தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம்.

டாக்டர் ஜி. ஜான்சன்

209. நண்பர்கள பலவிதம்.

புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் நோயாளிகளாக பழக்கமாகி அடிக்கடி வரலாயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருந்தனர். சிலர் அரசியல்வாதிகள். சிலர் இலக்கியவாதிகள். .
திருக்கோஷ்டியூரிலிருந்து எஸ்.எஸ்,தென்னரசு வருவார். அவர் பசும்பொன் மாவட்ட தி.மு.க. செயலாளர். சட்டமன்ற உறுப்பினர். . அவர் நல்ல மேடைப் பேச்சாளர். சிறுகதை எழுத்தாளர். கலைஞருக்கு நெருக்கமானவர். என்னிடம் நடப்பு பாராட்டியதோடு அவருடைய இல்லத்துக்கு அழைத்து உபசரித்தார்.
இன்னொரு தி. மு.க. பிரமுகர் அய்யர்.இவர் பிராமணர். தி.மு.க.வில் இருக்கும் ஒரே பிராமணர் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். அப்போதெல்லாம் திமு.க.வினர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களாக இருந்தனர்.இவர் அசைவ உணவையும் விரும்பி உண்பவர். ஒரு புரட்சிகரமான பிராமணர் அய்யர்! அவர் வெளி நோயாளிப் பிரிவிலும் வீட்டிலும் என்னைச் சந்திப்பார்.
கூத்தக்குடி சண்முகம் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர். அவருடைய துணிச்சல் பற்றி பல கதைகள் நிலவின. எப்போதாவது வெளி நோயாளிப் பிரிவில் வரும்போது என்னைக் கண்டு நலன் விசாரிப்பார். ஒரு முறை காவலர்கள் அவரைக் கைது செய்ய வந்தபோது அவர்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை வீசிவிட்டு தப்பித்ததாகக்கூட ஓர் கதை உள்ளது.
வேல்முருகன் இந்திய கம்யூனிஸ்ட். கட்சி உறுப்பினர். வாட்டச் சாட்டமான தடித்த உருவம். அவர் மருது பாண்டியர் வம்ச வழியினர். அவர்களைப்போலவே தடித்த மீசை கொண்டவர். அவரைப் பார்த்தாலே அச்சம் உண்டாகும் மருது சகோதரர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை அவரைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்>அடிக்கடி வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருப்பார்.
கமியூனிஸ்ட் கருப்பையா தென்மாபாட்டிலிருந்து வருவார். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட். எப்போதும் தோளில் சிவப்புத் துண்டு தவழும். சிலர் இவ்ருக்கு சிவப்புத் துண்டு என்றே பெயரிட்டு விட்டனர்.திருப்பத்தூரில் நடக்கும் கம்யூனிஸ்ட் போராட்ட்ங்களில் நிச்சயம் இவர் இருப்பார்.
மேகநாதன் வளாகத்திலேயே குடியிருந்தார். அவர் சிஸ்டர் வசந்திராவின் கணவர். அவர் காண்ட்ராக்ட் வேலையில் இருந்தார். அதனால் எப்போதுமே வெளியூரில் இருப்பார். திருப்பத்தூர் வந்தால் என்னைத் தேடி வீடு வருவார்.அப்போதெல்லாம் அவர் மீது சாராய வாடை வீசும். நன்றாகக் குடிப்பார். நிறைய இறைச்சி உண்பார். கள்ளச் சாராயம் எங்கெல்லாம் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். அப்போது தமிழகத்தில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருப்பார். அவர் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார்.எதையும் உடன் சாதித்துவிடுவதாகப் பேசும் திறமை கொண்டவர்.
காரைக்குடியிலிருந்து சுப்ரமணியம் வருவார். நல்ல நிறம். அழகான முகம் . . எம்.ஜி.ஆரின் சாயல். பழைய மர மண்டி வைத்து வியாபாரம் செய்பவர். தந்தை பெரியாரின் சீடர். பகுத்தறிவு நாடகங்களை காரைக்குடியில் அரங்கேற்றி நடிப்பவர். அவரை காரைக்குடி எம்.ஜி.ஆர். அன்றும் அழைப்பார்களாம். மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவர். அவருடைய மர மண்டிக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அங்கு காரைக்குடியின் செட்டியார்களின் பழங்கால வீட்டு அறுகால்கள் , வேலைப்பாடுகள் அமைத்த தூண்கள், மரத்திலான அழகான கலைப் பொருட்கள் ஏராளம் கண்டேன். அது கடை மாதிரியே இல்லை. கலைக்கூடம் போலவே காடசி தந்தது. புதிதாக வீடு கட்டுவோர் அவரிடம் வந்து தேக்கு மரங்கள்,சட்டங்கள், வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், சன்னல்கள் வாங்கிச் சென்றனர்.
சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை அஞ்சல் அலுவலகத்தில் ஜெயசீலன் பணி புரிந்தார். இளைஞர். அவர்தான் தபால் கொண்டு வருவார். என்னுடைய நாடகத்தைப் பார்த்தபின்பு அவரும் நடிக்க ஆசைப்பட்டார். அடுத்த நாடகத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறினேன். அவரை அன்றாடம் பார்ப்பதால் நெருக்கமானார். அவர் மூலமாக திருப்பத்தூர் அஞ்சல் நிலையத்தில் பணியாற்றிய குணசேகரனும் அறிமுகமானார். அவரும் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். நல்ல குரல்வளம் அவரிடமிருந்தது.
ஒரு நாள் கரைக்குடியிலிருந்து அழகப்பன் என்பவர் என்னைக் காண வந்தார். அவர் நல்ல உயரத்தில் மாநிறமுடையவர். சுருள் சுருளான கேசத்தை கலைஞரைப்போன்று நடுவில் நேர் வகிடு எடுத்து சீவியிருந்தார். புன்னகைத் தவழும் முகம் கொண்டவர். தன்னை அழகாபுரி அழகப்பன் என்று அறிமுகம் செய்துகொண்டார். தேவகோட்டை செல்லும் வழியில் அழகாபுரி என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள தமிழ்ப் பள்ளி ஆசிரியர். அதோடு அவர் ஓர் பிரபலமான எழுத்தாளர். குமுதம், ஆனந்த விகடனில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன.. எனக்கு அவருடைய நட்பு பிடித்திருந்தது. சனி ஞாயிறுகளில் வருவார். சில நாட்களில் என்னுடனே தங்கினார். இரவு வெகு நேரம் அவர் எழுதும் கதைகள் பற்றி கூறுவார். நான் எழுதிய சிறுகதைகளைக் காண்பித்தேன். அவற்றைப் படித்துப்பார்த்துவிட்டு பாராட்டினார். அப்போது அவர் ஒரு தொடர் கதை எழுத்துவது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அவருடைய கதைகளில் ரமா என்ற பெண் அடிக்கடி வருவாள். எழுதப்போகும் தொடர் கதையிலும் முக்கிய பாத்திரம் அந்த ரமாதான் என்று சொன்னார். அந்த ரமா என்பது யார் என்று கேட்டேன்.அது கற்பனைப் பாத்திரமா அல்லது உண்மையான பெண்ணா என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். ரமா என்பவள் அவருக்குத் தெரிந்த பெண்தான் என்றார். அடுத்தமுறை வரும்போது ரமாவை உடன் அழைத்து வருவதாகவும் கூறினார். ஓர் உண்மைப் பாத்திரத்தை வைத்து பலவிதமான கற்பனைகளை ஓடவிட்டு கதைகளை எழுதும் அவருடைய ஆற்றலைக் கண்டு வியந்தேன். அதே வேளையில் ரமாவுக்கும் அவருக்கும் எந்தவிதமான உறவு என்றும் யோசிக்கலானேன். அவர் திருமணமானவர். ரமாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இருந்தாலும் ரமாதான் அவருடைய கனவுக் கன்னி என்பதை அவருடைய பேச்சிலிருந்து தெரிந்துகொண்டேன்!
கண்ணப்பன் என்பவர் காரையூரைச் சேர்ந்தவர். தடித்த உருவர்.கருத்த நிறம். முரட்டு மீசை. அவர்தான் காரையூரின் பஞ்சாயத்துத் தலைவர். அவர் எனக்கு வெளிநோயாளியாகப் பழக்கம். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவருடைய மகனின் திருமணத்துக்கு என்னை கரையூருக்கு கார் அனுப்பி அழைத்துச் சென்றார். வீட்டு மாடி வராந்தாவில் சுவையான பிரியாணி, மதுபானத்துடன் எனக்கு சிறப்பான விருந்து தந்தார். அவருடைய விருந்தோம்பல் என்னை வியக்கவைத்தது.
