தொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக இருந்தது தனித்தனியாக கழிவறைகள் இருந்தன. ஆனால் குளிக்கும் இடம் பொதுவானது. ஒரு பெரிய தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது.அதிலிருந்து குவளையால் மொண்டு ஊற்றித்தான் குளிக்கவேண்டும். ஒரே நேரத்தில் பலர் குளிக்கலாம்.
அங்கு ஒரு வினோதம் கண்டேன். நான் குளித்தபோது ஐந்து பேர்கள் வேறு விதமாக இருந்தனர். நாம் நல்ல சிவப்பு என்போமே அந்த வெள்ளை நிறத்தில் இருந்தனர். ஆஜானுபாகுவாக உயரமாகவும் காணப்பட்டனர். மீசை தாடியுடன், பெண்களுக்கு உள்ளதுபோல் நீண்ட கூந்தலையும் தலையில் சுற்றியிருந்தனர்.பார்ப்பதற்கு நடராஜர் கோவில் சாமியார்கல்போல் இருந்தனர். அவர்களுடைய பார்வையில் ஒருவித கூர்மையையும் தெரிந்தது. அவர்கள் பல் துலக்கியபோது வாய்க்குள் விரலை விட்டு பெரும் சத்தத்துடன் சளியை வெளியே துப்பினர் திரும்ப திரும்ப அவ்வாறு சத்துடன் வாய் கொப்பளித்ததால் அவர்களுக்கு எதோ பெரிய வியாதி உள்ளது என்று நான் எண்ணிக்கொண்டேன்.
குளித்து முடித்து திரும்பியதும் எங்கள் இடத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் அது பற்றி கூறி அவர்கள்; ஏன் அப்படி மீசையும் தாடியும் நீண்ட முடியும் வைத்துள்ளனர் என்று கேட்டேன்.
” அவர்கள் சீக்கு வங்காளிகள். அவர்கள் வடக்கே பஞ்சாப் என்ற ஊரிலிருந்து சிங்கப்பூர் போகிறார்கள் . ” என்று கூறினார். எனக்கு பஞ்சாப் பற்றி அப்போது தெரியாது. அனால் சீக்கு என்று அவர் சொன்னதைக் கேட்டதும் அவர்களுக்கு உண்மையில் சீக்குதான் ( வியாதிதான் ) என்று நம்பிவிட்டேன். ( அதன்பிறகு நான் பஞ்சாபிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த கப்பல் அனுபவம் நினைவில் வரும் )

நாகப்பட்டிணம் வந்தடைந்த ரஜூலா கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு நின்றது. அங்கு பெரிய துறைமுகம் இல்லை. தொலைவில் ஊர் தெரிந்தது. அங்கிருந்து பிரயாணிகள் பெரிய படகுகளில் வந்தனர். கப்பல் அருகே அவை வந்ததும் அதிலிருந்து ஏணிப்படி வழியாக கப்பலில் ஏறினர். அது ஆபத்தானதுதான். தவறினால் கடலில்தான் விழவேண்டும். அந்த படுகுகளின் ஊழியர்கள் பிரயாணிகள் ஏற உதவினர். சாமான்களும் அவ்வாறே ஏற்றப்பட்டன
அன்று பகல் முழுதும் கப்பல் அங்குதான் நின்றது. மாலையில் சங்கு ஊதிவிட்டு மீண்டும் புறப்பட்டது. இனிமேல் ஏழு நாட்கள் கரையைப் பார்க்க முடியாது. நடுக்கடலில்தான் பிரயாணம் .
அன்றிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் நீல நிறக் கடல்தான். சில நேரங்களில் அது பச்சை நிறமாகவும் தெரியும். இருட்டியபோது அது கருப்பு நிறத்தில் தெரியும். கப்பலின் பின் தளத்தில் நின்று பார்த்தால் அது சென்ற பாதையில் வெள்ளை நிறத்தில் நீண்ட சாலைபோல் தடம் தொடர்வது தெரியும்.. கடல் நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதால் அந்த கோடு உண்டாவதுபோல் தோன்றும். அப்போது மீன் கூட்டங்கள் அலைகளின் மீது பறந்து செல்வதைக் காணலாம்.
