தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்

This entry is part 2 of 23 in the series 14 ஜூன் 2015

72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்

கோகிலத்தின் விபரீத ஆசை கேட்டு நான் திடுக்கிட்டேன். ஒருவர் மேல் பிரியம் அல்லது காதல் கொண்டால் அவருடைய கையில் உயிரைத் துறக்க யாரும் முன்வருவார்களா? உன்னை நான் உயிராகக் காதலிக்கிறேன் என்றுதான் பெரும்பாலோர் காதல் மயக்கத்தில் கூறுவார்கள். ஆனால் காதல் நிறைவேறாமல் பிரிய நேர்ந்தால் கொஞ்ச காலம் கவலைப்பட்டு மறந்து போவதுதான் உலக இயல்பு. பின்பு இன்னொரு புதுக் காதல் தோன்றும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. ஒருவேளை விபத்தில் ஒருவர் இறக்க நேர்ந்தால் அது கேட்டு யாரும் உடன் உடன்கட்டை ஏறுவதுபோல் இறப்பதில்லை.
கோகிலம் கதையே வேறு. அவள் இன்னும் இறக்கவில்லை. இறந்துபோவேன் என்றுமட்டும் காணும்போதெல்லாம் கூறிவருகிறாள். நானும் அதைப் பெரிது படுத்தவில்லை. இறப்பது என்பது அவ்வளவு சுலபமா? அதிலும் தெரிந்தே தற்கொலை செய்துகொள்ள அசாத்தியமான மனவலிமையன்றோ தேவை? வாழ்க்கையில் கடும் விரக்தி உண்டானபின்பே ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம். இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம். வாழ்க்கையில் தோல்வியைத் தழுவியவர்கள் தற்கொலை மூலம் அதிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். சிலர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடன் தொல்லையால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்பதை நாம் படித்துள்ளோம். சில தீவிரவாதிகள் முட்டாள்தனமான நம்பிக்கையால் தற்கொலைப் படையில் சேர்ந்து அப்பாவிகளின் உயிர்களையும் தங்களுடைய உயிர்களையும் மாய்த்துக்கொள்கின்றனர்.
Rocky Falls சில பிரமலமானவர்கள் ( நடிகைகள் உள்பட ) தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலகின் மிகவும் பேசப்படும் தற்கொலை ஹிட்லருடையது. அவர் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வி கண்டதோடு தன்னை நேசப் படைகள் சுற்றி வளைத்துவிட்டனர் என்பதை அறிந்து அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்.
அனால் கோகிலம் இளம் பெண். இன்னும் வாழ வேண்டியவள். இவள் மனதில் தற்கொலை எண்ணம் கொழுந்துவிட்டு எரிகிறது. அவள் மனநிலை பாதிக்கப்பட்டவள் இல்லை. நிதானமாகவே செயல்படுகிறாள். கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை. என்னுடனும் வாழமுடியாது.ஆகவே இந்த இரண்டும் கேட்டான் வாழ்க்கை தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டாள். அதனால் சாகணும் என்கிறாள்.
அப்படி சாகும்போது அவளுடைய உயிர் என்னுடைய கையில் போகவேண்டும் என்று கூறுகிறாள். அவளோ கிராமத்தில். நானோ வேலூரில். இப்படி இருக்க எப்போது அவளுடைய உயிரை என் கையில் தரப்போகிறாள்? விடுமுறையில் வரும்போதா? எனக்கு அவளுடைய இந்த பிடிவாதம் அச்சத்தையே உண்டுபண்ணியது.ஒரு வேளை இங்கு தங்கியுள்ள நாட்களில் அதுபோன்று ஏதாவது செய்துகொண்டால்?அதற்குள் இங்கிருந்து தப்பித்துக்கொள்வதே நல்லது என்று தோன்றியது.
அவளுக்கு ஆறுதல் கூறுவதுபோல் சமாதானம் சொன்னேன். தற்கொலை செய்துக்கொள்வது பாவம் என்றோ, கோழைத்தனம் என்றோ வழக்கமாகப் பாடும் பல்லவியை அவளிடம் பாடவில்லை. அவளிடம் அதெல்லாம் எடுபடாது என்பது எனக்குத் தெரியும். கூடிய விரைவில் மீண்டும் நீண்ட விடுமுறையில் வருவதாகக் கூறினேன்.அத்துடன் அண்ணன் வீடு செல்ல வேண்டியதையும் சொன்னேன்.அவள் முகம் வாடியது.
எப்படியோ ஒரு வாரம் இனிமையாக ( அவளிடம் மட்டும் சோகமாக ) ஊரில் கழித்தபின் அண்ணன் வீட்டுக்கு புறப்பட்டேன். சிதம்பரத்தில் வரை பால்பிள்ளையும் துணைக்கு வந்தான். அங்கு விருத்தாசலம் பேருந்தில் ஏறிக்கொண்டேன். சுமார் ஒன்றரை மணி நேரம் பிரயாணம் அது. அங்கிருந்து வேப்பூருக்கு பேருந்தில் சென்றேன். அங்கு நாகலூர், முடியனூர் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன்.
அண்ணியின் பள்ளி எதிரில் பேருந்து நின்றது. நான் இறங்கிக்கொண்டேன். என்னைக் கண்ட அண்ணி உடன் என்னுடன் வீடு வந்தார். எனக்கு மதிய உணவு தந்துவிட்டு மீண்டும் பள்ளி சென்றுவிட்டார். இனி மாலைதான் வீடு திரும்புவார். அண்ணனும் அப்போதுதான் திரும்புவார்.
இங்கு இன்னும் ஒரு வாரம் தங்கலாம். பாண்டுரங்கனுக்கு தெரிந்ததும் அவன் துணைக்கு வந்துவிடுவான். நான் எண்ணியபடியே அவன் மாலையில் வந்துவிட்டான் . கற்பாறை கிணறுகளில் குளிக்க சைக்கிளில் புறப்பட்டோம்.
Teacher அண்ணன் அண்ணி இருவரும் பள்ளிக்குச் சென்று விடுவதால் பாண்டுரங்கன்தான் எனக்கு துணையாக இருப்பான். அண்ணி காலையிலேயே மதிய உணவை சமைத்து விட்டுதான் பள்ளி செல்வார். அவருடைய பள்ளி துவக்கப்பள்ளி. அது வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அந்த கல்வீடுகள் கொண்ட கிராமத்திலிருந்து வெளியேறினால் தார் வீதி . அதில் இடது பக்க ஓரத்தில் பள்ளிகூடம். அதன் நேர் எதிரே வீதியின் மறு பக்கத்தில் ஒரு பெட்டிக்கடையும், கிராமத்து சிறு தேநீர்க் கடையும் இருந்தது. முடியனூர் மக்கள் விவசாயிகள். அவர்கள் கோணார் என்ற சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பாண்டுரங்கன் முன்பு கூறியுள்ளான்.
அண்ணி திருச்சியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருடைய நடை, உடை, பாவனைகள் அவர்களுக்கு புதுமையாகத் தோன்றியிருக்கலாம். கிராமத்து பெண்கள்கூட அவருக்கு ” டீச்சர் ” என்று தனி மரியாதை செலுத்துவார்கள். அண்ணி அன்றாடம் பள்ளி செல்லும் அழகை கிராமத்து மக்கள் இரசித்ததுண்டு. ஆனால் அப்படி அண்ணியை அந்த கிராமத்தினர் பார்த்து இரசித்தது பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விட்டது.
அன்று அண்ணி பள்ளி சென்றபோது தேநீர்க் கடை அருகே இருந்த பெட்டிக்கடையில் சிலர் நின்றபோது அவர்களிடம் அந்த கடைக்காரன் அண்ணியைப் பற்றி எதோ ஆபாசமாக கூறியது அண்ணியின் காதில் விழுந்துள்ளது. பள்ளி முடிந்து மதியம் வீடு வந்தவர் என்னிடம் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் உணவுப் பரிமாறினார். ஆனால் அண்ணன் வந்ததும் அவரிடம் அது பற்றி சொல்லிவிட்டார்.
மதிய உணவை முடித்த அண்ணன் மீண்டும் பள்ளி செல்ல சைக்கிளில் கிளம்பினார். அவர் போன பின்பு சுமார் அரை மணி நேரம் கழித்து அண்ணியை நான் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். கிராம வீதியை விட்டு தார் வீதியை அடைந்தோம். பள்ளியின் எதிரே அந்த பெட்டிக்கடையின் முன் கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் ஏதோ ஆவேசமாகக் கத்திக்கொண்டிருப்பது தெரிந்தது.அவர்களைக் கடந்து பள்ளிக்கு சென்றபோது அண்ணியைச் சுட்டிக்காட்டி அவர்களில் சிலர் பேசுவது கேட்டது.
” தோ போறாளே டீச்சர். அவளோட புருஷன்தான்! ” என்ற குரல் ஒலித்தது. அவர்கள் அண்ணனைப் பற்றிதான் எதோ கூறுகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது.
” அண்ணி. இங்கு எதோ அசம்பாவிதம் நடந்துள்ளது. நீங்கள் பள்ளியில் சொல்லிவிட்டு வந்துவிடுங்கள். நாம் வீடு திரும்புவோம் . ” என்றேன்.
அண்ணி ஒருவித நடுக்கத்தில் இருப்பது தெரிந்தது. அவர் வேகமாக பள்ளிக்குள் நுழைந்து மீண்டும் திரும்பினார். நாங்கள் விரைந்து வீடு சென்றோம். அண்ணி கதவைத் தாளிட்டார். பின்பு அன்று நடந்ததை என்னிடம் சொன்னார். சாப்பிட்டுவிட்டு அண்ணன் பள்ளிக்கு சென்றபோது கோபமாகத்தான் காணப்பட்டார் என்றும் கூறினார்.
அண்ணன் பள்ளிக்கு வேஷ்டி சட்டைதான் அணிந்து செல்வார். அவருடைய ” ரேலீக் ” சைக்கிளில்தான் செல்வார். சில நாட்களில் பேருந்தில் செல்வார். மலை ஆறு மணிக்கு ஒரு பேருந்து திரும்பும். அதில் அவர் வந்துவிடுவார். நாகலூர் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அன்று அவ்வாறு போகும் வழியில் அந்த கடைக்காரனை அடித்துவிட்டார் போலும்.
உண்மையில் என்ன நடந்துவிட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. நான் அங்கு சென்று பார்த்து வருவதாகக் கூறினேன். அண்ணி தடுத்துவிட்டார். உண்மையில் என்ன நடந்துள்ளது என்று தெரிந்தால்தானே அண்ணனுக்கு செய்தி அனுப்பலாம் என்றேன். அண்ணி என்னை வெளியே போகவேண்டாம் என்றார்.
” வெளியே போவது ஆபத்து. நீ அவருடைய தம்பி என்று தெரிந்தால் உனக்கும் ஏதாவது நடக்கும். ஆகவே வேண்டாம். ” என்று கூறினார்.
நான் அதற்குச் சம்மதிக்காமல், அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று சமாதனம் கூறினாலும் மனதுக்குள் ஒருவித அச்சம் தோன்றவே செய்தது.
எப்படியும் அங்கு சென்று நிலவரத்தை அறிந்துவரவேண்டும். அப்படி போனால் பாதுகாப்புடன்தான் செல்லவேண்டும் என்று தோன்றியது.
ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடினேன். சமையல் கூடத்தில் சில கத்திகள் இருந்தன. அவற்றில் ஏதும் பிடிக்கவில்லை.நான் முன்பு சிங்கப்பூரில் இருந்தபோது பாக்கட்டில் கத்தியுடன் சென்றது நினைவுக்கு வந்தது. அப்போது பாதுகாப்புக்கு அது தேவைப்பட்டது. இப்போதும் அதே நிலை என்பதால், நான் ஒரு மருத்துவ மாணவன் என்பதையும் மறந்துவிட்டு இப்போது சண்டை போடவும் தயாராகிவிட்டேன்.
நான் தற்காப்புக்குத்தான் ஆயுதம் தேடினேன். அனால் அங்கு காய் கறி வெட்டும் கத்திதான் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு நீண்ட கத்தரிக்கோல் கண்ணில் பட்டது. அது துணி வெட்ட பயன்படுவது, அதன் நுணி கூர்மயானது. அது போதும் என்ற முடிவுடன் அதை எடுத்து பாக்கட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
” அண்ணி. நீங்கள் இங்கேயே இருங்கள். நான் அங்கு சென்று நிலைமையை அறிந்து வருகிறேன். அதுவரை கதவைப் பூட்டி சாவியை கொண்டு செல்கிறேன். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் வெளியே வர முயற்சி செய்ய வேண்டாம். ” என்று கூறிவிட்டு வெளியேறினேன்.
அங்கு கூட்டம் இன்னும் அதிகரித்து காணப்பட்டது. நான் அங்கு செல்லவில்லை. ஓர் ஓரமாக நின்று கவனித்தேன்.அவர்களில் ஒரு சிலர் என்னைப் பார்த்தனர்.அதன் பின் எனக்குக் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் கத்தலாயினர். அது அச்சத்தை உண்டு பண்ணியது.
” நம்ம ஊருக்கு பிழைக்க வந்த வாத்தியார். எப்படி நம்ம சாதிக்காரனை இப்படி செருப்பால் அடிக்க முடியும்? அவன் மட்டும் வரட்டும். அப்புறம் பேசிக்கொள்வோம்! ” என்று ஒருவன் கத்தியது கேட்டது. அது கேட்டு அச்சம் மேலும் அதிகமானது.
அந்த ஆவேசமான கூட்டத்திலிருந்து ஒருவன் மட்டும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவன் வேறு யாருமில்லை. பாண்டுரங்கன்! அவனுடைய முகத்திலும் பீதி!
என்னை அழைத்துக்கொண்டு சற்று தொலைவு சென்றான்.
” அண்ணே. நம்ம அண்ணன் அந்த கடைக்காரனை செருப்பால் அடித்துவிட்டு சைக்கிளில் போய்விட்டார். இங்கே உடையார்கள் இதை சாதிக் கலவரமாக்குகிறார்கள். வேறு சாதிக்காரன் நம்ம சாதிக்காரனை அடித்துவிட்டான் என்கிறார்கள். அண்ணன் திரும்பி வரும்போது மறித்து அடிக்கப்போவதாகப் பேச்சு நடக்குது. இப்போ நாம் அண்ணனுக்கு தகவல் சொல்லணும். நான் சைக்கிளில்போய் அவரை இன்று வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். நீங்கள் அண்ணியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சொல்லிவிட்டு நான் வந்துடுறேன். நீங்கள் இவர்களிடம் வாய் கொடுக்கவேண்டாம். வீடு போய் கதவை நன்றாக பூட்டிக்கொண்டு இருங்கள். நேரம் ஆவுது. நான் போய் வருகிறேன். ” என்று கூறிவிட்டு சைக்கிளில் புறப்பட்டான்.
நான் வீடு திரும்பி அண்ணியிடம் நடந்தவற்றை விவரித்தேன். காப்பி கலக்கிக் குடித்துவிட்டு இருவரும் பயத்துடன் காத்திருந்தோம். இந்த ஊர் எங்களுக்குப் புதியது. இங்கு வாழும் கோணார்கள் சாதி வெறியர்கள் என்று பாண்டுரங்கன் கூறியிருந்தான்.அவனும் ஒரு கோணார்தான்.அவனைத் தவிர வேறு யாரும் எங்களுக்குப் பழக்கம் இல்லை.அவன் எங்களுக்கு உதவ முயன்றாலும் அவன் ஒருவனால் ஒன்றும் செய்ய இயலாது. அவனும் எங்களுக்கு இரகசியமாகத்தான் உதவ முடியும். வெளியில் தெரிந்தால் அவனை அவர்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில்தான் அவன் உதவுகிறான். இனி அவன் இருட்டிய பிறகுதான் ஊருக்குத் தெரியாமல் எங்களிடம் வருவான். இந்த ஊர் மக்களைப் பகைத்துக்கொண்டு இங்கே வாழ முடியாது. அண்ணன் திரும்பினாலும் ஆபத்து. திரும்பாவிட்டால் அவர் எங்கு செல்வார். இரவு பள்ளியில்தான் தங்கவேண்டும். அதுவரை நாங்கள் இருவரும் சிறைக் கைதிகள்தான்!
மாலையாகிவிட்டது. ஒரு செய்தியும் இல்லை. எதற்கும் நான் மீண்டும் அங்கு சென்று மெல்ல நோட்டமிட எண்ணினேன். அதை அண்ணியிடம் சொன்னேன். அவர் பத்திரம் என்று சொல்லி சம்மதம் தந்தார்.
Bus (1) அண்ணன் சைக்கிளில் வரும் வாய்ப்பில்லை. பாண்டுரங்கன் இந்நேரம் சொல்லி அவர் வருவதைத் தடுத்திருப்பான். எதற்கும் அந்த ஆறு மணி பேருந்து வரும் வரை காத்திருக்க எண்ணி அங்கு சென்றேன். அந்த கூட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை. இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார்கள் போன்றிருந்தது. அவர்கள் யாருக்கும் வேலை வெட்டி இல்லை போன்றிருந்தது. இதுபோன்ற சம்பவங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆள் ஆளுக்கு ஒரு நியாயம் கூறுவார்கள்.கிராமங்களில் உள்ள கலாச்சாரங்களில் இதுவும் ஒன்றாகும். அவர்களும் அந்த கடைசி பேருந்துக்குதான் காத்திருப்பது தெரிந்தது. அதை விட்டால் அந்த வழியில் வேறு பேருந்து கிடையாது.
தொலைவில் பேருந்து வரும் இரைச்சல் கேட்டது. கூட்டத்தில் பரபரப்பு உண்டானது. பேருந்து நின்றதும் அவர்கள் தாக்குதலுக்கு தயாரானார்கள். நானும்தான். பாக்கெட்டில் கையைவிட்டு கூறிய கத்தரிக்கோலை இறுகப் பற்றிக்கொண்டேன். யாராவது அண்ணன் மேல் கையை வைத்தால் அவனை சொருகிவிட தயாரானேன்!
பேருந்து வருவது தெரிந்தது. வந்து நின்றதும் அந்தக் கூட்டம் கத்திக்கொண்டி அதைச் சுற்றி வளைத்துக்கொண்டது.நானும் கூட்டத்துடன் கலந்துவிட்டேன். சில பிரயாணிகள் இறங்கினார்கள். அவர்கள் செல்ல வழிவிட்டனர்.
பேருந்துக்குள் அண்ணன் உள்ளாரா என்று எட்டிப் பார்த்தேன்.ஆம்! அவர் இறங்க எழுந்திருந்தார்.அவரைக் கண்டுவிட்ட கூட்டத்தினர் பெரும் கூச்சலிட்டனர்! நான் கத்தரிக்கோலை வெளியே எடுக்கத் தயாரானேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *