நனைந்த பூனைக்குட்டி
சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி

பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி

 

ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு

தெருவில் கூடின நாய்கள்

 

ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு

’உர்’ரென்றது

சிலிர்ந்து நின்றதைப்பார்த்து

 

பூனைக்குட்டி

சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை

ஆக்ரோஷம் விடுத்து நோக்கின ’உர்’ரானவை

 

நான் கடக்கையில்

லாவகமாக பூனைக்குட்டியை கையிலெடுத்து

பூட்டிய கேட்டினுள் விட

கூம்பு போல் உடலை உயர்த்தி

ஓடிச்சென்று கூரையில் தங்கியது

 

திரும்புகையில்

கால்விரிப்பில் அனந்த சயனத்தில் பூனைக்குட்டியும்

தெருவில்

பரம எதிரியாய் எனை பாவித்த நாய்களும்

அமைதியாய்….

 

 

மழை தூறலில் நனைந்தபடி

நானும் நாய்களும்.

 

– சு.மு.அகமது

Series Navigationவாழ்வியலின் கவன சிதறல்சமுத்திரக்கனியின் போராளி