தொடுவானம் 238. மினி தேர்தல்

Spread the love

தொடுவானம்

டாகடர் ஜி. ஜான்சன்

238. மினி தேர்தல்

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சினோடு கூட்டத்தின் சுற்றறிக்கை வந்தது. அதில் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்படும். தகவல் இருந்தது. மொத்தம் ஒன்பது பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் மூவர் சபை குருக்கள். நால்வர் குரு அல்லாதவர்கள்.
தேர்தல் திருச்சியில் நடைபெறும். ஒவ்வொரு ஆலயத்திலிருந்தும் வாக்களிக்கும் பிரதிநிதிகள் வருவார்கள். அவர்கள் அந்தந்த ஆலயங்களில் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எங்கள் ஆலயத்திலிருந்து ஐந்து பேர்கள் தேர்வு பெறவேண்டும். அது எனக்கு பெரும் பிரச்னை இல்லை. நான் சொல்லும் ஐந்து பேர்களாலும் இங்கு வெற்றி பெற்றுவிடுவார்கள். திருச்சி தேர்தலில் நான் சொன்னபடியே வாக்குகளையும் செலுத்திவிடுவார்கள். என்னுடைய ஆலய உறுப்பினர்கள் என்மீது அத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர்.
திருச்சபை வரலாற்றில் இந்தத் தேர்தல் வித்தியாசமானது.இரண்டு பிரிவினருக்கு இடையில் முதன்முதலாக கடும் போட்டி. வெளியேறும் பேராசிரியர் விக்டர் ஒரு குழுவுடன் போட்டியிடுகிறார். அதை எதிர்த்து லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சில இயக்கங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிடுகிறது.
இதுவரை திருச்சபையை ஆண்டவர்கள் பழம்பெரும் புள்ளிகள். அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தியே சபைச் சங்க உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும் நல்ல வேலையில் இருப்பவர்களாகவும் இருந்தனர்.பெரும்பாலும் வெள்ளாளர் சமூகத்தாரின் ஆதிக்கமே இருந்து வந்தது. மற்ற வகுப்பினர் அவர்களுக்கு வாக்களித்துவிட்டு அவர்களிடம் கைகட்டி சிறுசிறு சலுகைகளைபி பெறலாயினர். இந்த முறையால் பட்டணங்களில் இருந்த பெரிய சபைகள்தான் பெரிய பெரிய தேவாலயங்களைக் கட்டிக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்தன. கிராமப்புறங்களில் ஏழை எளியோர் வாழ்ந்தனர்.அவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்படட சமூகத்தினர். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயராமலேயே இருந்தது. அவர்களின் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதே சிரமமாக இருந்தது. பல்கலைக்கழகம் செல்லும் நிலையில் அவர்கள் இல்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்த கிராம சபையினரின் பொருளாதாரம் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு கிராமங்களில் சுமார் ஐம்பது பேர்கள் அமரும் சிற்றாலயங்கள்தான் இருந்தன. அவற்றுக்கு சபை குரு இல்லை. ஒரு உபதேசியார் இருப்பார். அவர் அநேகமாக அந்த கிராமப் பள்ளியின் ஆசிரியராகவும் இருப்பார்.அவர்களை வழிநடத்தி முன்னேற்றம் காணச் செய்யும் அளவுக்கு இன்னும் தலைவர்கள் உருவாகவில்லை. அண்ணன் போன்ற ஒருசிலர் அபூர்வமாக பட்டதாரிகளாக இருந்தாலும் ஒரு முறையான அமைப்பும் போதுமான பொருளாதாரமும் இல்லாத காரணங்களால் அவர்களால் தலைமை ஏற்று எதுவும் செய்ய முடியவில்லை. சபை குருக்கள் பலர் இருந்தபோதிலும் அவர்கள் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டார்களேயொழிய இதுபோன்ற சமுதாய பணிகளில் ஈடுபடுவது தவறு என்று ஒதுங்கி வாழ்ந்தனர்,அதோடு அதை அரசியலாகக் கருதி பேராயருக்குப் பயந்து தலைமை ஏற்கத் தயங்கினர்.
இத்தகைய சூழலில்தான் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் உருவானது. சமுதாய முன்னேற்றத்துக்கான இத்தகைய ஒரு அமைப்பு தேவை என்று கூறி இதன் தொடக்கப் பணிகளைச் செய்தவர் மறைதிரு பால் தேவசகாயம். அதன் மூலம் சமுதாய உணர்வு மிக்கவர்களை ஒன்று கூட்டி உருவாக்கப்பட்டதே லுத்தரன் முன்னேற்ற இயக்கம். பத்து பேர்களுடன் உதயமான இந்த இயக்கம் இன்று ஆயிரத்துக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கமாக் உருவாகிவிட்ட்து!
அதன் முதல் வெற்றியாக மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப்பை தரங்கைப் பேராயராக தேர்வு பெற்றுவிட்டார். தற்போது அடுத்த கட்டமாக ஆலோசனைச் சங்கத்தைக் கைப்பற்றி செயலாளர் [பதவியையும் பெற்றாகவேண்டும்.
லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் சுற்றறிக்கை வந்தது. அதில் இயக்கத்தின் கூட்டம் பொறையாரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.அப்போது ” மினி தேர்தல் ” நடைபெறும். அதில் இரண்டு குருமார்களும் மூன்று குருவல்லாதவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் ஐந்து பேர்களும் நடைபெறப்போகும் ஆலோசனை சங்கத் தேர்தலில் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள நான்கு இடங்களும் வேறு சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவை வெள்ளாளருக்கு இரண்டு இடங்களும், பள்ளருக்கு ஒரு இடமும், வன்னியருக்கு ஒரு இடமும் அடங்கும். இதுவே கூடடணி.
மினி தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதிக வாக்குகள் பெறுவோர் வெற்றிபெறுவார்கள்.அதைப் படித்ததும் எனக்கு அதில் போட்டியிட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது. அண்ணனைத் தொடர்பு கொண்டேன். அவரும் சரி என்றார். தான் போட்டியிடவில்லை என்றார். கூட்டம் அன்று அங்கு வாக்களிக்க வருவோரிடம் வாக்குகள் சேகரிக்கவேண்டும் என்றார். என்னை ஏறக்குறைய அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆதலால் நான் தேர்தலில் போட்டியிட விரும்புவதை ஒரு தாளில் அச்சடித்து அதை எடுத்துச் செல்ல முடிவு செய்தேன்.
தேர்தல் நாள். சினோடு கூட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களே மினி தேர்தலில் வாக்களிக்க முடியும். நான் அவர்களைப் பார்த்து வாக்குகள் சேகரித்தேன். நான் பார்த்த அனைவருமே எனக்கு வாக்களிப்பதாகக் கூறினர்.அது உற்சாகம் தந்தது. இந்தத் தேர்தலில் நான் வென்றுவிட்டால் நிச்சயமாக ஆலோசனைச் சங்கத் தேர்தலிலும் வென்றுவிடலாம். அதன் பின்பு நான் ஆலோசனைச் சங்க உறுப்பினர் ஆகிவிடலாம். திருச்சபையின் எதிர்காலத்தை முடிவெடுக்கும் பொறுப்பில் நான் அமர்ந்துவிடுவேன்.இத்தகையா மணக்கோட்டைகளுடன் அந்தத் தேர்தலில் போட்டியிட்டேன்.
என்னைப்போல் இன்னும் பலரும் வாக்குகளைச் சேகரித்தனர். என்னிடமும் அவர்கள் வாக்குகள் கேட்டனர்.
கூட்டம் தொடங்கியது. லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் மறைதிரு பிச்சானந்தம் ஜெபம் செய்தார்.அதைத் தொடர்ந்து அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, மோசஸ் தம்பிப்பிள்ளை, மறைதிரு ஐ.பி. சத்தியசீலன் போன்ற முன்னோடித் தலைவர்கள் பேசினார்கள். வாக்குச் சீட்டுகள் தரப்பட்டன. ஒவ்வொருவராக ஐந்து பெயர்களை எழுதி வாக்குப் பெட்டியில் சேர்த்தோம். வாக்குகள் எண்ணப்படடன. நெஞ்சம் படபடக்க முடிவுக்கு காத்திருந்தேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஅன்னாய்ப் பத்து 2மருத்துவக் கட்டுரை இதயக்  குருதிக் குறைவு நோய்