தொடு நல் வாடை

Spread the love

ருத்ரா

வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு
வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம்
என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள்
அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும்
குவி இணர் கூர்த்த தண்புரை இதழும்
மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம்
உள்ளம் காட்டும் உவகை கூட்டும்.
கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல்
பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி
அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும்.
பண்டு துளிய நனை நறவு உண்ட‌
பூவின் சேக்கை புதைபடு தும்பி
சிறைக்க மறந்து சிறைப்படும் வாடை.
சிலம்பு இழீஇய நீர் இமிழ் தாமம்
நெய்தல் பிலிற்றும் வெண்ணகை அருவி
குளிர்ப்புகை தூவி திண்டிய செய்யும்
குலை உருவி கம்பம் படுக்கும்.
மின்னிய எயிற்றின் மிளிர் நகை ஆங்கு
சுருள்மலி வள்ளி இதழ் அவிழ்த்தன்ன‌
சூர்கொள களிக்குமென் திண்தோள் நெஞ்சு.

===

பொழிப்புரை
===

வளைந்த வில்லான வானவில் வண்ணங்கள் வெளிப்படுத்தும்.

வானத்தில் வளைந்த மின்னல் தொடர்ந்து ஒளி பொருந்திய துளிகளில் மழை வீழ்த்தும்.

எலும்புக்குள் ஊடி ஆனால் வெப்பம் ஊட்டி நெஞ்சு பிளக்கும் வாடையில் அவள் அன்பு குமிழியிட்டு இதழ் சுழித்து இன்னகை செய்வாள்.பூங்கொத்தின் கூர்முனைகள் போன்ற இதழ்கள் மெல்லிய இன்பத்தின் சூடு ஏற்றி உடலுக்குள் ஒரு வேள்வி நடத்தி அவிர்பாகம் வழங்கும்.

அதில் தெரிந்த அவள் உள்ளம் களிப்பு நல்கும். மூங்கில் காடுகளின் அடர்ந்த வழியில் திரியும் மான்களின் மீது பனித்தூவல்கள் புள்ளிகளால் போர்த்த அந்த வெண்மை செறிந்த காட்சியில் அழகிய அணிகள் பூண்ட அவள் அகல விரிக்கும் விழி(மானின் விழியில்)அழகிய வெப்பத்தை கதிர் வீசும்.

பழைய தேன் துளியைப்போல பூவின் நறவில் நனைந்து உண்ட வண்டு அந்த பூவெனும் படுக்கையில் புதைந்து அது சிறகடிப்பதையே மறக்கச்செய்யும் குளிர் அந்த பூவிலேயே அதை சிறைப்படுத்தும்.

மலையிலிருந்து இறங்கி ஒலி செய்யும் முத்து நீர்த்துளிகள் வெள்ளிய நகைப்பால் அருவியாய் விழும்.அதனால் நீராம்பல்கள் அலம்பி அலம்பி ஆடும். குளிர் புகை மூட்டம் போல் திரண்டு ஈரக்குலையெல்லாம் உருவினாற்போல நடுங்கச் செய்யும்.

அவள் சிரிப்பின் மின்னல் தெறிக்க பல்வரிசையின் அழகில் வள்ளி எனும் காட்டுப்பூவின் சுருள் இதழ்கள் மெல்லவே விரிந்த போதும் அதில் எனக்கு இன்பத்தின் ஒரு வித அச்சம் நெஞ்சில் படர்ந்து என் திண்ணிய தோளையும் உலுக்கிவிடும்.

=================================================================================ருத்ரா

Series Navigationபாண்டித்துரை கவிதைகள்“2015” வெறும் நம்பர் அல்ல.