ஹைதர் அலி திருப்பத்தூரில் புதிதாக துவக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அது வன்னியர்களின் கட்சி. அதில் ஒரு இஸ்லாமியர் தலைவராக இருந்தது புதுமையானது. அது பற்றி அவர் பெருமையாகப் பேசுவார். அவர் என்னை, ” தலைவா ” என்றுதான் அழைப்பார். ஒவ்வொரு தடவையும் பொதுக்கூட்டம் போடும்போது தவறாமல், “தலைவா. ” என்று அழைத்தவாறு அறைக்குள் நுழைந்து விடுவார்.அவருடன் தொண்டர்கள் சிலரும் வந்துவிடுவார்கள். ஒரு நோட்டைத் தந்து நன்கொடை எழுதச் சொல்வார். அதிலும் தவறாமல் நூறு ரூபாய் எழுதச் சொல்வார். நான் தி.மு.க. என்றாலும் பரவாயில்லை, கூட்டணிதான் என்று சொல்லி பணத்தை வாங்கி விடுவார்.
தங்கசாமி சேர்வை அடிக்கடி வெளிநோயாளிப் பிரிவுக்கு வருவார். அவர் வரும்போதெல்லாம் மருதுபாண்டியர்கள் பற்றி பேசுவார். நாட்டு விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடியதால் ஆங்கிலேயர்களால் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டதாகச் சொல்வார். அவர்களுடைய உடல்கள் என்னுடைய அறைக்குப் பின்னால் உள்ள இடத்தில்தான் புதைக்கப்பட்டுள்ளன என்பார். அங்கு பொங்கல் தினத்தன்று மருது சந்ததியினர் ஒன்று கூடி பொங்கல் வைப்பது வழக்கம் என்பார். தான் மருது சகோதரர்களின் வம்சம் என்பார். மருது வம்சத்தினர் சுமார் ஐம்பது குடும்பங்கள் திருப்பத்தூரில் வசித்து வருவதாகக் கூறுவார்.நான் அவருடன் சென்று அவர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்ப்பேன். அங்கு இரண்டு கருங்கற்கள் நீட்டு வாக்கில் அருகருகில் கிடத்தப்பட்டிருந்தன. அங்கு ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்பார். நான் அது நல்ல யோசனை என்றும் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பேன். தேவையான நிதியை அவரே வசூல் செய்யலாம் என்பேன். திருப்பத்தூரில் சேர்வை வகுப்பினர் அதிகம். அதோடு மருது சகோதரர்கள் அந்த மண்ணை ஆண்டவர்கள். .வீர தியாகம் புரிந்தவர்கள். அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்ப திருப்பத்தூர் மக்கள் அனைவருமே தாராளமாக நன்கொடை வழங்குவார்கள்.
திருப்பத்தூரில் அனைத்து அரசியல் கட்சிகளும் இருந்தன. அடிக்கடி டவுனில் நான்கு ரோட்டில் பொதுக் கூட்டம் போடுவார்கள்.மாலையில் கூட்டம் நடக்கும். மேடையில் பேச்சாளர்கள் அமர்ந்திருப்பார்கள். ஒலிப்பெருக்கி உரக்க ஒலிக்கும். மேடையின் எதிரே ஒரு சிலரே காணப்படுவார்கள். சில கூட்டங்களில் எதிரில் யாருமே இருக்கமாட்டார்கள்! ஆனால் பேச்சாளரோ முழங்கிக்கொண்டிருப்பார்! எதிரிலும் அருகிலும் உள்ள கடைகளில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அந்தப் பக்கம் நடந்து செல்பவர்கள் சிறிது நேரம் நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். நான் திராவிட முன்னேற்றக கழகத்தின் அபிமானி. பொதுக்
கூட்டங்களுக்குச் செல்ல மாட்டேன். ஆனால் நன்கொடைகள் தருவேன்.
திருப்பத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு பகுதியும் உள்ளது. அங்கிருந்து சில இளைஞர்கள் என்னைத் தேடி வந்தனர். அவர்கள் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட நன்கொடை கேட்டார்கள். நான் நூறு ருபாய் தருவேன். அப்போது அவர்களை வழி நடத்துபவர் தொல். திருமாவளவன் என்ற இளம் வழக்கறிஞர் என்றனர். அவர் தலைமையில் அரசியல் கட்சி அமைக்கப்போவதாகக் கூறினார்கள். அடுத்த தடவை அந்த இளைஞர் திருப்பத்தூர் வரும்போது என்னிடம் அழைத்து வருவதாகவும் கூறினார்கள்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமறைந்துவரும் கடிதக்கலை!? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்ஞானரதமும் வாக்குமூலமும்