கப்பலின் மேல் தளத்தில் நின்று பார்த்தால் எல்லா திசையிலும் தொலைவில் நீலக் கடலும் நீல வானமும் ஒன்று சேர்ந்து தொடுவானமாகக் காட்சி தரும். இரவில் நிலவொளி ரம்மியமாக வீசும். அதோடு விண்மீன்கள் அதிக பிரகாசமாக ஒளி வீசி மேலும் அழகூட்டும். ( இத்தகைய இயற்கை அழகுடன் இதமான கடல் காற்றும் இருண்ட பிறகு வீசினால் அது ஏகாந்தம்தான்! )
அந்த ஏழு நாட்களும் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தாலும் கொஞ்சமும் சலிப்பு உண்டாகவில்லை.கிராமத்திலேயே ஏழு வருடங்கள் கழித்துவிட்ட எனக்கு அந்த ஏழு நாட்களும் எல்லையில்லா இன்பத்தையே ஈன்றன. அந்த வயதில் வேறு என்ன கவலை தெரியப்போகிறது. கப்பலில் என் வயதுடைய சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்துகொண்டு நன்றாக ஆட்டம் போட்டேன். அம்மாவால் என்னை அதிகம் கண்டிக்க முடியவில்லை. அவர் தீராத வாந்தியால் படுத்தே கிடந்தார். ஒரு நோயாளிக்கு உதவுவதுபோல் நான்தான் அவருக்கு உணவு கொண்டு வருவதும், வாந்தியைக் கொண்டுபோய்க் கொட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்தேன்.மற்ற நேரத்திலெல்லாம் கப்பலின் எல்லா பகுதிகளிலும் ஆராய்வதுதான் எனக்கு பிடித்தது.

கப்பலின் அடித்தளத்தில் அதை ஓட்டும் பெரிய இயந்திரங்கள் பயங்கரமான இரைச்சலுடன் இயங்கின. இன்னொரு பகுதியில் வெங்காய மூட்டைகளும் இதர சாமான்களும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
இரண்டாம் வகுப்பில் வரிசை வரிசையாக அறைகள் இருந்தன. அங்குதான் இரண்டாம் வகுப்பு பிரயாணிகள் தங்கினர்.முதல் வகுப்பு அதற்கும் மேலே இருந்தது. அங்கு போக முடியவில்லை. அங்கு சில ஐரோப்பியர்கள் கூட இருந்தனர். அவர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தனர். சிலருக்கு தலைமுடியும் வெள்ளை நிறத்தில் இருந்தது.
கப்பலின் இன்னொரு பகுதியில் ஒரு சொகுசுக் கூடம் இருந்தது. அங்கு மதுபானக் கடையும் இருந்தது. சிலர் அங்கேயே அமர்ந்து மது அருந்தினர்.வேறு தின்பண்டங்கள் அங்கு விற்கவில்லை. எனக்கு அம்மா கொண்டுவந்த முறுக்கு, கெட்டி உருண்டை, அதிரசம் போன்றவை போதுமானதாக இருந்தன.
இரவில் மேல்தளத்தில் பெரிய திரை கட்டி திரைப்படம் காட்டப்பட்டது நிறைய பேர் அங்கு படம் முடியும்வரை இருப்பார்கள்.
மூன்று நாட்கள் கழித்து தொலைவில் கரையுடன் கூடிய பெரிய தீவு தெரிந்தது. உயர்ந்த மலைகளில் காடு அடர்ந்திருந்தது. அதுதான் அந்தமான் தீவு என்று கூறினர். அங்குதான் அந்தமான் சிறை உள்ளதாகச் சொன்னார்கள். இந்திய சுதந்திரப போராட்ட வீரர்களை ஆங்கிலேயர் அங்குதான் சிறை வைத்திருந்தனராம். அங்கிருந்து கைதிகள் கடலில் நீந்தி தப்பிக்க முடியாதாம்.
தொலைவில் தெரிந்த அந்தமான் தீவுகளைத் தாண்டி கப்பல் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அந்தத் தீவுகளும் மறைந்துபோயின. மீண்டும் சுற்றிலும் கடலும் வானும்தான் தெரிந்தது. வெகு தொலைவில் ஒரு கப்பல் மிகச் சிறிதாக எதிர் திசையில் செல்வது தெரிந்தது.
மீண்டும் மூன்று நாட்கள் அதே நிலைதான்.அதன்பின்புதான் தொலைவில் மீண்டும் கரை தெரிந்தது. பினாங்கு நெருங்குவதாக பேசிக்கொண்டார்கள். நிலத்தை கப்பல் நெருங்க நெருங்க உயர்ந்த மலைகளும் பச்சை நிறத்தில் செழிப்பான நிலப்பகுதியும் சில உயர்ந்த கட்டிடங்களும் எங்களை வரவேற்றன. பினாங்கு ஒரு பெரிய தீவு. கல்கத்தாவிலிருந்து ஆங்கிலேயர்கள் முதன்முதலாக அங்குதான் இறங்கி காலனி அமைதார்களாம். அதன் பின்புதான் மலாக்கா, சிங்கப்பூரைப் பிடித்தார்களாம்.இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை பினாங்கு தீவுக்கும் நாடு கடத்தினார்களாம்.அவர்களில் சின்ன மருதுவின் மகன் துரைசாமியும் அடங்குவாராம்.அப்போது பினாங்கு நகரை உருவாக்க தமிழ்க் கைதிகள் .பயன்படுதப்பட்டார்களாம்.
பினாங்கு துறைமுகம் பெரியது. கப்பல் நங்கூரம் இட்டு நின்றதும். அங்கு இறங்கவேண்டிய பிரயாணிகள் இறங்கினர். சாமான்களைத் தூக்கிச் செல்ல வந்த போர்ட்டர்களில் தமிழர்களுடன் வேறு மாதிரியான சிலரும் இருந்தனர். சிலர் சாம்பல் நிறத்தில் மூக்கு சப்பையாகவும் காணப்பட்டனர். அவர்கள் மலாய்க்காரர்களாம். . வேறு சிலர் மஞ்சள் நிறத்தில் சிறிய கண்களுமாக இருந்தனர்.அவர்கள் சீனர்களாம்.
காலையிலிருந்து மாலை வரை வெங்காய மூட்டைகள் இறக்கப்பட்டன.அந்தப் பகுதி முழுதும் சிதறி ஓடிய வெங்காயங்களால் பரவி கிடந்தன. அங்கு வேலை செய்தவர்கள் அவற்றை எடுத்து பொட்டலம் கட்டிக்கொண்டனர்.
அன்று இரவு கப்பல் மீண்டும் சங்கு ஊதி பிரயாணத்தைத் தொடர்ந்தது. வழி நெடுகில் மலாயாவின் கடற்கரை தெரிந்தது. மறுபக்கம் தொலைவில் சுமாத்ராவின் மலைகளும் தெரிந்தன.அது இந்தோனேயாவின் பெரிய தீவு..
காலையில் விடிந்ததும் கப்பல் இன்னொரு துறைமுகத்தில் நின்றது. அதுதான் கிள்ளான் துறைமுகமாம். அங்கும் சில பிரயாணிகள் இறங்கினார்கள்.மீண்டும் வெங்காயம் வெளியேறியது அன்று மாலையில் கப்பல் புறப்பட்டது.
எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை! காலையில் சிங்கப்பூர் அடைந்துவிடுவோமாம்! அங்கு அப்பா காத்திருப்பாராம்! இரவெல்லாம் அப்பா பற்றிய எண்ணம்தான்! இடையிடையே எழுந்து சன்னல் வழியாக வெளியே பார்ப்பேன்.தொலைவில் கடற்கரையில் ஒருசில விளக்குகள்தான் மங்கலாகத் தெரிந்தன.
விடிந்ததும் கப்பல் நடுக்கடலில் நின்றுகொண்டிருந்தது. சிங்கப்பூர் துறைமுகமும, கட்டிடங்களும், கடற்கரையின் எழிலும் சற்று தொலைவில் கண்களுக்கு விருந்தாக காட்சி தந்தன!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *