தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

                                                                                                                                     டாக்டர் ஜி. ஜான்சன் 
          
          தமிழ் வகுப்புக்குள் பெருமிதத்துடன் நுழைந்தேன். மூன்று விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்கள். பேராசிரியர் இன்னும் வரவில்லை.நாங்கள் கைகள் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். இனி ஒரு வருடம் தமிழ் வகுப்பில் ஒன்றாகப் பயில்வோம்.
          பேராசிரியர் நுழைந்ததும் நாங்கள் எழுந்து நின்று வணக்கம் கூறி அவரை வரவேற்றோம்.அவர் முதிர் வயதுடையவர். பெயர் ஆளாளசுந்தரம். டையும் கோட்டும் அணிந்திருந்தார்.
          எங்களைப் பார்த்து ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். என்னைத் தவிர மற்ற அனைவருமே தமிழ் நாட்டில் எஸ்.எஸ்,எல்,சி.பயின்றவர்கள். நான் ஒருவன்தான் சிங்கப்பூர்! அதைக் கேட்டதும் அனைவருமே என்னை வியந்து நோக்கினர்! அவ்வாறு அவர்கள் வியந்ததற்கு காரணம் உள்ளது. அவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே பயின்றவர்கள். அவர்களுக்கு ஈடாக வெளிநாட்டு மாணவன் ஒருவன் தமிழ் வகுப்பில் சேர்ந்துள்ளதை அவர்களால் நம்ப முடியவில்லை. வெளிநாட்டு மாணவர்கள் பிரஞ்சு மொழியைத்தான் இரண்டாம் பாடமாக எடுத்தனர். சிங்கப்பூரில் சீனர்கள் மத்தியில் நான் ஒருவனே தமிழனாக இருந்தது நினைவுக்கு வந்தது.
          அவர்கள் அனைவரும் தமிழில் பயின்றவர்கள்.அவர்களுடைய தமிழ் தரமானதாக இருக்கும். நான் சிங்கப்பூரில் ஆங்கிலப் பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்தவன். சொந்தமாக தமிழில் நிறைய படித்தவன். என்னுடைய தமிழ் இவர்கள் மத்தியில் எடுபடுமா என்ற அச்சம் எனக்கு உண்டானது.பேராசிரியர் கூட ஒரு கணம் என்னை வியப்புடன்தான் பார்த்தார்.
          அன்று அவர் சங்க இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் செய்தார். அதைக் கேட்க இனிமையாக இருந்தது.நான் அனைத்தையும் ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக்கொண்டேன்.
          சங்க இலக்கியங்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்று மொத்தம் பதினெட்டு நூல்கள் கொண்டவை. அவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சுமார் அறுநூறு வருடங்களில் 473 பெயர் தெரிந்த புலவர்களாலும், 102 பெயர் தெரியாத புலவர்களாலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டவை. அவற்றில் 2381 பாடல்கள் 26,350 வரிகளில் எழுதப்பட்டுள்ளன.
           எட்டுத் தொகையில் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றினை, கலித்தொகை, பரிபாடல் ஆகியவை அடங்கும்.
          திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் எனும் பத்து தொகுப்புகள் கொண்டவை பத்துப்பாட்டு.
        சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் யாப்பு இலக்கணத்துடன் கவிதை வடிவில் எழுத்தாணியால் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவை.
          ” நற்றினை நல்ல குறுந்தொக, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாட, கற்றறிந்தார் ஏத்தும் கவியொடு, அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத்தொகை “
         ” முருகு பொருநாறு பாணிரெண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி -மருவினிய  கோல நெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப் பலை கடாத்தொடும் பத்து.”
          பேராசிரியர் ஆளாளசுந்தரம்  இவ்வாறு சங்க இலக்கியம் பற்றி கவிதையாகப் பாடியபோது அவர் ஒரு சங்கப் புலவராகவே மாறிவிட்டார்! தமிழ்ப் பொய்கையில் மூழ்கி தேனுண்ட வண்டாக நானும் மயங்கிப்போனேன். அந்த முதல் வகுப்பிலேயே தமிழ் மழையில் நான் நனைந்து மகிழ்ந்தேன்!
          தமிழ் வகுப்பில் பேராசிரியர் ஆளாளசுந்தரம் இருந்ததுபோல் ஆங்கில வகுப்பிலும் புகழ்பெற்ற பேராசிரியர் ஒ ருவர் இருந்தார். அவர் ஆங்கிலேயர்.பெயர் டாக்டர் மெக்பேல். அவர் ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின்  ”  வெனிஸ் நகர வணிகன் ” என்ற நாடகம் போதித்த விதம் மறக்க முடியாதது.நாடகத்தை அப்படியே தத்ரூபமாக நடித்து காட்டுவார்!
            அதில் வரும் ஷைலாக் என்ற யூதன் வட்டிக்கு பணம் தந்து சம்பாதிப்பவன். பசாரியோ  என்பவன் போர்ஷியா என்பவளை மணமுடிக்க விரும்புகிறான். அவனுடைய் நண்பன் அந்தோனியோவிடம் பணம் கேட்கிறான்.அவனிடம் அப்போது பணம் இல்லை. அவன் பெயரில் ஷைலோக்கிடம் கடன் பெறுகின்றனர்.அந்த யூதனுக்கு அந்தோனியாவை பழி தீர்க்க ஆசை.காரணம் அவன் யூத எதிர்ப்பாளன். அதனால் வட்டி வேண்டாம் என்று சொல்லி 3000 தங்க நாணயம் கடன் தருகிறான்.ஆனால் ஒரேயொரு நிபந்தனை விதிக்கிறான். குறித்த நாளில் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் அந்தோனியாவின் உடலிலிருந்து ஒரு பவுண்டு சதையை வெட்டிக்கொல்வான் என்பதே அந்த நிபந்தனை. பசாரியோ  போர்ஷியாவை மணக்கிறான். அந்தோனியாவின் கப்பல் வர்த்தகத்தில் நஷ்டம் உண்டாகியதால் அவர்களால்  பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்தோனியாவைக் காப்பாற்ற போர்ஷியா மாறுவேடத்தில் ஆண் வழக்கறிஞராக ஆஜர் ஆகிறாள். அவள் ஷைலாக்கிடம் சதையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறாள். அவனும் கத்தியைத் தீட்டுகிறான். அவன் அந்தோனியாவை நெருங்கியதும் வெறும் ஒரு பவுண்டு சதையை மட்டுமே வெட்டிக்கொளளலாம், அப்போது ஒரு சொட்டு இரத்தம்கூட கீழே விழக்கூடாது என்று நிபந்தனையிடுகிறாள்.இரத்தம் பற்றி ஏதும் கடன் பத்திரத்தில் எழுதப்ப்படவில்லை என்றும், அப்படி விழுந்தால்,  ஒரு கிறிஸ்துவனின் இரத்தத்தை சிந்திய குற்றவாளியாகி அவனுடைய சொத்து அனைத்தையும் இழக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கிறாள்! அது கேட்டு தடுமாறிப்போன ஷைலாக் கடன் தந்த அசலையும் இழந்தவனாக ஆளை விட்டால் போதும் என்ற நிலைக்குள்ளாகிறான்
         கதையில் வரும் கதைமாந்தர்கள் ஷேக்ஸ்பியரின் வசனத்தை பெசுவது போலேவே நடித்துக் காண்பிப்பார் பேராசிரியர் டாக்டர் மெக்பேல் !
      நான் தமிழ் இலக்கியத்தில் இன்பம் கண்டதுபோலவே ஆங்கில இலக்கியத்திலும் ஆனந்தம் கொண்டேன்!
          இந்த இலக்கிய ஆர்வமும் ஈர்ப்பும் என்னை மருத்துவம் பயில்வதிலிருந்து திசை திருப்பிவிடுமோ என்ற அச்சம்  அப்போது தோன்றவே செய்தது!
           ஆனால் நான் அறிவியல் பிரிவில் சேர்ந்துவிட்டேன். கட்டாயம் ஒரு இரண்டாம் மொழி எடுக்கவேண்டும் என்பதால் தமிழை விரும்பி ஒரு சவாலாக எடுத்தேன். ஆங்கில இலக்கியமும் நானாக தேர்ந்து எடுத்துக்கொண்டேன்.
            அறிவியல் பிரிவில் இயற்பியல் ( Physics ), வேதிஇயல்  ( Chemistry ), தாவரஇயல் ( Botany ), விலங்கியல் ( Zoology )  பாடங்கள் படித்தாக வேண்டும். இவற்றில் இயற்பியல், வேதிஇயல் ஆகிய இரண்டும் கொஞ்சம் சிக்கல் நிறைந்தவை. காரணம் எதையும் நேரில் பார்க்க முடியாத நிலை. பலவற்றை கற்பனையில்தான் கண்டு உணர வேண்டும். ஆனால் தாவரஇயலும், விலங்கியலும் எனக்குப் பிடித்திருந்தன. செடிகள், பூக்கள், தவளை, பாச்சை போன்றவற்றை கையில் எடுத்து அவற்றை வெட்டிப் பார்த்து படங்கள் வரைவது சுலபமாக இருந்தது. இவையனைத்தும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டதால் எனக்கு எளிமையாக இருந்தது – சிங்கப்பூரில் நான் ஆங்கிலத்தில் கல்வி கற்றதினால்.
hqdefault          காலையில் வகுப்புகள் முடிந்து மதிய உணவுக்கு விடுதி செல்வோம். பின்பு பிற்பகலிலும் திரும்பி வகுப்புக்குச் செல்வோம். மாலையில் விடுதி திரும்பி குளித்து முடித்து ஆடைகள் மாற்றியபின்பு நண்பர்கள் ஒன்று கூடுவோம். எனக்கு துவக்கத்தில் பிரேம்குமார், துளசி, பிரான்சிஸ், சையத் கோயா, ஏழுமலை, இராமநாதன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். விடுதி வளாகத்திலேயே உட்கார்ந்து இரவு உணவு வரை பேசிக்கொண்டிருப்போம். அதிகமாக தமிழ் நாட்டு அரசியல் பேசுவோம். சில நாட்களில் தாம்பரம் டவுனுக்கு நடந்து செல்வோம். சனி ஞாயிறு விடுமுறைகளில் மின்சார இரயில் மூலம் சென்னை செல்வோம். அங்கு சபையர் அல்லது சாந்தி தியேட்டரில் படம் பார்ப்போம். பின்பு புஹாரி அல்லது மவுண்ட் ரோடு சீன உணவகத்தில் இரவு உணவு முடித்துவிட்டு திரும்புவோம்.சில இரவுகள் தாம்பரம் திரையரங்குகளில் படம் பாப்போம்.
         பிரேம் குமார், துளசி, சையத் கோயா, ஏழுமலை, பிரான்சிஸ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.இராமநாதன் மலேசியாவைச் சேர்ந்தவன். இவர்களில் சையத் கோயா, ஏழுமலை, பிரான்சிஸ் ஆகியோர் பட்டப் படிப்பு மாணவர்கள்.இவர்கள் அனை வருமே தமிழ் ஆர்வத்தால் நண்பர்கள் ஆனார்கள்.
         விடுதியைக் கண்காணிக்க வார்டன் இருந்தார்.அவர் டாக்டர் தாமஸ் தங்கராஜ். ( இவர் பின்பு கல்லூரி முதல்வர் ஆகி,  அதன்பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதலவர் ஆனார் )
          டாக்டர் சந்திரன் தேவநேசன். அப்போது கல்லூரி முதல்வர்  இருவருமே மிகவும் அன்பானவர்கள்.
           விடுதியின் நிர்வாகத்தை நடத்த ஓர் அமைச்சரவை செயல்பட்டது. இது இந்திய அரசியலமைப்பு போன்றது.விடுதி மாணவர்கள் அனைவரும் வாக்களித்து ஒன்பது பேர்கள் கொண்ட ஓர் அமைச்சரவையைத் தேர்ந்தெடுப்போம். அவர்களில் ஒரு சபாநாயகரும் எட்டு அமைச்சர்களும் செயல்படுவார்கள்.அவர்களில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர்  பொதுச் செயலாளர் என்று அழைக்கப்படுவார். இந்த விடுதியின் முதல் பொதுச் செயலாளரின் பெயர் முஹம்மது நபி. எங்களுடைய பொதுச் செயலாளரின் பெயர் அத்ரி. அவர் வடநாட்டவர். உணவு அமைச்சர், சுகாதார அமைச்சர், கலாசார அமைச்சர், விளையாட்டு அமைச்சர் என்று பல அமைச்சர்கள் இருந்தனர்.இவர்களில் உணவு அமைச்சர் ஜாப்பார் எனக்கு நெருக்கமானார்.அவர் காரைக்காலைச் சேர்ந்தவர்.
            விடுதியில் பல இயக்கங்கள் இயங்கின. நான் பாரதி மன்றத்தில் சேர்ந்துகொண்டேன். பட்டிமன்றங்கள், இலக்கிய, அரசியல் சொற்பொழிவுகள் நடத்தினோம். பிரபல தி. மு.க. தலைவரான நாஞ்சில் மனோகரனை நாங்கள் அழைத்து பேச வைத்தோம். அவர் அருமையாகப் பேசி எங்களை அசரவைத்தார்.
          ஜாத்ரா எனும் மன்றம் கலை நிகழ்சிகள், நாடகங்கள் நடத்தியது. உத்சார் எனும் மன்றம் நடனப் போட்டிகள் நடத்தியது. இவற்றுடன் ஒரு இயற்க்கை மன்றமும் இயங்கியது.
          விடுதியில் இரண்டு சஞ்சிகைகள் வெளியிட்டோம். ” உஷா ” என்பது இலக்கிய  ஏடு. அதில் நான் ” உமா :” என்ற ஆங்கில சிறுகதை எழுதினேன். ” ட்ரிபியூன் ” என்பது செய்திகளின் வெளியீடு.
          விடுதியின் நோக்கம் ( motto ) ” கடவுளுக்கும் நாட்டுக்கும்  ” ( For God and Country ) என்பதாகும்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவிளக்கின் இருள்அளித்தனம் அபயம்