தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன்.

தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் படிக்க என்னுடைய தமிழ்ப் பற்றும், திராவிட உணர்வும் மேலோங்கியது.

தமிழ் மக்கள் எவ்வளவு அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்பதைக் கண்டு வியந்து போனேன்.

          தங்களுடைய எழுத்தாற்றல் மூலமாக எவ்வாறு இளைய தலைமுறையினரை பகுத்தறிவுப் பாதையில் கொண்டுச் செல்ல திராவிட இயக்கம் முயன்று வருவதையும் உணரலானேன்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு மணம் கமழ அறிஞர் அண்ணா பல எழுத்தோவியங்கள் தீட்டினார். கட்டுரைகள், சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள் என அவருக்கேயுரிய அடுக்கு மொழியில் எழுதி ஆயிரமாயிரம் வாசகர் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்.

” குமரிக் கோட்டத்தில் ” மனித வாழ்வை சாதி எப்படி சாய்க்கிறது என்பதைக் காட்டினார்.

” ரங்கோன் ராதா ” வில் பணத்தாசையால் பெண்கள் படும் பாட்டைக் காட்டினார்.

படித்த பெண் எவ்வாறு தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதை, ” பார்வதி பி, ஏ. ” மூலமாக விளக்கினார்.

சமுதாயத்தில் மலிந்துள்ள மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவின கலைஞரின் எழுத்தோவியங்கள்.

” சுருளி மலை ” என்ற நாவல், பல சிற்றூர்களில் தேங்கிக் கிடந்த மூட நம்பிக்கைகளைச் சாடியது.

நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற மூட நம்பிக்கையைச் சாடியது ” வெள்ளிக்கிழமை. ”

கலைஞரின் ” புதையல் ” பகுத்தறிவுச் சிந்தை மிக்கது.

கலப்பு மணம், விதவை மணம் பற்றி பல நாவல்களை ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதினார்.

நம்பிக்கையான எண்ணங்களை எடுத்துக் காட்டின தென்னரசின் நாவல்கள்.

இராதா மணாளன், பி. சி. கணேசன் போன்றோரின் நாவல்களும் பகுத்தறிவைப் பரப்பின.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன் போன்றோரின் கவிதைகளும், பாடல் வரிகளும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன.

இவ்வாறு நூல்கள் படிப்பதின் மூலமாக நானும் ஒரு தீவிர பகுத்தறிவாளன் ஆனேன்!

என்னுடைய எழுத்தாற்றலை வளர்த்தது நாட்குறிப்பு எழுதும் பழக்கமே. அதற்கு வழி காட்டியது டாக்டர் மு. வ. எழுதிய ” அல்லி ” எனும் நாவல்.

அதில் நாட்குறிப்பு எழுதுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி அழகான உவமையுடன் கூறியிருந்தார்.

” நாள்தோறும் தன் முகத்தையும் தலையையும் ஒழுங்கு படுத்திக் கொள்வதுபோல், தன் உள்ளத்தையும் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். தலைவாரி அமைத்துக்கொள்ள கண்ணாடி வேண்டும். அதுபோல், உள்ளத்தை ஒழுங்கு படுத்த நாட்குறிப்பு எழுதும் பழக்கம் வேண்டும்.”

இக் கருத்து என்னைக் கவர்ந்தது. அன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதலானேன். அந்த பழைய நாட்குறிப்புகள்தான் ( 44 வருடங்களுக்கு எழுதப்பட்டவை ) இன்று இத் தொடரை எழுத உதவுகின்றன.

உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே இவ்வாறு படிப்பதும் எழுதுவதும் என் பொழுதுபோக்கானது. மாலையில் பள்ளித் திடலில் ஓட்டப் பயிற்சியைத் தொடர்ந்தேன்.

அப்போது எனக்கு ஓவியக் கலை மீதும் நாட்டம் உண்டானது. எனக்கு கையெழுத்து அழகாக இருப்பதுபோல் ஓவியங்கள் வரையவும் முடிந்தது.

1961 ஆம் வருடத்தில் சிங்கப்பூரில் தமிழர் திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாக்குழுத் தலைவர் தமிழவேள் திரு. கோ. சாரங்கபாணி. செயலர் திரு. செல்வகணபதி. இருவரும் முறையே தமிழ் முரசின் ஆசிரியரும், துணை ஆசிரியருமாவார்கள்.

கதை, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெறும் என்று தமிழ் முரசில் செய்தி வந்தது.

நான் ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். சில ஓவியங்களை வரைந்தேன். ஆனால் அப்பா அதை விரும்பவில்லை. படிக்கும் நேரத்தை படம் வரைந்து வீணாக்குவதாகக் கண்டித்தார். ஆனால் எனக்கோ ஆசை ஓய்ந்தபாடில்லை. எப்படியாவது படங்கள் வரைந்து வெற்றி பெற்று தமிழர் திருநாள் விழா மேடையில் ஏறி பரிசு வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அவரோ அத்தனை அழகான ஓவியங்களையும் கிழித்து வீசிவிட்டார்! அதைப் பார்த்த எனக்கு கோபம் வந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்?

அத்தகைய இக்கட்டான நேரத்திலும் நான் மனம் தளரவில்லை. நான்தானே அவற்றை வரைந்தேன். மீண்டும் அவருக்குத் தெரியாமல் வரைந்து கண்ணையா என்பவரிடம் பத்திரப்படுத்தினேன். குறிப்பிட்ட நாளில் அவற்றை சிராங்கூன் வீதியிலுள்ள தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் ஒப்படைத்தேன்.

சில வாரங்களில் தமிழ் முரசில் ஓவியப் போட்டி முடிவுகள் வெளிவந்தன. எனக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருந்தது கண்டு உள்ளம் பூரித்தேன்!

1961 ஆம் வருடம் ஜனவரி 14 ஆம் நாளன்று சிங்கப்பூர் ” இன்ப உலக அரங்கில் ” ( Happy World Stadium ) தமிழர் திருநாளின் மாபெரும் விழா நடைபெற்றது.

புதுடில்லியிலிருந்து பேராசிரியர் சாலை இளந்திரையன் ( மகாலிங்கம் ) அவர்களும், அவருடைய மனைவி பேராசிரியை திருமதி ஞானசவுந்தரியும் இலக்கியச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் சென்னை மகளிர் மன்ற அமைப்பாளர் திருமதி ரங்கநாயகி அம்மாள் என்பவரும் வந்திருந்தார்.

அன்று மாலையில் சிங்கப்பூரின் தமிழர்கள் பெரும் படையெனத் திரண்டு ” இன்ப உலக அரங்கில் ” ஒன்றுகூடியது கண்கொள்ளாக் காட்சியாகும். அப்பாதான் என்னை அழைத்துச் சென்றார். எனக்கு ஒரு பரிசு உள்ளது என்பதை நான் அவரிடம் சொல்லவில்லை. அவர்தான் படங்களையெல்லாம் கிழித்து வீசியவராயிற்றெ!

பேராசிரியர்களின் இலக்கியச் சொற்பொழிவுகளில் கிறங்கிப்போன மக்கள் தேனுண்ட வண்டுகள் போலாயினர்! தமிழ் இவ்வளவு இனிமையான மொழியா என்று உவகை கொண்டனர். தமிழ் இலக்கியங்களில் இத்தனை அருமை பெருமைகள் உள்ளனவா எனவும் வியந்துபோயினர்.

சொற்பொழிவுகள் முடிந்தபின் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

என் பெயர் அறிவிக்கப்பட்டபோது அப்பா வியந்துபோனார். நான் மேடை ஏறி தமிழவேள் அவர்களிடமிருந்து வெள்ளிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டேன். அதை அப்பாவிடம் தந்தேன். அதைப் பார்த்து அவர் சிரித்துக்கொண்டார்.

ஆனாலும் அவருடைய கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. படிக்கும் நேரத்தை நான் வீணாக்குகிறேனாம்!

பரிசு பெற்ற ஒரு வாரத்தில் ” அக்காடெமி ஆஃப் ஆர்ட்டிஸ்ட் ” என்னும் நிறுவனத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. என்னைப் பாராட்டியதோடு, அவர்கள் நடத்தும் வகுப்பில் முறையாக சித்திரம் பயில ஓர் அழைப்பையும் அனுப்பியிருந்தார்கள்.

மாதமொன்றுக்கு மூன்று வெள்ளி கட்டணமாம். எனக்கு அதில் சேர்ந்து சித்திரம் பயில ஆசைதான். ஆனால், நிச்சயமாக இதற்கு அப்பா சம்மதிக்க மாட்டார். அதோடு, அந்த மூன்று வெள்ளிக்கு நான் என்ன செய்வேன்? என்னுடைய நிலையை விளக்கி அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.

உடன் அங்கிருந்து பதிலும் வந்துவிட்டது. எனக்கு அரைக் கட்டணத்தில் பயிலும் சலுகைத் தந்தனர். நான் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, மாதம் ஒன்றரை வெள்ளி சேர்த்து அனுப்பி, அப்பாவுக்குத் தெரியாமலேயே இரகசியமாக சித்திரம் பயின்றேன்!

( தொடுவானம் தொடரும் )

 

 

Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் டாக்டர் ஜி ஜான்சன் அவர்களுக்கு,

    தாங்கள் ‘தொட்டு விட்ட வானத்தின்’ உயர்வு மகத்தானது. அந்த இலக்கை அடைய தாங்கள் ஏறிய இலக்கிய
    ஏணியின் படிகளைக் காண்பித்தவர்களைக் கற்றுத் தந்தவர்களை, அடையாளம் காட்டிப் பாராட்டும் தங்களின் பண்பும் மகத்தானது.

    ஒரு சகலகலா வல்லவரான தங்களது மனத்தின் வலியும், அமைதியும்……தங்களின் வலிமையை உயிரோட்டமான எழுத்தில் பிரதிபலித்து தொடுவானத்தை ஒளிமிகுந்ததாக விரியச் செய்கிறது.

    பகிர்வதற்கு மிக்க நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ சங்கர் அவர்களே, தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். தொடுவானம் தங்களையும் தொட்டது தெரிகிறது. தங்களின் ஊக்குவிப்புக்கும், ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி. தொடுவானத்தைத் தொடர்ந்து தொட்டு வாருங்கள் . அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *