தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்

Spread the love

 

          கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப்  போட்டி சிறப்பாக  நடந்து  முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய   எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட  எனக்குக்  கிடைத்தது.
          நண்பர்கள் பாலராஜ்,  கிறிஸ்டோபர் இருவருடன் மாலையில் சமாதானபுரம் தாண்டிய காட்டு மேட்டுக்குச் சென்றேன். அங்கு சாய்ந்து கிடந்த மரங்களின்மேல் அமர்ந்து கொண்டோம். அப்போது பால்ராஜ் ஆலய தேர்தல் பற்றி கூறினார்.
          ” டாகடர். நம்முடைய ஆரோக்கியநாதர் ஆலயத்தின் சபைத் தேர்தல் நடக்கப் போகிறது. அதில் நாமெல்லாம் கலந்துகொண்டு வாக்களிக்கலாம். ” என்றவாறு ஆரம்பித்தார்.
          ‘ அதில் வாக்களிப்பதும் ஒன்றுதான். வாக்களிக்கவிட்டாலும் ஒன்றுதான். ” சலிப்புடன் கூறினார் கிறிஸ்டோபர்.
          ‘ என்ன கிறிஸ்டோபர் இவ்வளவு வெறுப்பு? ” நான் கேட்டேன்.
          ” பிறகு என்ன டாகடர்? எப்போதும் அதே ஆட்கள்தான் அதில் வெற்றி பெறுகிறார்கள். ”  அவர் பதில் கூறினார்.
          ” அதை இந்த முறை நாம் ஏன் மாற்றக்கூடாது? ” பால்ராஜ் கேட்டார் ஆர்வத்துடன்.
          ” எப்படி/ ” கிறிஸடோபர் கேட்டார்.
          ” அதை மாற்றி அமைக்கும் நேரம் வந்துவிட்டது. ” என்றார் பால்ராஜ்.
          ” அதுதான் எப்படி என்று கேட்கிறேன். ” இது கிறிஸ்டோபர்.
          ” அதற்குதான் டாக்டர் வந்துள்ளார். “என்றார் பால்ராஜ்.
          ” என்ன/ நானா? ‘ நான் கேட்டேன்.
          ” டாக்டர். இது உங்களுக்கு அருமையான நேரம். கடவுள் உங்களை இங்கு கொண்டு வந்துள்ளது நிறைவேற வேண்டும். ஆலயத்தில் சபைச் சங்கத்தினர் தொடர்ந்து பல வருடங்களாக விடாமல் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அதில் அனைவரும் வயதானவர்கள். அதில் புது இரத்தம் தேவை. அதை உங்களால் செலுத்த முடியும். இந்தத் தேர்தலில் நீங்கள் நிற்கப் போகிறீர்கள்.”என்றார் பால்ராஜ்.
          ” ஆமாம். இது நல்ல யோசனை டாக்டர். நீங்கள் நில்லுங்கள். நிச்சயம் வெல்லுவீர்கள். ” என்றார் கிறிஸ்டோபர்.
          ” ஆலயத் தேர்தலா? ” நான் தயங்கினேன்.முன்பே தலைமை மருத்துவ அதிகாரிக்கு எதிரி ஆகிவிடடேன். இப்போது ஆலயத்தில் உள்ள பெரியவர்களின் எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும்.
         ” தயக்கம் வேண்டாம் டாக்டர். ஆலயத்து உறுப்பினர்களில் பெரும்பாலோர் மருத்துவமனை ஊழியர்கள்தான்.  விழியிழந்தோர் பள்ளியிலும், தாதியர் பயிற்சிப் பள்ளியிலும், வளாகத்துக்கு வெளியிலும் குறைவானவர்களே உள்ளனர். நமக்கு மருத்துவமனையில் நல்ல ஆதரவு உள்ளது. முன்பே நீங்கள் மனமகிழ் மன்ற செயலர். நாம் செய்ய வேண்டியது மருத்துவமனை ஊழியர்கள் இல்லாத மற்றவர்களை அணுகி வாக்கு சேகரிப்பது. அவர்களுக்கு உங்களை நன்கு தெரியும். நிச்சயம் அவர்களும் மாற்றத்தை விரும்புவார்கள். உங்களுக்கு வாக்களிப்பார்கள். நமக்கு வெற்றி நிச்சயம். ” நமபிக்கை ஊட்டினார் பால்ராஜ்.
          இது நல்ல முயற்சிதான். இந்த நேரத்தில் எனக்கு இங்கு உள்ள செலவாக்கைப் பயன்படுத்தினால் ஆரோக்கியநாதர் ஆலயத்தைக் கைப்பற்றலாம்.ஆலயத்திலும் புரட்சியை உண்டுபண்ணலாம். பல நல்ல செயல் திட்டங்களை நிறைவேற்றலாம்.
          நான் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்தேன்.அவர்கள இருவரும் எனக்கு கை குலுக்கி வாழ்த்தினர்.
          அப்போது ஆலயத்தின் சபைத் சங்கத்தின் செயலராக ஜான் ரத்தினம் இருந்தார். இவர் மருத்துவமனை அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் மயக்கம் தரும் பணியில் உள்ளவர். மிகுந்த பக்த்தியுள்ளவர் போல் காணப்படுவார். நன்றாக கீர்த்தனைகளும் பாமாலைகளும் பாடும் வரம் பெற்றவர். தேவசகாயம், பகீரதி, ஜெயராஜ், போன்றவர்கள் அப்போது உறுப்பினராக இருந்தனர். இவர்களின் பதவிக் காலம் மூன்று வருடங்கள்.இவர்கள் அனைவரையும் மாற்றி இளைஞர்கள் கொண்ட ஒரு புதிய சபைச்  சங்கத்தைத்  தேர்ந்தெடுக்க நாங்கள் மூவரும் முடிவு செய்தோம்.
          நாங்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களை மருத்துவமனை, விழியிழந்தோர் பள்ளி, வெளியில் உள்ளவர் என்று பரவலாக பிரதிநிதித்துவம் தர முடிவு செய்தோம். அப்போதுதான் வாக்குகள் சிதறாமல் கிடைக்கும். மருத்துவமனை சார்பில் நானும் ஜெயராஜும் நிற்கலாம். ஜெயராஜ் மருத்துவமனையில் பணி  புரிகிறார். அவர் இப்போது சபைச் சங்க உறுப்பினர். வயதில் மூத்தவர். தற்போது இருப்பவர்களின் சார்பில் ஒரு மூத்தவரை சேர்த்துக்கொள்வது நல்லது.  அலுவலகத்தில் பணிபுரியும் ஜெலின் என்னும் ஸ்டெனோவின் தந்தை. மிகவும் அமைதியானவர். அவரால் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை. விழியிழந்தோர் பள்ளியின் சார்பில் சாமுவேலையும் மங்களராஜையும் தேர்வு செய்தோம். சாமுவேல் ஆலயத்தில் ஆர்கன் வாசிப்பவர். மங்களராஜ் ஆலய பாடகர் குழுவின் தலைவர். வயலின் இசைப்பவர். வெளியிலிருந்து ஜி.பி. முத்துவையும், அடைக்கலதாஸ் என்பவரையும் தேர்ந்தெடுத்தோம். முத்து ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியர். அடைக்கலதாஸ் ஓய்வு பெற்ற ஆசிரியர். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் துவக்கப் பள்ளியின் சார்பில் கமலம் ஆசியையைச் சேர்த்துக்கொண்டோம். இதுவே எங்களின் குழு
        தேர்ந்தெடுத்தவர்களை நாங்கள் மூவரும் அவர்களின் வீடுகளில் சந்தித்தோம். என்னுடன் சேர்ந்து  தேர்தலில் போட்டியிட அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டோம்.அவர்கள்  அனைவரும் சம்மதம் தந்துவிட்டனர்.
          இனி வாக்குகள் சேகரிக்கும் பணிதான். எங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி அச்சடித்தோம்.அவற்றை எடுத்துக்கொண்டு நாங்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச்  சந்தித்தோம். பட்டியல் அச்சடிக்கப்பட்ட தாளை அவர்களிடம் தந்தோம். எங்களுக்கு அமோக வரவேற்பு கிட்டியது. சபை மக்கள் அனைவருமே இந்த மாற்றத்தை விரும்பினார்கள்.  என்னால் இதை வெற்றிகரமாக செயல் படுத்த முடியும் என்றனர்.அது புது தெம்பையும் உற்சாகத்தையும் தந்தது. நாங்கள் முழு மூச்சில் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். ஒரு மருத்துவர் அவர்களின் இல்லம் தேடி வருவது அதுவே முதல் தடவை  என்றனர்.
         பதவி முடியப்போகும் உறுப்பினர்களின் முகங்களில் கோபமே மேலிட்டது. இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தலைமை மருத்துவ அதிகாரிக்கு என் மேல் கோபம் அதிகமானது. மருத்துவமனையில் அரசியல் செய்வதாக அவர் எண்ணினார். நான் திருச்சபையின்  நலன் கருதிதான் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை எடுக்க விரும்பினேன். இது கூட கடவுளின் அழைப்புதான் என்றும் நம்பினேன். இதற்கும் மருத்துவமனையின் நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால் மருத்துவமனை ஊழியர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் பத்து சதவிகிதம் பிடித்து ஆலயத்துக்கு செலுத்தி வந்தோம். அது திருச்சபையின் ஆணை. அப்படி சபைச்  சந்தா காட்டினால்தான் ஆலயத் தேர்தலில் வாக்களிக்க முடியும். நான் தேர்தலில் வென்றுவிட்டால் என்னுடைய செல்வாக்கு உயரும் என்ற பயம் அவருக்கு. அதை தவிர்க்க முடியாததுதான். நான் பின்பு திருச்சபையின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வேன். அப்போது மருத்துவமனையின் நிர்வாகம் பற்றியும் நான் பேசும் நிலை ஏற்படும். இதனால் அவருடைய பதவிக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்ற வீண் அச்சம் அவருக்கு.
          நான் எது பற்றியும் கவலைப் பட வில்லை. நாட்கள் செல்ல செல்ல எங்களின் வெற்றி நிச்சயம் என்பது தெள்ளத் தெளிவாகியது. எங்களின் செயல் திட்டம் அத்தகையது. மிகவும் நிதானகமாக நாங்கள் செயல்படலானோம்.  இதில் நண்பர்கள் பால்ராஜ் ,  கிறிஸ்டோபர் ஆகிய இருவரின் உழைப்பு  அளப்பரியது.
          ஒருவர் விடாமல் வாக்காளர்  அனைவரின் இல்லங்களைத்  தேடிச் சென்று எங்கள் திட்டத்தைக் கூறி வாக்குகள்  சேகரித்தோம். ஆலயத்தில் மாற்றம் தேவை என்பதே எங்களின் குறிக்கோள் என்று அவர்களிடம் கூறி வாக்களிக்க வேண்டினோம். அனைவருமே எங்களை இன்முகர்த்துடனேதான் வரவேற்றனர்.
          தேர்தல் நாள் நெருங்கியது. அது ஆலயத்தில்தான் நடை பெறும்.ஒரு ஞாயிறு ஆராதனையின் முடிவில் தேர்தலை  சபைகுரு நடத்துவார். அப்போது மூன்று தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் இரகசிய வாக்குப் பதிவு முறையில் நடைபெறும். வாக்களிப்பு முடிந்ததும் உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றே அவர்கள் பதவியில் அமர்ந்துவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சபைச் சங்கத்தினர் என்று அழைக்கப்படுவார்கள். அதன் பின்பு அவர்களுக்குள் ஒரு செயலரும், ஒரு பொருளரும் தேர்வு செய்யப்படுவார்கள். சபைகுரு சபைச் சங்கத்தின் தலைவராகச் செயல்படுவார்.
           ஆவலுடன் எதிர்பாத்திருந்த அந்த நாளும் வந்தது. காலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன் . புத்தாடைகள் அணிந்து கொண்டேன்.  தேர்தலில் நிற்கும் என்னுடைய குழுவினர் அனைவரும் வீடு வந்துவிட்டனர். நாங்கள் ஆலயம் நோக்கி உற்சாகத்துடன் புறப்பட்டோம்.
          (  தொடுவானம் தொடரும் )
Series Navigationகவர்ச்சி ஊர்வசிமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்