தொடுவானம் 229. சினோடு தொடர்புக் கூட்டம்

This entry is part 3 of 7 in the series 8 ஜூலை 2018
          ஆரோக்கியநாதர் ஆலயத் திறப்பு விழாவுக்கான சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சுவீடன் ஜெர்மனி நாடுகளிலிருந்து இன்னும் பதில் வரவில்லை.
          அப்போது திருச்சபையின் சினோடு தொடர்புக் கூட்டம் பற்றிய சுற்றறிக்கை வந்தது. சினோடு என்பது திருச்சபையின் பேரவை எனலாம்.இது வருடத்தில் இருமுறை கூடும். தமிழகத்தின் பல ஊர்களில் பரவியுள்ள லுத்தரன் திருச்சபையின் ஆலயங்களின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிப்பார்கள். அதற்கு அந்தந்த ஆலயத்தில் தேர்தல் மூலம் ஒருவர் அல்லது இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சென்ற தேர்தலில் ஜி.பி.முத்துவும் நானும் சினோடு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம்.இதுவே நான் பங்கு பெறும் முதல் சினோடு தொடர்புக் கூட்டம். அதனால் நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன்.
          இதில்பெரும்பாலும் திருச்சபையின் முக்கிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கு பெறுவார்கள். இதில் திருச்சபையின் சட்ட திட்ட்ங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். புதிய சட்டங்களும் நிறைவேற்றப்படும். பல புதிய செயல் திட்ட்ங்களும் இங்குதான் அங்கீகாரம் பெறும். இது ஒரு சட்டமன்றம் போன்றது.
          குறிப்பிட்ட நாளில் ஜி.பி.முத்துவும் நானும் காலையிலேயே திருச்சி புறப்பட்டோம். கூட்டம் தரங்கை வாசத்தில் உள்ள சீயோன் தேவாலயத்தில் நடந்தது. லுத்தரன் திருச்சபை தரங்கம்பாடியில் இறைத் தூதர் சீகன்பால்கு என்ற  ஜெர்மானிய மிஷனரியால் உருவாக்கப்பட்ட்து. அதன் தலைமையகம் திருச்சியில் செயல்பட்டது. அந்த  வளாகத்துக்கு தங்கை வாசம் என்று பெயர். தரங்கை என்பது தரங்கம்பாடியில் சுருக்கம். இங்குதான் தரங்கைப் பேராயரின் இல்லமும் உள்ளது. மத்திய செயலகமும் உள்ளது. ஜோசப் கண் மருத்துவமனையும் உள்ளது.
           ஆலயம் நிரம்பியிருந்தது. பேராயர் மாமறைதிரு ஈஸ்டர் ராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. சி.எச்.டேனியல்  அப்போது பொதுச் செயலாளர். பேராயர் சிறு தியானமும் ஜெபமும் செய்து கூட்டத்தைத் தொடங்கினார் .  செயலாளர்  அனைவரையும் வரவேற்று பேசினார். பின்பு ஒவ்வொரு குருசேகமாக உறுப்பினர்களின் பெயர்களை வாசித்தார். வந்திருந்தவர்கள் கையை உயர்த்தி தாங்கள் வந்துள்ளதைத் தெரிவித்தனர். அப்போது யார் யார் எங்கிருந்து வந்துள்ளனர் என்பதை நான் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் அனைவரும் திருச்சபையின் தலைவர்கள். அனைத்து ஆலயங்களின் ஆயர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களில் யாரும் எனக்கு பழக்கமில்லை. பெயர்களை வைத்து அவர்களை நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு சிரமமாக இருந்தது. நான் திருச்சபையில் முக்கியத்துவம் பெற வேண்டுமெனில் அவர்களையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அதை காலப்போக்கில் சரி செய்துவிடலாம்.
           பெயல்களின் பட்டியலை வாசித்து முடித்தபின்பு பேராயரின் அறிக்கை வாசிக்கப்பட்ட்து. அதை ஒரு சிறு நூல் வடிவில் தந்தனர். அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. முன்பெல்லாம் சுவீடன் தேசத்து மிஷனரிகளால் இந்தக் கூடடம் நடத்தப்பட்டதால் ஆங்கிலத்தில் நடந்தது. அது இப்போதும் தொடர்ந்தது. அதை பேராயர் வாசித்தார்.
          அவர் அதைப் படித்து முடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. அதன் பின்பு தேநீர் வேளை. அனைவரும் வெளியேறி சிற்றுண்டி அருந்தி தேநீர் பருகினோம். எனக்கு யாரையும் தெரியாததால் ஜி.பி. முத்துவுடன் இருந்தேன். அவருக்குப் பலரைத் தெரிந்திருந்தது. அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அநேகமாக சிதம்பரம்,தரங்கம்பாடியைச் சேர்ந்தவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்.ஆனால் யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.நான் யார் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுமானால் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டும். அப்போது அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்க்கலாம். ஆனால் எதைப்பற்றி பேசுவது. இத்தகைய பெரிய சபையில் எளிதில் பேசிவிட முடியுமா? ஒருவிதமான அச்சம் உண்டானது. திருச்சபை அரசியலில் முழுதாக இறங்கவேண்டுமெனில் அச்சப்படாமல் பேசியே ஆகவேண்டும். இங்கு வந்திருப்போர் அனைவருமே ஆங்கிலத்தில் பேசும் அளவுக்குப் புலமை பெற்றவர்களாக . இருக்க வாய்ப்பில்லை, என்னால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியும். ஆனால் எதைப்  பற்றி பேசுவது. பேராயர் அறிக்கையில் திருச்சபையின் பல்வேறு அமைப்புகள் பற்றி குறிப்பிட்டார். நான் இருப்பது மருத்துவத் துறை. அது பற்றி நான் பேசுவது பொருத்தமாக இருக்கும். அந்த முடிவுடன் மீண்டும் ஆலயத்துக்குள் நுழைந்தேன்.
           பேராயர் அறிக்கை குறித்து விவாதம் நடைபெறும் என்று செயலாளர் அறிவித்தார். பேச விரும்புபவர்கள் கைகளை உயத்தினர். அவர் அதைக் குறித்துக்கொண்டார். மிகுந்த தயக்கத்துடன் நானும் கையை உயர்த்தினேன்.செயலர் என்னுடைய பெயரைக் கேட்டார். நான் சொன்னேன். எந்த குருசேகரம் என்று கேட்டார். நான் திருப்பத்தூர் என்றேன்.
          ஒருவர் பின் ஒருவராகப் பேசினார்கள். அவர்கள் பேராயரின் அறிக்கையில் உள்ள ஏதாவது ஒரு பொருளை வைத்து பேசினார்கள்.அதில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக்காட்டினர். அப்போது அவர்களில் குறிப்பிடட சிலரின் உரைகள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக மறைத்திரு ஐ.பி.சத்தியசீலன், மறைத்திரு ஏ.ஜே.தேவராஜ், ஜி.ஆர்.சாமுவேல், வீ. தனராஜ், டாக்டர் நோயால் தாஸ் ஆகியோர் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசினார்கள்.அவர்கள் அதிகமாக திருச்சபையின் பொருளாதாரம் பற்றியும் சொத்துக்கள் பற்றியும் பேசினார்கள்.அது அப்போது எனக்குப் புரியவில்லை. திருச்சபைக்குச் சொந்தமாக ஏராளமான சொத்துகள் இருப்பது தெரிந்தது. அவை கட்டிடங்களாக வாடகைக்கு விடப்பட்டிருந்தன. சில இடங்களில் வாடகையை  சரிவர வசூலிக்க முடியவில்லை என்பது தெரிந்தது. வேறு சில இடங்களில் மிகவும் குறைவான வாடகை வசூலிப்பதாவும் கூறினார்கள்.வீ. தனராஜ் திருச்சபைப் பள்ளிகள் குறித்து அதிகம் பேசினார். அதிலிருந்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் இயங்குவது தெரிந்தது.ஜி.ஆர். சாமுவேல் சமூக பொருளாதார மேம்பாட்டுத்  திடடம் பற்றி பேசினார். அவர்தான் அந்த அமைப்பின் தலைவர். இவர்கள் அனைவருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார்கள். இன்னும் ஏராளமானவர்கள் பேசினார்கள். என்னுடைய வாய்ப்பு வந்தது.
          நான் ஒலிவாங்கி முன்நின்றேன். முதலில் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். நான் திருச்சபையின் ஒரே பொது மருத்துவமனையான  திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுவதைச் சொன்னேன். நான் திருப்பத்தூர் ஆரோக்கியநாதர் ஆலயத்தின் பொருளாளர் என்பதையும் கூறினேன். பேராயரின் அறிக்கையில் திருச்சபையின் பல்வேறு அங்கங்கள் சிறப்புடன் செயல்படுவதை விளக்குவதாகக்  கூறி பேராயருக்கு நன்றி சொன்னேன். ஆனால் திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை பற்றிய குறிப்பில் அங்கு நடைபெற்று வரும் தொழுநோய் ஒழிப்புத் திடடம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை என்பதால் அதை இந்தச் சபையினருக்கு தெரிவிப்பது என்னுடைய கடமையாகக் கருத்துவதாகக் கூறினேன்.
அதன் பின் எங்களுடைய தொழுநோய் ஒழிப்புத் திடடம் பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். அது பற்றி  நன்கு தெரிந்ததால் குறிப்புகள் எனக்குத் தேவையில்லை. சில புள்ளி விவரங்களோடு நான் சிறப்பாகவே என்னுடைய முதல் உரையை அந்த மாமன்றத்தில் அச்சமின்றி பேசி முடித்தேன்.
          என்னுடைய உரையை சபையோர் உன்னிப்பாகக் கேட்பது தெரிந்தது. நான் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினேன்.என்னுடைய இந்த உரையின் மூலம் நான் என்னை நன்றாகவே அறிமுகம் செய்துகொண்டேன்.
          நான் பேசி முடித்ததும் ம் பேராயர் என்னை பாராட்டி பேசியதோடு சினோடுக்கு புதிய உறுப்பினராக வந்துள்ள என்னை வரவேற்றார்.அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
          மதிய உணவின்போது பலர் எண்னிடம் வந்து கை குலுக்கி வாழ்த்தினர். தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். நானும் ஜி.ஆர்.சாமுவேல், ஐ.பி. சத்தியசீலன், ஏ.ஜே.தேவராஜ், வீ. தன்ராஜை ஆகியோரைத் தேடித் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
          ஜி.ஆர்.சாமுவேல் மிகவும் நேர்த்தியாக உடையணிந்து மிடுக்காகக் காணப்பட்டார். அவர் மதுரையைச் சேர்ந்தவர். எத்தியோப்பியாவில் சில வருடங்கள் அங்குள்ள திருச்சபையில் சேவை புரிந்துள்ளார். ஆங்கிலத்தில் நல்ல உச்சரிப்புடன் பேசினார். பார்த்த மாத்திரத்தில் அவரை எனக்குப் பிடித்தது. ஐ.பி. சத்தியசீலன் ஒரு சபைகுரு. சிதம்பரத்தைச் சேர்ந்தவர். ஆனால் எனக்கு அவரைத் தெரியவில்லை. கூட்டத்தில் அவர் காரசாரமாக உரையாற்றினார். ஏ.ஜே.தேவராஜ் ஒரு சபைகுரு. அவரை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவர் என்னுடைய திருமணத்தில் வாழ்த்துரை வழங்கியவர். அண்ணனுக்கு நண்பர். அவர் திருச்சபையில் புரட்சிகரமான மாற்றங்கள் வேண்டும் என்று பேசியவர்.குறிப்பாக கிராமச் சபைகளில் முன்னேற்றங்கள் தேவை என்று வாதிட்டார்.அவர் உருவத்தில் சற்று குள்ளமானவர். நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். வீ.தனராஜ் தாடி வைத்திருந்தார்.அதனால் அவர் தாடி தனராஜ் என்றே அழைக்கப்படுகிறார். அவர் பொறையார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை நடத்தும் ஒரே கல்லூரி பொறையாரில் உள்ள பிஷப் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியாகும். அவர் திருச்சபை பள்ளிகளில் வளர்ச்சி பற்றி புள்ளி விவரங்களுடன் ஆங்கிலத்தில் அழகாக உரையாற்றினார். டாக்டர் நோயால்தாஸ் கண் மருத்துவர். அவர் கோயம்புத்தூரில் உள்ள மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனையில் பணி புரிகிறார். அவர் பேராயர் ஈஸ்டர் ராஜ் அவர்களின் மகன். அதனால் அவருக்கு  தனி மதிப்பு. அவர் கோயம்புத்தூரில் உள்ள பிரச்னைகள் பற்றி பேசினார்.
          என்னுடைய முதல் சினோடு தொடர்புக் கூட்டம் வெற்றிகரமாக ஆனது  எனக்கு பெருமிதம் தந்தது. இனி நான் திருச்சபைப் பணியிலும் தீவிரமாக இறங்கலாம்.
          அடுத்தது மதுரை மறைமாவடடக்  கூடடம்.அதில் பங்கு பெறும்போது மதுரை மாவட்டத்து பத்து ஆலயங்களின் தலைவர்களை சந்தித்து அறிமுகம் செய்துகொள்ளலாம்.
          மனதில் ஒருவித நிறைவோடு அன்று இரவு திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் புறப்பட்டேன்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்மருத்துவக் கட்டுரை நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *