. டென்னிஸ் பந்துகள் மட்டும் காரைக்குடியில் வாங்கினோம். நான் ஒரு புது ரேக்கட் வாங்கினேன். மைதானம் தயார் ஆனதும் நாங்களும் மாலையில் டென்னிஸ் ஆடினோம். அது எனக்கு பிடித்திருந்தது. அது நல்ல உடற்பயிற்சியுமாக அமைந்துவிட்டது. சில நாட்களில் ஃப்ராங்ளினும் எங்களுடன் விளையாடுவார்.
ஃப்ராங்லின் வாலிபால் நன்றாக விளையாடுபவர். அப்போது மருத்துவமனையின் வாலிபால் குழுவும் இருந்தது. வளாகத்தின் வாலிபர்கள் மாலையில் வாலிபால் விளையாடிக்கொண்டிருப்பார்கள். காந்தன், டேனியேல், குமரேசன், மைக்கல், விக்லீஸ், பாஸ்கரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
வேறு சிலர் கேரம் விளையாடுவார்கள். டாக்டர் ராமசாமி நன்றாக கேரம் விளையாடுவார். நானும் அவருடன் விளையாடுவதுண்டு.
இத்தகைய மகிழ்ச்சியான நாட்களில்தான் சோகமான ஒரு நிகழ்ச்சி தலைதூக்கியது.
மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்ற நிலையில்தான் சில அன்றாட பணிகள் தொடர்ந்தன. பணம் வசூல் செய்யும் அலுவலக ஊழியர்கள் தங்களுக்குரிய இடத்தில் அமர்ந்து பணத்தை வசூல் செய்து ரசீது தருவார்கள். அந்த ரசீதில் அவர்கள் பெற்ற பணத்தின் தொகை எழுதப்பட்டிருக்கும். ஏழை எளிய மக்கள் அந்த ரசீதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல் கூட சென்றுவிடுவதுண்டு. அதில் குறைவான தொகை எழுதப்பட்டிருந்தாலும் அது பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது போன்ற தவறான செயலை யாரும் அதுவரை செய்யவில்லை.
ஆனால் வார்டுகளிலிருந்து வெளியேறும் நோயாளிகள் அப்போதெல்லாம் வார்டு சிஷ்டரிடமே பணத்தைக் கட்டிவிடும் பழக்கம் வழக்கில் இருந்தது. அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீதை தருவார்கள்.மாலையில் அலுவலகத்திலிருந்து பால்ராஜ் வார்டுக்குச் சென்று அன்று பகலில் வசூல்செய்த மொத்த பணத்தையும் வாங்கி வந்து அலுவலகத்தில் சேர்த்துவிடுவார். இந்த ஏற்பாடு பல வருடங்கள் உள்ளது. இத்தகைய ஏற்பாட்டில் நிறைய குறைகள் உள்ளது என்பதை டாக்டர் செல்லையா கருதினார். அதற்கு ஏற்றாற்போல் எப்.வார்டில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. வசூல் செய்த பணத்தை விட குறைவான தொகையில் ரசீது தந்துள்ளார் வார்டு சிஸ்டர் மங்களம் தேவசகாயம். அவர் தாதியர் கண்காணிப்பாளர் திரு.தேவசகாயத்தின் மனைவி. சீனியர் ஸ்டாப் நர்ஸ்.அந்த நோயாளி டாக்டர் செல்லையாவிடம் புகார் செய்துவிட்டார். அவ்வளவுதான். டாக்டர் செல்லையா அந்த வார்டில் உள்ள அனைத்து நோயாளிகளின் குறிப்பேடுகளையும் அவற்றில் மருத்துவர்கள் எழுதியுள்ள தொகையையும், மங்களம் வசூலித்து அலுவலகத்தில் கட்டிய தொகையையும் கொண்டுவரச் சொன்னார். கணக்கு தணிக்கையாளர் வரவழைக்கப்பட்டு முழுமூச்சுடன் ஆய்வு நடத்தினார். அந்த வார்டில் கடந்த ஐந்து வருட கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.அதன் முடிவில் சுமார் 40,000 ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது ! அப்போது அது மிகப் பெரிய தொகையாகும். ஆதாரத்துடன் பிடிபட்டுவிட்ட சிஸ்டர் மங்களம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்வதற்கும், பணத்தை திரும்பப் பெறுவதற்கும் திருச்சபையின் ஆலோசனை சங்கத்துக்கு பரிந்துரை செய்தார் டாக்டர் செல்லையா.
தேவசகாயம் திருப்பத்தூர் ஆரோக்கியநாதர் ஆலயத்தில் சபை சங்க உறுப்பினராக இருந்தார். திருச்சபையில் ஓரளவு செல்வாக்குடனும் திகழ்ந்தார். அதனால் அவர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னுடைடைய மனைவியைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டார். அந்த விவகாரம் பல மாதங்கள் முடிவில்லாமல் இழுத்தடிக்கப்பட்டது. டாக்டர் செல்லையா வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டைத் தந்துள்ளதாகவும் தேவசகாயம் தரப்பில் வாதிடப்பட்டது. அவருக்கு திருச்சபையில் ஆதரவும் இருந்தது. டாக்டர் செல்லையா லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர் இல்லை என்பதும் அப்போது கூறப்பட்டது.
அந்த விவகாரம் டாக்டர் செல்லையாவுக்கு தன்மானப் பிரச்சனை ஆகியது. திருச்சபை தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் ராஜினாமா செய்யப்போவதாக டாக்டர் செல்லையா கூறலானார்!
மருத்துவனை ஊழியர்களிடையே அது பெரும் சோகத்தை உண்டுபண்ணியது. டாக்டர் செல்லையா திருப்பத்தூரில் புகழின் உச்சியில் இருந்த தருணம் அது. அவர் அப்படி சென்றுவிட்டால் மருத்துவமனையின் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் . அவரைத் தேடிவரும் காரைக்குடி, தேவகோட்டை பணக்கார செட்டியார்களின் வருகை குறைந்துவிடும்.
திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை டாக்டர் செல்லையாவின் தலைமையில் பொற்காலத்துடன் திகந்தது. ஒரு தாதியர் செய்த தவற்றால் அவரை இழப்பது பெரும் நஷ்டமாகும். அவரைப்போன்ற ஓர் அறுவை மருத்துவ நிபுணரைத் தேடுவது சிரமமாகும். அப்படியே கிடைத்தாலும் அவரைப்போல் பேரும் புகழும் பெறுவது இயலாத காரியம்.
அந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு டாக்டர் செல்லையா தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்பதே மருத்துவமனை ஊழியலாக்களின் பிரார்த்தனையாக அப்போது இருந்தது. திரு. தேவசகாயம் அவர்களின் உறவினர்களும் சில ஊழியர்களும் மங்களம் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவே கூறிக்கொண்டிருந்தனர்.
நானும் என்னுடைய நண்பர்களும் டாக்டர் செல்லையா தொடர்ந்து தலைமை மருத்துவ அதிகாரியாக இருப்பதையே விரும்பினோம். என்னைப் பொறுத்தவரை அவர் என்னுடைய வேலையில் தலையிடவே இல்லை. என்னை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். நேரில் காணும்போதெல்லாம் என்னைப் பாராட்டி ஊக்குவித்தார். என்னால் பொது மருத்துவத்திலும் தொழுநோய்ப் பிரிவிலும் ஆர்வத்துடன் செயலாற்ற முடிந்தது. அதுபோல் தட்டித்தந்து வேலை வாங்குவதில் அவர் கெட்டிக்காரர்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஆஸ்துமாகாத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    // திருச்சபையில் ஓரளவு செல்வாக்குடனும் திகழ்ந்தார். அதனால் அவர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னுடைடைய மனைவியைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டார்.//

    “பரிதானம் [“லஞ்சம்,” NW] வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.”
    —யாத்திராகமம் 23:8.

    மோசேயின் சட்டம் 3,500 வருஷங்களுக்கு முன்பே லஞ்ச ஊழலை கண்டனம் செய்தது. ஆனாலும் லஞ்சம், மோசடி ஒழிந்தபாடில்லை.அதற்குக்காரணம்,மேலிடத்தில் தனக்கு வேண்டியவர் உயர் பதவியில் உள்ளார் என்ற மன தைரியம்.ஒரு ஓட்டுக்கு ரூபாய் பத்தாயிரம் எப்படி கொடுக்கமுடிகிறது?,அந்தப் பணம் எப்படி எந்த வழியில் வந்தது?ஆளும் உயர் மட்டத்திலேயே உள்ளம் அழுகிக் கிடக்கும் போது,

    மிகக் குறைந்த வருமானம் வாங்கும் ஜனங்கள் லஞ்சம் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கிறார்கள். நாலு பேருக்கு மத்தியில் “கௌரவமான” வாழ்க்கை நடத்த வேண்டுமானால், லஞ்சத்திற்குள்தான் தஞ்சம் புக வேண்டும் என்று நினைக்கிறார்கள். கறாராக லஞ்சம் வாங்குகிறவர்களாக இருந்தாலும்சரி ஏதாவது சலுகை பெற லஞ்சம் கொடுப்பவர்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போவதால் பெரும்பாலானோர் அதை எதிர்க்க தயாராக இல்லை.

    “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது” என்பதை சாலொமோன் ராஜா கவனித்தார்.—பிரசங்கி 8:11.
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *